உபாகமம் 24:1-22

24  பின்பு அவர், “ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்தபின் அவள் செய்கிற ஏதோவொரு கேவலமான காரியத்தைப் பார்த்து அவளை வெறுத்தால், விவாகரத்துப் பத்திரத்தை+ அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும்.+  அவனுடைய வீட்டைவிட்டு போன பின்பு அவள் இன்னொருவனுக்கு மனைவியாகலாம்.+  இரண்டாவது கணவனும் அவளை வெறுத்து* விவாகரத்துப் பத்திரத்தை அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட்டால், அல்லது அந்த இரண்டாவது கணவன் இறந்துவிட்டால்,  அவளை விவாகரத்து செய்த முதலாவது கணவன் மறுபடியும் அவளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அது யெகோவாவுக்கு அருவருப்பானது. ஏனென்றால், முதல் கணவனுக்கு அவள் அசுத்தமானவள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் பாவத்தால் நிரப்பக் கூடாது.  ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+  மாவு அரைக்கிற கல்லின்* அடிக்கல்லையோ மேல்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது.+ அது ஒருவருடைய பிழைப்பையே* அடமானம் வாங்குவதாக இருக்கும்.  ஒருவன் இன்னொரு இஸ்ரவேலனைக் கடத்திக்கொண்டு போய், கொடுமைப்படுத்தி, விற்றுவிட்டால்,+ கடத்தியவன் கொல்லப்பட வேண்டும்.+ உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+  உங்களைத் தொழுநோய்* தாக்கினால், லேவி கோத்திரத்தின் குருமார்கள் சொல்கிற எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் செய்யுங்கள்.+ நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்யுங்கள்.  நீங்கள் எகிப்திலிருந்து வரும் வழியில் உங்கள் கடவுளாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.+ 10  ஒருவனுக்கு நீங்கள் ஏதாவது கடன் கொடுத்திருந்தால்,+ அவன் தருவதாகச் சொன்ன அடமானப் பொருளை எடுத்துக்கொள்வதற்காக அவனுடைய வீட்டுக்குள்ளே போகக் கூடாது. 11  அவனுடைய வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டும், கடன் வாங்கியவன்தான் அந்த அடமானப் பொருளை வெளியே எடுத்து வந்து உங்களிடம் தர வேண்டும். 12  அவன் வறுமையில் வாடினால், அந்த அடமானப் பொருளைத் திருப்பிக் கொடுக்காமல் நீங்கள் படுக்கப் போகக் கூடாது.+ 13  சூரியன் மறைந்தவுடனேயே அதைக் கண்டிப்பாக அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்போது, அவன் தன்னுடைய உடையுடன் படுக்கப் போவான்,+ உங்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் கேட்பான். நீங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பீர்கள். 14  கஷ்டத்திலும் வறுமையிலும் வாடுகிற கூலியாளுக்குக் கூலி தராமல் ஏமாற்றக் கூடாது, அவன் உங்கள் சகோதரனாக இருந்தாலும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனாக இருந்தாலும் சரி.+ 15  அந்தந்த நாளின் கூலியை அந்தந்த நாளே கொடுத்துவிட வேண்டும்,+ அதுவும் சூரியன் மறைவதற்குள் கொடுத்துவிட வேண்டும். அவன் வறுமையில் வாடுவதால், வயிற்றுப்பாட்டுக்கு அந்தக் கூலியைத்தான் நம்பியிருக்கிறான். நீங்கள் அப்படிக் கொடுக்காவிட்டால் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+ 16  பிள்ளைகள் செய்த பாவத்துக்காக அப்பாவுக்கோ, அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகளுக்கோ மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+ ஒருவன் செய்த பாவத்துக்காக அவனுக்கு மட்டும்தான் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ 17  உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+ 18  நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார்.+ அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன். 19  உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது ஒரு கதிர்க்கட்டை அங்கேயே மறந்துவிட்டு வந்திருந்தால், அதை எடுக்க மறுபடியும் போகாதீர்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அதை விட்டுவிடுங்கள்.+ அப்போதுதான், நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ 20  நீங்கள் ஒலிவ மரத்தைத் தடியால் அடித்து பழங்களை உதிர்த்தபின், உதிராததை உதிர்ப்பதற்காக மறுபடியும் போகக் கூடாது. உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அவற்றை விட்டுவிட வேண்டும்.+ 21  உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பழங்களைச் சேகரித்தபின், மீதியானதைப் பறிக்க மறுபடியும் போகக் கூடாது. உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அவற்றை விட்டுவிட வேண்டும். 22  நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நிராகரித்து.”
வே.வா., “திரிகைக் கல்லின்.”
வே.வா., “உயிரையே.”
இதற்கான எபிரெய வார்த்தை, பலவிதமான தோல் நோய்களைக் குறிக்கலாம். துணிமணிகளிலும் வீடுகளிலும் பரவுகிற பூஞ்சணத்தைக்கூட குறிக்கலாம்.
வே.வா., “அநாதையின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா