இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கீதரோன் பள்ளத்தாக்கு வழியாக ஒலிவ மலைக்கு நடந்து போனார்கள். நேரம் அப்போது நடுராத்திரியையும் தாண்டிவிட்டது. முழு நிலா வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. அவர்கள் கெத்செமனே தோட்டத்துக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்” என்று சொன்னார். பிறகு, இயேசு அந்தத் தோட்டத்துக்குள் கொஞ்சம் உள்ளே போய் முட்டிபோட்டு, “உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று ரொம்ப வேதனையோடு ஜெபம் செய்தார். அப்போது, இயேசுவைப் பலப்படுத்த ஒரு தேவதூதரை யெகோவா அனுப்பினார். பிறகு, தன் அப்போஸ்தலர்கள் இருந்த இடத்துக்கு இயேசு போனார். அவரோடு வந்த மூன்று பேரும் அங்கே தூங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு, ‘எழுந்திருங்கள்! இது தூங்குவதற்கான நேரம் இல்லை! என் எதிரிகளிடம் நான் பிடித்துக்கொடுக்கப்படும் நேரம் வந்துவிட்டது’ என்று சொன்னார்.

சீக்கிரத்திலேயே, ஒரு பெரிய கும்பலோடு யூதாஸ் அங்கே வந்தான். அந்த ஆட்கள் வாள்களையும் தடிகளையும் வைத்திருந்தார்கள். இயேசு எங்கே இருப்பார் என்று யூதாசுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், சீஷர்கள் இயேசுவோடு நிறைய தடவை அந்தத் தோட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். இயேசு யார் என்று காட்டிக்கொடுப்பதாக படைவீரர்களிடம் யூதாஸ் சொல்லியிருந்தான். அதனால், அவன் நேராக இயேசுவிடம் போய், ‘போதகரே, வாழ்க!’ என்று சொல்லி முத்தம் கொடுத்தான். அப்போது இயேசு, ‘யூதாஸ், முத்தம் கொடுத்து என்னைக் காட்டிக்கொடுக்கிறாயா?’ என்று கேட்டார்.

இயேசு கொஞ்சம் முன்னால் போய், அந்தக் கும்பலிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று சொன்னார். உடனே அந்த ஆட்கள் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள். மறுபடியும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது இயேசு, ‘அது நான்தான் என்று சொன்னேனே. இவர்களைப் போகவிடுங்கள்’ என்றார்.

என்ன நடக்கிறது என்று பேதுருவுக்குப் புரிந்ததும், அவர் ஒரு வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனின் காதை வெட்டினார். ஆனால், இயேசு அந்த ஆளின் காதைத் தொட்டு குணமாக்கினார். பிறகு பேதுருவிடம், ‘வாளை உள்ளே வை. வாளை  வைத்து சண்டை போட்டால், வாளால் செத்துப்போவாய்’ என்று சொன்னார். படைவீரர்கள் இயேசுவைப் பிடித்து, அவருடைய கைகளைக் கட்டினார்கள். அப்போஸ்தலர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். பிறகு, அந்தக் கும்பல் இயேசுவை முதன்மைக் குருவான அன்னா என்பவரிடம் கூட்டிக்கொண்டு போனது. அவர் இயேசுவை விசாரித்துவிட்டு, தலைமைக் குருவான காய்பா என்பவரின் வீட்டுக்கு அனுப்பினார். ஆனால், அப்போஸ்தலர்களுக்கு என்ன நடந்தது?

“இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்.”—யோவான் 16:33