1, 2. நாம் எதைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கிறோம்?

குழந்தைகள் பொதுவாக நிறைய கேள்விகள் கேட்பார்கள். ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால், ‘ஏன்?’ என்று இன்னொரு கேள்வி கேட்பார்கள். அதற்குப் பதில் சொன்னால், ‘ஏன், எதற்கு?’ என்று மறுபடியும் கேட்பார்கள்.

2 நாம் சின்னவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நிறைய கேள்விகள் கேட்கிறோம். உதாரணத்துக்கு, நேரம் தெரியவில்லை என்றால், அல்லது ஒரு இடத்துக்குப் போக வழி தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்கிறோம். அதைவிட முக்கியமாக, நம் வாழ்க்கையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும்கூட சில கேள்விகளைக் கேட்கிறோம். ஆனால், இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் பதில் தேடுவதையே நாம் நிறுத்திவிடலாம்.

3. இன்று நிறைய பேர் தாங்கள் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாது என்று ஏன் நினைக்கலாம்?

3 நாம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் பதில் இருக்கிறதா? ‘பதில் இருக்கும், ஆனால் அதைப் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம்’ என்று சிலர் நினைக்கலாம். இன்னும் சிலர், ‘அது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று சொல்லலாம், அல்லது ‘அதெல்லாம் மதத் தலைவர்களுக்குத்தான் தெரியும்’ என்று சொல்லலாம். வேறு சிலர், தங்களுக்குப் பதில் தெரியவில்லை என்று ஒத்துக்கொள்வதையே அவமானமாக நினைக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

4, 5. உங்கள் மனதில் இருக்கும் முக்கியமான கேள்விகள் என்ன? அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதை நீங்கள் ஏன் நிறுத்தவே கூடாது?

4 ‘இதுதான் வாழ்க்கையா? இறந்த பிறகு மனிதர்களுக்கு என்ன நடக்கும்? கடவுள் எப்படிப்பட்டவர்?’ போன்ற கேள்விகளுக்கு நீங்களும் பதில் தெரிந்துகொள்ள விரும்பலாம். “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று இயேசு சொன்னார்.  (மத்தேயு 7:7) அதனால், திருப்தியான பதிலைக் கண்டுபிடிக்கும்வரை தேடிக்கொண்டே இருங்கள்.

5 நீங்கள் “தேடிக்கொண்டே” இருந்தால், பதிலை நிச்சயம் பைபிளில் கண்டுபிடிக்க முடியும். (நீதிமொழிகள் 2:1-5) பைபிள் தரும் பதில்களை உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். அவற்றை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்போதே சந்தோஷமாக வாழ முடியும், எதிர்காலத்திலும் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். நிறைய பேருடைய மனதைக் குடையும் ஒரு கேள்வியைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?

6. கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

6 கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இந்த உலகம் இப்படி இருக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இன்று எங்கு பார்த்தாலும் போரும் பகையும் வேதனையும்தான் இருக்கிறது. மக்களுக்கு வியாதியும் கஷ்டமும் சாவும் வருகிறது. கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருந்தால் ஏன் இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதில்லை என்று சிலர் யோசிக்கிறார்கள்.

7. (அ) கடவுள் கொடூரமானவர் என்று மதத் தலைவர்கள் எப்படி மக்களை நினைக்க வைத்திருக்கிறார்கள்? (ஆ) கெட்ட காரியங்கள் நடப்பதற்குக் கடவுள் காரணம் இல்லை என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

7 சிலசமயம், கடவுள் கொடூரமானவர் என்று மதத் தலைவர்கள் மக்களை நினைக்க வைக்கிறார்கள். ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால், ‘இது கடவுள் சித்தம். அவருடைய விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது’ என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது உண்மையில் அவர்கள் கடவுள்மேல் பழிபோடுகிறார்கள். ஆனால், எந்தவொரு கெட்ட காரியத்துக்கும் கடவுள் காரணம் இல்லை என்று பைபிள் சொல்கிறது. “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது” என்று யாக்கோபு 1:13 சொல்கிறது. அப்படியென்றால், கடவுள் கெட்ட காரியங்களைத் தடுக்காவிட்டாலும், அதெல்லாம் நடப்பதற்கு அவர் ஒருபோதும் காரணம் இல்லை. (யோபு 34:10-12-ஐ வாசியுங்கள்.) இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

8, 9. நம்முடைய பிரச்சினைகளுக்குக் கடவுள்மேல் பழிபோடுவது ஏன் நியாயம் இல்லை? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

 8 ஒரு வாலிபப் பையனைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவனுடைய அப்பா அவன்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நல்ல புத்தி சொல்லி அவனை வளர்த்திருக்கிறார். ஆனால், அவன் தன்னுடைய அப்பாவின் பேச்சைக் கேட்காமல் வீட்டைவிட்டு வெளியே போகிறான். மோசமான காரியங்களைச் செய்து பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறான். அவன் வீட்டைவிட்டுப் போவதைத் தடுக்காததால் அவனுடைய அப்பாதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று நீங்கள் சொல்வீர்களா? கண்டிப்பாகச் சொல்ல மாட்டீர்கள்! (லூக்கா 15:11-13) அந்த அப்பாவைப் போலத்தான் கடவுளும் நடந்துகொள்கிறார். மனிதர்கள் அவருடைய பேச்சைக் கேட்காமல் கெட்ட காரியங்கள் செய்யும்போது அவர் அவர்களைத் தடுப்பதில்லை. அதனால், ஏதாவது கெட்ட காரியம் நடக்கும்போது கடவுள் அதற்குக் காரணம் இல்லையென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்மேல் பழிபோடுவது நியாயமே இல்லை.

9 கெட்ட காரியங்களைக் கடவுள் விட்டுவைத்திருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று இந்தப் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தில் தெரிந்துகொள்வீர்கள். ஆனால், கடவுள் நம்மை நேசிக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. நம்முடைய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அவரைக் குற்றப்படுத்த முடியாது. சொல்லப்போனால், அவரால் மட்டும்தான் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க முடியும்.—ஏசாயா 33:2.

10. கெட்ட ஆட்களால் ஏற்பட்டிருக்கும் எல்லா பாதிப்புகளையும் கடவுள் சரிசெய்வார் என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

10 கடவுள் பரிசுத்தமானவர். (ஏசாயா 6:3) அவருடைய எண்ணங்களும் செயல்களும் தூய்மையாக இருப்பதால் அவர் கெட்டது செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், நாம் அவரை முழுமையாக நம்பலாம். ஆனால், மனிதர்களை முழுமையாக நம்ப முடியாது. அவர்கள் சிலசமயம் தவறு செய்கிறார்கள். ரொம்ப நேர்மையான ஒரு அதிகாரியால்கூட, கெட்ட ஆட்களையும் அவர்கள் செய்யும் எல்லா கெட்ட காரியங்களையும் ஒழித்துக்கட்ட முடியாது. ஏனென்றால், அப்படிச் செய்ய அவருக்கு சக்தி இல்லை. ஆனால், கடவுளுக்கு நிறைய சக்தி இருக்கிறது. கெட்ட ஆட்களால் ஏற்பட்டிருக்கும் எல்லா பாதிப்புகளையும் அவரால் சரிசெய்ய முடியும், அதை அவர் கண்டிப்பாகச் சரிசெய்வார். அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அவர் ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவார்.சங்கீதம் 37:9-11-ஐ வாசியுங்கள்.

 மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுள் எப்படி உணருகிறார்?

11. நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுள் எப்படி உணருகிறார்?

11 உலகத்தில் நடக்கும் அநியாயங்களையும் நீங்கள் படும் கஷ்டங்களையும் பார்க்கும்போது கடவுள் எப்படி உணருகிறார்? கடவுள் “நியாயத்தை நேசிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:28) அதனால், அநியாயங்கள் நடப்பதையும் மக்கள் கஷ்டப்படுவதையும் அவர் கொஞ்சம்கூட விரும்புவதில்லை. முன்பு ஒரு சமயம், இந்த உலகம் அக்கிரமத்தால் நிறைந்திருந்ததைப் பார்த்து அவர் “உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:5, 6) இன்றும் அவர் அப்படித்தான் வேதனைப்படுகிறார். (மல்கியா 3:6) கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.1 பேதுரு 5:7-ஐ வாசியுங்கள்.

யெகோவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த அன்பான படைப்பாளர் என்று பைபிள் சொல்கிறது

12, 13. (அ) அன்பு என்ற குணம் நமக்கு எப்படி வந்தது? இன்று நடக்கும் அநியாயங்களைப் பார்க்கும்போது நமக்கு எப்படி இருக்கிறது? (ஆ) உலகத்தில் உள்ள அநியாயங்களையும் கஷ்டங்களையும் கடவுள் கண்டிப்பாக ஒழித்துக்கட்டுவார் என்று நாம் ஏன் சொல்லலாம்?

12 மனிதர்களைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26) அதனால், அவருக்கு இருக்கும் நல்ல குணங்களை மனிதர்களாலும் காட்ட முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அப்பாவி மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு வேதனையாக இருந்தால் அது கடவுளுக்கு இன்னும் எவ்வளவு வேதனையாக இருக்கும்! இதை நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

13 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) கடவுள் எதைச் செய்தாலும் அன்பினால்தான் செய்கிறார். அன்பு என்ற குணம் கடவுளிடம் இருப்பதால் அந்தக் குணம் நமக்கும் இருக்கிறது. உதாரணத்துக்கு, உலகத்தில் உள்ள அநியாயங்களையும் கஷ்டங்களையும் ஒழித்துக்கட்ட உங்களிடம் சக்தி இருந்தால் அதைச் செய்வீர்களா? மக்கள்மேல் இருக்கும் அன்பினால் நீங்கள் கண்டிப்பாக அதைச் செய்வீர்கள். அப்படியென்றால், கடவுள் அதைச் செய்யாமல் இருப்பாரா? அவருக்கு சக்தியும் இருக்கிறது, நம்மேல் அன்பும் இருக்கிறது. அதனால், உலகத்தில் உள்ள அநியாயங்களையும் கஷ்டங்களையும் அவர் கண்டிப்பாக ஒழித்துக்கட்டுவார். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நீங்கள் நம்பலாம்.  அப்படி நம்புவதற்கு முதலில் நீங்கள் கடவுளைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் கடவுளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்

ஒருவருடைய நண்பராக விரும்பினால் முதலில் உங்கள் பெயரைச் சொல்வீர்கள். கடவுளும் பைபிளில் தன் பெயரை நம்மிடம் சொல்லியிருக்கிறார்

14. கடவுளுடைய பெயர் என்ன? அந்தப் பெயரை நாம் பயன்படுத்த வேண்டுமென்று ஏன் சொல்லலாம்?

14 நீங்கள் ஒருவருடைய நண்பராவதற்கு விரும்பினால், முதலில் உங்கள் பெயரை அவரிடம் சொல்வீர்கள். அதேபோல், கடவுள் தன்னுடைய பெயரை நம்மிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய பெயர் என்ன? “கடவுள்” அல்லது “ஆண்டவர்” என்பதுதான் அவருடைய பெயர் என்று நிறைய மதங்கள் சொல்கின்றன. ஆனால், “ராஜா,” “ஜனாதிபதி” போன்ற பட்டப்பெயர்களைப் போலவே அவையெல்லாம் வெறும் பட்டப்பெயர்கள்தான். கடவுளே தன்னுடைய பெயரை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்” என்று சங்கீதம் 83:18 சொல்கிறது. பைபிளில் இந்தப் பெயர் ஆயிரக்கணக்கான தடவை வருகிறது. நீங்கள் இந்தப் பெயரைத் தெரிந்துகொண்டு இதைப் பயன்படுத்த வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். நீங்கள் தன்னுடைய நண்பராக வேண்டும் என்பதற்காகத்தான் தன்னுடைய பெயரை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

15. யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?

15 யெகோவா என்ற பெயருக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. அவர் சொன்னதையெல்லாம் செய்து முடிப்பார், நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டுவார் என்பதுதான் அதன்  அர்த்தம். அவர் செய்வதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. இந்தப் பெயர் அவருக்கு மட்டும்தான் பொருந்தும். *

16, 17. இந்தப் பட்டப்பெயர்களின் அர்த்தம் என்ன: (அ) “சர்வவல்லமையுள்ள கடவுள்”? (ஆ) “என்றென்றுமுள்ள ராஜா”? (இ) “படைப்பாளர்”?

16 “நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்” என்று யெகோவாவைப் பற்றி சங்கீதம் 83:18 சொல்வதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதோடு, “சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய செயல்கள் மகத்தானவை,  அதிசயமானவை. என்றென்றுமுள்ள ராஜாவே, உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை” என்று வெளிப்படுத்துதல் 15:3 சொல்கிறது. ‘சர்வவல்லமையுள்ள கடவுள்’ என்ற பட்டப்பெயரின் அர்த்தம் என்ன? இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாவைவிட அதிக சக்தி வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் அதன் அர்த்தம். “என்றென்றுமுள்ள ராஜா” என்று சொல்லும்போது அவர் ஒருவர்தான் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்று அர்த்தம். அதனால்தான், அவர் நித்திய நித்தியமாக இருக்கிறவர் என்று சங்கீதம் 90:2 (அடிக்குறிப்பு) சொல்கிறது. இது எவ்வளவு ஆச்சரியமான விஷயம், இல்லையா?

17 படைப்பாளர் என்ற பட்டப்பெயரும் யெகோவாவுக்கு மட்டும்தான் பொருந்தும். “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று வெளிப்படுத்துதல் 4:11 சொல்கிறது. பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்கள், வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள், மரங்களில் காய்த்துக் குலுங்கும் பழங்கள், கடலில் நீந்தும் மீன்கள் என எல்லாவற்றையுமே யெகோவாதான் படைத்தார்.

 நீங்கள் யெகோவாவுடைய நண்பராக முடியுமா?

18. கடவுளுடைய நண்பராவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஏன் சிலர் நினைக்கலாம்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

18 யெகோவா எப்பேர்ப்பட்ட கடவுள் என்று தெரிந்துகொள்ளும்போது சிலருக்கு ஒருவித பயம் வருகிறது. ‘கடவுள் ரொம்ப சக்தி உள்ளவர், அவர் ரொம்ப பரிசுத்தமானவர், அவர் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார், அவருக்கு எப்படி என்மேல் அக்கறை இருக்கும்?’ என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், நாம் இப்படி நினைக்க வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறாரா? கண்டிப்பாக இல்லை. நம்முடைய நண்பராக இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார். ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று அப்போஸ்தலர் 17:27 சொல்கிறது. நீங்கள் கடவுளிடம் நெருங்கி வந்தால், ‘அவர் உங்களிடம் நெருங்கி வருவதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார்.—யாக்கோபு 4:8.

19. (அ) நீங்கள் கடவுளுடைய நண்பராவதற்கு என்ன செய்ய வேண்டும்? (ஆ) யெகோவாவுக்கு இருக்கும் குணங்களில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த குணம் எது?

19 நீங்கள் கடவுளுடைய நண்பராவதற்கு என்ன செய்ய வேண்டும்? “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 17:3) அதனால், நீங்கள் பைபிளைத் தொடர்ந்து படியுங்கள். அப்போது, யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். உதாரணத்துக்கு, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். (1 யோவான் 4:16) ஆனால், அன்போடுகூட கடவுளுக்கு இன்னும் நிறைய அருமையான குணங்கள் இருக்கின்றன. யெகோவா, “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்” என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 34:6) யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.” (சங்கீதம் 86:5) அவர் பொறுமையும் உண்மையும் உள்ளவர். (2 பேதுரு 3:9; வெளிப்படுத்துதல் 15:4) நீங்கள் பைபிளைப் படிக்கப் படிக்க, கடவுளுக்கு இருக்கும் அருமையான குணங்களைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்வீர்கள்.

20-22. (அ) கடவுளைப் பார்க்க முடியாவிட்டாலும் நாம் எப்படி அவரிடம் நெருங்கிவர முடியும்? (ஆ) பைபிளைப் படிக்கக் கூடாது என்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

20 கடவுளைப் பார்க்க முடியாது என்றால் நீங்கள் எப்படி  அவரிடம் நெருங்கிவர முடியும்? (யோவான் 1:18; 4:24; 1 தீமோத்தேயு 1:17) யெகோவாவைப் பற்றி பைபிளில் படிக்கும்போது அவர் நிஜமானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். (சங்கீதம் 27:4; ரோமர் 1:20) அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவர்மேல் அன்பு அதிகமாகும், அவரோடு இருக்கும் பந்தமும் பலமாகும்.

ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளை எந்தளவுக்கு நேசிப்பாரோ அதைவிட பல மடங்கு அதிகமாக நம் பரலோகத் தகப்பன் நம்மை நேசிக்கிறார்

21 அதோடு, யெகோவா நம்முடைய அப்பாவாக இருக்கிறார் என்று புரிந்துகொள்வீர்கள். (மத்தேயு 6:9) அவர் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நமக்குச் சிறந்த வாழ்க்கையைக் கொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். ஒரு அன்பான அப்பா தன்னுடைய பிள்ளைகளுக்கு அதைச் செய்யத்தானே விரும்புவார்! (சங்கீதம் 36:9) நீங்கள் யெகோவாவுடைய நண்பராக முடியும் என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:23) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்தவர், நீங்கள் தன்னுடைய நண்பராக வேண்டுமென்று விரும்புகிறார்!

22 நீங்கள் பைபிளைப் படிக்கக் கூடாது என்று சிலர் சொல்லலாம். அப்படிப் படித்தால் நீங்கள் மதம் மாறிவிடலாம் என்று அவர்கள் ஒருவேளை பயப்படலாம். ஆனால், யார் என்ன சொன்னாலும் சரி, யெகோவாவுடைய நண்பராக ஆகும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள். அவரைவிட சிறந்த நண்பர் யாருமே இருக்க முடியாது!

23, 24. (அ) நீங்கள் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?

23 பைபிளைப் படிக்கும்போது சில விஷயங்கள் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்கக் கூச்சப்படாதீர்கள். நாம் சின்னப் பிள்ளைகள்போல் தாழ்மையாக இருக்க வேண்டுமென்று இயேசு சொன்னார். (மத்தேயு 18:2-4) சின்னப் பிள்ளைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள், இல்லையா? உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். அதனால், நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உண்மைதானா என்பதை உறுதிசெய்ய பைபிளைக் கவனமாக ஆராய்ந்து படியுங்கள்.அப்போஸ்தலர் 17:11-ஐ வாசியுங்கள்.

24 யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு சிறந்த வழி பைபிளைப் படிப்பதுதான். அடுத்த அதிகாரத்தில், பைபிள் ஏன் மற்ற எல்லா புத்தகங்களிலிருந்தும் வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம்.

^ பாரா. 15 உங்கள் பைபிளில் யெகோவா என்ற பெயர் இல்லையென்றால் அல்லது அதன் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், பின்குறிப்பு 1-ஐப் பாருங்கள்.