Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

 அதிகாரம் 7

காக்கும் வல்லமை,—‘தேவன் நமக்கு அடைக்கலம்’

காக்கும் வல்லமை,—‘தேவன் நமக்கு அடைக்கலம்’

1, 2. பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் பிரதேசத்திற்குள் நுழைந்தபோது என்ன ஆபத்தில் இருந்தார்கள், யெகோவா எவ்வாறு அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்?

இஸ்ரவேலர்கள் பொ.ச.மு. 1513-ன் ஆரம்பத்தில் சீனாய் பிரதேசத்திற்குள் நுழைகையில் ஆபத்தில் இருந்தார்கள். அவர்கள் பேரச்சத்திற்குரிய பயணத்தை—“கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த . . . பரந்த கொடிய பாலைநிலத்தில்” பயணத்தை—ஆரம்பிக்கவிருந்தார்கள். (உபாகமம் [இணைச் சட்டம்] 8:15, பொது மொழிபெயர்ப்பு) பகைமைகொண்ட தேசங்களால் தாக்கப்படும் அச்சுறுத்தலும் இருந்தது. யெகோவா தம் மக்களை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு வழிநடத்தியிருந்தார். அவர்களது கடவுளாக, அவர்களுக்கு அவரால் பாதுகாப்பு அளிக்க முடியுமா?

2 யெகோவா மிகுந்த நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார்; “நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்” என்றார். (யாத்திராகமம் 19:4) யெகோவா அடையாள அர்த்தத்தில் கழுகுகளைப் பயன்படுத்தி தம் மக்களை பாதுகாப்பாக தூக்கிச் சென்று எகிப்தியர்களிடமிருந்து காப்பாற்றியதை அவர்களுக்கு நினைவூட்டினார். ஆனால் ‘கழுகுகளுடைய செட்டைகள்’ தெய்வீக பாதுகாப்பிற்கு பொருத்தமான உதாரணமாக இருப்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன.

3. ‘கழுகுகளுடைய செட்டைகள்’ ஏன் தெய்வீக பாதுகாப்பிற்கு பொருத்தமான உதாரணமாக இருக்கின்றன?

3 கழுகு தனது பெரிய, பலத்த செட்டைகளை உயர பறப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதில்லை. உஷ்ண நேரத்தில் பொசுக்கும் வெயிலிலிருந்து இளம் குஞ்சுகளை காப்பதற்கு தாய்க் கழுகு தன் செட்டைகளை குடைபோல் விரிக்கும். அந்த செட்டைகள் இரண்டு மீட்டருக்கும் அதிக நீளமாக இருக்கும். மற்ற நேரங்களில் தாய்க் கழுகு தன் செட்டைகளால் குஞ்சுகளை அணைத்துக்கொண்டு குளிர்காற்றிலிருந்து அவற்றை பாதுகாக்கும். கழுகு தன் குஞ்சுகளை காப்பது போலவே யெகோவா புதிதாய் பிறந்திருந்த தேசமாகிய இஸ்ரவேலை பேணிக் காத்தார். இப்போது வனாந்தரத்தில், விசுவாசத்தோடு நிலைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் யெகோவாவுடைய மகா செட்டைகளின் நிழலில் தொடர்ந்து தஞ்சம் புகலாம்.  (உபாகமம் 32:9-11; சங்கீதம் 36:7) ஆனால் இன்று நாம் தெய்வீக பாதுகாப்பை எதிர்பார்ப்பது சரியா?

தெய்வீக பாதுகாப்பிற்கான வாக்குறுதி

4, 5. பாதுகாப்பளிப்பதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியில் நாம் ஏன் முழு நம்பிக்கை வைக்கலாம்?

4 தம் ஊழியர்களை பாதுகாப்பதற்கான திறன் நிச்சயமாகவே யெகோவாவிடம் உண்டு. அவர் “சர்வவல்லமையுள்ள தேவன்”; இந்தப் பட்டப்பெயர், எவராலும் வெல்ல முடியாத வல்லமை அவருக்கு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. (ஆதியாகமம் 17:1) அலை திரண்டு வருவதை தடுக்க முடியாததுபோல் யெகோவாவின் வல்லமை செயல்படுவதை தடைசெய்யவே முடியாது. அவர் தமது சித்தத்திற்கு இசைவான எதையும் செய்ய முடிந்தவர் என்பதால் நாம் இக்கேள்வியைக் கேட்கலாம்: ‘தமது மக்களை பாதுகாப்பதற்காக தமது வல்லமையை பயன்படுத்துவது யெகோவாவின் சித்தமா?’

5 நேரடியாக சொன்னால், ஆம் அவரது சித்தமே! யெகோவா தமது மக்களை பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார். “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” என சங்கீதம் 46:1 சொல்கிறது. கடவுளால் “பொய் சொல்ல முடியாது” என்பதால் பாதுகாப்பளிப்பதாக அவர் கொடுக்கும் வாக்குறுதியில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். (தீத்து 1:2, NW) யெகோவா தமது பாதுகாப்பையும் கரிசனையையும் விவரிக்க பயன்படுத்தும் தத்ரூபமான உதாரணங்களில் சிலவற்றை இப்போது கவனிக்கலாம்.

6, 7. (அ) பைபிள் காலங்களில் மேய்ப்பர் தனது ஆடுகளை எவ்வாறு பாதுகாத்தார்? (ஆ) யெகோவா தமது ஆடுகளை பேணிப் பாதுகாக்க மனதார விரும்புவதை பைபிள் எவ்வாறு வர்ணிக்கிறது?

6 யெகோவா நம் மேய்ப்பர், “நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 23:1; 100:3) செம்மறியாடுகளைப் போன்ற தற்காப்பற்ற விலங்குகள் வேறு எதுவும் இல்லை என சொல்லலாம். பைபிள் காலங்களில் மேய்ப்பர் தன் ஆடுகளை சிங்கங்கள், ஓநாய்கள், கரடிகள் ஆகியவற்றிலிருந்தும் திருடர்களிலிருந்தும்கூட பாதுகாக்க தைரியசாலியாக இருக்க வேண்டியிருந்தது. (1 சாமுவேல் 17:34, 35; யோவான் 10:12, 13) ஆனால் ஆடுகளை பாதுகாக்க அவர் மென்மையை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. ஓர் ஆடு, தொழுவத்திலிருந்து வெகு தூரத்தில் குட்டியை ஈனுகையில், கரிசனையான மேய்ப்பர் உதவியற்ற அந்த சந்தர்ப்பத்தில் தாய் ஆட்டை பாதுகாத்து, தற்காப்பற்ற ஆட்டுக்குட்டியை தொழுவத்திற்கு சுமந்து செல்வார்.

‘தமது மடியிலே சுமப்பார்’

 7 யெகோவா தம்மை ஒரு மேய்ப்பருக்கு ஒப்பிடுவதன் மூலம், நம்மை பாதுகாக்க மனதார விரும்புவதாக உறுதியளிக்கிறார். (எசேக்கியேல் 34:11-16) இப்புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட ஏசாயா 40:11-ல் யெகோவா எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: ‘மேய்ப்பனைப் போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமப்பார்.’ ஆட்டுக்குட்டி எவ்வாறு மேய்ப்பரின் ‘மடிக்கு’—அவரது மேலங்கியின் மடிப்புகளுக்கு—செல்கிறது? ஆட்டுக்குட்டி மேய்ப்பரின் அருகே சென்று, அவரது காலை செல்லமாக இடிக்கலாம். ஆனாலும் மேய்ப்பர்தான் குனிந்து, ஆட்டுக்குட்டியை தூக்கி, தனது மடியிலே பத்திரமாக மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மகத்தான மேய்ப்பர் நம்மை பேணிப் பாதுகாக்க விரும்புவதை எவ்வளவு கனிவாக படம் பிடித்துக் காட்டும் வர்ணனை இது!

8. (அ) பாதுகாப்பதாக கடவுள் வாக்குறுதி அளித்திருப்பது யாரிடம், இது எவ்வாறு நீதிமொழிகள் 18:10-ல் சுட்டிக்காட்டப்படுகிறது? (ஆ) கடவுளுடைய பெயரில் அடைக்கலம் புகுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?

8 பாதுகாப்பதாக கடவுள் தரும் வாக்குறுதி நிபந்தனைக்கு உட்பட்டது—அவரிடம் நெருங்கிச் செல்வோர் மாத்திரமே அதை அனுபவிக்க முடியும். நீதிமொழிகள் 18:10 (தி.மொ.) இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.” பைபிள் காலங்களில், கோபுரங்கள் சிலசமயம் வனாந்தரத்தில் புகலிடங்களாக கட்டப்பட்டன. ஆனால் பாதுகாப்பிற்காக அக்கோபுரத்திற்கு ஓட வேண்டியது ஆபத்தில் மாட்டிக்கொண்டவரின் பொறுப்பாக இருந்தது. கடவுளுடைய பெயரில் அடைக்கலம் புகுவதைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. கடவுளுடைய பெயரை திரும்பத் திரும்ப சொல்வது மட்டுமே போதாது; அந்தத் தெய்வீக பெயரில்தானே எந்த மாயசக்தியும் இல்லை. மாறாக, அப்பெயருக்குரியவரை அறிந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ வேண்டும். விசுவாசத்தோடு தம்மிடம் திரும்புவோருக்கு பாதுகாப்பான கோபுரமாக இருப்பதாக யெகோவா உறுதியளித்திருப்பது எப்பேர்ப்பட்ட அன்பான செயல்!

“எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்”

9. யெகோவா பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதி மட்டுமே கொடுக்காதது எப்படி?

9 யெகோவா பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதி மட்டுமே கொடுக்கவில்லை. தம் மக்களை பாதுகாக்க வல்லவரென்பதை பைபிள் காலங்க ளில் அற்புதமான விதங்களில் மெய்ப்பித்தும் காட்டினார். இஸ்ரவேலருடைய சகாப்தத்தில், யெகோவாவின் வல்லமைமிக்க “கை,” பலம்படைத்த எதிரிகளை கட்டுப்படுத்தி வைத்தது. (யாத்திராகமம் 7:4) என்றாலும் யெகோவா தமது காக்கும் வல்லமையை தனிப்பட்டவர்களுக்காகவும் பயன்படுத்தினார்.

10, 11. தனிப்பட்டவர்களுக்காக யெகோவா தமது காக்கும் வல்லமையை எப்படி பயன்படுத்தினார் என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன?

10 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று இளம் எபிரெயர்கள் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏற்படுத்திய பொற்சிலையை வணங்க மறுத்தபோது, அவர் ஆக்ரோஷமடைந்து கடுமையாக சூடாக்கப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப் போடுவதாக அச்சுறுத்தினார். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்” என்று பூமியிலேயே வல்லமைமிக்க ராஜாவான நேபுகாத்நேச்சார் ஏளனமாக கேட்டார். (தானியேல் 3:15) அந்த மூன்று இளைஞர்களும், தங்கள் கடவுளுக்கு தங்களை பாதுகாக்க வல்லமை இருக்கிறதென முழுமையாக நம்பினார்கள், ஆனாலும் அவர் அந்த வல்லமையால் தங்களை கண்டிப்பாக காப்பாற்றுவார் என நினைத்துக்கொள்ளவில்லை. (தானியேல் 3:17, 18) சூளை சாதாரணமாய் சூடாக்கப்படுவதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டபோதும் சர்வ வல்லமையும் படைத்த கடவுளுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. அவர் அவர்களை காப்பாற்றினார்; “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை” என ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தம் ராஜாவுக்கு ஏற்பட்டது.தானியேல் 3:29.

11 யெகோவா தமது ஒரேபேறான குமாரனின் உயிரை யூத கன்னியாகிய மரியாளின் கருப்பைக்கு மாற்றியபோதும் தமது காக்கும் வல்லமையை மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் வெளிக்காட்டினார். “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” என ஒரு தேவதூதன் மரியாளிடம் சொன்னார். “பரிசுத்த ஆவி உன் மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்” என தேவதூதன் விளக்கினார். (லூக்கா 1:31, 35) கடவுளுடைய குமாரன் இவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் ஒருபோதும் இருந்ததாக தெரியவில்லை. மனித தாயின் பாவமும் அபூரணமும் கருவை கறைப்படுத்திவிடுமா? அந்தக் குமாரன் பிறப்பதற்கு முன்பே சாத்தான் அவருக்கு தீங்குசெய்ய அல்லது அவரை கொலைசெய்ய முடியுமா? அந்தப் பேச்சிற்கே இடமில்லை! யெகோவா மரியாளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு சுவரை எழுப்பினார் என சொல்லலாம்; ஆகவே அக்கரு உருவான சமயம் முதற்கொண்டு எந்த அபூரணமும், எந்த தீய சக்தியும், எந்த  கொலைவெறிபிடித்த மனிதனும், எந்த பிசாசும் அதை சேதப்படுத்த முடியவில்லை. இயேசுவின் இளமைப் பருவத்திலும் யெகோவா தொடர்ந்து அவரை பாதுகாத்தார். (மத்தேயு 2:1-15) கடவுளுடைய குறிக்கப்பட்ட காலம் வரை, அவரது நேச குமாரனை எந்த ஆபத்தும் அண்ட முடியவில்லை.

12. பைபிள் காலங்களில் யெகோவா ஏன் சிலரை அற்புதமாக பாதுகாத்தார்?

12 யெகோவா ஏன் சிலரை இப்படி அற்புதமாக பாதுகாத்தார்? அநேக சந்தர்ப்பங்களில் யெகோவா, மிக முக்கியமான ஒன்றிற்காக, அதாவது தமது நோக்கத்தின் நிறைவேற்றத்திற்காக சிலரை பாதுகாத்தார். உதாரணத்திற்கு, குழந்தை இயேசு பாதுகாக்கப்படுவது கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்திற்கு அவசியமாக இருந்தது; இதன் மூலமாகவே இறுதியில் மனிதவர்க்கத்தார் அனைவரும் நன்மை பெற முடியும். காக்கும் வல்லமையின் அநேக வெளிக்காட்டுகள் அடங்கிய பதிவு ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமாக இருக்கிறது; இவை, ‘தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, . . . நமக்குப் போதனையாக எழுதப்பட்டிருக்கின்றன.’ (ரோமர் 15:4) ஆம், இந்த உதாரணங்கள் சர்வ வல்லமையும் படைத்த நம் கடவுள்மீது விசுவாசத்தை பலப்படுத்துகின்றன. ஆனால் இன்று கடவுளிடமிருந்து என்ன பாதுகாப்பை நாம் எதிர்பார்க்க முடியும்?

தெய்வீக பாதுகாப்பு எதை அர்த்தப்படுத்தாது

13. நம் சார்பாக அற்புதங்களை நடப்பிக்க யெகோவா கடமைப்பட்டிருக்கிறாரா? விளக்குக.

13 பாதுகாப்பளிப்பதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதி, நம் சார்பாக அற்புதங்களை நடப்பிக்க யெகோவா கடமைப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இந்தப் பழைய ஒழுங்குமுறையில் பிரச்சினையில்லா வாழ்வை தருவதாக கடவுள் நமக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. யெகோவாவின் விசுவாசமுள்ள ஊழியர்கள் அநேகர் வறுமை, போர், வியாதி, மரணம் போன்ற கடும் துன்பங்களை எதிர்ப்படுகின்றனர். இயேசு தம் சீஷர்களிடம், விசுவாசத்திற்காக அவர்கள் கொலையும் செய்யப்படலாம் என வெளிப்படையாக சொன்னார். ஆகவேதான் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதன் அவசியத்தை இயேசு வலியுறுத்தினார். (மத்தேயு 24:9, 13) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யெகோவா தமது வல்லமையை பயன்படுத்தி தம் ஊழியர்களை அற்புதமாக விடுவித்தார் என்றால், அதையே காரணமாக வைத்து சாத்தான் அவரை நிந்திப்பான்; கடவுள் மீதுள்ள நம் பக்தி எந்தளவு உண்மையானது என்ற கேள்வியை எழுப்புவான்.யோபு 1:9, 10.

14. யெகோவா தமது ஊழியர்கள் அனைவரையும் எப்போதும் ஒரேவிதமாக காப்பதில்லை என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?

 14 பைபிள் காலங்களில்கூட, யெகோவா தமது ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அகால மரணத்திலிருந்து பாதுகாப்பதற்காக தமது காக்கும் வல்லமையை பயன்படுத்தவில்லை. உதாரணத்திற்கு, சுமார் பொ.ச. 44-ல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு ஏரோதுவினால் கொல்லப்பட்டார்; இருந்தாலும் சிறிது காலத்திற்கு பிறகு பேதுரு “ஏரோதின் கைக்கு” தப்புவிக்கப்பட்டு விடுதலையாக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 12:1-11) யாக்கோபின் சகோதரனாகிய யோவானோ, பேதுருவையும் யாக்கோபையும் காட்டிலும் அதிக காலம் வாழ்ந்தார். இவற்றை வைத்து பார்க்கையில், கடவுள் தமது ஊழியர்கள் அனைவரையும் ஒரேவிதமாக காப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நம் அனைவருக்கும் நேரிடுகிறது. (பிரசங்கி 9:11, NW) அப்படியென்றால் இன்று வேறெந்த விதத்தில் யெகோவா நம்மை காக்கிறார்?

யெகோவா சரீர பாதுகாப்பளிக்கிறார்

15, 16. (அ) யெகோவா தமது வணக்கத்தாருக்கு ஒரு தொகுதியாக சரீர பாதுகாப்பளித்திருக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (ஆ) யெகோவா தமது ஊழியர்களை இப்போதும் ‘மிகுந்த உபத்திரவத்தின்’ சமயத்திலும் பாதுகாப்பார் என நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?

15 முதலில் சரீர பாதுகாப்பை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் வணக்கத்தாராக, ஒரு தொகுதியாக நாம் அப்படிப்பட்ட பாதுகாப்பை எதிர்பார்க்கலாம். அது இல்லையேல் நாம் சாத்தானுக்கு எளிதாக இரையாகிவிடுவோம். இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: “இந்த உலகத்தின் அதிபதி”யாகிய சாத்தான் உண்மை வணக்கத்தை அடியோடு அழிக்க துடிக்கிறான். (யோவான் 12:31; வெளிப்படுத்துதல் 12:17) பூமியிலுள்ள மிக பலம்படைத்த அரசாங்கங்களில் சில நம் பிரசங்க வேலையை தடைசெய்து, நம்மை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முயன்றிருக்கின்றன. இருந்தாலும், யெகோவாவின் மக்கள் உறுதியாக நிலைத்திருந்து, பிரசங்க வேலையை தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர்! வல்லமையான தேசங்களால், சிறியதாகவும் தற்காப்பற்றதாகவும் தோன்றும் இந்த கிறிஸ்தவ தொகுதியினரின் நடவடிக்கையை ஏன் தடுத்து நிறுத்த முடியாமல் போயிருக்கிறது? ஏனெனில் யெகோவா தமது வல்லமைமிக்க செட்டைகளை பரப்பி நம்மை பாதுகாத்திருக்கிறார்!சங்கீதம் 17:7, 9.

16 வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்’போது கடவுள் சரீர பாதுகாப்பு அளிப்பதைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுள் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதைக் குறித்து நாம் பயப்பட வேண்டியதில்லை.  “கர்த்தர் [“யெகோவா,” NW] தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” (வெளிப்படுத்துதல் 7:14; 2 பேதுரு 2:9) இதற்கிடையில், நாம் இரண்டு விஷயங்களைக் குறித்து எப்போதும் நிச்சயமாக இருக்கலாம். முதலாவதாக, யெகோவா தம் உண்மையுள்ள ஊழியர்கள் இந்தப் பூமியிலிருந்து பூண்டோடு ஒழிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இரண்டாவதாக, உத்தமத்தைக் காப்பவர்களுக்கு தமது நீதியுள்ள புதிய உலகில் நித்திய ஜீவனை பரிசாக வழங்குவார்—தேவைப்பட்டால், அவர்களை உயிர்த்தெழுப்பி அதை வழங்குவார். இறந்தவர்களுக்கு, கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பதைவிட பாதுகாப்பான இடம் வேறில்லை.யோவான் 5:28, 29.

17. யெகோவா எவ்வாறு தமது வார்த்தையின் மூலமாக நம்மை பாதுகாக்கிறார்?

17 யெகோவா இப்போதும்கூட தமது ஜீவனுள்ள “வார்த்தை” மூலமாக நம்மை பாதுகாக்கிறார்; அவ்வார்த்தைக்கு இருதயங்களை குணப்படுத்தவும் வாழ்க்கைகளை சீர்படுத்தவும் உந்துவிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. (எபிரெயர் 4:12) அதன் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம், நாம் சரீர தீங்குகளிலிருந்து சில விதங்களில் பாதுகாப்பு பெறலாம். “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்” என ஏசாயா 48:17 (தி.மொ.) சொல்கிறது. கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாழ்நாளை நீடிக்கச் செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. உதாரணத்திற்கு, வேசித்தனத்திலிருந்து விலகி எல்லா அசுசியிலிருந்தும் சுத்திகரித்துக்கொள்ளும்படியான பைபிள் அறிவுரையை நாம் பின்பற்றுவதால், தேவபக்தியற்ற அநேகரின் வாழ்க்கையை சீரழித்திருக்கும் அசுத்தமான, கெடுதலான பழக்கவழக்கங்களை தவிர்க்கிறோம். (அப்போஸ்தலர் 15:29; 2 கொரிந்தியர் 7:1) கடவுளுடைய வார்த்தை நமக்கு அளிக்கும் பாதுகாப்பிற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!

யெகோவா ஆவிக்குரிய பாதுகாப்பளிக்கிறார்

18. யெகோவா நமக்கு என்ன ஆவிக்குரிய பாதுகாப்பை அளிக்கிறார்?

18 மிக முக்கியமாக, யெகோவா ஆவிக்குரிய பாதுகாப்பு அளிக்கிறார். நம் அன்பான கடவுள், சோதனைகளை சகிப்பதற்கும் அவரோடுள்ள உறவை பாதுகாப்பதற்கும் நமக்கு தேவைப்படுபவற்றை அளிப்பதன் மூலம் நம்மை ஆவிக்குரிய தீங்கிலிருந்து காக்கிறார். இவ்வாறு யெகோவா நம் வாழ்க்கையை சில குறுகிய ஆண்டுகளுக்கு அல்ல, ஆனால் நித்தியத்திற்கும் பாதுகாப்பதற்கு செயல்படுகிறார். நம்மை ஆவிக்குரிய பிரகாரமாக பாதுகாக்க வல்ல கடவுளுடைய ஏற்பாடுகள் சிலவற்றை கவனியுங்கள்.

19. யெகோவாவின் ஆவி எவ்வாறு எந்த சோதனையையும் சமாளிக்க நமக்கு உதவும்?

 19 யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2) வாழ்க்கையின் அழுத்தங்கள் நம்மை திணறடிக்கையில், அவரிடம் நம் இருதயத்தை ஊற்றிவிடுவது அதிக நிம்மதியைத் தரும். (பிலிப்பியர் 4:6, 7) ஒருவேளை அவர் அற்புதகரமாக நம் சோதனைகளை நீக்கிவிடமாட்டார், ஆனால் நம் இருதயப்பூர்வ ஜெபங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம், அவற்றை சமாளிக்க நமக்கு ஞானத்தை அருளுவார். (யாக்கோபு 1:5, 6) அதைவிட, பரிசுத்த ஆவிக்காக கேட்பவர்களுக்கு யெகோவா அதை வழங்குவார். (லூக்கா 11:13) அந்த வல்லமைமிக்க ஆவி, எந்த சோதனையையும் பிரச்சினையையும் சமாளிக்க நமக்கு உதவும். விரைவில் வரவிருக்கும் புதிய உலகில் வேதனைமிக்க எல்லா பிரச்சினைகளையும் யெகோவா நீக்கிப்போடும்வரை சகித்திருப்பதற்கு தேவையான “இயல்புக்கு மிஞ்சிய வல்லமையை” அது நமக்கு தரும்.2 கொரிந்தியர் 4:7, NW.

20. யெகோவாவின் காக்கும் வல்லமை எவ்வாறு நம் உடன் வணக்கத்தாரின் மூலமாக வெளிக்காட்டப்படலாம்?

20 சிலசமயங்களில், யெகோவாவின் காக்கும் வல்லமை நம் உடன் வணக்கத்தாரின் மூலம் வெளிக்காட்டப்படலாம். யெகோவா தம் மக்களை உலகளாவிய “சகோதரக்கூட்டத்தாரில்” சேர்த்திருக்கிறார். (1 பேதுரு 2:17, தி.மொ.; யோவான் 6:44) அந்த சகோதரத்துவத்தின் அன்பான சூழலில், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமை எவ்வாறு மக்களை நல்ல விதத்தில் பாதிக்கிறது என்பதற்கு உயிருள்ள அத்தாட்சியை காண்கிறோம். அந்த ஆவி அன்பு, தயவு, நற்குணம் போன்ற மனங்கவரும்  மதிப்புமிக்க பண்புகளை நம்மில் பிறப்பிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) ஆகவே, நாம் வேதனையில் இருக்கும்போது உதவியளிக்கும் ஆலோசனையை கூற அல்லது அவசியம் தேவைப்படும் உற்சாக வார்த்தைகளை சொல்ல ஒரு உடன்விசுவாசி தூண்டப்படுகையில், இந்த வழியில் நம்மை பேணிப் பாதுகாப்பதற்காக யெகோவாவிற்கு நன்றி சொல்லலாம்.

21. (அ) யெகோவா ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் மூலம் காலத்திற்கேற்ற என்ன ஆவிக்குரிய உணவை அளிக்கிறார்? (ஆ) ஆவிக்குரிய விதத்தில் பாதுகாக்க யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளிலிருந்து நீங்கள் எவ்வாறு தனிப்பட்ட விதமாக பயனடைந்திருக்கிறீர்கள்?

21 யெகோவா நம்மை பாதுகாக்க வேறொன்றையும் அளிக்கிறார்: அது காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவாகும். அவரது வார்த்தையிலிருந்து பலத்தைப் பெற நமக்கு உதவுவதற்காக யெகோவா ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ ஆவிக்குரிய உணவு வழங்க நியமித்திருக்கிறார். அந்த உண்மையுள்ள அடிமை, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள், மற்ற பிரசுரங்கள், கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் “ஏற்ற நேரத்தில் உணவை” வழங்குகிறது; இவ்வாறு நமக்கு தேவைப்படுவதை, தேவையான நேரத்தில் அளிக்கிறது. (மத்தேயு 24:45, NW) நீங்கள் கிறிஸ்தவ கூட்டத்தில்—ஒரு பதிலில், ஒரு பேச்சில், அல்லது ஒரு ஜெபத்தில்கூட—எதையாவது கேட்டு, தேவையான பலத்தையும் உற்சாகத்தையும் பெற்ற அனுபவம் உண்டா? நம் பிரசுரங்கள் ஒன்றில் வெளிவந்த குறிப்பிட்ட கட்டுரை ஏதாவது உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? யெகோவா நம்மை ஆவிக்குரிய விதத்தில் பாதுகாப்பதற்காக இந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார் என்பதை ஞாபகம் வையுங்கள்.

22. யெகோவா தமது வல்லமையை எப்போதும் எந்த விதத்தில் பயன்படுத்துகிறார், அது ஏன் நமக்கு மிகச் சிறந்ததாக அமைகிறது?

22 யெகோவா “தம்மில் அடைக்கலம் புகும் அனைவருக்கும்” நிச்சயமாகவே ஒரு கேடகமாயிருக்கிறார். (சங்கீதம் 18:30, தி.மொ.) இப்போது நம்மை எல்லா துன்பங்களிலிருந்தும் காக்க அவர் தமது வல்லமையை பயன்படுத்துவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். என்றாலும், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் எப்போதும் தமது காக்கும் வல்லமையை பயன்படுத்துகிறார். இறுதியில் தம் மக்களுக்கு மிகச் சிறந்த பயன் விளையும்படியே அவ்வாறு செய்கிறார். நாம் யெகோவாவிடம் நெருங்கிச் சென்று அவரது அன்பில் நிலைத்திருந்தால், பரிபூரணமான நித்திய ஜீவனை அவர் நமக்கு அருளுவார். அந்த எதிர்பார்ப்பை மனதில் வைத்து, இந்த உலகில் எதிர்ப்படும் எந்த துன்பத்தையும் “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான” ஒன்றாக நாம் நிச்சயமாகவே கருதலாம்.2 கொரிந்தியர் 4:17.