Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்

 அதிகாரம் 19

‘பரிசுத்த இரகசியத்தில் தேவ ஞானம்’

‘பரிசுத்த இரகசியத்தில் தேவ ஞானம்’

1, 2. எந்த “பரிசுத்த இரகசியம்” நம் ஆர்வத்திற்குரியதாக இருக்க வேண்டும், ஏன்?

இரகசியங்கள்! அவை ஆர்வத்தைக் கிளறுகின்றன, கவனத்தை ஈர்க்கின்றன, திகைப்பை ஏற்படுத்துகின்றன; அதனால்தான் அவற்றை மனதிற்குள் மறைத்து வைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் அநேக மனிதர்கள். இருந்தாலும், “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:2) ஆம், சர்வலோகப் பேரரசராகவும் படைப்பாளராகவும் யெகோவா, சில விஷயங்களை மனிதவர்க்கத்திற்கு சொல்லாமல் ஏற்ற சமயம் வரை உரிமையோடு மறைத்து வைக்கிறார்.

2 இருந்தாலும் ஆர்வத்தைக் கிளறி கவனத்தை ஈர்க்கும் ஓர் இரகசியத்தை யெகோவா தமது வார்த்தையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது கடவுளுடைய “சித்தத்தின் பரிசுத்த இரகசியம்” என அழைக்கப்படுகிறது. (எபேசியர் 1:9, NW) அதைப் பற்றி கற்றுக்கொள்வது உங்கள் ஆர்வப்பசியை திருப்தி செய்வதோடு மற்ற பயன்களையும் அளிக்கும். இந்த இரகசியத்தை பற்றிய அறிவு இரட்சிப்பிற்கு வழிநடத்தும், யெகோவாவின் அளவிட முடியாத ஞானத்தை சற்று விளங்கிக்கொள்ள உதவும்.

படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது

3, 4. ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் எவ்வாறு நம்பிக்கை அளித்தது, அதில் என்ன புரியாத புதிர் அல்லது “பரிசுத்த இரகசியம்” அடங்கியிருந்தது?

3 ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, பூமிக்குரிய பரதீஸை பரிபூரண மனிதர்கள் நிரப்ப வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கம் குலைக்கப்பட்டதாக தோன்றியிருக்கலாம். ஆனால் கடவுள் பிரச்சினையை சரிசெய்ய உடனடியாக செயல்பட்டார். “உனக்கும் [சர்ப்பத்திற்கும்] ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்றார்.ஆதியாகமம் 3:15.

4 அந்த வார்த்தைகள் புரியாத புதிராக இருந்தன. அந்த ஸ்திரீ யார்? சர்ப்பம் யார்? சர்ப்பத்தின் தலையை நசுக்கப்போகும் “வித்து” யார்? இவற்றை ஆதாம் ஏவாளால் ஊகிக்க மட்டுமே முடிந்தது. இருந்தாலும், அவிசுவாசமாக நடந்துகொண்ட அந்த தம்பதியினரின் சந்ததியில் வரவிருந்த விசுவாசமுள்ள எவருக்கும் கடவுளுடைய வார்த்தைகள் நம்பிக்கை அளித்தன.  நியாயம் ஜெயிக்கும். யெகோவாவின் நோக்கம் நிறைவேறும். ஆனால் எப்படி? அதுதான் இரகசியம்! ‘பரிசுத்த இரகசியமாகிய மறைக்கப்பட்ட ஞானத்தில் உள்ள தேவ ஞானம்’ என பைபிள் அதை விவரிக்கிறது.1 கொரிந்தியர் 2:7, NW.

5. யெகோவா தமது இரகசியத்தை படிப்படியாக வெளிப்படுத்தியது ஏன் என்பதை உதாரணத்துடன் விளக்குக.

5 “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற” கடவுளாகிய யெகோவா, இந்த இரகசியத்தின் நிறைவேற்றத்தோடு சம்பந்தப்பட்ட விவரங்களை இறுதியில் வெளிப்படுத்த இருந்தார். (தானியேல் 2:28) ஆனால் அதைப் படிப்படியாக செய்ய இருந்தார். உதாரணத்திற்கு, “அப்பா, நான் எப்படி பிறந்தேன்?” என கேட்கும் சிறுவனிடம் அன்பான தகப்பன் எந்த விதத்தில் பதிலளிப்பார் என சிந்தித்துப் பாருங்கள். ஞானமுள்ள தகப்பன், தன் மகனின் சின்னஞ்சிறு மூளையால் புரிந்துகொள்ள முடிந்ததை மட்டுமே சொல்வார். அவன் வளர்ந்த பிறகு மற்ற விஷயங்களை சொல்வார். அதேவிதமாக, தம் சித்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு தம் மக்கள் எப்போது தயாராக இருப்பார்கள் என்பதை யெகோவா தீர்மானிக்கிறார்.நீதிமொழிகள் 4:18; தானியேல் 12:4.

6. (அ) உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன? (ஆ) யெகோவா மனிதர்களோடு உடன்படிக்கை செய்ய முன்வந்தது ஏன் குறிப்பிடத்தக்கது?

6 யெகோவா எவ்வாறு இரகசியங்களை வெளிப்படுத்தினார்? அவர் தொடர்ச்சியான உடன்படிக்கைகளை அல்லது ஒப்பந்தங்களை ஏற்படுத்தி அதிகமான விஷயங்களை வெளிப்படுத்தினார். என்றாவது ஒரு முறை நீங்கள் ஏதாவதொரு ஒப்பந்தத்தை செய்திருக்கலாம்; ஒருவேளை ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது கடன் வாங்குவதற்கு அல்லது கடன் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம், அதில் உட்பட்டிருக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்பதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் யெகோவா ஏன் மனிதர்களோடு முறையான உடன்படிக்கைகளை அல்லது ஒப்பந்தங்களை செய்ய வேண்டும்? அவரது வார்த்தையே, அவரது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதற்கு போதிய உத்தரவாதம் அளிக்கிறதல்லவா? ஆம் அளிக்கிறது, இருந்தாலும் அநேக சந்தர்ப்பங்களில் கடவுள் தம் வார்த்தையை உறுதிப்படுத்த சட்டப்பூர்வ ஒப்பந்தங்களையும் தயவோடு ஏற்படுத்தியிருக்கிறார். மாறாத இந்த ஒப்பந்தங்கள், யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கு இன்னும் வலுவான காரணத்தை அபூரண மனிதர்களுக்கு தருகின்றன.எபிரெயர் 6:16-18, NW.

 ஆபிரகாமோடு உடன்படிக்கை

7, 8. (அ) ஆபிரகாமோடு யெகோவா என்ன உடன்படிக்கை செய்தார், பரிசுத்த இரகசியத்தைக் குறித்து எதை வெளிப்படுத்தினார்? (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட வித்து வரவிருந்த சந்ததியை யெகோவா எப்படி படிப்படியாக வெளிப்படுத்தினார்?

7 பரதீஸிலிருந்து மனிதன் வெளியேற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பாடு யெகோவா தமது உண்மையுள்ள ஊழியராகிய ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: ‘நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகவே பெருகப்பண்ணுவேன். . . . நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.’ (ஆதியாகமம் 22:17, 18) இது வெறும் ஒரு வாக்குறுதியாக இருக்கவில்லை; யெகோவா இதை ஒரு சட்டப்பூர்வ உடன்படிக்கையாக்கி, அதற்கு ஆதாரமாக தமது உறுதியான ஆணையை அளித்தார். (ஆதியாகமம் 17:1, 2; எபிரெயர் 6:13-15) மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதாக சர்வலோகப் பேரரசர் உண்மையில் ஒப்பந்தம் செய்தது எவ்வளவு குறிப்பிடத்தக்கது!

‘நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல . . . பெருகப்பண்ணுவேன்’

8 வாக்குப்பண்ணப்பட்ட வித்து மனிதராக வருவார் என்பதை ஆபிரகாமிய உடன்படிக்கை வெளிப்படுத்தியது; ஏனெனில் அவர் ஆபிரகாமின் சந்ததியில் வருவார் என சொல்லப்பட்டது. அப்படியென்றால் அவர் யாராக இருப்பார்? காலப்போக்கில், ஆபிரகாமின் குமாரர்களில் ஈசாக்கின் வம்சாவளியில் வித்து வருவாரென யெகோவா வெளிப்படுத்தினார். பின்பு ஈசாக்கின் இரு குமாரர்களில் யாக்கோபு தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஆதியாகமம் 21:12; 28:13, 14) அதன் பின்பு யாக்கோபு தனது 12 குமாரர்களில் ஒருவரிடம் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை சொன்னார்: “ஷைலோ [“உரிமைக்காரர்”] வரும்வரை யூதாவைவிட்டு செங்கோல் விலகாது, அவர் பாதங்களைவிட்டு கோலும் விலகாது; ஜனங்களின் கீழ்ப்படிதல் அவருக்கே சொந்தமாக இருக்கும்.” (ஆதியாகமம் 49:10, NW) அந்த வித்து யூதாவின் சந்ததியில் வரும் ஒரு ராஜாவாக இருப்பார் என அப்போது தெரிந்தது!

இஸ்ரவேலோடு உடன்படிக்கை

9, 10. (அ) இஸ்ரவேல் தேசத்தாரோடு யெகோவா என்ன உடன்படிக்கை செய்தார், அந்த உடன்படிக்கை என்ன பாதுகாப்பைத் தந்தது? (ஆ) மனிதவர்க்கத்திற்கு மீட்கும்பொருள் தேவை என்பதை நியாயப்பிரமாணம் எப்படி காட்டியது?

9 பரிசுத்த இரகசியத்தைப் பற்றி இன்னுமதிகமாக வெளிப்படுத்துவதற்கு வழிவகுத்த ஒரு ஏற்பாட்டை பொ.ச.மு. 1513-ல் யெகோவா செய்தார்; அதாவது ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரவேல் தேசத்தாரோடு அவர் ஓர் உடன்படிக்கை செய்தார். மோசேயின் இந்த நியாயப்பிரமாண உடன்படிக்கை  இப்போது அமலில் இல்லையென்றாலும் அப்போது அது வாக்குப்பண்ணப்பட்ட வித்துவை அளிப்பதற்கான யெகோவாவுடைய நோக்கத்தின் ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது. எவ்வாறு? மூன்று விதங்களில். முதலாவதாக நியாயப்பிரமாணம் ஒரு பாதுகாப்பு சுவர்போல் இருந்தது. (எபேசியர் 2:14) அதன் நீதியான சட்டதிட்டங்கள் யூதருக்கும் புறதேசத்தாருக்கும் இடையே ஒரு தடுப்புச்சுவர்போல் இருந்தன. இவ்வாறு, வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் சந்ததி பாதுகாக்கப்பட நியாயப்பிரமாணம் உதவியது. அப்படிப்பட்ட பாதுகாப்பினாலேயே, யூதா கோத்திரத்தில் மேசியா தோன்றுவதற்கான கடவுளுடைய ஏற்ற சமயம் வந்தபோது அந்த தேசம் இன்னமும் நிலைத்திருந்தது.

10 இரண்டாவதாக, மீட்கும்பொருளுக்கான மனிதவர்க்கத்தின் தேவையை நியாயப்பிரமாணம் முழுமையாக வெளிப்படுத்திக் காட்டியது. பரிபூரண சட்டமாகிய அது, பாவமுள்ள மனிதர்கள் அதை முழுமையாக பின்பற்றுவதற்கு திறன் பெற்றிராததை வெளிப்படுத்தியது. இவ்வாறு, “வாக்குப்பண்ணப்பட்ட வித்து வரும்வரை அக்கிரமங்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு” அது உதவியது. (கலாத்தியர் 3:19, NW) மிருக பலிகள் வாயிலாக, நியாயப்பிரமாணம் பாவங்களுக்கு தற்காலிக நிவர்த்தி அளித்தது. ஆனால் பவுல் எழுதியபடி, ‘காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாது’ என்பதால் இந்தப் பலிகள் கிறிஸ்துவின் மீட்கும் பலிக்கு முன்நிழலாக மட்டுமே இருந்தன. (எபிரெயர் 10:1-4) ஆகவே விசுவாசமுள்ள யூதர்களுக்கு அந்த உடன்படிக்கை “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” ஆனது.கலாத்தியர் 3:24.

11. நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு என்ன அருமையான எதிர்பார்ப்பை அளித்தது, ஆனால் மொத்தத்தில் அத்தேசம் ஏன் அந்த எதிர்பார்ப்பை இழந்தது?

11 மூன்றாவதாக, அந்த உடன்படிக்கை இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஓர் அருமையான எதிர்பார்ப்பை அளித்தது. அந்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால் அவர்கள் “ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய்” ஆவார்கள் என யெகோவா சொன்னார். (யாத்திராகமம் 19:5, 6) இறுதியில் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள், பரலோக ஆசாரிய ராஜ்யத்தின் முதல் அங்கத்தினர்களானார்கள். இருந்தாலும் மொத்தத்தில் இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு எதிராக கலகம் செய்து, மேசியானிய வித்துவை நிராகரித்து, அந்த எதிர்பார்ப்பை இழந்தனர். அப்படியென்றால் ஆசாரிய ராஜ்யத்தின் மீதமுள்ள அங்கத்தினர்கள் யாராக இருப்பர்? ஆசீர்வதிக்கப்பட்ட அந்த தேசம் எப்படி வாக்குப்பண்ணப்பட்ட வித்துவோடு சம்பந்தப்பட்டிருக்கும்? பரிசுத்த இரகசியத்தின் அந்த அம்சங்கள் கடவுளுடைய ஏற்ற சமயத்தில் வெளிப்படுத்தப்படவிருந்தன.

 தாவீதோடு ராஜ்ய உடன்படிக்கை

12. தாவீதோடு என்ன உடன்படிக்கையை யெகோவா செய்தார், கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தைப் பற்றி அது எதை வெளிப்படுத்தியது?

12 பொ.ச.மு. 11-ஆம் நூற்றாண்டில் யெகோவா மற்றொரு உடன்படிக்கை வாயிலாக பரிசுத்த இரகசியத்தைப் பற்றி மேலுமாக வெளிப்படுத்தினார். “நான் உனக்குப் பின்பு . . . உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். . . . அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” என்று தாவீதிடம் சொன்னார். (2 சாமுவேல் 7:12, 13; சங்கீதம் 89:3) இப்போது வாக்குப்பண்ணப்பட்ட வித்து தாவீதின் சந்ததியில் வருவாரென குறிப்பிடப்பட்டது. ஆனால் சாதாரண மனிதனால் எப்படி “என்றென்றைக்கும்” ஆள முடியும்? (சங்கீதம் 89:20, 29, 34-36) அப்படிப்பட்ட மனித அரசரால் எப்படி மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற முடியும்?

13, 14. (அ) சங்கீதம் 110-ன்படி யெகோவா தமது அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவிற்கு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) வரவிருந்த வித்துவைக் குறித்த என்னென்ன விஷயங்கள் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன?

13 ஆவியால் ஏவப்பட்டு தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் [“யெகோவா,” NW] என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.” (சங்கீதம் 110:1, 4) தாவீதின் வார்த்தைகள் வாக்குப்பண்ணப்பட்ட வித்துவிற்கு, அல்லது மேசியாவிற்கு நேரடியாக பொருந்தின. (அப்போஸ்தலர் 2:35, 36) இந்த ராஜா எருசலேமிலிருந்து அல்ல, ஆனால் பரலோகத்திலிருந்து யெகோவாவின் “வலதுபாரிசத்தில்” இருந்து ஆட்சி செய்வார். ஆகவே இஸ்ரவேல் தேசத்தின் மீது மட்டுமல்ல, பூமி முழுவதன் மீதும் அவருக்கு அதிகாரம் இருக்கும். (சங்கீதம் 2:6-8) இங்கே இன்னுமதிக விவரம் வெளிப்படுத்தப்பட்டது. மேசியா, ‘மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராயிருப்பார்’ என்று யெகோவா ஆணை அளித்ததை கவனியுங்கள். ஆபிரகாமின் நாளில் அரசராகவும் ஆசாரியராகவும் சேவித்த மெல்கிசேதேக்கைப் போல், வரவிருந்த வித்து அரசராகவும் அதேசமயம் ஆசாரியராகவும் கடவுளால் நேரடியாக நியமிக்கப்படுவார்!ஆதியாகமம் 14:17-20.

14 பல வருடங்களாக, யெகோவா தமது பரிசுத்த இரகசியத்தைக் குறித்து இன்னுமதிகமாக வெளிப்படுத்துவதற்கு தமது தீர்க்கதரிசிகளை பயன்படுத்தினார். உதாரணத்திற்கு அந்த வித்து தியாக மரணம் எய்துவார் என ஏசாயா வெளிப்படுத்தினார். (ஏசாயா 53:3-12) மேசியா பிறக்கவிருந்த  ஊரை மீகா முன்னறிவித்தார். (மீகா 5:2) வித்து எப்போது வருவார், எப்போது இறப்பார் என்ற திட்டவட்டமான காலத்தையும்கூட தானியேல் முன்னறிவித்தார்.தானியேல் 9:24-27.

பரிசுத்த இரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது!

15, 16. (அ) யெகோவாவின் குமாரன் எவ்வாறு ‘ஸ்திரீயினிடத்தில் பிறந்தார்’? (ஆ) இயேசு தமது மனித பெற்றோரிடமிருந்து எந்த உரிமையை சுதந்தரித்தார், வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாக எப்போது வந்தார்?

15 இந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறும் என்பது, வித்து உண்மையில் வரும் வரை புதிராகவே இருந்தது. “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்த . . . தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்” என கலாத்தியர் 4:5 சொல்கிறது. பொ.ச.மு. 2-ஆம் வருடம், யூத கன்னிகையாகிய மரியாளிடம் ஒரு தேவதூதர் பின்வருமாறு சொன்னார்: “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். . . . பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”லூக்கா 1:31, 32, 35.

16 பிற்பாடு, யெகோவா தமது குமாரனின் உயிரை பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்கு மாற்றினார்; இவ்வாறு இயேசு ஸ்திரீயினிடத்தில் பிறந்தார். மரியாள் அபூரண பெண்ணாக இருந்தபோதிலும் அந்த அபூரணத்தை இயேசு சுதந்தரிக்கவில்லை; ஏனெனில் அவர் ‘தேவனுடைய குமாரனாக’ இருந்தார். அதேசமயம் இயேசுவின் மனித பெற்றோர் தாவீதின் சந்ததியாராக இருந்ததால், தாவீதின் வாரிசாக இருப்பதற்கு இயற்கையாகவும் சட்டப்பூர்வமாகவும் இயேசு உரிமை பெற்றார். (அப்போஸ்தலர் 13:22, 23) பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டப்பட்டபோது யெகோவா அவரை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்து, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என அறிவித்தார். (மத்தேயு 3:16, 17) ஆக, இறுதியில் வித்துவானவர் வந்துவிட்டார்! (கலாத்தியர் 3:16) பரிசுத்த இரகசியத்தைக் குறித்து இன்னுமதிகத்தை வெளிப்படுத்துவதற்கு அது சமயமாக இருந்தது.2 தீமோத்தேயு 1:10.

17. ஆதியாகமம் 3:15-ன் அர்த்தம் எப்படி வெளிப்படுத்தப்பட்டது?

17 இயேசு தமது ஊழியத்தின்போது, ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டிருக்கும் சர்ப்பத்தை சாத்தான் என்றும் அந்த சர்ப்பத்தின் வித்துவை சாத்தானின் மக்கள் என்றும் அடையாளங்காட்டினார். (மத்தேயு 23:33; யோவான் 8:44) இவர்கள் எப்படி நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்  என்பது பிற்பாடு வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 20:1-3, 10, 15) அந்த ஸ்திரீ ‘மேலான எருசலேம்’ என அடையாளம் காட்டப்பட்டது; இது, ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் மனைவி போன்ற பரலோக அமைப்பாகும். *கலாத்தியர் 4:26; வெளிப்படுத்துதல் 12:1-6.

புதிய உடன்படிக்கை

18. ‘புதிய உடன்படிக்கையின்’ நோக்கம் என்ன?

18 இயேசுவின் மரணத்திற்கு முந்திய இரவு வெளிப்படுத்தப்பட்ட ஒன்றுதான் மிகக் குறிப்பிடத்தக்கதாக தோன்றுகிறது; அப்போது இயேசு உண்மையுள்ள தமது சீஷர்களிடம் “புதிய உடன்படிக்கை” பற்றி சொன்னார். (லூக்கா 22:20) முந்தைய உடன்படிக்கையாகிய மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையைப் போல் இந்தப் புதிய உடன்படிக்கையும் ஒரு ‘ஆசாரிய ராஜ்யத்தை’ உருவாக்கவிருந்தது. (யாத்திராகமம் 19:6; 1 பேதுரு 2:9) இருந்தாலும் இந்த உடன்படிக்கை ஒரு சொல்லர்த்தமான தேசத்தை அல்ல, ஆனால் ஆவிக்குரிய தேசத்தையே ஸ்தாபிக்கும்; அத்தேசம் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள ஊழியர்கள் மட்டுமே அடங்கிய ‘தேவனுடைய இஸ்ரவேல்’ ஆகும். (கலாத்தியர் 6:16) இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்குபெறுவோர், இயேசுவுடன் சேர்ந்து மனித குலத்தை ஆசீர்வதிப்பர்!

19. (அ) ஒரு ‘ஆசாரிய ராஜ்யத்தை’ உருவாக்குவதில் புதிய உடன்படிக்கை ஏன் வெற்றி பெறுகிறது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏன் “புதுச்சிருஷ்டி” என அழைக்கப்படுகின்றனர், பரலோகத்தில் கிறிஸ்துவோடு எத்தனை பேர் சேவை செய்வர்?

19 மனித குலத்தை ஆசீர்வதிக்க ஒரு ‘ஆசாரிய ராஜ்யத்தை’ உருவாக்குவதில் இந்தப் புதிய உடன்படிக்கை ஏன் வெற்றி பெறுகிறது? ஏனெனில் கிறிஸ்துவின் சீஷர்களை பாவிகளென தீர்ப்பதற்குப் பதிலாக, அவரது பலியின் மூலம் அவர்களது பாவங்களுக்கு அது மன்னிப்பு தருகிறது. (எரேமியா 31:31-34) யெகோவாவிற்கு முன்பு ஒரு சுத்தமான நிலைநிற்கையை அவர்கள் பெற்றவுடன், அவர் தமது பரலோக குடும்பத்தில் அவர்களை தத்தெடுத்து பரிசுத்த ஆவியால் அவர்களை அபிஷேகம் பண்ணுகிறார். (ரோமர் 8:15-17; 2 கொரிந்தியர் 1:21) இவ்வாறு அவர்கள் ‘ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி . . . மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுகிறார்கள்.’ அவர்களது சுதந்தரம் “பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” (1 பேதுரு 1:4, 5) அப்படிப்பட்ட உயர்ந்த ஸ்தானம் மனிதர்களுக்கு முற்றிலும் புதியது  என்பதால் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “புதுச்சிருஷ்டி” என அழைக்கப்படுகின்றனர். (2 கொரிந்தியர் 5:17) மீட்கப்பட்ட மனிதவர்க்கத்தை பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதில் 1,44,000 பேர் இறுதியில் பங்குகொள்வர் என பைபிள் வெளிப்படுத்துகிறது.வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4.

20. (அ) பரிசுத்த இரகசியத்தை பற்றிய என்ன விஷயம் பொ.ச. 36-ல் வெளிப்படுத்தப்பட்டது? (ஆ) ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை யார் அனுபவிப்பர்?

20 இயேசுவுடன், அபிஷேகம் செய்யப்பட்ட இவர்களும் ‘ஆபிரகாமின் வித்துவாக’ ஆகிறார்கள். * (கலாத்தியர் 3:29, NW) முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாம்சப்பிரகாரமான யூதர்கள். ஆனால் பொ.ச. 36-ல் பரிசுத்த இரகசியத்தின் மற்றொரு அம்சம் வெளிப்படுத்தப்பட்டது; அதாவது, யூதர்களல்லாத புறதேசத்தாரும் பரலோக நம்பிக்கையைப் பெற முடியும் என்பது தெரிய வந்தது. (ரோமர் 9:6-8; 11:25, 26; எபேசியர் 3:5, 6) ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கப்போவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டும்தானா? இல்லை, இயேசுவின் பலி முழு உலகத்திற்கும் பயனளிக்கும். (1 யோவான் 2:2) காலப்போக்கில், எண்ணிலடங்கா ‘திரள் கூட்டத்தினர்’ சாத்தானுடைய உலகிற்கு வரவிருக்கும் அழிவில் தப்பிப்பிழைப்பார்கள் என யெகோவா வெளிப்படுத்தினார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) பரதீஸில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்போடு திரளானவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்!லூக்கா 23:43; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:11-15; 21:3, 4.

கடவுளுடைய ஞானமும் பரிசுத்த இரகசியமும்

21, 22. யெகோவாவின் பரிசுத்த இரகசியம் என்ன விதங்களில் அவரது ஞானத்தை வெளிக்காட்டுகிறது?

21 பரிசுத்த இரகசியமானது, ‘பலவகையில் விளங்கும் கடவுளின் ஞானத்துடைய’ அதிசயிக்கத்தக்க ஒரு வெளிக்காட்டாகும். (எபேசியர் 3:8-10, பொ.மொ.) இந்த இரகசியத்தை உருவாக்குவதிலும் பின்னர் அதை படிப்படியாக வெளிப்படுத்துவதிலும் எப்பேர்ப்பட்ட ஞானத்தை யெகோவா வெளிக்காட்டினார்! மனிதனின் வரம்புகளை அவர் ஞானமாக கருத்தில் எடுத்துக்கொண்டு, உண்மையான இருதய நிலையை வெளிக்காட்ட அவர்களை அனுமதித்தார்.சங்கீதம் 103:14.

22 இயேசுவை ராஜாவாக தேர்ந்தெடுத்ததிலும் யெகோவா ஈடிணையற்ற  ஞானத்தை வெளிக்காட்டினார். இந்த சர்வலோகத்திலுள்ள எந்த சிருஷ்டியைக் காட்டிலும் யெகோவாவின் குமாரனே அதிக நம்பகமானவர். மாம்சமும் இரத்தமும் உள்ள மனிதனாக வாழுகையில் இயேசு அநேக விதமான துன்பங்களை அனுபவித்தார். ஆகவே அவர் மனித பிரச்சினைகளை முழுமையாக புரிந்துகொள்கிறார். (எபிரெயர் 5:7-9) இயேசுவுடன் ஆட்சி செய்யப் போகிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கடந்த பல நூற்றாண்டுகளாக எல்லா குலங்களையும் மொழிகளையும் பின்னணிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை, மேற்கொள்ளாத கஷ்டங்களே இல்லை. (எபேசியர் 4:22-24) இரக்கமுள்ள இந்த ஆசாரிய அரசர்களுடைய ஆட்சியின் கீழ் வாழ்வது மிகுந்த இன்பமளிக்கும்!

23. யெகோவாவின் பரிசுத்த இரகசியம் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் என்ன பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்?

23 பரிசுத்த இரகசியம், ‘ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டிருக்கிறது’ என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:25) ஆம், யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்தவான்கள் பரிசுத்த இரகசியத்தைக் குறித்து அதிகத்தை புரிந்திருக்கிறார்கள், அதை லட்சக்கணக்கான மற்றவர்களுடனும் பகிர்ந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் பெற்றிருக்கிறோம்! யெகோவா ‘தமது சித்தத்தின் பரிசுத்த இரகசியத்தை நமக்கு அறிவித்திருக்கிறார்.’ (எபேசியர் 1:9, NW) இந்த அருமையான இரகசியத்தை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, யெகோவா தேவனுடைய ஆழங்காண முடியாத ஞானத்தை உற்று நோக்க அவர்களுக்கும் உதவுவோமாக!

^ பாரா. 17 “தேவ பக்திக்குரிய . . . பரிசுத்த இரகசியம்” இயேசுவிலும் வெளிப்படுத்தப்பட்டது. (1 தீமோத்தேயு 3:16, NW) பரிபூரண விதத்தில் யெகோவாவிற்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள எவராலும் முடியுமா என்பது வெகு காலமாக இரகசியமாய், புதிராய் இருந்தது. இயேசு அந்தப் புதிருக்கு விடையளித்தார். சாத்தான் கொண்டு வந்த எல்லா சோதனைகளின் மத்தியிலும் அவர் உத்தமத்தைக் காத்துக்கொண்டார்.மத்தேயு 4:1-11; 27:26-50.

^ பாரா. 20 இதே வகுப்பாரோடு இயேசு ‘ராஜ்யத்திற்காக . . . ஒரு உடன்படிக்கை’யும் செய்தார். (லூக்கா 22:29, 30, NW) இவ்வாறு, ஆபிரகாமுடைய வித்துவின் இரண்டாம் பாகமாக பரலோகத்தில் தம்மோடு ஆட்சி செய்வதற்கு இந்த ‘சிறுமந்தையோடு’ இயேசு ஒப்பந்தம் செய்தார்.லூக்கா 12:32.