விடுமுறை நாளில் ஊழியத்துக்குப் போக காலையிலேயே தயாரிக்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் களைப்பாக உணர்வதால் போவதா வேண்டாமா என்று யோசிக்கிறீர்கள். ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனாலும், அதைப் பற்றி ஜெபம் செய்துவிட்டு ஊழியத்துக்குப் போகத் தீர்மானிக்கிறீர்கள். வயதான ஒரு சகோதரியோடு அன்று ஊழியம் செய்கிறீர்கள். கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்கிற அந்தச் சகோதரியின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் உங்கள் மனதைத் தொடுகிறது. ஊழியம் செய்யும்போது ஒரு விஷயம் உங்கள் மனதுக்கு வருகிறது: உலகம் முழுவதுமுள்ள சகோதர சகோதரிகள் இதே செய்தியைத்தான் சொல்கிறார்கள்... அவர்களிடம் இருப்பதும் இதே பிரசுரங்கள்தான்... எல்லாருக்கும் கிடைக்கிற பயிற்சியும் ஒன்றுதான்! அன்று ஊழியம் செய்த பிறகு, புதுத் தெம்போடு வீடு திரும்புகிறீர்கள். வீட்டிலேயே இருந்துவிடாமல் ஊழியத்துக்குப் போனதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறீர்கள்.

இன்று, கடவுளுடைய அரசாங்கம் செய்யும் மிக முக்கியமான வேலை பிரசங்க வேலைதான். இந்தக் கடைசி நாட்களில் பிரசங்க வேலை பெரியளவில் செய்யப்படும் என்று இயேசு முன்னதாகவே சொன்னார். (மத். 24:14) அவர் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது? ஊழியம் செய்த ஆட்களையும், அவர்கள் பயன்படுத்திய ஊழிய முறைகளையும், ஊழியத்தில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்த கருவிகளையும் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம். கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதை உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் புரிந்துகொள்ள இந்தப் பிரசங்க வேலை உதவுகிறது.