Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

 இரண்டாம் அதிகாரம்

நோவா கடவுளுடைய வழியில் நடந்தார்

நோவா கடவுளுடைய வழியில் நடந்தார்

1, 2. நோவாவும் அவரது குடும்பத்தாரும் என்ன வேலையில் ஈடுபட்டார்கள், என்ன சவால்களை எதிர்ப்பட்டார்கள்?

முதுகொடிய வேலை செய்து களைத்துப்போன நோவா சற்று இளைப்பாறுகிறார்... அப்படியே நெட்டி முறிக்கிறார்... இப்போது கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: நோவா பெரிய மரப்பலகைமீது அமர்ந்திருக்கிறார். வேலையை ஒருகணம் நிறுத்திவிட்டு, அந்தப் பிரமாண்ட பேழையின் கட்டமைப்பைக் கண்சிமிட்டாமல் பார்க்கிறார். சூடான தாரின் நெடி காற்றில் கலந்து வருகிறது; சுத்தியலின் சத்தமும் ரம்பத்தின் ஓசையும் எதிரொலிக்கிறது. அவரது அன்பு மகன்கள் வெவ்வேறு வேலைகளில் அயராமல் ஈடுபடுவதை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்வையிடுகிறார். மகன்கள், மருமகள்கள், ஆருயிர் மனைவி அனைவரும் பேழையைக் கட்டும் வேலையில் பல்லாண்டு காலமாக அவருடன் அல்லும் பகலும் உழைத்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் பாதி வேலை முடித்துவிட்டார்கள்!

2 அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இவர்களை அடிமுட்டாள்கள் என்று நினைக்கிறார்கள். இந்த முழு பூமியும் பெருவெள்ளத்தால் அழியப்போகிறது என்ற செய்தியைக் கேட்டு கேலி செய்கிறார்கள். அந்தப் பேழை வளர வளர... அவர்களுடைய கேலி கிண்டலும் வளருகிறது. நோவா சொல்வதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைக்கிறார்கள்; அழிவைப் பற்றி நோவா சதா எச்சரிப்பது அவர்களுக்குச் சுத்த அபத்தமாகப் படுகிறது. முட்டாள்தனமான ஒரு வேலைக்காக ஒரு மனிதன் தன் வாழ்க்கையையே... தன் குடும்பத்தாரின் வாழ்க்கையையே... வீணாக்குவதை அவர்களால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், நோவாவின் கடவுளான யெகோவா அவரை முட்டாளாகப் பார்ப்பதில்லை.

3. நோவா எந்த அர்த்தத்தில் தேவனோடு நடந்தார்?

3 ‘நோவா தேவனோடு சஞ்சரித்தார்,’ அதாவது நடந்தார், என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (ஆதியாகமம் 6:​9-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால் என்ன அர்த்தம்? கடவுள் இந்தப் பூமிக்கு வந்து நோவாவுடன் நடந்தார் என்றோ நோவா பரலோகத்துக்குப் போய் கடவுளுடன் நடந்தார் என்றோ அர்த்தம் அல்ல. மாறாக, கடவுளுடைய சொல்லுக்கு நோவா அப்படியே கீழ்ப்படிந்ததால், அவரை இதயப்பூர்வமாக நேசித்ததால், ஒரு நண்பரைப்போல் யெகோவாவுடன் நடந்தார் என்று சொல்லலாம். “விசுவாசத்தினால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்” என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் பைபிள் சொன்னது. (எபி. 11:7) விசுவாசத்தினால் எப்படி உலகத்தைக் கண்டனம் செய்தார்? அவருடைய விசுவாசத்திலிருந்து இன்று நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

நெறிகெட்ட உலகில் நீதியான மனிதர்

4, 5. நோவாவின் நாளில் உலகம் எப்படி மேன்மேலும் மோசமாகிக்கொண்டே போனது?

4 நோவா வளர்ந்துவந்த சமயத்தில் இந்த உலகம் மேன்மேலும் மோசமாகிக்கொண்டே போனது. சொல்லப்போனால், அவருடைய முப்பாட்டனார் ஏனோக்கின்  காலத்திலேயே... அதாவது கடவுளோடு நடந்த மற்றொரு நீதிமானின் காலத்திலேயே... இந்த உலகம் கெட்டுப்போய்த்தான் இருந்தது; தேவபக்தியற்ற மக்களுக்குக் கடவுள் கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பைப் பற்றி ஏனோக்கு முன்னறிவித்திருந்தார். நோவாவின் நாளிலோ, நிலைமை இன்னும் கெட்டுப்போயிருந்தது. இந்தப் பூமி வன்முறையால் நிறைந்திருந்ததால், யெகோவாவின் கண்ணோட்டத்தில் சீர்கெட்டிருந்தது. (ஆதி. 5:22; 6:11; யூ. 14, 15) அது இந்தளவு சீரழியக் காரணம் என்ன?

5 கடவுளுடைய பரலோக மகன்கள் மத்தியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது. அவர்களில் ஒருவன் ஏற்கெனவே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்துவிட்டான்; கடவுளைத் தூற்றிப்பேசி... ஆதாம் ஏவாளைப் பாவம் செய்யத் தூண்டி... பிசாசாகிய சாத்தானாக மாறிவிட்டான். நோவாவின் நாளில், வேறு சில தூதர்களும் யெகோவாவின் நீதியான ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பரலோகத்தில் கடவுள் தந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு, பூமிக்கு வந்தார்கள்... மனித உருவெடுத்தார்கள்... அழகிய பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டார்கள். செருக்கும் சுயநலமும் நிறைந்த அந்தத் தூதர்கள் மனிதரின் மத்தியில் தீய சக்தியாய் இருந்தார்கள்.​—ஆதி. 6:​1, 2; யூ. 6, 7.

6. ராட்சதர்கள் இந்த உலகில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தினார்கள், யெகோவா என்ன செய்ய தீர்மானித்தார்?

6 மனித உருவெடுத்து வந்த தூதர்கள் இயற்கைக்கு மாறாகப் பெண்களுடன் உறவுகொண்டதால் அவர்களுக்குப் பிறந்த மகன்கள் அசாத்திய உருவமும் பலமும் உடையவர்களாய் ஆனார்கள். அவர்களை ராட்சதர்கள் என பைபிள் அழைக்கிறது. அடாவடித்தனமும் அட்டூழியமும் செய்த இந்த ராட்சதர்களால் உலகத்தில் கொடூரம் தலைவிரித்தாடியது, தேவபக்தியற்ற செயல்கள் அதிகரித்தன. ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதது’ என்றும் படைப்பாளர் கண்டதில் ஆச்சரியமே இல்லை. அந்தப் பொல்லாத சமுதாயத்தை 120 ஆண்டுகளில் அடியோடு அழிக்கப்போவதாக யெகோவா தீர்மானித்தார்.​ஆதியாகமம் 6:​3-5-ஐ வாசியுங்கள்.

7. பிள்ளைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் நோவாவும் அவருடைய மனைவியும் என்ன சவாலை எதிர்ப்பட்டார்கள்?

7 அப்படிப்பட்ட ஓர் உலகில் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! என்றாலும், நோவா அதைச் சிறப்பாகச் செய்தார். எப்படியென்று  நாம் பார்க்கலாம்... அவருக்கு அருமையான மனைவி கிடைத்தாள். நோவாவுக்கு 500 வயதானபின், சேம், காம், யாப்பேத் என்ற மூன்று மகன்களை அவருடைய மனைவி பெற்றெடுத்தாள். * இந்தப் பெற்றோர் தங்களைச் சுற்றியுள்ள மோசமான சூழலிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. பொதுவாக, ‘பலசாலிகளையோ’ ‘புகழ்பெற்றவர்களையோ’ கண்டால் சிறுபையன்கள் வாய்பிளந்து நிற்பார்கள். இந்த ராட்சதர்களைப் பார்த்தபோது அந்தச் சிறுவர்களும் இப்படித்தான் வாய்பிளந்து நின்றிருப்பார்கள்! நோவாவும் அவருடைய மனைவியும் இந்த ராட்சதர்களின் வீரதீர செயல்களைப் பற்றிய செய்திகள் தங்களுடைய பிள்ளைகளின் காதில் விழாதபடி செய்திருக்க முடியாது. ஆனால், அக்கிரமங்களை வெறுக்கிற யெகோவா தேவனைப் பற்றிய அருமையான விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்க முடியும். உலகில் நடக்கும் வன்முறையையும் கலகத்தையும் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார் என்பதைத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் புரியவைத்திருக்க முடியும்.​—ஆதி. 6:6.

நோவாவும் அவரது மனைவியும் தங்களுடைய பிள்ளைகளைத் தீய செல்வாக்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது

8. நோவா மற்றும் அவருடைய மனைவியின் முன்மாதிரியை ஞானமுள்ள பெற்றோர் இன்று எப்படிப் பின்பற்றலாம்?

8 நோவா மற்றும் அவரது மனைவியின் நிலைமையை இன்றுள்ள பெற்றோரால் நன்கு புரிந்துகொள்ள முடியும். இன்றைக்கு நாம் வாழ்கிற உலகத்தில்கூட வன்முறையும் கலகத்தனமும் விஷம்போல் பரவியிருக்கிறது. நகரங்களில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கும்பல் ரௌடித்தனம் செய்கிறது. சிறு பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொழுதுபோக்குகளிலும்கூட வன்முறை நிறைந்திருக்கிறது. ஞானமுள்ள பெற்றோர் இப்படிப்பட்ட செல்வாக்குகளிலிருந்து தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாக்க முழுமுயற்சி எடுக்கிறார்கள்; அதற்காக, சமாதானத்தின் தேவனாகிய யெகோவாவைப் பற்றி... அவர் விரைவில் வன்முறைக்கு முடிவுகட்டுவார் என்பதைப் பற்றி... கற்றுக்கொடுக்கிறார்கள். (சங். 11:5; 37:​10, 11) இந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்! ஆம், நோவாவும் அவரது மனைவியும் வெற்றி பெற்றார்கள். அவர்களுடைய மகன்கள் நல்ல மனிதர்களாக வளர்ந்தார்கள்; தங்களைப் போலவே உண்மைக் கடவுளான யெகோவாவுக்கு வாழ்வில் முதலிடம் கொடுக்கிற பெண்களை மணமுடித்தார்கள்.

“உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு”

9, 10. (அ) கடவுள் கொடுத்த எந்தக் கட்டளை நோவாவின் வாழ்க்கையை மாற்றியது? (ஆ) பேழையின் அமைப்பையும் அதைக் கட்டுவதற்குரிய நோக்கத்தையும் பற்றி நோவாவிடம் கடவுள் என்ன சொன்னார்?

9 ஒருநாள்... நோவாவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுகிறது. உலகை அழிக்கப்போவதாக யெகோவா தமது அன்பு ஊழியனிடம் தெரிவிக்கிறார். “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு” என்று கட்டளையிடுகிறார்.​—ஆதி. 6:14.

10 சிலர் நினைப்பதுபோல் இந்தப் பேழை ஒரு கப்பல் அல்ல. கப்பலில் இருப்பது போல இதற்குத் துடுப்போ சுக்கானோ பாய்மரமோ நங்கூரமோ கிடையாது; சொல்லப்போனால், கப்பலுக்குரிய எந்த அம்சங்களும் கிடையாது. இது ஒரு பெரிய பெட்டி. நோவாவுக்கு இந்தப் பேழையின் துல்லியமான அளவுகளை யெகோவா தருகிறார்... அதன் அமைப்பைப் பற்றி நுட்பமான சில விவரங்களைக் கொடுக்கிறார்... அதன் உள்ளும் புறமும் தார் பூசச் சொல்கிறார். அதோடு, பேழையைக் கட்டுவதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுகிறார்; “பூமியின் மீது பெருவெள்ளத்தைக் கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லாம் இறந்துபோகும்” என்று சொல்கிறார். அதேசமயத்தில், “நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும்” என்று சொல்லி நோவாவுடன் ஓர் ஒப்பந்தமும்  செய்கிறார். எல்லா வகை மிருகங்களிலும் சிலவற்றைப் பேழைக்குள் நோவா கொண்டுவர வேண்டியிருக்கிறது. பேழைக்குள் இருக்கும் உயிர்கள் மட்டுமே பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பிழைக்கும்.​—ஆதி. 6:​17-20, NW.

கடவுள் தந்த கட்டளையை நிறைவேற்ற நோவாவும் அவரது குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து உழைத்தார்கள்

11, 12. நோவா செய்ய வேண்டியிருந்த மாபெரும் வேலை என்ன, அந்தச் சவாலை எப்படிச் சமாளித்தார்?

11 இப்போது நோவாவுக்கு முன்னால் ஒரு மாபெரும் வேலை இருக்கிறது. சுமார் 437 அடி நீளமும், 73 அடி அகலமும், 44 அடி உயரமும் உள்ள பிரமாண்டமான ஒரு பேழையை கட்ட வேண்டியிருக்கிறது. நவீன காலத்தில் கட்டப்பட்டிருக்கிற எந்தவொரு பெரிய மரக்கப்பலையும்விட அது மிக மிகப் பெரியது. இந்த வேலையிலிருந்து நோவா பின்வாங்குகிறாரா? சவால்களைப் பற்றி முறையிடுகிறாரா? அல்லது தனக்கு வேலை சுலபமாய் இருப்பதற்காகப் பேழையின் அளவையும் அமைப்பையும் தன் இஷ்டத்துக்கு மாற்றுகிறாரா? இல்லை; ‘கடவுள் கட்டளையிட்டபடியே எல்லாவற்றையும் நோவா செய்கிறார்; ஆம், அவர் அப்படியே செய்கிறார்.’​—ஆதி. 6:​22, NW.

12 இந்த வேலையைச் செய்து முடிக்க 40 அல்லது 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். நோவாவும் அவரது குடும்பத்தாரும் மரங்களை வெட்டி அவற்றின் துண்டுகளை இழுத்துவருகிறார்கள். மரக்கட்டைகளைச் செதுக்கி இணைக்கிறார்கள். பேழையில் மூன்று தளங்களை அமைத்து, அநேக அறைகளைக் கட்டுகிறார்கள். மேலே ஜன்னல்கள் அமைக்கிறார்கள், ஒரு பக்கத்தில் கதவு வைக்கிறார்கள். தண்ணீர் வடிந்துசெல்ல மேற்கூரையைச் சற்றுக் கூம்பு வடிவில் கட்டுகிறார்கள்.​—ஆதி. 6:​14-16.

13. பேழையைக் கட்டுவதைவிட வேறெந்த வேலை நோவாவுக்குச் சவாலாக இருந்திருக்கலாம், மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

13 வருடங்கள் உருண்டோட உருண்டோட... பேழையும் ஒரு முழு வடிவத்திற்கு வர வர... தன் குடும்பத்தின் மொத்த ஆதரவும் கிடைப்பதை நினைத்து நோவா சந்தோஷப்பட்டிருப்பார்! பேழையைக் கட்டுவதைவிட சவால்மிக்க இன்னொரு வேலையையும் நோவா செய்கிறார். பைபிள் அவரை “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா” என அழைக்கிறது. (2 பேதுரு 2:​5-ஐ வாசியுங்கள்.) தன் குடும்பத்தாருடன் சேர்ந்து, விரைவில் வரப்போகும் அழிவைப் பற்றித் தேவபக்தியற்ற மக்களுக்குத் தைரியத்துடன் எச்சரிக்கிறார். அவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்? பிற்பாடு இயேசு இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, “அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை” என்று கூறினார். அவர்கள் அன்றாட வாழ்விலேயே மூழ்கிப்போயிருந்தார்கள்... சாப்பிடுவதில், குடிப்பதில், பெண் கொடுப்பதில், பெண் எடுப்பதில் மூழ்கிப்போயிருந்தார்கள்... அதனால் நோவாவுக்குச் செவிகொடுக்கவே இல்லை... என்று சொன்னார். (மத். 24:​37-39) அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் அநேகர் கேலி கிண்டல் செய்தார்கள்; அதுமட்டுமா, சிலர் அவர்களை மிரட்டியிருக்கலாம், மூர்க்கத்தனமாக எதிர்த்திருக்கலாம். நாசவேலையில் ஈடுபட்டு அந்தப் பேழையைத் தகர்த்துப்போடவும்கூட முயன்றிருக்கலாம்.

நோவாவைக் கடவுள் ஆசீர்வதித்தார் என்பதற்கு அத்தாட்சிகள் இருந்தும் மக்கள் அவரைக் கேலி செய்தார்கள், அவர் சொன்ன செய்தியை அசட்டை செய்தார்கள்

14. நோவா மற்றும் அவரது குடும்பத்தாரிடமிருந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 இருந்தாலும், நோவாவும் அவருடைய குடும்பத்தாரும், முன்வைத்த காலைப் பின்வைக்கவே இல்லை. நோவாவின் குடும்பத்தாருக்கு எதெல்லாம் முக்கியமாக இருக்கிறதோ அதெல்லாம் அவர்களைச் சுற்றியிருந்தவர்களுக்கு அற்பமாக... தவறாக... முட்டாள்தனமாக... இருக்கிறது; என்றாலும், நோவாவின் குடும்பத்தார் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையை நிறுத்தாமல் செய்கிறார்கள். இவர்களுடைய விசுவாசத்திலிருந்து இன்று கிறிஸ்தவக் குடும்பத்தார் நிறையக் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) நோவாவின் சகாப்தத்தைப் போலவே நம்முடைய சகாப்தமும் இருக்குமென இயேசு கூறினார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இந்த உலகம் அசட்டை செய்தால், கேலி செய்தால், இந்தச் செய்தியைச் சொல்கிறவர்களைத் துன்புறுத்தினால், நாம்  நோவாவை நினைத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சவால்கள் அவருடைய காலத்திலிருந்தே இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“பேழைக்குள் செல்”

15. நோவா 600-வது வயதை நெருங்கியபோது யாரையெல்லாம் இழந்தார்?

15 பல பத்தாண்டுகள் பறந்தோடுகின்றன... அந்தப் பேழை கடைசியில் முழு வடிவத்தை அடைகிறது. நோவா 600-வது வயதை நெருங்குகிறபோது, அன்பானவர்களை இழக்கிறார். அவரது தகப்பன் லாமேக்கு காலமாகிறார். * இவர் காலமாகி ஐந்து வருடங்களுக்குப்பின் லாமேக்கின் தகப்பன் மெத்தூசலா, அதாவது நோவாவின் தாத்தா, 969-வது வயதில் காலமாகிறார்; பைபிள் பதிவின்படி, இவர்தான் உலகில் வாழ்ந்தவர்களிலேயே மிக மிக நீண்ட காலம் வாழ்ந்தவர். (ஆதி. 5:27) மெத்தூசலாவும் லாமேக்கும் முதல் மனிதன் ஆதாமுக்குச் சமகாலத்தவர்கள்.

16, 17. (அ) 600-வது வயதில் நோவாவுக்கு என்ன செய்தி வந்தது? (ஆ) நோவாவும் அவரது குடும்பத்தாரும் கண்ட காட்சியை விவரியுங்கள்.

16 அறுநூறாம் வயதில், நோவாவுக்கு யெகோவா தேவனிடமிருந்து ஒரு புதிய செய்தி வருகிறது; “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்” என்று யெகோவா சொல்கிறார். அதோடு, சுத்தமான மிருகங்களில், அதாவது பலி செலுத்துவதற்கேற்ற மிருகங்களில், ஏழேழும் மற்றவற்றில் இரண்டிரண்டும் பேழைக்குள் கொண்டுபோகச் சொல்லிக் கட்டளையிடுகிறார்.​—ஆதி. 7:​1-3.

17 இது நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு காட்சியாக இருக்கிறது: ஆயிரமாயிரம் விலங்குகள் திரண்டு வருகின்றன​—நடந்தும்... பறந்தும்... ஊர்ந்தும்... ஆடியசைந்தும்... வருகின்றன. ஒவ்வொன்றும் வியக்கவைக்கும் அளவுகளில், வடிவங்களில், இயல்புகளில் இருக்கிறது. அந்த விலங்குகளைத் தட்டிக்கொடுத்து... அதட்டி... மிரட்டி...  பேழைக்குள் நோவா ஓட்டிக்கொண்டு செல்வதுபோல் நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை! அவை “நோவாவிடம் பேழைக்குள் சென்றன” என்று பதிவு சொல்கிறது.​—ஆதி. 7:​9, NW.

18, 19. (அ) நோவாவின் பதிவிலுள்ள சம்பவங்களைக் குறித்து சந்தேகவாதிகள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் எப்படிப் பதில் தரலாம்? (ஆ) தாம் படைத்த விலங்குகளைப் பாதுகாக்க யெகோவா தேர்ந்தெடுத்த முறை எப்படி அவரது ஞானத்தைக் காட்டுகிறது?

18 சந்தேகவாதிகள் சிலர் கேட்கலாம்: ‘எப்படி இந்த மிருகங்களெல்லாம் பேழை இருந்த இடத்துக்கு வந்துசேர்ந்திருக்கும்? எப்படி இவையெல்லாம் அந்தப் பேழைக்குள் சமாதானமாய் இருந்திருக்கும்?’ இதைச் சிந்தித்துப் பாருங்கள்: இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவருக்குத் தாம் உண்டாக்கிய விலங்குகளைக் கட்டுப்படுத்துவது கஷ்டமா? அவற்றைச் சாதுவானவையாக... அடங்கி நடப்பவையாக... மாற்ற முடியாதா? யெகோவா தேவன்தான் இந்த எல்லா விலங்குகளையும் படைத்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். வெகு காலத்திற்குப் பிற்பாடு, அவர் செங்கடலையே இரண்டாகப் பிளந்தார், சூரியனையும் அசையாமல் நிற்க வைத்தார். அப்படியிருக்க, நோவாவின் பதிவில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவரால் செய்திருக்க முடியாதா? நிச்சயம் செய்திருக்க முடியும், செய்தும் காட்டினார்.

19 கடவுள் தாம் படைத்த விலங்குகளை வேறெதாவது முறையில் பாதுகாத்திருக்கலாம்தான். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த ஞானமான முறை நமக்கு ஒரு விஷயத்தை நினைப்பூட்டுகிறது. இந்தப் பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பை ஆரம்பத்தில் மனிதனிடம் யெகோவா ஒப்படைத்திருந்ததை நினைப்பூட்டுகிறது. (ஆதி. 1:28) யெகோவா தாம் படைத்த விலங்குகளையும் மனிதர்களையும் உயர்வாகக் கருதுகிறார் என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க இன்று பெற்றோர் பலர் நோவாவின் கதையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

20. அந்தக் கடைசி வாரத்தில் நோவாவும் அவரது குடும்பத்தாரும் எப்படி மும்முரமாகச் செயல்பட்டிருக்கலாம்?

20 இன்னும் ஒரு வாரத்தில் பெருவெள்ளம் வருமென நோவாவிடம் யெகோவா சொல்கிறார். அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அரக்கப்பரக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா விலங்குகளையும் அதனதன் இடத்திற்குக் கொண்டுபோவதை... விலங்குகளுக்கும் தங்களுக்கும் தேவையான உணவுப்பொருள்களை  அடுக்கிவைப்பதை... தங்களுடைய சாமான்களைச் சிரமத்துடன் ஏற்றுவதை... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேழையை வசிப்பதற்கு ஏற்ற வீடாக மாற்ற நோவாவின் மனைவியும் சேம், காம், யாப்பேத் ஆகியோரின் மனைவிமாரும் பம்பரமாகச் சுழன்றிருக்கலாம்.

21, 22. (அ) நோவாவின் காலத்து மக்கள் அசட்டையாக இருந்ததைக் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை? (ஆ) அக்கம்பக்கத்தாருடைய கேலி கிண்டலெல்லாம் எப்போது முடிவுக்கு வந்தது?

21 அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? நோவாவையும் அவருடைய வேலைகளையும் யெகோவா ஆசீர்வதித்திருப்பதைக் கண்ணாரக் கண்டும் அவர்கள் இன்னும் ‘கவனம் செலுத்தாமலேயே’ இருக்கிறார்கள். பேழைக்குள் விலங்குகளெல்லாம் திரண்டு செல்வதைப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி அசட்டையாக இருந்ததைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இன்றைக்கு மக்கள் அதேபோல்தான் இருக்கிறார்கள்; இந்தப் பொல்லாத உலகின் இறுதிக்கட்டத்தில் வாழ்கிறோம் என்பதற்கு அளவில்லா அத்தாட்சிகள் இருந்தும் கவனம் செலுத்தாமலேயே இருக்கிறார்கள். அப்போஸ்தலன் பேதுரு முன்னுரைத்தபடி, கடவுளுடைய எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் ஏளனம் செய்துகொண்டும்தான் இருக்கிறார்கள். (2 பேதுரு 3:​3-6-ஐ வாசியுங்கள்.) இன்று போலத்தான் அன்றும், நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் மக்கள் கேலி செய்திருப்பார்கள்.

22 அந்தக் கேலி கிண்டலெல்லாம் எப்போது முடிவுக்கு வருகிறது? நோவா தன் குடும்பத்தினரையும் விலங்குகளையும் பேழைக்குள் கொண்டுவந்ததும், ‘யெகோவா அவரை உள்ளேவிட்டுக் கதவை அடைக்கிறார்.’ அப்போது, கேலி செய்கிறவர்கள் யாராவது பக்கத்தில் இருந்திருந்தால், அவர்களது வாயும் அடைக்கப்பட்டிருக்கும்! அப்படியில்லாவிட்டால், மழை வந்து அவர்களுடைய வாயை அடைத்திருக்கும். ஆம், மழை பெய்கிறது... அடைமழை பெய்கிறது... பெய்துகொண்டே இருக்கிறது... யெகோவா சொன்னபடியே, இந்த முழு பூமியும் வெள்ளத்தில் மூழ்குகிறது.​—ஆதி. 7:​16-21.

23. (அ) நோவாவின் காலத்திலிருந்த பொல்லாத மக்கள் சாவதைக் கண்டு யெகோவா ஆனந்தம் அடையவில்லை என நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) நோவாவின் விசுவாசத்தைப் பின்பற்றுவது இன்று ஏன் ஞானமானது?

23 அந்தப் பொல்லாத மக்கள் சாவதைக் கண்டு யெகோவா ஆனந்தம் அடைந்தாரா? இல்லை! (எசே. 33:11) ஆனால், அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள... சரியானதைச் செய்ய... போதிய வாய்ப்பை ஏற்கெனவே கொடுத்திருந்தார். அவர்களால் தங்களை மாற்றிக்கொள்ள முடிந்திருக்குமா? இந்தக் கேள்விக்கு நோவாவின் வாழ்க்கை பதில் அளிக்கிறது. யெகோவாவுடன் நடப்பதன் மூலம், அதாவது எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம், தப்பிப்பிழைக்க முடியும் என்பதை நோவா காண்பித்தார். அந்த அர்த்தத்தில்தான், அவரது விசுவாசம் அன்றைய உலகத்தைக் கண்டனம் செய்தது; அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களின் செயல்கள் பொல்லாதவை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அவரது விசுவாசம் அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாத்தது. அவரது விசுவாசத்தை நீங்கள் பின்பற்றினால், உங்களையும் உங்கள் உயிருக்கு உயிரானவர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நோவாவைப் போல், நீங்களும் யெகோவா தேவனுடன் ஒரு நண்பராக நடக்க முடியும். அந்த நட்பு என்றென்றும் தொடரும் ஒரு நட்பு!

^ பாரா. 7 அந்தக் கால மக்கள் இந்தக் கால மக்களைவிட நெடுநாள் வாழ்ந்தார்கள்; பரிபூரணமாய்ப் படைக்கப்பட்ட ஆதாம்-ஏவாள் காலத்துக்கு அண்மையில் வாழ்ந்ததே அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம்.

^ பாரா. 15 லாமேக்கு தன்னுடைய மகனுக்கு நோவா என்ற பெயரைச் சூட்டினார்; அதன் அர்த்தம் “இளைப்பாறுதல்” அல்லது “ஆறுதல்” என்பதாக இருக்கலாம். சபிக்கப்பட்ட இந்த மண்ணில் கஷ்டப்பட்டு உழைத்துக் களைத்திருக்கிற மனிதரை இளைப்பாறுதலுக்கு நோவா வழிநடத்திச் செல்வார் என லாமேக்கு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்; இப்படி நோவா தன் பெயருக்கு இசைவாக வாழ்வார் என்றும் முன்னுரைத்திருந்தார். (ஆதி. 5:​28, 29) ஆனால், அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காணும் முன்பே அவர் இறந்துவிட்டார். நோவாவின் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம்.