“சூதாட்டத்தில நிறைய பணம் ஜெயிக்கணும்னு அடிக்கடி கடவுள்கிட்ட வேண்டுவேன்; ஒரு தடவைகூட ஜெயிச்சதே இல்லை.”—சாமுவேல், * (அடிக்குறிப்பை பாருங்கள்.) கென்யா.

“எங்க ஸ்கூல்ல ஒரே மாதிரி ஜெபத்தை மனப்பாடம் செஞ்சு தினமும் சொல்வோம்.”—தெரேஸா, பிலிப்பைன்ஸ்.

“எனக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் ஜெபம் செய்வேன். செஞ்ச தப்புக்காக மன்னிப்பு கேட்பேன். கடவுளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க உதவி கேட்பேன்.”—மேக்தலீன், கானா.

இந்த மாதிரி நிறைய காரணங்களுக்காக மக்கள் கடவுளிடம் வேண்டுகிறார்கள். சிலர் நல்ல எண்ணத்தோடு வேண்டுகிறார்கள், சிலர் சுயநலமாக, தனக்காக மட்டும் வேண்டுகிறார்கள். சிலர், மனதில் இருப்பதை எல்லாம் கடவுளிடம் கொட்டுகிறார்கள்; சிலர் ஏதோ கடமைக்காக, ஜெபத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள். பரீட்சையில் பாஸ் ஆவதற்காக... குடும்பத்தில் பிரச்சினை வராமல் இருப்பதற்காக... விளையாட்டு போட்டியில் அவர்களுடைய நாடு ஜெயிக்க வேண்டும் என்றுகூட வேண்டுகிறார்கள். மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் ஜெபம் செய்கிறார்கள் என்று அறிக்கைகள் சொல்கிறது.

நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? எதற்கெல்லாம் ஜெபம் செய்கிறீர்கள்? நாம் செய்யும் ஜெபத்தை யாராவது கேட்கிறார்களா? நம் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்குமா? ஒரு எழுத்தாளர் இப்படி சொன்னார்: ‘நம்ம பிரச்சினையை அப்போதைக்கு மறக்கிறதுக்கு வேணும்னா ஜெபம் உதவி செய்யலாம். ஜெபத்தினால வேறெந்த பிரயோஜனமும் இல்லை.’ ஜெபம் செய்தால் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்று மருத்துவத் துறையில் இருக்கும் சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், மக்கள் ஏதோ கடமைக்காக, வெறும் மன நிம்மதிக்காகத்தான் ஜெபம் செய்கிறார்களா?

ஜெபம் செய்வதால் நிறைய நன்மை இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. சரியான விஷயங்களுக்காக, சரியான விதத்தில் ஜெபம் செய்யும்போது கடவுள் அதை நிச்சயம் கேட்பார். இதை எப்படி நம்பலாம்? அடுத்த கட்டுரைகளை படித்து பாருங்கள். (w15-E 10/01)

^ பாரா. 3 சில பெயர்களை மாற்றியிருக்கிறோம்.