ஜானட் சொல்கிறார், “என்னோட அப்பா இறந்த கொஞ்ச நாள்லயே என் வீட்டுக்காரர் என்கிட்ட வந்து, அவருக்கு வேறொரு பொண்ணோட தொடர்பு இருக்குனு சொன்னார். ஒருநாள் திடுதிப்புனு வந்து அவரோட துணிமணிகளை எடுத்துக்கிட்டு போயிட்டாரு. போறேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லலை. என்னையும் பிள்ளைங்களையும் ‘அம்போ’னு விட்டுட்டு போயிட்டார்.” அதன்பின், ஜானட் ஒரு வேலைக்கு போனார். அவருடைய சம்பளத்தை வைத்து வீட்டு ‘லோனைக்கூட’ கட்ட முடியவில்லை. ஜானட்டுக்கு இன்னும் பல கஷ்டங்கள் வந்தது. அவர் சொல்கிறார்: “குடும்பத்தை கவனிச்சுக்கிற மொத்த பொறுப்பும் என்மேல வந்துடுச்சு. அதை எப்படி நான் தனியா செய்யப் போறேங்கிற கவலையே என்னை பாடா படுத்திடுச்சு. அதுமட்டுமில்ல, மத்தவங்களை மாதிரி நான் என் பிள்ளைங்களை கவனிச்சுக்க முடியலையே என்ற குற்றவுணர்ச்சியில தவிச்சேன். என்னைப் பத்தியும் பிள்ளைங்களை பத்தியும் மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சு இன்னமும் கவலைப்படுறேன். என் வீட்டுக்காரர் என்னை விட்டுட்டு போகாம இருக்க நான் இன்னும் ஏதாவது முயற்சி செஞ்சிருக்கணும்னு மத்தவங்க நினைப்பாங்களோன்னு பயந்தேன்.”

ஜானட்

கவலைப்படுவதை குறைக்கவும் கடவுளுடைய நண்பராக இருக்கவும் ஜானட்டுக்கு ஜெபம் ரொம்ப உதவியாக இருந்தது. அவர் சொல்கிறார்: “ஏன்தான் ராத்திரி நேரம் வருதோன்னு யோசிப்பேன். எல்லாரும் அமைதியா தூங்கும்போது என் மனசு மட்டும் தூங்காது. இந்த பிரச்சினைகள் எல்லாம் என் மனசை வாட்டி வதைக்கும். அந்த சமயத்துல ஜெபம் செய்வேன், பைபிள் வாசிப்பேன். இப்படி செஞ்சதுனாலதான் நிம்மதியா தூங்க முடிஞ்சிது. எனக்கு ரொம்ப பிடிச்ச பைபிள் வசனம் பிலிப்பியர் 4:6, 7. ‘நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ளும்’னு அந்த வசனம் சொல்லுது. நிறைய தடவை ராத்திரியெல்லாம் தூங்காம ஜெபம் செஞ்சிருக்கேன். அப்போ யெகோவா எனக்கு நிம்மதியையும் மன சமாதானத்தையும் கொடுத்திருக்கார்.”

எல்லா விதமான கவலையையும் சமாளிக்க ஜெபம் நமக்கு உதவியாக இருக்கிறது. அதை பற்றி இயேசு இப்படி சொன்னார்: “நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உங்கள் தகப்பனாகிய கடவுள் அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:8) இருந்தாலும், நாம் அவரிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும். “கடவுளிடம் நெருங்கி” செல்வதற்கு ஜெபம் ஒரு முக்கிய வழியாக இருக்கிறது.  அப்படி செய்யும்போது, அவரும் ‘நம்மிடம் நெருங்கி வருவார்.’—யாக்கோபு 4:8.

நம்முடைய கவலைகளை ஜெபத்தில் சொல்லும்போது நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அதுமட்டுமல்ல, ‘ஜெபங்களை கேட்கும்’ கடவுளான யெகோவா தம்மீது நம்பிக்கை வைத்து வேண்டுபவர்களுக்கு உதவியும் செய்கிறார். (சங்கீதம் 65:2) அதனால்தான் இயேசு தம் சீடர்களிடம், ‘மனந்தளராமல் எப்போதும் ஜெபம் செய்யுங்கள்’ என்று சொன்னார். (லூக்கா 18:1) நல்வழி காட்டும்படியும், உதவி செய்யும்படியும் நாம் கடவுளிடம் விடாமல் ஜெபம் செய்ய வேண்டும். அவர் நம்மை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்க வேண்டும். ‘எனக்கு உதவி செய்ய கடவுளுக்கு சக்தி இருக்கா, அவருக்கு விருப்பம் இருக்கா?’ என்றெல்லாம் சந்தேகப்படக் கூடாது. “இடைவிடாமல் ஜெபம்” செய்யும்போது நமக்கு கடவுள்மீது உண்மையிலேயே விசுவாசம் இருப்பதைக் காட்டுகிறோம்.—1 தெசலோனிக்கேயர் 5:17.

கடவுள்மீது விசுவாசம் வைப்பது என்றால் என்ன?

கடவுள்மீது விசுவாசம் வைப்பது என்றால், அவரைப் பற்றி ‘அறிந்துகொண்டு,’ அவரை ஒரு நிஜமான நபராக பார்ப்பதைக் குறிக்கிறது. (யோவான் 17:3) அதற்கு நாம் முதலில் பைபிளைப் படித்து கடவுளுடைய எண்ணங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது கடவுள் நம்மை பார்க்கிறார், நமக்கு உதவி செய்ய விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்வோம். ஆனால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதால் மட்டுமே விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியாது. கடவுளோடு ஒரு நல்ல நட்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு நட்பும் ஒரே நாளில் வளராது. அதேபோல்தான் கடவுளோடு இருக்கிற நட்பும். கடவுளைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளும்போது, ‘அவருக்குப் பிரியமான காரியங்களை செய்யும்போது,’ அவருடைய சக்தியை உணரும்போது, அவர்மீது இருக்கும் விசுவாசம் படிப்படியாக ‘அதிகரிக்கும்.’ (2 கொரிந்தியர் 10:15; யோவான் 8:29) இந்த மாதிரியான விசுவாசம்தான் கவலைகளை சமாளிக்க ஜானட்டுக்கு உதவியது.

ஜானட் சொல்கிறார், “ஒவ்வொரு நாளும் யெகோவா என் கையை பிடிச்சு கூட்டிட்டு போற மாதிரியே உணர்றேன். இந்த உணர்வுதான் அவர்மேல விசவாசத்தை வளர்க்க எனக்கு உதவியா இருந்திருக்கு. நிறைய சமயம் எங்க வாழ்க்கையில அநியாயங்கள் நடந்துச்சு. ஆனா யெகோவாகிட்ட உருக்கமா ஜெபம் செஞ்சப்போ அந்த கஷ்டமான சூழ்நிலைமையில இருந்து வெளிவர அவர் எங்களுக்கு உதவி செஞ்சார். கண்டிப்பா அதை என்னால தனியா சமாளிச்சிருக்கவே முடியாது. யெகோவாவுக்கு ஜெபத்துல நன்றி சொல்லும்போது, அவர் எனக்காக செஞ்ச எல்லாமே எனக்கு ஞாபகம் வரும். எந்த சமயத்துல எங்களுக்கு உதவி தேவைப்பட்டுச்சோ அந்த சமயத்துல அவர் எங்களுக்கு உதவி செஞ்சிருக்கார். அதுமட்டுமில்ல கிறிஸ்தவ சபையில எங்களுக்கு நல்ல நல்ல நண்பர்களை கொடுத்திருக்கார். எங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா அவங்க உடனே வந்திடுவாங்க. என் பிள்ளைங்க அவங்ககிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங்களை கத்துக்குறாங்க.” *

மல்கியா 2:16-ல (NW) ‘நான் விவாகரத்தை வெறுக்கிறேன்’னு யெகோவா ஏன் சொன்னார்னு எனக்கு புரியுது. ஏன்னா ஒருத்தர் துரோகம் செய்யும்போது தப்பே செய்யாத துணைக்கு அதை தாங்கிக்கவே முடியாது. என் வீட்டுக்காரர் என்னை விட்டுட்டு போய் ரொம்ப வருஷம் ஆகுது. இன்னமும் நான் சில சமயம் தனியா இருக்குற மாதிரி உணர்வேன். அந்த சமயத்துல மத்தவங்களுக்கு ஏதாவது உதவி செய்வேன். அது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.” பைபிள் சொல்வதுபோல் ஜானட் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் எல்லாரோடும் பழக முயற்சி செய்கிறார். கவலையில் மூழ்கிவிடாமல் இருக்க இது அவருக்கு உதவுகிறது. *நீதிமொழிகள் 18:1.

கடவுள், “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.”—சங்கீதம் 68:5

“யெகோவா ‘திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்’ என்ற விஷயம்தான் எல்லாத்தையும்விட எனக்கு ஆறுதலை கொடுக்குது. (சங்கீதம் 68:5) என் வீட்டுக்காரர் என்னை விட்டுட்டு போன மாதிரி யெகோவா ஒருநாளும் என்னை கைவிட மாட்டார்” என்கிறார் ஜானட். ‘கெட்ட காரியங்களால் கடவுள் யாரையுமே சோதிப்பது கிடையாது’ என்று ஜானட்டுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு பதிலாக, அவர் நம் எல்லாருக்கும் ஞானத்தை ‘தாராளமாகக் கொடுக்கிறார்,’ கவலைகளை சமாளிக்க ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுக்கிறார்.—யாக்கோபு 1:5, 13; 2 கொரிந்தியர் 4:7.

ஆனால் நம் உயிர் ஆபத்தில் இருக்கும்போது நமக்கு வரும் கவலைகளை எப்படி சமாளிப்பது? (w15-E 07/01)

^ பாரா. 10 கவலைகளை சமாளிக்க இன்னும் என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள அக்டோபர் – டிசம்பர் 2014-ல் வெளிவந்த “சோதனைகள் இடியாய் தாக்கும்போது...” என்ற விழித்தெழு! பத்திரிகையை பாருங்கள். இதை www.jw.org வெப்சைட்டில் ஆன்லைனிலும் வாசிக்கலாம்.