“எனக்கு ஏன் இப்படி நடக்கணும்? கடவுள் ஏன் இதை பார்த்துட்டு சும்மா இருந்தார்?” என்று பிரேசில்லில் இருக்கும் சிட்னே யோசித்தார். நீர் சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவர் வீல் சேரிலேயே காலம் தள்ள வேண்டிய நிலைமை வந்துவிட்டது. அப்போது அவருக்கு 24 வயதுதான்.

வியாதி வரும்போது, விபத்து ஏற்படும்போது, நேசித்த ஒருவர் இறக்கும்போது, இயற்கை பேரழிவு ஏற்படும்போது, போர் நடக்கும்போது நிறைய பேர் கடவுள்மீது கோபப்படுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல; பைபிள் காலத்தில் வாழ்ந்த யோபு என்ற நல்ல மனிதனுக்கு, அடுத்தடுத்து நிறைய பிரச்சினைகள் வந்தன. பிரச்சினைகளுக்கு காரணம் தெரியாமல், அவர் கடவுள்மீது குற்றம்சாட்டினார். “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்” என்று அவர் புலம்பினார்.—யோபு 30:20, 21.

தனக்கு ஏன் பிரச்சினை வந்தது? அதுக்கு காரணம் யார்? ஏன் அதை கடவுள் தடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கெல்லாம் யோபுவுக்கு பதில் தெரியவில்லை. ஆனால், இன்று நமக்கு ஏன் பிரச்சினைகள் வருகின்றன, அதை எப்படி சமாளிக்கலாம் என்று கடவுள் பைபிளில் சொல்லியிருக்கிறார்.

நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரா?

கடவுளை பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “அவர் கிரியை [அதாவது, செயல்கள்] உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) “நீதியும் செம்மையுமான” கடவுள் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பாரா? நம்மை சோதிப்பதற்காக அல்லது திருத்துவதற்காக நம்மை கஷ்டப்படுத்தி பார்ப்பாரா?

கண்டிப்பாக இல்லை. பைபிள் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது.” (யாக்கோபு 1:13) கடவுள் மனிதர்களை படைத்தபோது அவர்களுக்கு எந்த குறையும் இல்லை. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு நல்ல வீட்டைக் கொடுத்தார், சந்தோஷத்தை தருகிற வேலையைக் கொடுத்தார், அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள்’ என்று அவர்களிடம் சொன்னார். ஆதாமும் ஏவாளும் கடவுளை நொந்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை.—ஆதியாகமம் 1:28.

ஆனால், ஆரம்பத்தில் இருந்ததைப் போன்ற சூழ்நிலை இன்று பூமியில் இல்லை. எங்கு பார்த்தாலும் மக்கள் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறார்கள். “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை! (ரோமர் 8:22) ஏன் சூழ்நிலைமைகள் தலைகீழாக மாறியது?

நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?

இதை புரிந்துகொள்வதற்கு பிரச்சினை எங்கே ஆரம்பித்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தேவதூதன் கடவுளை எதிர்த்தான். அவனை சாத்தான் அல்லது பிசாசு என்று பைபிள் அழைக்கிறது. இவன், ஆதாம் ஏவாளை கடவுளுக்கு விரோதமாக தவறு செய்யத் தூண்டினான். எப்படி? கடவுள் அவர்களை “நன்மை தீமை அறியத்தக்க” மரத்தின் பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தார். இதன்மூலம், எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் உரிமை தமக்கு மட்டும்தான் இருக்கிறது என்று கடவுள் காண்பித்தார். ஆனால் அவர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போகும்படி சாத்தான் அவர்களை தூண்டினான். அதுமட்டுமல்ல, அந்த பழத்தை சாப்பிட்டால் அவர்கள் சாக மாட்டீர்கள் என்றும் சாத்தான் ஏவாளிடம் சொன்னான். அதன்மூலம், கடவுள் பொய் சொல்பவர் என்று குற்றம் சாட்டினான். சரி எது தவறு எது என்று தீர்மானிக்கும் உரிமையை கடவுள் மனிதர்களுக்கே கொடுத்திருக்க வேண்டும் என்று வாதாடினான். (ஆதியாகமம் 2:17; 3:1-6) மனிதர்களுக்கு கடவுளுடைய ஆட்சியே தேவையில்லை என்றும் சொல்லாமல் சொன்னான். இப்படி செய்ததன் மூலம், ‘கடவுளுக்கு மனிதர்களை ஆட்சி செய்வதற்கான தகுதி இருக்கிறதா?’ என்ற முக்கியமான கேள்வியை எழுப்பினான்.

அதுமட்டுமல்ல மனிதர்கள் சுயநலத்திற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்கள் என்றும் சாத்தான் வாதாடினான். தேவபக்தியோடு வாழ்ந்த யோபுவை பற்றி சாத்தான் கடவுளிடம் இப்படி சொன்னான்: ‘நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையா? ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொட்டீரென்றால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்க மாட்டானா என்று பாருங்கள்.’ (யோபு 1:10, 11) சாத்தான் யோபுவை குற்றம் சாட்டியிருந்தாலும், எல்லா மனிதர்களையும் மனதில் வைத்துத்தான் இப்படி சொன்னான்.

 சாத்தானுக்கு கடவுள் எப்படி பதில் கொடுப்பார்?

கடவுள் நம்மை கைவிட மாட்டார். அவர் மிகவும் ஞானமுள்ளவர், இந்த விவாதத்துக்கு ஒரு முடிவுகட்ட அவர் ஒரு முக்கியமான விஷயத்தை செய்தார். (ரோமர் 11:33) கொஞ்ச காலத்திற்கு மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொள்ளும்படி விட்டுவிட்டார். இதன்மூலம், யாருக்கு ஆட்சி செய்ய தகுதி இருக்கிறது என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்தார்.

இன்றைக்கு பூமியில் இருக்கும் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, மனிதர்களுக்கு ஆட்சி செய்ய தகுதியும் இல்லை திறமையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மனித அரசாங்கத்தால் நமக்கு சமாதானம், பாதுகாப்பு, சந்தோஷத்தை கொடுக்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல, இந்த பூமியே அழிந்துபோகும் அளவுக்கு அதை அவர்கள் நாசமாக்கி இருக்கிறார்கள். ‘தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்று பைபிள் சொல்கிறது. இது எவ்வளவு உண்மை! (எரேமியா 10:23) மனிதர்கள் சமாதானமாக, பாதுகாப்பாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்றுதான் கடவுள் அவர்களை படைத்தார். அதனால் அவரால் மட்டும்தான் இது போன்ற சூழ்நிலையை கொண்டுவர முடியும்.—ஏசாயா 45:18.

அவர் எப்படி இந்த பூமியை மறுபடியும் நல்ல நிலைக்கு மாற்றுவார்? இயேசு அவருடைய சீடர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தார் என்று யோசித்துப் பாருங்கள். “உங்களுடைய [அதாவது, கடவுளுடைய] அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.” (மத்தேயு 6:10) கடவுள் தம்முடைய அரசாங்கத்தின் மூலமாக எல்லா துன்ப துயரங்களையும் பூமியில் இருந்து நீக்கிவிடுவார். (தானியேல் 2:44) ஏழ்மை, வியாதி, மரணம் போன்றவை இருக்கவே இருக்காது. கடவுள் “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளை . . . விடுவிப்பார்” (சங்கீதம் 72:12-14, பொது மொழிபெயர்ப்பு) ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்’ (ஏசாயா 33:24) கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கும் இறந்தவர்களை, அவர் மறுபடியும் உயிரோடு கொண்டு வரப்போகிறார். அதனால்தான், ‘கல்லறைகளில் உள்ள அனைவரும் வெளியே வருவார்கள்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 5:28, 29) கேட்பதற்கே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும்போது நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்

ஏமாற்றத்தை சமாளிக்க

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சிட்னே, தனக்கு விபத்து ஏற்பட்டு 17 வருடங்கள் கழித்து, இப்படி சொன்னார், “எனக்கு இந்த மாதிரி நடந்ததுக்கு யெகோவா தேவன்தான் காரணம்னு நான் ஒருநாளும் நினைச்சதில்லை. ஆனா, விபத்து நடந்த சமயத்துல கடவுள் என்னை கைவிட்டுட்டார்னு நினைச்சு ரொம்ப சோர்ந்து போயிட்டேன். இப்போகூட சில சமயம் நான் ரொம்ப சோகமா ஆயிடுவேன், எனக்கு இந்த மாதிரி ஆயிடுச்சேனு நினைச்சு அழுவேன். இருந்தாலும் இந்த விபத்து, கடவுள் கொடுத்த தண்டனை இல்லைனு பைபிள் படிச்சதுல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். ‘எதிர்பாரா வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் நேரிடும்’னு பைபிள் சொல்லுது. அதுமட்டுமில்ல ஜெபம் செய்றதுனாலயும், எனக்கு பிடிச்ச சில பைபிள் வசனங்களை படிக்கிறதுனாலயும் நான் சந்தோஷமா இருக்கேன், கடவுளுடைய நண்பனாவும் இருக்கேன்.”—பிரசங்கி 9:11, NW; சங்கீதம் 145:18; 2 கொரிந்தியர் 4:8, 9, 16.

கடவுள் ஏன் இந்த பிரச்சினைகளை எல்லாம் அனுமதிக்கிறார், இன்றைக்கு இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் எப்படி சரிசெய்யப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும்போது நமக்கு கடவுள்மீது கோபம் வராது. கடவுளை “ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு” அவர் “பலன் அளிக்கிறார்” என்று பைபிள் நம்பிக்கை கொடுக்கிறது. கடவுளையும் அவருடைய மகனையும் நம்புகிறவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்.—எபிரெயர் 11:6; ரோமர் 10:11. ▪ (w15-E 09/01)