Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம்  |  அக்டோபர் 2015  

 அட்டைப்படக் கட்டுரை | கவலைகளை சமாளிக்க...

ஆபத்தை நினைத்து கவலையா?

ஆபத்தை நினைத்து கவலையா?

அலோனா சொல்கிறார்: “சைரன் சத்தம் கேட்டதும் என் நெஞ்சு படபடக்க ஆரம்பிச்சிடும். பாதுகாப்பான இடத்துல (bomb shelter) போய் ஒளிஞ்சுக்கவேன். அப்பகூட எனக்கு படபடப்பு குறையாது. நான் வெளில போயிருக்கும்போது இப்படி நடந்தா, அதுவும் ஒளிஞ்சுக்க இடமே இல்லன்னா, எனக்கு என்ன செய்றதுனே தெரியாது. ஒருசமயம் நான் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தப்போ, திடீர்னு சைரன் சத்தம் கேட்டுச்சு. நான் பயங்கரமா அழுதேன், மூச்சு திணற ஆரம்பிச்சுடுச்சு. பதட்டம் குறைய ரொம்ப நேரமாச்சு. ஆனா திரும்பவும் சைரன் சத்தம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு.”

அலோனா

போர் மட்டுமல்ல, இன்று ஆபத்து நம்மை பல விதங்களில் தாக்கலாம். உதாரணத்துக்கு, நமக்கு அல்லது நாம் நேசிக்கும் ஒருவருக்கு மோசமான வியாதி இருப்பது தெரிய வரலாம். அப்போது, தலையில் இடி விழுந்தது போல் இருக்கலாம். இன்னும் சிலர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படலாம். ‘என் பிள்ளைங்களும், பேரப் பிள்ளைங்களும் வளர்ந்து வரும்போது இந்த உலகம் எப்படி இருக்கும்? போர், குற்றச்செயல், சுற்றுச்சூழல் மாசு, கொள்ளை நோய்கள் எல்லாம் அவங்கள பாதிக்குமா?’ என்று கவலைப்படலாம். இதுபோன்ற கவலைகளை எப்படி சமாளிக்கலாம்?

கெட்டது நடக்கப்போகிறது என்பதை அறிந்தவுடனே விவேகி தன்னை பாதுகாத்துக்கொள்வான் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 27:12) ஆபத்து வரும்போது நம் உயிரை பாதுகாக்க முயற்சி எடுப்போம். ஆனால் நம் உடல் மட்டுமல்ல நம் மனமும் பாதுகாப்பாக இருக்க, அதாவது நம் மனம் திடமாகவும் தைரியமாகவும் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். அதனால் வன்முறை நிறைந்த பொழுதுபோக்குகளையும், ரத்தத்தை உறையவைக்கும் செய்திகளையும் பார்க்காமல் இருக்க வேண்டும். ஏன்? இப்படிப்பட்ட காட்சிகளை பார்ப்பதால், நம்முடைய அல்லது நம் பிள்ளைகளுடைய மனம் பலவீனமாகலாம். ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் இருந்துவிட்டால் நாம் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாமல்  இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. அதுபோன்ற விஷயங்களை எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் விதத்தில் கடவுள் நம் மனதை படைக்கவில்லை. அதற்கு பதிலாக ‘உண்மையானவை எவையோ, நீதியானவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே தொடர்ந்து’ மனதில் யோசிக்கும்போது “சமாதானத்தின் கடவுள்” நமக்கு மன அமைதியை கொடுப்பார்.—பிலிப்பியர் 4:8, 9.

ஜெபம் செய்வது முக்கியம்!

கடவுள்மீது நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் கவலைகளை நிச்சயம் நம்மால் சமாளிக்க முடியும். அதனால்தான் “ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 4:7) நாம் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அதை சமாளிக்க தைரியத்தையும் ஞானத்தையும் கொடுக்கும்படி கடவுளிடம் கேட்க வேண்டும். “நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.—1 யோவான் 5:15.

கணவர் ஏவியுடன் அலோனா

இந்த உலகத்தை ஆட்சி செய்வது கடவுள் அல்ல, சாத்தான் என்று பைபிள் சொல்கிறது. ‘இந்த முழு உலகமும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது’ என்றும் சொல்கிறது. (யோவான் 12:31; 1 யோவான் 5:19) சாத்தான் என்பவன் நிஜமாகவே இருப்பதால்தான் “பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காத்தருளுங்கள்” என்று இயேசு ஜெபம் செய்ய சொன்னார். (மத்தேயு 6:13) அலோனா சொல்கிறார், “எப்பெல்லாம் சைரன் சத்தம் கேட்குதோ அப்பெல்லாம் நான் யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன். பதட்டப்படாம இருக்க எனக்கு உதவி செய்யுங்கனு கேட்பேன். அந்த சமயத்துல என் வீட்டுக்காரரும் ஃபோன் பண்ணி என்னோட சேர்ந்து ஜெபம் செய்வார். ஜெபம் எனக்கு உண்மையிலேயே ரொம்ப பலத்தை கொடுக்குது.” அலோனா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”—சங்கீதம் 145:18.

அருமையான எதிர்காலம் வரப் போகிறது!

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என ஜெபம் செய்யும்படி இயேசு சொல்லிக் கொடுத்தார். (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் நம் மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப் போகிறது. ‘சமாதானப் பிரபுவான’ இயேசுவைக் கொண்டு, கடவுள் போர்களுக்கு எல்லாம் ஒரு முடிவை கொண்டுவரப் போகிறார். (ஏசாயா 9:6; சங்கீதம் 46:9) அந்த சமயத்தில் கடவுள் ‘திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்ப்பார். . . . ஒரு தேசத்துக்கு விரோதமாய் மறுதேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்றுக்கொள்வதுமில்லை. . . . பயப்படுத்துவார் இல்லாமல்’ இருப்பார்கள். (மீகா 4:3, 4) எல்லா குடும்பங்களும் சந்தோஷமாக ‘வீடுகளைக் கட்டி, அதில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியை சாப்பிடுவார்கள்.’ (ஏசாயா 65:21) “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.—ஏசாயா 33:24.

இன்று நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் “எதிர்பாராத வேளையில் அசம்பாவிதங்கள்” நடப்பதை நம்மால் தடுக்க முடியாது. (பிரசங்கி 9:11, NW) பல வருடங்களாக நோய், வன்முறை, போர் போன்றவற்றால் நல்ல மக்களும் இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் திரும்ப உயிரோடு வருவார்களா?

இதுபோன்ற அப்பாவி மக்கள் எத்தனை பேர் இறந்துபோயிருக்கிறார்கள் என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். எல்லாரையும் கடவுள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். சீக்கிரத்தில், ‘கல்லறைகளில் உள்ள அனைவரும் வெளியே வருவார்கள்.’ (யோவான் 5:28, 29) இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “அந்த நம்பிக்கை நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது.” (எபிரெயர் 6:19) இயேசுவை உயிரோடு எழுப்பியதன் மூலம் இறந்தவர்களையும் கடவுள் நிச்சயம் உயிரோடு எழுப்புவார் என்ற “உத்தரவாதத்தை எல்லா மனிதருக்கும் அவர் அளித்திருக்கிறார்.”—அப்போஸ்தலர் 17:31.

கடவுளுக்கு பிரியமாக வாழ்கிறவர்களும் வாழ்க்கையில் பல கவலைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஞானமாக நடக்கும்போது... ஜெபம் செய்வதன் மூலம் கடவுளோடு நெருங்கி இருக்கும்போது... எதிர்காலத்தை பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களை உறுதியாக நம்பும்போது... நம்மால் கவலைகளை சமாளிக்க முடியும். அதைத்தான் பால், ஜானட், அலோனா செய்தார்கள். அவர்களுடைய ‘விசுவாசத்தின் காரணமாக கடவுள் அவர்களை எல்லாவிதச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பினார்.’ அதேபோல் உங்களுக்கும் செய்வார்!—ரோமர் 15:13. ▪ (w15-E 07/01)