அது அந்தி சாயும் நேரம். யோசேப்பு தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் நின்றுகொண்டு கண்ணில் படும் காட்சிகளை பார்த்து ரசிக்கிறார். பேரீச்ச மரங்கள், தாவரங்கள் ததும்பி நிற்கும் தண்ணீர் குளங்கள் ஆகியவற்றை நோட்டமிடுகிறார். பக்கத்தில் எகிப்திய மன்னனுடைய மாடமாளிகை தெரிகிறது. அந்த அமைதியான சூழலில் குழந்தைகளுடைய சிரிப்பு சத்தம் அவர் காதில் ஒலிக்கிறது. அவருடைய முதல் மகன் மனாசே, தன் தம்பி எப்பிராயீமைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறான். பிள்ளைகளுடைய அம்மா அவர்களுடைய குறும்புத்தனத்தைப் பார்த்து ரசிக்கிறார். வீட்டில் நடக்கும் இந்த காட்சிகள் யோசேப்பின் சந்தோஷத்தை அதிகப்படுத்துகிறது. யெகோவா தன்னை நன்றாக வைத்திருக்கிறார் என்பதை நினைத்து யோசேப்பு பூரித்துப்போகிறார்.

யோசேப்பு தன்னுடைய முதல் மகனுக்கு மனாசே என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு மறக்கச் செய்பவன் என்று அர்த்தம். (ஆதியாகமம் 41:51) கடவுள் யோசேப்பை அளவில்லாமல் ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் அவருடைய வேதனைக்கு அருமருந்தாக இருந்தது. ஏனென்றால், அவர் தன்னுடைய அண்ணன்களையும், அப்பாவையும் அவர்களுடைய வீட்டையும் நினைத்து ரொம்பவே கவலைப்பட்டிருப்பார். அண்ணன்கள் செய்த சதி வேலையால் யோசேப்புடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் அவரை வெறுத்தார்கள், கொடுமைப்படுத்தினார்கள். கொலை செய்யக்கூட துணிந்தார்கள். கடைசியில் அவரை, வியாபாரிகளிடம் அடிமையாக விற்றுப்போட்டார்கள். அதற்குப்பிறகும் அவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தது! கிட்டத்தட்ட 12 வருடங்கள் அவர் படாதபாடுபட்டார். அந்த சமயத்தில் அடிமையாக இருந்தார், சிறைவாசத்தை அனுபவித்தார், சங்கிலிகளால்கூட கட்டப்பட்டார். ஆனால் இப்போதோ, எகிப்திய மன்னனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார்!

நாட்கள் செல்லச்செல்ல, யெகோவா சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நடப்பதை யோசேப்பு பார்த்தார். யெகோவா சொன்னதைப் போல், 7 வருடங்கள் எகிப்து தேசம் முழுவதும் அமோகமான விளைச்சல் இருந்தது. விளைந்த தானியங்களை சேமித்து வைக்கும் வேலையை யோசேப்பு மேற்பார்வை செய்தார். அந்த சமயத்தில், யோசேப்பிற்கும் அவருடைய மனைவி ஆஸ்நாத்திற்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் இருக்கிற அவருடைய தம்பி பென்யமீனையும், அப்பா யாக்கோபையும் பற்றி யோசேப்பு அடிக்கடி நினைத்துப் பார்த்தார். ‘அப்பாவும் தம்பியும் நல்லா இருப்பாங்களா? கோவக்கார அண்ணன்கள் திருந்திட்டாங்களா? மறுபடியும் அவங்க எல்லாரோடும் ஒற்றுமையாக வாழ முடியுமா?’ என்ற கேள்விகள் எல்லாம் யோசேப்பின் மனதில் வந்து வந்து போயிருக்கும்.

பொறாமை, வெறுப்பு, துரோகம் போன்றவற்றால் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்திருக்கிறதா? யோசேப்பின் குடும்பத்திலும் இதனால் பிரச்சினைகள் வந்தது. ஆனாலும் யோசேப்பு யெகோவாமீது விசுவாசம் வைத்தார். அதனால் தன் குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். இந்த விஷயத்தில் யோசேப்பிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். எப்படி?

‘நீங்கள் யோசேப்பிடம் போங்கள்’

வருடங்கள் வேகமாக உருண்டோடின. யோசேப்பு தன்னுடைய வேலையில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். அமோகமான விளைச்சலை தந்த, அந்த 7 வருடங்கள் முடியும் என்று யெகோவா முன்பே வெளிப்படுத்தியிருந்தார். அவர் சொன்னது போலவே நடந்தது, நிலைமை தலைகீழாக மாறியது. எகிப்தில் விளைச்சல் குறைந்து கொண்டே வந்தது. பக்கத்தில் இருக்கும் நாடுகள் பஞ்சத்தில் அவதிப்பட்டன. “ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 41:54) இப்படிப்பட்ட காலங்கள் வரும் என்று யெகோவா முன்பே சொன்னதாலும், யோசேப்புடைய திறமையான நிர்வாகத்தாலும் எகிப்தியர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

யோசேப்பு மனத்தாழ்மையாக இருந்ததால் யெகோவா அவரை பயன்படுத்தினார்

யோசேப்பிற்கு தாங்கள் காலமெல்லாம் கடன்பட்டிருப்பதாக எகிப்தியர்கள் நினைத்திருப்பார்கள். அவருடைய திறமையான நிர்வாகத்தை பாராட்டியிருப்பார்கள். ஆனால் அந்த புகழெல்லாம் தன்னுடைய கடவுளான யெகோவாவிற்குத்தான்  சேர வேண்டும் என யோசேப்பு நினைத்தார். நாமும் நம்முடைய திறமைகளை கடவுளுடைய சேவையில் பயன்படுத்தும்போது மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். அப்போது நாமே நினைத்துப் பார்க்காத விதத்தில் கடவுள் நம் திறமைகளை மெருகூட்டுவார்.

சீக்கிரத்தில் எகிப்தியர்களையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. அதனால் அவர்கள் ராஜாவிடம் போய் உதவி கேட்டு கெஞ்சினார்கள். ஆனால் அந்த ராஜா, “நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று சொன்னார். எனவே, களஞ்சியங்களில் சேமித்து வைத்திருக்கும் தானியங்களை யோசேப்பு விற்றார்; மக்களும் அதை வாங்கிக் கொண்டார்கள்.—ஆதியாகமம் 41:55, 56.

நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் யாக்கோபையும் அவருடைய குடும்பத்தாரையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. எகிப்தில் தானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்ட யாக்கோபு, தன்னுடைய மகன்களை அனுப்பி தானியம் வாங்கி வரும்படி சொன்னார்.—ஆதியாகமம் 42:1, 2.

யாக்கோபு தன்னுடைய 10 மகன்களையும் அனுப்பி வைக்கிறார். ஆனால் கடைசி மகன், பென்யமீனை மட்டும் அனுப்பவில்லை. ஏனென்றால் யோசேப்பிற்கு நடந்த சம்பவம் அவர் மனதை ஆழமாக பாதித்திருந்தது. ஒருசமயம், அண்ணன்களை பார்த்துவிட்டு வரும்படி யோசேப்பை அவர் அனுப்பினார். போனவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. யோசேப்புடைய மேலங்கியை எடுத்துவந்து அண்ணன்கள் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அது கிழிந்துபோய் இரத்தக்கறையுடன் இருந்தது. தான் ஆசை ஆசையாக கொடுத்த அந்த அங்கியில் இரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்த யாக்கோபிற்கு எவ்வளவு ரணவேதனையாக இருந்திருக்கும்! யோசேப்பை ஒரு காட்டு மிருகம் கொன்றிருக்கும் என்று யாக்கோபை நினைக்க வைத்தார்கள். பெற்ற பிள்ளைகளே தந்தையின் மனதை சுக்குநூறாக உடைத்துவிட்டார்கள்.—ஆதியாகமம் 37:31-35.

‘யோசேப்பு சொப்பனங்களை நினைத்து பார்த்தார்’

நீண்ட நாள் பயணம் செய்த பிறகு யாக்கோபின் மகன்கள் எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். தானியம் வாங்க சாப்நாத்பன்னேயா என்ற எகிப்திய ஆளுநரிடம் போகவேண்டும் என்று தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 41:45) அந்த ஆளுநரிடம் போகிறார்கள். ஆனால் அவர் யோசேப்புதான் என்பதை பார்த்தவுடன் தெரிந்துகொண்டார்களா? இல்லவே இல்லை. எகிப்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியாகத்தான் அவரைப் பார்த்தார்கள், அவருடைய தயவுக்காக ஏங்கினார்கள். யோசேப்பை பார்த்ததும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.”—ஆதியாகமம் 42:5, 6.

யோசேப்போ அவர்களை பார்த்த உடனே அடையாளம் கண்டுகொண்டார். அதுமட்டுமல்ல, அவர்கள் காலில் விழுந்ததும் சிறுவயதில் “அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து” பார்த்தார். யோசேப்பின் அண்ணன்கள் அவருடைய காலில் விழுந்து வணங்குவார்கள் என்று அந்த கனவில் யெகோவா வெளிப்படுத்தியிருந்தார். அவர் கண்ட கனவு அப்படியே நிறைவேறியது! (ஆதியாகமம் 37:2, 5-9; 42:7, 9) இப்போது யோசேப்பு என்ன செய்வார்? அவர்களை கட்டி தழுவுவாரா? இல்லை, பழிக்குப்பழி வாங்குவாரா?

நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு நடந்துக் கொள்ளக்கூடாது என்பதில் யோசேப்பு தெளிவாக இருந்தார். நடக்கிற சம்பவங்களை யெகோவாதான் வழிநடத்துகிறார். யாக்கோபுடைய மகன்கள் ஒரு பெரிய தேசமாக ஆவார்கள் என்பதாக யெகோவா வாக்கு கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 35:11, 12) யோசேப்பின் அண்ணன்கள் இன்னும் கோபக்காரர்களாக, சுயநலவாதிகளாக, மோசமானவர்களாக இருந்தால் என்ன நடக்கும்? கடவுள் கொடுத்த வாக்குறுதி பாதிக்கப்படுமா? அதுமட்டுமல்ல, யோசேப்பு கோபப்பட்டிருந்தால், ஊரில் இருக்கிற அப்பாவுக்கும், தம்பிக்கும் என்ன ஆகும்?! அவர்கள் அப்பாவையும் தம்பியையும் ஏதாவது செய்துவிடுவார்களா? முதலில் அவர்கள் இரண்டு பேரும் உயிரோடு இருக்கிறார்களா? இந்த கேள்விகள் அவருடைய மனதில் எழும்பியிருக்கும்.  அதனால், தான் யார் என்பதை யோசேப்பு அவருடைய அண்ணன்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் இப்போது மாறியிருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள அவர்களை சோதித்துப் பார்க்கவும் விரும்பினார். அதன்பிறகு யெகோவாவின் விருப்பப்படி அவர்களை நடத்தலாம் என்று நினைக்கிறார்.

யோசேப்புக்கு வந்ததை போன்ற பிரச்சினைகள் உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அநேக குடும்பங்களில் சண்டை-சச்சரவு, போட்டி-பொறாமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்ப்பட்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்துவிடுவீர்களா? அல்லது, கடவுள் சொல்வதைக் கேட்டு நடப்பீர்களா? யோசேப்பு கடவுள் சொன்னதைக் கேட்டு நடந்தார். (நீதிமொழிகள் 14:12) குடும்பத்தில் இருக்கிறவர்களோடு சமாதானமாக இருப்பது முக்கியம்தான். ஆனால், யெகோவாவோடும் இயேசுவோடும் நல்ல நட்பை வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம்.—மத்தேயு 10:37.

“இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்”

அண்ணன்கள் மனது மாறியிருக்கிறார்களா என்று தெரிந்துகொள்வதற்கு யோசேப்பு அவர்களை சோதித்துப் பார்க்கிறார். முதலில் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவர்களிடம் கடுமையாக பேசுகிறார். நாட்டை வேவு பார்க்க வந்தவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர்கள் அதை மறுக்கிறார்கள்; தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதை கேட்டதும் யோசேப்பின் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இருந்தாலும் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ‘நிஜமாகவே பென்யமீன் உயிரோடு இருக்கிறானா?’ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. அதனால் ‘அவர்களை சோதிக்கிறார்.’ அவர்களுடைய தம்பியை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்கிறார். கடைசியாக அவருடைய அண்ணன்களில் ஒருவரை பணையமாக வைத்துக்கொண்டு மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்; திரும்பி வரும்போது அவர்களுடைய தம்பியை கூட்டிக்கொண்டு வரும்படி சொல்கிறார்.—ஆதியாகமம் 42:9-20.

இதைப்பற்றி அவருடைய அண்ணன்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசுகிற மொழி யோசேப்பிற்கு புரியாதென்று நினைத்தார்கள். 20 வருடங்களுக்கு முன்பு தாங்கள் செய்த தப்பை நினைத்து நொந்துகொண்டார்கள். “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று சொல்லிக் கொண்டார்கள்.” (ஆதியாகமம் 42:21-24) யோசேப்பு அவர்கள் பேசுவதைக் கேட்டார், அது அவருடைய கண்ணில் நீர் வடியச் செய்தது. அந்த இடத்தைவிட்டு தள்ளிப்போய் அழ ஆரம்பிக்கிறார். அவருடைய அண்ணன்கள் தாங்கள் செய்த தப்பை நினைத்து வருந்தினார்கள். ஆனால் அப்படி வருத்தப்படுவது மட்டுமே உண்மையான மனந்திரும்புதலா? இல்லை. இந்த உண்மையை யோசேப்பு புரிந்திருந்தார். அதனால் அவர்களை மேலும் சோதிக்கிறார்.

சிமியோனை பணைய கைதியாக வைத்துக்கொண்டு மற்றவர்களை யோசேப்பு அனுப்பிவிடுகிறார்; அவர்கள் எல்லாருடைய உணவு பையிலும் பணத்தை ஒளித்து வைக்கும்படி வேலைக்காரர்களிடம் சொல்கிறார். அவருடைய அண்ணன்கள் வீட்டிற்கு போய் சேருகிறார்கள். அவர்களுடைய அப்பா யாக்கோபிடம் பென்யமீனை அனுப்பி வைக்கும்படி கெஞ்சிக் கேட்கிறார்கள். கடைசியில் யாக்கோபும் அதற்கு சம்மதிக்கிறார். இப்போது பென்யமீனோடு சேர்ந்து எகிப்திற்கு வருகிறார்கள். யோசேப்பின் வீட்டு நிர்வாகியிடம், தாங்கள் எடுத்துச் சென்ற உணவுப் பையில் பணம் இருந்ததாகவும் அந்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்தான். இருந்தாலும், அவர்களுடைய மனதில் உண்மையிலேயே என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள யோசேப்பு நினைத்தார். அவர்களோடு பென்யமீன் வந்திருந்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்; ஆனால் அந்த சந்தோஷத்தை மூடி மறைத்துக் கொண்டார். பின்பு அவர்களுக்கு விருந்து கொடுத்தார். அவர்கள் மீண்டும் வீடு திரும்பிப் போகும்போது பென்யமீனுடைய பையில் வெள்ளிப் பாத்திரத்தை ஒளித்து வைக்க சொல்கிறார்.—ஆதியாகமம் 42:26–44:2.

இப்போது, யோசேப்பு தன் திட்டத்தை செயல்படுத்துகிறார். அவருடைய அண்ணன்களைத் துரத்திப் பிடித்துக் கைது செய்யச் சொல்கிறார். பென்யமீனுடைய பையில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருப்பது தெரிய வந்தது. பின்பு அண்ணன்கள் எல்லாரும் யோசேப்பிடம் வருகிறார்கள். அவருடைய பாத்திரத்தைத் திருடியதாக யோசேப்பு அவர்கள்மேல் குற்றம் சுமத்துகிறார். அவருடைய அண்ணன் யூதா, மற்ற சகோதரர்களுக்காக இப்போது பேசுகிறார். இரக்கம் காட்டும்படி கெஞ்சிக் கேட்கிறார். ‘நாங்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம்’ என்று சொல்கிறார். ஆனால் பென்யமீன் மட்டும் அடிமையாக இருக்கட்டும், மற்றவர்கள் திரும்பிப் போங்கள் என்று யோசேப்பு சொல்லிவிடுகிறார்.—ஆதியாகமம் 44:2-17.

யூதா தன்னுடைய தம்பிக்காக உணர்ச்சிப் பொங்க பேசுகிறார். “அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார்” என்று சொல்கிறார். அந்த வார்த்தைகள் யோசேப்புடைய உள்ளத்தை ஆழமாகத் துளைத்தன. ஏனென்றால் யாக்கோபின் அன்பு மனைவி ராகேல் பெற்ற முதல் மகன்தான் யோசேப்பு. பென்யமீனைப் பெற்றெடுக்கும்போது ராகேல் இறந்துவிட்டார். யாக்கோபைப் போலவே யோசேப்பிற்கும் ராகேலை ரொம்பப் பிடிக்கும். தன்னுடைய அம்மா ராகேலுக்குப் பிறந்த மகன் என்பதால் பென்யமீன் மேல் யோசேப்புக்கு அதிக பாசம் இருந்தது.—ஆதியாகமம் 35:18-20; 44:20, பொது மொழிபெயர்ப்பு.

 தன் தம்பியை அடிமையாக்கிவிட வேண்டாம் என்று யூதா மறுபடியும் கதறுகிறார். அதற்குப் பதிலாக, தான் அடிமையாக இருப்பதாக சொல்கிறார். கடைசியாக, மனதைத் தொடும் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: “இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்.” (ஆதியாகமம் 44:18-34) யூதா முழுமையாக மனம் திரும்பியிருந்தார். அதுமட்டுமல்ல அவர் சுயநலமில்லாமல் நடந்து கொண்டார், கரிசனை காட்டினார், அனுதாபம் காட்டினார்.

செய்த தவறுக்காக அண்ணன்கள் வருந்தியதை யோசேப்பு புரிந்துகொண்டார்

இதற்குமேல் யோசேப்பால் தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. அவர், வேலைக்காரர்களை எல்லாம் வெளியே போகும்படி சொல்கிறார். அவர்கள் வெளியே போன பின்பு கதறி அழுகிறார். அழுத சத்தம் ராஜாவின் அரண்மனை வரைக்கும் கேட்டது. அதற்குப்பிறகு, “உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” என்று அவர்களிடம் சொல்கிறார். இதை கேட்ட அவருடைய சகோதரர்கள் மலைத்துப்போனார்கள். அவர்கள் எல்லாரையும் யோசேப்பு கட்டித் தழுவினார். அவர்கள் செய்த தப்பை மனதார மன்னித்தார். (ஆதியாகமம் 45:1-15) இப்படி செய்ததன் மூலம் யெகோவாவைப் போலவே நடந்து கொண்டார். (சங்கீதம் 86:5) நாமும் மற்றவர்களை தாராளமாக மன்னிக்கிறோமா?

“நீ உயிரோடு தான் இருக்கிறாய்!”

நடந்ததையெல்லாம் எகிப்தின் ராஜா கேள்விப்படுகிறார். வயதான அப்பா யாக்கோபையும் அவருடைய முழு குடும்பத்தையும் எகிப்திற்கு அழைத்து வரும்படி யோசேப்பிடம் சொல்கிறார். தன்னுடைய அன்பான அப்பா யாக்கோபை யோசேப்பு மீண்டும் சந்திக்கிறார். “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்” என்று யாக்கோபு யோசேப்பைப் பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர்மல்க சொல்கிறார்.—ஆதியாகமம் 45:16-28; 46:29, 30. பொ.மொ.

அதற்குப்பின்பு யாக்கோபு 17 வருடங்கள் உயிரோடு இருந்தார். தன் மகன்களை எல்லாம் ஆசீர்வதித்தார். ஒவ்வொரு மகனுடைய எதிர்காலமும் எப்படியிருக்கும் என்று சொன்னார். முதல் மகனுக்கு கொடுக்க வேண்டிய இரு மடங்கு ஆசீர்வாதத்தை யோசேப்பிற்கு கொடுத்தார். சகோதரர்கள் சார்பாக பேசின யூதாவிற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது, மேசியா அவருடைய சந்ததியில்தான் வந்தார்.—ஆதியாகமம் அதிகாரங்கள் 48, 49.

யாக்கோபு 147 வயதில் இறந்தார். இப்போது யோசேப்பு தங்களை பழிவாங்கிவிடுவாரோ என்று நினைத்து அண்ணன்கள் பயந்தனர். ஆனால் யோசேப்பு அவர்களிடம் அன்பாக நடந்து கொண்டார். யெகோவாதான் அவர்கள் எல்லாரையும் எகிப்திற்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்று சொன்னார். அதற்குப்பிறகு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார்: “நான் கடவுளுக்கு இணையானவனா?” (ஆதியாகமம் 15:13; 45:7, 8; 50:15-21, பொ.மொ) யெகோவாதான் எல்லாரையும் சரியாக நியாயந்தீர்ப்பார் என்று யோசேப்பு நினைத்தார். யெகோவாவே அவர்களை மன்னித்திருக்கும்போது யோசேப்பு எப்படி அவர்களை தண்டிக்க முடியும்?—எபிரெயர் 10:30.

மற்றவர்களை மன்னிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? அதுவும் அவர்கள் வேண்டுமன்றே தவறு செய்து, மனதை காயப்படுத்தி இருந்தால் அவர்களை மன்னிப்பீர்களா? செய்த தவறுக்காக ஒருவர் மனதார வருந்தும்போது அவரை மன்னிப்பது எப்போதுமே நல்லது. அப்போதுதான் நாம் மற்றவர்களையுடைய காயத்தையும் ஆற்ற முடியும், நம்முடைய காயத்திற்கும் மருந்து போட முடியும். அப்படி செய்தால் நாம் யோசேப்பை பின்பற்ற முடியும்; யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள முடியும். ▪ (w15-E 05/01)