சொந்த லாபத்துக்காக சிலர் அரசாங்க அதிகாரத்தை தப்பா பயன்படுத்துறாங்க. இதனாலதான் அரசாங்கத்தில ஊழல் நடக்குது. இது இன்னைக்கு நேத்து நடக்கிற விஷயம் இல்ல, காலம்காலமா நடந்துட்டு இருக்கு. 3,500 வருஷங்களுக்கு முன்னாடியே லஞ்சம் வாங்குற பழக்கம் இருந்திருக்கு. அதனாலதான், வழக்கு விசாரிக்கும்போது லஞ்சம் வாங்காம, நியாயமா தீர்ப்பு சொல்லணும்னு பைபிள்ல கடவுள் சட்டம் கொடுத்திருந்தார். (யாத்திராகமம் 23:8) லஞ்சம் வாங்குறது மட்டுமே ஊழல் கிடையாது. அரசாங்கத்தோட பணத்தையும் பொருளையும் திருடுறது... தேவையில்லாத சலுகைகளை எதிர்பார்க்கிறது... பதவிய பயன்படுத்தி குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் மட்டும் நல்லது செய்றது... இது எல்லாமே ஊழல்தான்.

எல்லா அமைப்புகள்லயும் ஏதோ ஒரு வகையில ஊழல் நடக்குது. ஆனா, அரசாங்கத்தில நடக்கிற ஊழல்தான் ரொம்ப அதிகமா இருக்கு. ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் என்ற லஞ்ச ஒழிப்பு குழு எங்கெல்லாம் ஊழல் அதிகமா நடக்குதுனு, மக்கள்கிட்ட கருத்து கேட்டாங்க. மக்கள் சொன்ன கருத்தை 2013-ல வந்த குளோபல் கரப்ஷன் பாரோமீட்டர் என்ற புத்தகத்தில வெளியிட்டாங்க. அதுல முதல் 5 இடத்துல இருக்கிறவங்க இவங்கதான்: அரசியல் கட்சிகளை சேர்ந்தவங்க, காவல்துறை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை அதிகாரிகள். ஒரு சில நாடுகளோட அறிக்கைகளை இப்போ பார்க்கலாம்.

  • ஆப்பிரிக்கா: 2013-ல தென் ஆப்பிரிக்காவுல, 22,000 அரசாங்க அதிகாரிகள் ஊழல் செஞ்சதா குற்றம் சாட்டப்பட்டாங்க.

  • தென் அமெரிக்கா: 2012-ல பிரேசில் நாட்டுல லஞ்சம் கொடுத்ததுக்காக 25 பேரை குற்றவாளிகளாக அறிவிச்சாங்க. அவங்க தங்களோட அரசியல் கட்சிய ஆதரிக்கச் சொல்லி இன்னொரு கட்சிக்கு, பொது மக்களோட பணத்த லஞ்சமா கொடுத்தாங்க. அதுல ஒருத்தர் முன்னாள் ஜனாதிபதியோட முக்கியமான ஊழியரா இருந்தவர். அவர், நாட்டிலயே அதிக செல்வாக்கு இருக்கிற ரெண்டாவது நபரா இருந்தார்.

  • ஆசியா: 1995-ல தென் கொரியாவுல இருக்கிற சியோல் நகரத்துல, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இடிஞ்சு விழுந்து 502 பேர் இறந்துட்டாங்க. மட்டமான பொருள்களை வெச்சு அந்த கட்டிடத்தை கட்டுனதும், பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காம போனதும்தான் இதுக்கு காரணம்னு விசாரணையில தெரியவந்தது. இந்த மாதிரி கட்டுறதுக்கு அவங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்காங்க.

  • ஐரோப்பா: ஐரோப்பாவுல “அதிகமா ஊழல் நடக்கிறதை பார்க்கும்போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. . . . ஊழலை ஒழிக்கிறதுக்கு அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் எடுக்குறமாதிரி தெரியல”னு சிசிலியா மால்ம்ஸ்ட்ரம் சொல்றாங்க. இவங்க ஐரோப்பிய ஆணைக்குழுவின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளராக இருக்காங்க.

அரசாங்கத்தில நடக்கிற ஊழலை ஒழிக்கிறது ரொம்ப கஷ்டம். “அரசாங்கம் செயல்படுற விதத்தையே மாத்துனாதான்” ஊழலை குறைக்க முடியும்னு, ஊழல் தடுப்பு நிபுணரான சூசன் ரோஸ்-ஆக்கர்மேன் சொல்றாங்க. ஊழலை ஒழிக்கவே முடியாதுனு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, ஊழல் இல்லாத அரசாங்கம் சீக்கிரம் வரப்போகுதுனு பைபிள் சொல்லுது. (w15-E 01/01)