Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம்  |  ஜனவரி 2015  

கோவத்தை அடக்க...

கோவத்தை அடக்க...

ஒரு காலேஜ்ல, அளவுக்குமீறி கோவப்பட்ட கூடைப்பந்து பயிற்சியாளரை வேலையவிட்டு அனுப்பிட்டாங்க.

கேட்டது கிடைக்கலைனு ஒரு குழந்தை ஓயாம அடம் பிடிச்சிது.

ரூமை சுத்தமா வைக்காத மகன அம்மா கண்டபடி கத்தினாங்க.

இந்த மாதிரி விஷயங்கள நாம எல்லாருமே கேட்டிருப்போம். நமக்கும் அடிக்கடி கோவம் வரும். கோவத்த குறைக்கனும்னு நாம எல்லாருமே ஆசைப்படுறோம். ஆனா, ‘நான் கோவப்பட்டதுல தப்பே இல்ல’னு சில நேரம் நினைப்போம். அதுவும் நாம எதிர்பார்க்கிற மாதிரி மத்தவங்க நடந்துக்கலனா நமக்கு கோவம் வரும். அமெரிக்க மனோதத்துவ அமைப்பு (American Psychological Association) வெளியிட்ட ஒரு கட்டுரையில, “மனுஷனா பிறந்தா கண்டிப்பா கோவம் வரும். சில விஷயத்துக்கு கோவப்படுறது நல்லதுதான்”-னு சொல்லியிருக்காங்க.

நம்ம எல்லாருக்குமே கோவம் வரும்னு பைபிள் எழுத்தாளரான பவுலும் சொன்னார். ஆனா, “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்”னு சொன்னார். (எபேசியர் 4:26) அப்படினா, நாம கோவப்படுறது சரியா, தப்பா?

கோவப்படுறது சரியா?

“நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்”னு பைபிள்ல தாவீதும் எழுதினார். இந்த வார்த்தைகள மனசுல வச்சுதான் பவுல் அப்படி சொல்லியிருப்பார். (சங்கீதம் 4:4) பவுல் சொன்ன வார்த்தைகளோட அர்த்தம் என்ன? எபேசியர் 4:31-ல பவுலே சொல்றார்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.” நாம அளவுக்கு அதிகமா கோவப்படுறது தப்புனு பவுல் சொல்றார். அமெரிக்க மனோதத்துவ அமைப்பும் இப்படித்தான் சொல்லுது: “கோவத்த கொட்டி தீர்க்கிறதுனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. பிரச்சினை இன்னும் அதிகமாதான் ஆகும்.”

அப்படினா, கோவத்த அடக்க நாம என்ன செய்யனும்? “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை”னு சாலொமோன் ராஜா சொல்றார். (நீதிமொழிகள் 19:11) கோவத்த அடக்க “விவேகம்” எப்படி உதவும்?

என்ன செய்யலாம்?

விவேகமா நடந்துக்கிறவங்க சூழ்நிலைய நல்லா யோசிச்சு பார்ப்பாங்க. அவங்க பக்கம் இருக்கிற நியாயத்த மட்டும் யோசிக்காம, எல்லா விஷயத்த பத்தியும் யோசிச்சு பார்ப்பாங்க. இது ஏன் நல்லது?

ஒரு அநியாயம் நடந்ததுனா, உடனே நமக்கு பயங்கரமா கோவம் வரும். ஆனா, நம்ம கோவத்த எல்லாம்  கொட்டி தீர்க்க ஆரம்பிச்சா நமக்கும் நல்லது இல்ல, மத்தவங்களுக்கும் நல்லது இல்ல. இந்த உதாரணத்த யோசிச்சு பாருங்க. ஒரு வீட்டில தீ பிடிச்சா, அதை உடனே அணைக்கனும். இல்லனா அது எரிஞ்சு வீட்டையே நாசமாக்கிடும். அதே மாதிரி, கோவத்த கட்டுப்படுத்தலனா நமக்குதான் பிரச்சினை. நமக்கு கெட்ட பெயர் வந்திடும்; குடும்பத்திலயும் மத்தவங்களோடும் சந்தோஷமாவே இருக்க முடியாது; கடவுளுக்கு பிடிக்காதவங்களா ஆகிடுவோம். அப்படினா, கோவம் தலைக்கேறும்போது முதல்ல சூழ்நிலைய நல்லா யோசிச்சு பார்க்கனும். அப்பதான், கோவத்த அடக்க முடியும்.

தாவீதோட வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்த கவனிங்க. தாவீதும் அவரோட நண்பர்களும், நாபால் என்பவரோட ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தாங்க. ஒருநாள், தாவீதுக்கும் அவரோட நண்பர்களுக்கும் சாப்பாடு தேவைப்பட்டுச்சு. அப்போ, நாபால்கிட்ட உதவி கேட்டாங்க. அதுக்கு நாபால், ‘நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். முன்பின் தெரியாதவர்களுக்கு நான் ஏன் அதைக் கொடுக்க வேண்டும்?’னு சொல்லிட்டார். இதைக் கேட்ட தாவீதுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்! உடனே, நாபாலை குடும்பத்தோட தீர்த்துக்கட்ட 400 பேரோட கிளம்பினார்.—1 சாமுவேல் 25:4-13, ஈஸி டு ரீட் வர்ஷன்.

நாபாலுடைய மனைவி அபிகாயில், நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டாங்க. உடனே, தாவீதைப் பார்க்க போனாங்க. தாவீதைப் பார்த்ததும் அவர் கால்ல விழுந்து, கெஞ்சினாங்க. “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள்”னு சொன்னாங்க. நாபால் இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துக்குவார்னு தாவீதுக்கு அபிகாயில் எடுத்து சொன்னாங்க. அதோட, கொலைகாரன் என்ற கெட்ட பெயர் தாவீதுக்கு வந்துடும்னு புரிய வச்சாங்க.—1 சாமுவேல் 25:24-31, ஈஸி டு ரீட் வர்ஷன்.

அபிகாயில் சொன்னத தாவீது நல்லா யோசிச்சு பார்த்தார். அவர் ரெண்டு விஷயத்த புரிஞ்சிக்கிட்டார். அவர்கிட்ட மட்டும் இல்ல, எல்லார்கிட்டயும் நாபால் இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துக்குவார்னு புரிஞ்சிக்கிட்டார். கொலைகாரன் என்ற பெயர் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தார். தாவீது மாதிரி நமக்கும் சில நேரத்துல கோவம் வரும். அப்போ நாம என்ன செய்யனும்? பிரச்சினைக்கு என்ன காரணம்னு யோசிச்சு பாருங்க. கோவத்தில கண்மூடித்தனமா நடந்துக்கிட்டா என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க. இப்படி யோசிச்சு பார்த்தா, கோவம் இருந்த இடம் தெரியாம போயிடும். (1 சாமுவேல் 25:32-35) கோவம் வரும்போது என்ன செய்யனும்னு அமெரிக்கால இருக்கிற மாயோ க்ளினிக் வெளியிட்ட கட்டுரையில சொல்லியிருக்காங்க. “நல்லா மூச்சை இழுத்து விட்டு, 10 வரைக்கும் எண்ணுங்க”-னு அவங்க சொல்றாங்க.

நிறைய பேர் கோவத்த அடக்க கத்துக்கிட்டாங்க. உதாரணத்துக்கு, போலந்து நாட்டுல இருக்கிற செபாஸ்டியன் என்பவர பத்தி பார்க்கலாம். அவருக்கு 23 வயசு. அவர் ஜெயில்ல இருந்தார். பைபிள் படிச்சதுனால கோவத்த எப்படி அடக்கனும்னு அவர் கத்துக்கிட்டார். அவர் இப்படி சொல்றார்: “முதல்ல பிரச்சினைக்கு காரணம் என்னனு யோசிப்பேன். அப்புறம், பைபிள் சொல்ற மாதிரி எப்படி நடந்துக்கலாம்னு யோசிப்பேன். அப்படி செஞ்சதுனால கோவத்த அடக்க முடிஞ்சிது. பிரச்சினைகள சரிசெய்றதுக்கு பைபிள்லதான் நல்ல நல்ல ஆலோசனைகள் இருக்கு.”

கோவத்த அடக்க பைபிள் நமக்கு உதவும்

செட்சியோ என்ற ஒருத்தரும் பைபிள படிச்சு கோவத்த அடக்க கத்துக்கிட்டார். “வேலை செய்ற இடத்துல, யாராவது எனக்கு பிடிக்காததை செஞ்சா, கோவத்துல கத்த ஆரம்பிச்சிடுவேன். ஆனா, பைபிள படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அப்படி செய்றதில்ல. ‘யார்மேல தப்பு? நான்கூட பிரச்சினைக்கு காரணமா இருக்கலாமே?’னு யோசிச்சு பார்க்கிறேன்.” இப்படி செஞ்சா, கோவம் தன்னால அடங்கிடும்.

கோவப்படாம இருக்கிறது கஷ்டம்தான். ஆனா, அப்படி இருக்கிறதுக்கு கடவுள் நமக்கு உதவி செய்வார். நாம பைபிள் சொல்ற மாதிரி நடந்துக்கனும். ‘கோவப்படாம இருக்க உதவி செய்யுங்க’னு கடவுள்கிட்ட வேண்டிக்கனும். பிரச்சினைக்கு என்ன காரணம்னு நல்லா யோசிச்சு பார்க்கனும். அப்படி செஞ்சா, நம்மால் கோவத்த அடக்க முடியும். ▪ (w14-E 12/01)