Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

உங்களால் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட முடியும்!

உங்களால் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட முடியும்!

“நான் இன்டர்நெட்ட பாத்துட்டு இருந்தப்போ திடீர்னு ஒரு விளம்பரம் கண் முன்னாடி வந்துச்சு. அதை சும்மா கிளிக் பண்ணுனேன், பாத்தா ஆபாசமான படம்.”—நிகில். *

“வேலை செய்ற இடத்துல ஒரு அழகான பொண்ணு என்கிட்ட ‘வழிஞ்சு வழிஞ்சு’ பேசுவா. ‘ஜாலியா இருக்கலாம்னு’ என்னை ஓட்டலுக்கு கூப்பிட்டா. அவ எதுக்கு கூப்பிட்டானு எனக்கு நல்லா தெரியும்.”—ஆனந்த்.

கெ ட்ட ஆசைகள் வரும்போது சிலர் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால் சிலர், தவறான விஷயங்களைச் செய்வதற்கு ஏங்குகிறார்கள். நீங்கள் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட நினைப்பீர்களா அல்லது அதற்கு இணங்கிவிடுவீர்களா?

எல்லா விதமான கெட்ட ஆசைகளும் பெரிய பிரச்சினையில் போய் முடிவதில்லை. உதாரணத்திற்கு, உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஒருவர் கூடுதலாக ஒரு ஸ்வீட் சாப்பிட்டால் அது அவர் உயிருக்கு ஆபத்தாக இருக்காது. ஆனால், ஒருவர் ஒழுக்கங்கெட்ட ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். “ஒருவன் முட்டாள்தனமாக விபசாரமாகிய பாவத்தைச் செய்தால், அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான்” என்று பைபிள் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 6:32, 33, ஈஸி டு ரீட் வர்ஷன்.

ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வந்தால் என்ன செய்யலாம்? பைபிள் சொல்கிறது, “நீங்கள் பரிசுத்தமானவர்களாக வேண்டும் என்பது கடவுளுடைய சித்தம்; ஆகவே, நீங்கள் பாலியல் முறைகேட்டிற்கு விலகியிருக்க வேண்டும் . . . உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புமிக்கதாகவும் வைத்துக்கொள்வதற்கு அறிந்திருக்க வேண்டும்.” (1 தெசலோனிக்கேயர் 4:3-5) கெட்ட ஆசையை எதிர்த்துப் போராடுவதற்கான மன உறுதியை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? உங்களுக்கு உதவும் மூன்று வழிகள் இதோ...

1: கெட்டதைப் பார்க்காதீர்கள்

தவறான காட்சிகளைப் பார்ப்பது உங்கள் கெட்ட ஆசைகளுக்குத் தீனி போடும். பார்ப்பதற்கும் ஆசைப்படுவதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இயேசு சொன்னார், “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.” (மத்தேயு 5:28, 29) இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? கெட்ட ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்; உணர்ச்சிகளைத் தூண்டும் ஆபாசக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்.

ஆபாசமான காட்சி உங்கள் கண்ணில் பட்டால் உடனே பார்வையை வேறு பக்கமாகத் திருப்புங்கள்

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: வெல்டிங் செய்யும்போது அதிலிருந்து வெளிவரும் நெருப்பைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? அதை நிச்சயம் பார்த்துக்கொண்டே இருக்க மாட்டீர்கள்! உடனே உங்கள் கண்களை மூடிக்கொள்வீர்கள் அல்லது முகத்தைத் திருப்பிக்கொள்வீர்கள்.  அதேபோல், புத்தகத்திலோ டிவியிலோ நேரிலோ ஆபாசமான காட்சி உங்கள் கண்ணில் பட்டால் உடனே பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக்கொள்ளுங்கள். அந்தக் காட்சி உங்கள் மனதைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்பு ஆபாசத்திற்கு அடிமையாக இருந்த மனீஷ் சொல்கிறார், “ஒரு அழகான பொண்ண பாத்தா அவள பாத்துக்கிட்டே இருக்கணும்னு தோனும். அந்த மாதிரி நேரத்துல, என் முகத்தை உடனே திருப்பிக்குவேன். என் மனசுக்குள்ள, ‘யெகோவாகிட்ட ஜெபம் பண்ணு! இப்பவே பண்ணுனு’ சொல்லிக்குவேன். ஜெபம் செஞ்சதுக்கு அப்புறம் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா போயிடும்.”—மத்தேயு 6:9, 13; 1 கொரிந்தியர் 10:13.

யோபு என்ற நல்ல மனிதனின் உதாரணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்னார், “கண்களோடே நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்; பின்பு, நான் ஒருத்தியை எப்படி நோக்குவேன்?” (யோபு 31:1, பொது மொழிபெயர்ப்பு) நாமும் அதுபோலவே கெட்ட விஷயங்களைப் பார்க்க கூடாது என்ற உறுதியோடு இருக்கலாம்!

செய்து பாருங்கள்: ஆபாச காட்சிகள் உங்கள் கண்ணில் பட்டால், உடனே உங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள். “வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்” என்று ஜெபம் செய்த பைபிள் எழுத்தாளரைப் போலவே நீங்களும் ஜெபம் செய்யுங்கள்.—சங்கீதம் 119:37, பொ.மொ.

2: கெட்டதை யோசிக்காதீர்கள்

நாம் எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். அதனால், நமக்குள் கெட்ட ஆசைகள் வரலாம். “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:14, 15) கெட்ட ஆசைகள் நமக்குள் வேர்விடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

கெட்ட ஆசைகளோடு போராடினால், உடனே ஜெபம் செய்யுங்கள்

அந்த ஆசைக்கு இணங்கிப்போவதும் அதை எதிர்த்து நிற்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அதைப் பற்றிய யோசனைகளை உங்கள் மனதிலிருந்து அடியோடு பிடுங்கிவிடுங்கள். ஒழுக்கங்கெட்ட விஷயங்களை யோசிக்கவே யோசிக்காதீர்கள். இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாயிருந்த ராய் சொல்கிறார், “தப்பான ஆசைங்க வந்தப்பெல்லாம் நல்ல விஷயங்கள பத்தி யோசிக்க முயற்சி செஞ்சேன். அப்படி செய்றது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சில சமயம் என்னால என்னையே கட்டுப்படுத்த முடியல. ஆனா தொடர்ந்து முயற்சி செஞ்சுகிட்டே இருந்ததால கெட்ட விஷயங்கள யோசிக்கிறத என்னால கட்டுப்படுத்த முடிஞ்சது.” பருவ வயதில் ஒழுக்கங்கெட்ட யோசனைகளோடு போராடிய இஷா என்ற பெண் சொல்கிறார், “என்னை பிஸியா  வெச்சுக்கிட்டதும் யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சதும்தான் கெட்ட ஆசைகள ஒதுக்கித் தள்ள உதவுச்சு.”

செய்து பாருங்கள்: கெட்ட ஆசைகளோடு  நீங்கள் போராடினால், உடனே ஜெபம் செய்யுங்கள். அதை விரட்டியடிக்க, “உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.

3: கெட்டதைச் செய்யாதீர்கள்

கெட்ட ஆசை தலைதூக்கும்போது அதைச் செய்யத் தூண்டும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அமைந்துவிட்டால் தவறு செய்வது ரொம்பவே சுலபம். (நீதிமொழிகள் 7:6-23) இதற்குப் பலியாகாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

“மத்தவங்க இருக்கும்போது மட்டும்தான் இன்டர்நெட்ட பயன்படுத்துனேன்”

பைபிள் இப்படி ஆலோசனைக் கொடுக்கிறது: “அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.” (நீதிமொழிகள் 22:3, ஈஸி டு ரீட் வர்ஷன்) எனவே, யோசித்துச் செயல்படுங்கள். எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள், அவற்றைத் தவிர்த்திடுங்கள். (நீதிமொழிகள் 7:25) ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட ஜெய் சொல்கிறார், “எங்க வீட்டுல கம்ப்யூட்டரை, எல்லாரும் பார்க்குற மாதிரி ஒரு இடத்துல வெச்சேன். அதுல, ஆபாச வெப்சைட்டுகள் வராத மாதிரி செட் பண்ணுனேன். மத்தவங்க இருக்கும்போது மட்டும்தான் இன்டர்நெட்ட பயன்படுத்துனேன்.” முன்பு குறிப்பிடப்பட்ட ராய் சொல்கிறார், “உணர்ச்சிய தூண்டுற படங்கள பார்க்குறதையும் மோசமா பேசுற ஆட்களோட பழகுறதையும் நிறுத்திட்டேன். தேவையில்லாத பிரச்சனைல போய் மாட்டிக்க விரும்பல.”

செய்து பாருங்கள்: உங்கள் பலவீனங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலையை முன்னதாகவே தவிர்த்திடுங்கள். —மத்தேயு 6:13.

முயற்சியை கைவிடாதீர்கள்!

நீங்கள் கஷ்டப்பட்டு போராடியும், தவறு செய்துவிட்டால் என்ன செய்யலாம்? சோர்ந்து போகாதீர்கள், உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள்! “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:16) நாம் மறுபடியும் ‘எழுந்திருக்க’ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? அப்படியென்றால், அவரிடம் ஜெபம் செய்யுங்கள். பைபிள் படிப்பதன் மூலம் அவர் மீதுள்ள நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருங்கள். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் [உதவுவேன்]” என்று கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்.—ஏசாயா 41:10

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நிகில் சொல்கிறார், “ஆபாசத்த பாக்குற பழக்கத்த விடுறதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். சில சமயத்துல நான் மறுபடியும் ஆபாசத்த பாத்தேன். இந்த பழக்கத்த ஒரேடியா விடுறதுக்கு கடவுள்தான் எனக்கு உதவி செஞ்சாரு.” முன்பு குறிப்பிடப்பட்ட ஆனந்த் சொல்கிறார், “நான் நினைச்சிருந்தா என்கூட வேலை பாத்த பொண்ணோட தவறா நடந்திருக்கலாம். ஆனா, ‘முடியவே முடியாது’னு அவகிட்ட சொல்லிட்டேன். இப்ப என் மனசாட்சி சுத்தமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, யெகோவாவோட மனச சந்தோஷப்படுத்தியிருக்கேன். இப்ப, அவரு என்னை பத்தி பெருமையா நினைப்பாரு.”

உறுதியாக இருங்கள், கெட்ட ஆசைகளை எதிர்த்து போராடுங்கள்! கடவுள் உங்களைப் பற்றியும் பெருமையாக நினைப்பார்!!—நீதிமொழிகள் 27:11. ▪ (w14-E 04/01)

^ பாரா. 2 இந்தக் கட்டுரையில் உள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.