Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம்  |  ஏப்ரல் 2014  

 வாழ்க்கை சரிதை

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

மெலிந்த தேகம். வெறும் 29 கிலோ எடை. சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கை. இதுதான் என் தோற்றம். என் உடல் பலவீனமாக இருந்தாலும் மனதளவில் நான் ஒரு பலசாலி! எப்படி என்று சொல்கிறேன்.

நான்கு வயதில்

என் குழந்தைப் பருவம் தெற்கு பிரான்சில் ஒரு கிராமத்து வீட்டில் ஆனந்தமாகக் கழிந்தது. எனக்காக என் அப்பா செய்துதந்த ஊஞ்சல்... வீட்டைச் சுற்றியிருந்த அழகிய தோட்டம்... அதில் நான் ஆடிப்பாடி திரிந்த நாட்கள்... எல்லாம் மறக்கவே முடியாது. 1966-ல் யெகோவாவின் சாட்சிகள் எங்களைச் சந்தித்து, அப்பாவுடன் ரொம்ப நேரம் பேசினார்கள். அதன்பின் ஏழே மாதங்களில் அப்பா ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற தீர்மானித்தார். சீக்கிரத்தில், என் அம்மாவும் ஒரு சாட்சியாக நினைத்தார். அதனால், சிறு வயதிலிருந்தே ஒரு அன்பான சூழலில் வளர்க்கப்பட்டேன்.

என் அப்பா அம்மாவின் சொந்த ஊரான ஸ்பெயினிற்கு நாங்கள் குடிமாறிச் சென்றோம். அங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. என் கைகளும் கணுக்கால்களும் உயிர் போகுமளவிற்கு வலித்தன. இரண்டு வருடங்களாக நாங்கள் பார்க்காத மருத்துவரே இல்லை. கடைசியில் ஒரு பிரபல மூட்டு சிகிச்சை நிபுணரைச் சந்தித்தோம். என் வியாதி முற்றிவிட்டது என்று அவர் சொன்னார். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு அழுகைப் பீறிட்டது. “ஆட்டோ இம்யூன் க்ராணிக் இல்னஸ்,” “ஜுவனைல் பாலிஆர்த்தரிட்டீஸ்” * என்ற விநோதமான வார்த்தைகள் அறை முழுவதும் எதிரொலித்தன. பத்து வயதாக இருந்த எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், எனக்கு ஏதோ பெரிய வியாதி இருப்பது மட்டும் புரிந்தது.

அந்த நிபுணர் என்னை குழந்தைகள் உடல்நல பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெறும்படி பரிந்துரைத்தார். அந்தப் பராமரிப்பு மையத்தில் இருந்த கன்னிகாஸ்திரீகள் மிகவும் கண்டிப்பானவர்கள். பழங்காலத்து பாணியில் ஒரு யூனிஃபார்மை எனக்குப் போட்டுவிட்டார்கள்; என் முடியை ஒட்ட வெட்டி விட்டார்கள். அந்த இடத்தையும் அங்கிருந்த ஆட்களையும் பார்த்து, ‘நான் எப்படித்தான் இங்கிருக்க போகிறேனோ’ என்று நினைத்து அழுதேன்.

யெகோவாவின் அரவணைப்பை உணர்ந்தேன்

யெகோவாதான் உண்மையான கடவுள் என்று அப்பா அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்ததால், அங்கிருந்த கத்தோலிக்க மத சடங்குகளில் கலந்துகொள்ள மறுத்தேன். அதற்கான காரணத்தைக் கன்னிகாஸ்திரீகளிடம் விளக்கினாலும் அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘யெகோவாவே, என்னை கைவிட்டு விடாதீர்கள்’ என்று அவரிடம் கெஞ்சி கேட்டேன். ஒரு அப்பாவைப்போல் யெகோவா என்மீது அன்பையும் அரவணைப்பையும் காட்டியதை நான் உணர்ந்தேன்.

சனிக்கிழமைகளில் மட்டும் சிறிது நேரத்திற்கு என் பெற்றோர் என்னைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. அவர்கள்  கொண்டுவந்த பைபிள் பிரசுரங்கள் என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தின. பொதுவாக, அங்கிருந்த பிள்ளைகளுக்கு எந்தப் புத்தகத்தையும் வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. ஆனால், பைபிளோடு சேர்த்து பிரசுரங்களை வைத்துக்கொள்ள என்னை மட்டும் அனுமதித்தார்கள். அதைத் தினமும் வாசித்தது எனக்குத் தெம்பளித்தது. என்னோடு இருந்த பிள்ளைகளிடம், வியாதி இல்லாத காலத்தைப்பற்றியும், பூஞ்சோலை பூமியில் கிடைக்கப்போகும் முடிவில்லா வாழ்வைப்பற்றியும் சொன்னேன். (வெளிப்படுத்துதல் 21:3, 4) சிலசமயம், சோகக்கடலில் தத்தளித்தாலும் தனிமையில் வாடினாலும் யெகோவாமேல் எனக்கிருந்த நம்பிக்கையும் விசுவாசமும் குறையவில்லை; நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஆறு மாதம் கழித்து மருத்துவர்கள் என்னை வீட்டுக்குப் போக அனுமதித்தார்கள். உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டாலும் வீடு திரும்பியதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டேன். என்னுடைய மூட்டுகள் இன்னும் உருக்குலைய ஆரம்பித்தது, வலியும் அதிகரித்தது. கஷ்டத்தோடும் வேதனையோடுமே என் டீனேஜ் பருவத்தில் அடியெடுத்து வைத்தேன். இருந்தாலும், முழு மூச்சோடு யெகோவாவைச் சேவிக்க தீர்மானித்து, 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன். சிலசமயம் சோர்வில் வாடினேன். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வியாதி? நான் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரியவில்லையா? என்னை எப்படியாவது குணமாக்குங்கள்’ என்று கடவுளிடம் கதறினேன்.

என் இளமைப் பருவம் மிகவும் வேதனையாகவும் சோதனையாகவும் கழிந்தது. என் உடல்நலம் சரியாகாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், என் நண்பர்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஏக்கமாக இருந்தது. இதனால் ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. எல்லோரையும்விட்டு ஒதுங்கியிருக்க நினைத்தேன். ஆனால், என் குடும்பத்தாரும் நண்பர்களும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். என்னைவிட 20 வயது மூத்தவரான அலிஸியா எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பிரச்சினையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் மற்றவர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமென யோசிக்க உதவினார்.

வேதனையிலும் வெற்றிகரமாக வாழ கற்றுக்கொண்டேன்

எனக்கு 18 வயதாக இருந்தபோது என் வியாதி திரும்பவும் என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்தது. கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதுகூட மிகவும் சிரமமாக இருந்தது. வீட்டில் முடங்கி கிடந்தபோதெல்லாம் பைபிளை ஆழமாகப் படித்தேன். யெகோவா எல்லாப் பிரச்சினைகளையும் நீக்குவது கிடையாது, ஆனால் அதைத் தாங்கிக்கொள்ள பலத்தைத் தருகிறார் என்பதை பைபிளில் யோபு புத்தகத்தையும் சங்கீதங்களையும் படித்தபோது உணர்ந்தேன். என்னுடைய ஊக்கமான ஜெபங்கள், ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியையும்,’ ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தையும்’ அளித்தன.—2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:6, 7.

எனக்கு 22 வயதானபோது சக்கர நாற்காலியில்தான் இனி என் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்ற கசப்பான உண்மையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ஒரு நோயாளியாகத்தான் மற்றவர்கள் என்னைப் பார்ப்பார்களோ என்று பயந்தேன். ஆனால், “சாபமாக” நினைத்த என் சக்கர நாற்காலி “வரமாக” ஆனது. என் தோழி இஸபெல் தன்னோடு சேர்ந்து ஒரு மாதத்திற்கு ஊழியத்தில் 60 மணி நேரம் செலவிட என்னை ஊக்குவித்தார்.

ஆரம்பத்தில், அது முடியாத காரியம் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன். என் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உதவியோடு ஊழியத்தை வெற்றிகரமாக முடித்தேன். அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்தது, என் பயத்தையும் மேற்கொள்ள உதவியது. ஊழியத்தில் நான் பெற்ற சந்தோஷத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடிவு செய்தேன். 1996-ல் ஒரு ஒழுங்கான பயனியராக ஆனேன். அதாவது, ஊழியத்தில் மாதா மாதம் 90 மணி நேரம் செலவிட்டேன். இது என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச்சிறந்த தீர்மானம்! இந்த ஊழியம் என்னைக் கடவுளிடம் நெருங்கி வர செய்தது, உடல் ரீதியிலும் என்னைப் பலப்படுத்தியது. ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலம் கடவுளைப்பற்றி அநேகரிடம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் சிலருக்குக் கடவுளைப்பற்றி சொல்லிக்கொடுக்கவும் அவரோடு நெருக்கமான நட்பை வளர்க்கவும் உதவ முடிந்தது.

யெகோவா தொடர்ந்து என்னைத் தாங்கி வருகிறார்

2001-ல் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் என் இரு கால்களும் முறிந்துவிட்டன. மருத்துவமனையில் வலியால் துடித்துக்கொண்டிருந்தேன். ‘யெகோவாவே எனக்குப் பலம் கொடுங்கள்’ என்று கெஞ்சினேன். பக்கத்துப் படுக்கையில் இருந்த பெண் என்னைப் பார்த்து, “நீங்கள் யெகோவாவின் சாட்சியா?” என்று கேட்டார். பதில் சொல்வதற்குக்கூட தெம்பில்லாமல் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினேன். அதற்கு அவள் “எனக்கு யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி தெரியும்; நான் அவர்களுடைய பத்திரிகைகளைப் படித்திருக்கிறேன்” என்றாள். அந்தப் பெண்ணின் வார்த்தைகள் எனக்குப் புது தெம்பளித்தன. அந்த வலியிலும் என்னால் யெகோவாவைப்பற்றி சாட்சி கொடுக்க முடிந்தது எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்!

நான் கொஞ்சம் குணமானதும் மருத்துவமனையில் அநேகருக்குச் சாட்சி கொடுக்க நினைத்தேன். என் கால்களில் கட்டு போடப்பட்டிருந்ததால் என் அம்மா என்னைச் சக்கர நாற்காலியில் அழைத்து சென்றார். தினமும் சில நோயாளிகளைச் சந்தித்து பைபிள் பிரசுரங்களை அளித்தேன்.  சாட்சி கொடுத்து முடித்தபின் நான் மிகவும் களைப்பாக உணர்வேன், இருந்தாலும் யெகோவா எனக்குத் தேவையான பலத்தை அளித்தார்.

2003-ல் என் பெற்றோருடன்

கடந்த சில வருடங்களாக என் வலி மேலும் அதிகரித்திருக்கிறது. என் அப்பாவின் இழப்பும் என் வேதனையைக் கூட்டியிருக்கிறது. ஆனாலும் என் நம்பிக்கையை நான் கைவிடவில்லை. அதற்குக் காரணம் என் நண்பர்களும் உறவினர்களும்தான். அவர்களுடன் நேரம் செலவிடும்போது என் பிரச்சினையைப்பற்றி நான் யோசிப்பது கிடையாது. நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் பைபிளை ஆழமாகப் படிப்பேன், ஃபோனில் மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பேன்.

அடிக்கடி நான் என் கண்களை மூடி என் மனக்கண்ணை திறந்து புதிய உலகை ரசிப்பேன்

இதமாக வருடும் தென்றல் காற்று, மனதை மயக்கும் பூவின் வாசம் என சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க இவையெல்லாம் எனக்கு உதவின. நகைச்சுவை உணர்வும் பேருதவியாக இருந்தது. ஒருநாள் நானும் என் சிநேகிதியும் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். என்னைச் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்த அவள் ஒரு முக்கியமான குறிப்பை எழுத சற்று நிறுத்தினாள். சாலை சரிவாக இருந்ததால் என் சக்கர நாற்காலி உருண்டு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்மீது மோதியது. நல்லவேளையாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு நிமிடம் அதிர்ந்துபோன நாங்கள் நடந்ததை நினைத்து வயிறு குலுங்க சிரித்தோம்.

என்னால் செய்ய முடியாத எத்தனையோ விஷயங்களை என் மனதில் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறேன். பூஞ்சோலை பூமியில் அதையெல்லாம் நிறைவேற்றுவேன். அடிக்கடி நான் என் கண்களை மூடி என் மனக்கண்ணை திறந்து புதிய உலகை ரசிப்பேன். (2 பேதுரு 3:13) பூஞ்சோலை பூமியில் நான் ஆரோக்கியமாக, சந்தோஷமாக வலம் வருவதுபோல் கற்பனை செய்வேன். “நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்” என்று தாவீது ராஜா சொன்னதை அடிக்கடி யோசித்துப் பார்ப்பேன். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 27:14, பொது மொழிபெயர்ப்பு.) நாளுக்கு நாள் என் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனாலும் யெகோவா என்னைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். என்னுடைய பலவீனத்திலும் நான் பலம் பெறுகிறேன். ▪ (w14-E 03/01)

^ பாரா. 6 ஜுவனைல் பாலிஆர்த்தரிட்டீஸ் என்பது பிள்ளைகளைத் தாக்கும் ஒருவகை தீராத மூட்டுவலி ஆகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமான செல்களை அழித்துவிடும். தாங்க முடியாத மூட்டு வலியும் வேதனையும் உண்டாகும்.