உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பார்க்கிறீர்கள், உடனே உங்கள் கண்களும் மூளையும் தகவலைச் சேகரிக்க ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு பழத்தைப் பார்க்கிறீர்கள், உடனே அதைச் சாப்பிட ஆசைப்படுகிறீர்கள். வானத்தைப் பார்க்கிறீர்கள், மழை வராது என சொல்கிறீர்கள். இப்போது இந்தக் கட்டுரையை வாசிக்கிறீர்கள், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். இதெல்லாம் எப்படி முடிகிறது? காரணம், வண்ணங்களின் ஜாலமே!

ஒரு பழம் பழுத்திருக்கிறதா, சாப்பிட ருசியாக இருக்குமா என்பதை அதன் நிறத்தை வைத்துதான் தீர்மானிக்கிறீர்கள். மழை வருமா வராதா என்பதை மேகத்தின் நிறத்தைப் பார்த்துதான் சொல்கிறீர்கள். இந்தக் கட்டுரையில் இருக்கும் வார்த்தைகள் கருப்பு நிறத்தில் இருப்பதால்தான் சுலபமாக வாசிக்கிறீர்கள். ஆம், நம்மை அறியாமலேயே சுற்றி இருக்கும் விஷயங்களின் தன்மையை, நிலையை அதன் நிறத்தை வைத்துப் புரிந்துகொள்கிறோம். ஆனால், நிறம் உங்கள் உணர்ச்சியையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நிறங்களும் உங்கள் உணர்ச்சிகளும்

கடைவீதிகளில் நடக்கும்போது வண்ண வண்ண ஆடைகள், பொருள்கள் நம் கண்ணைப் பறிக்கிறது. ஒவ்வொரு வயதினருக்கும் என்னென்ன வண்ணங்கள் பிடிக்கும் என்பது விற்பனையாளர்களுக்கு அத்துப்படி. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லோருடைய கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வண்ணங்களைப் மிக கவனமாக அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். வண்ணங்கள் நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும் என்பதை வீட்டு அலங்கார நிபுணர்களுக்கும், ஆடை வடிவமைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் நன்கு தெரியும்.

மக்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கமும் வித்தியாசப்படுவதால் வண்ணங்களைப் பற்றிய அவர்களின் கருத்தும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு, ஆசியாவில் இருக்கும் சில மக்கள் சிவப்பு நிறத்தை அதிர்ஷ்டத்தோடும் கொண்டாட்டத்தோடும் சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால், ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் சிவப்பு நிறத்தை துக்கத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். நாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சில நிறங்கள் ஒரே விதமான உணர்வைக் கொடுக்கின்றன. உங்களைப் பாதிக்கும் மூன்று நிறங்களைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.

சிவப்பு நிறம் எங்கு இருந்தாலும் பளிச்சென தெரியும். இது போர், அபாயம், ஆற்றல் ஆகியவற்றோடு பெரும்பாலும் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த நிறம் உணர்ச்சியைத் தூண்டும், சுவாச துடிப்பை அதிகரிக்கும், ரத்த அழுத்தத்தைக் கூட்டும், செல்களின் ஆற்றலை அதிகரிக்கும்.

பைபிளில், “சிவப்பு” என்பதற்கான எபிரெய வார்த்தை “ரத்தம்” என்ற அர்த்தத்தைத் தரும் பதத்திலிருந்து வருகிறது. மனதில் பதியவைக்கும் ஒரு சித்திரத்தை விவரிக்க பைபிள் கருஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது. கொலைவெறிபிடித்த ஒரு விலைமகள் ஊதா மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் உடை உடுத்தியிருப்பதாகவும், ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின்மீது’ உட்கார்ந்திருப்பதாகவும் விவரிக்கிறது. அந்த மிருகத்தின் “உடலெங்கும் கடவுளை நிந்திக்கும் பெயர்கள்” இருந்ததாகவும் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 17:1-6.

பச்சை நிறம் உடலிலுள்ள செல்களின் ஆற்றலைக் குறைக்கிறது, மனதிற்கு அமைதியை அளிக்கிறது. இது சிவப்பு நிறத்திற்கு நேர்மாறானது. இந்த நிறம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. பச்சைப்பசேல் என்ற வயல்வெளியைப் பார்ப்பது மனதிற்கு நிம்மதியளிக்கிறது. பச்சை புல்லையும் காய்கறிகளையும் மனிதர்களுக்காகக் கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:11, 12, 30.

வெள்ளை நிறம் ஒளி, பாதுகாப்பு, சுத்தத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நல்மனதை, கபடமில்லா குணத்தை,  தூய்மையான உள்ளத்தைக் குறிக்கவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறத்தைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்கிறது. பைபிளில் இருக்கும் தரிசனங்களில் மனிதர்களும் தேவதூதர்களும் வெள்ளை அங்கிகளை அணிந்திருப்பது, நீதியையும் பரிசுத்தத்தையும் வலியுறுத்துகிறது. (யோவான் 20:12; வெளிப்படுத்துதல் 3:4; 7:9, 13, 14) மற்றொரு தரிசனத்தில், வெண்மையும் சுத்தமுமான ஆடையை அணிந்து வெள்ளை குதிரைகள்மீது சவாரி செய்யும் போர்வீரர்கள் நீதியான போர் புரிவதைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:14) பாவங்களை மன்னிக்க தாம் தயாராக இருப்பதை வலியுறுத்துவதற்காக கடவுள் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என்று சொல்கிறார்.—ஏசாயா 1:18.

நிறமும் நினைவாற்றலும்

நிறங்கள் நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும் என்று கடவுளுக்கு நன்கு தெரியும். பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கும் ஒரு வியப்பூட்டும் தரிசனம் இதற்கு ஓர் உதாரணம். இன்று மனிதர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளான போர், வறுமை, மரணம் பற்றியெல்லாம் அதில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தரிசனத்தை மனதில் பதிய வைப்பதற்கு வண்ண வண்ண குதிரைகளையும் அதில் சவாரி செய்பவர்களையும் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் வரும் தூய்மையான வெள்ளை குதிரை, இயேசு கிறிஸ்து செய்ய போகும் நீதியான போரை அடையாளப்படுத்துகிறது. இரண்டாவதாக வரும் சிவப்பு குதிரை, தேசங்களுக்கிடையே நடக்கும் போரையும் மூன்றாவதாக வரும் கறுப்பு குதிரை, பஞ்சத்தையும் கடைசியாக வரும் ‘மங்கிய நிறமுள்ள குதிரை, மரணத்தையும்’ அடையாளப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 6:1-8) ஒவ்வொரு குதிரையின் நிறமும் இன்று நடக்கும் சம்பவங்களை மனதில் தத்ரூபமாக ஓடவிடவும் ஞாபகத்தில் வைக்கவும் உதவுகிறது.

நிறங்களைப் பயன்படுத்தி விவரிக்கப்படும் இன்னும் பல சொல்லோவியங்கள் பைபிளில் இருக்கின்றன. பைபிளிலிருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் கற்பனை செய்யவும் ஞாபகத்தில் வைக்கவும் நம் படைப்பாளர் வண்ணங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். தகவலைச் சேகரிக்கவும் ஆராயவும் முக்கியமான விஷயத்தை ஞாபகம் வைக்கவும் நிறங்கள் உதவுகின்றன, நம் உணர்ச்சியையும் பாதிக்கின்றன. வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்க நிறங்களை நம் படைப்பாளர் பரிசாகத் தந்திருக்கிறார்.▪(w13-E 10/01)