ஸ்டீஃபன் *: “ஜோதி எனக்கு துரோகம் செய்வானு நான் நினைச்சுக்கூட பாக்கல. அவ மேல இருந்த நம்பிக்கை எல்லாம் போயிடிச்சு. அவள மன்னிக்கறது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.”

ஜோதி: “இப்படியொரு துரோகம் பண்ணதுக்கு அப்புறம் யாராலதான் என்னை நம்ப முடியும்? நான் செஞ்சத நினைச்சு மனசுக்குள்ள எவ்ளோ புழுங்குறேன்றத அவருக்கு புரிய வைக்க நிறைய வருஷம் ஆச்சு.”

பைபிள் சொல்கிறபடி, கணவனோ மனைவியோ இன்னொருவரோடு தவறான உறவு கொள்ளும்போது விவாகரத்து செய்வதா வேண்டாமா என்பதை பாதிக்கப்பட்டவர்தான் முடிவெடுக்க வேண்டும். * (மத்தேயு 19:⁠9) பாதிக்கப்பட்ட ஸ்டீஃபன் விவாகரத்து செய்ய வேண்டாம் என்று தீர்மானித்தார். ஜோதியும் ஸ்டீஃபனும் தங்கள் திருமண பந்தத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அதற்கு வெறுமனே சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் போதாதென புரிந்துகொண்டார்கள். ஏன்? ஜோதி துரோகம் செய்ததால் அவர்களுக்கிடையே இருந்த நம்பிக்கை உடைந்து தரைமட்டமானது. மணவாழ்வில் சந்தோஷம் காண ஒருவர்மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இழந்த நம்பிக்கையை எடுத்துக் கட்ட ஸ்டீஃபனும் ஜோதியும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

உங்கள் மணவாழ்விலும் இதேபோன்ற பிரச்சினை வந்தால்... எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகஜமாக வாழ்க்கையைத் தொடர்வது கஷ்டம்தான். அதுவும், விஷயம் தெரிந்த பிறகு சில மாதங்களுக்கு ரொம்பவே போராட்டமாக இருக்கும். ஆனால், வெற்றி நிச்சயம்! எப்படி? பைபிள் கொடுக்கும் நான்கு முத்தான ஆலோசனைகள் இதோ...

1 ஒருவருக்கொருவர் உண்மையாய் இருங்கள்.

‘பொய்யைக் களைந்து எப்போதும் உண்மை பேசுங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 4:25) பொய்... அரைகுறை உண்மை... மௌனம்... இதெல்லாம் நம்பிக்கையை உடைத்து போடும். அதனால், இருவருமே மனந்திறந்து உண்மையைப் பேச வேண்டும்.

 ஆரம்பத்தில் பிரச்சினையைப் பற்றி பேசுவதென்றாலே கசக்கும். இருந்தாலும் ஒளிவுமறைவின்றி பேசித்தான் ஆக வேண்டும். பிரச்சினையை விலாவாரியாகப் பேச விரும்ப மாட்டீர்கள்தான், அதற்காக அதைப் பற்றி பேச்சே எடுக்காமல் இருப்பது சரியல்ல. ஜோதி சொல்கிறார்: “ஆரம்பத்துல, அதைப் பற்றி பேசவே சங்கோஜமா இருக்கும், சுத்தமா பிடிக்காது. நானே நொந்துபோய் இருந்ததுனால, அத கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு முயற்சி பண்ணேன்.” ஆனால், பேசாமல் இருந்தது பிரச்சினையைப் பெரிதாக்கியது. “அவ அப்படி இருந்ததுனால எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமாச்சி” என்கிறார் ஸ்டீஃபன். “என்னோட மௌனமே பிரச்சினையை சரிசெய்ய தடையாக இருந்துச்சு” என்று ஜோதியும் ஒத்துக்கொள்கிறார்.

உண்மைதான் அதைப் பற்றிப் பேசினாலே மனம் வலிக்கும். டெபியின் கணவர் பீட்டர் தன் செக்ரட்ரியுடன் தவறான உறவு கொண்டார். டெபி சொல்கிறார்: “எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அவங்க எத பத்தியெல்லாம் பேசியிருப்பாங்க? இப்படி என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி ஓடிட்டு இருக்கும். எப்ப பாத்தாலும் அதப்பத்தியே யோசிச்சிட்டு, கேள்வி கேட்டுட்டு இருந்ததுனால பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன்.” பீட்டர் சொல்கிறார்: “சிலசமயங்கள்ல பேசி பேசி சண்டயே வந்திடும். அப்புறமா அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குவோம். எதையும் மறைக்காம பேசிக்கிட்டதுனால எங்களுக்குள்ள இருந்த விரிசல் விலகியது.”

வாய்க்கு வந்தபடி பேசாதிருக்க என்ன செய்யலாம்? உங்கள் துணையைத் தண்டிப்பது உங்கள் நோக்கமல்ல, நடந்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மணவாழ்க்கையைப் பாதுகாப்பதே முக்கியம். சாமுவேல் என்பவர் தன் மனைவி மிலானிக்கு துரோகம் செய்துவிட்டார். இருவரும் சேர்ந்து பேசி காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். சாமுவேல் ஒத்துக்கொள்கிறார்: “எனக்கு பிடிச்ச விஷயங்கள செய்றதுலதான் பிஸியா இருந்தேன். மத்தவங்கள திருப்திப்படுத்தணும், அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும், அதுதான் எனக்கு முக்கியமா இருந்தது. இப்படி அடுத்தவங்களுக்காகவே என் நேரத்தையெல்லாம் கொடுத்ததுனால என் மனைவியோட அதிக நேரம் செலவிட முடியல.” இதைப் புரிந்துகொண்டதால் இருவரும் நிறைய மாற்றங்களைச் செய்தார்கள், போகப் போக அவர்களின் மண வாழ்வு தழைத்தது.

இப்படிச் செய்து பாருங்கள்: தவறு செய்தவர் நீங்கள் என்றால் சாக்குப்போக்கு சொல்லாதீர்கள், துணையின்மேல் பழி போடாதீர்கள். தவறு செய்தது நீங்கள்தான், உங்கள் துணையை காயப்படுத்தியது நீங்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டுவர் நீங்கள் என்றால், உங்கள் துணையைக் கன்னாபின்னாவென திட்டாதீர்கள், கெட்ட வார்த்தைகளால் வசைபாடாதீர்கள். அப்போதுதான் உங்கள் துணை மனம்விட்டு பேசுவார்.​—⁠எபேசியர் 4:⁠32.

2 ஒன்றுசேர்ந்து செயல்படுங்கள்.

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்.” ஏன்? “அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.” (பிரசங்கி 4:​9, 10) அதுவும் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக மும்முரமாக உழைக்கும்போது இந்த பைபிள் ஆலோசனையைப் பின்பற்றுவது ரொம்ப முக்கியம்.

இருவரும் சேர்ந்து உழைத்தால்தான் நம்பிக்கையைப் பலப்படுத்த முடியும். திருமண பந்தம் விட்டுப்போகாமல் இருக்க இருவருமே தீர்மானமாயிருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே முயற்சி செய்தால் பிரச்சினை இன்னும் பூதாகரமாகத்தான் வெடிக்கும். அதனால், ஒருவரையொருவர் ஏற்ற துணையாக நினைத்து சேர்ந்து செயல்படுவது முக்கியம்.

ஸ்டீஃபனும் ஜோதியும் இதைப் புரிந்துகொண்டார்கள். ஜோதி சொல்கிறார்: “ஸ்டீஃபன் என்னை நம்பறதுக்கு கொஞ்சம் நாள் எடுத்துச்சு. இருந்தாலும் நாங்க சேர்ந்து முயற்சி செஞ்சோம். இன்னொரு முறை அவரை காயப்படுத்திட கூடாதுன்னு நான் உறுதியா இருந்தேன். அவரு மனசு காயப்பட்டிருந்தாலும், என்ன விட்டுட்டு போகனும்னு நினைக்கல. அவருக்கு நான் உண்மையா இருப்பேன்றத காட்டறதுக்கு ஒவ்வொரு நாளும் முயற்சி செஞ்சேன், அவரும் என்மேல அன்பு காட்டுனாரு. இதுக்காக காலமெல்லாம் அவருக்கு நன்றி சொல்லுவேன்.”

இப்படிச் செய்து பாருங்கள்: நம்பிக்கையைத் திரும்பக் கட்டுவதற்கு இருவரும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள்.

3 புது நபராக மாறிவிடுங்கள்.

மணத்துணைக்குத் துரோகம் செய்வதைப் பற்றி இயேசு மக்களை எச்சரித்த பின்பு, “உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி  எறிந்துவிடு” என்று சொன்னார். (மத்தேயு 5:​27-29) தவறு செய்தவர் நீங்கள் என்றால், எந்த விஷயத்தை ‘பிடுங்கி எறிய’ வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கள்ளத்தொடர்பு வைத்திருந்தவருடன் உள்ள எல்லா தொடர்பையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். * (நீதிமொழிகள் 6:32; 1 கொரிந்தியர் 15:33) முன்பு பார்த்த பீட்டர், அந்தப் பெண்ணோடு இருந்த சகவாசத்தை விடுவதற்காக வேலை நேரத்தையும் ஃபோன் நம்பரையும் மாற்றிக்கொண்டார். இருந்தும் எல்லா தொடர்பையும் விடமுடியவில்லை. மனைவிதான் முக்கியம் என்று நினைத்ததால் அந்த வேலையையே விட்டுவிட்டார். மனைவியின் செல்ஃபோனை மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தார். இப்படிச் சிரமங்களைச் சகித்ததால் விளைந்த பலன்? அவருடைய மனைவி டெபி சொல்கிறார்: “ஆறு வருஷம் ஓடிடுச்சு. அவள் திரும்பவும் இவருகிட்ட பேசறதுக்கு முயற்சி பண்ணுவாளோனு சில சமயம் பயமா இருக்கும். ஆனா, இவர் எனக்கு துரோகம் செய்ய மாட்டாருனு முழுசா நம்புறேன்.”

சுபாவத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒருவேளை, நீங்கள் வழிந்து வழிந்து பேசுபவராக, அல்லது ஒருவரோடு உல்லாசமாக இருப்பது போல பகற்கனவு காண்பவராக இருக்கலாம். அப்படியென்றால், ‘பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோடுங்கள்.’ துணையின் நம்பிக்கையைச் சம்பாதிக்க உதவும் நல்ல பழக்கங்களை வளர்த்திடுங்கள். (கொலோசெயர் 3:​9, 10) பாசத்தை வெளியில் சொல்ல கூச்சப்படும் சூழலில் வளர்ந்தவரா நீங்கள்? துணையிடம் பாசத்தை வார்த்தைகளில் தாராளமாகக் கொட்ட பழகிக்கொள்ளுங்கள். “ஜோதி, அடிக்கடி பாசமா என்னை தொடுவா, ‘ஐ லவ் யூ’-னு சொல்வா” என்று ஸ்டீஃபன் சொல்கிறார்.

கொஞ்ச நாட்களுக்கு, தினமும் நடக்கிற எல்லாவற்றையும் துணையிடம் சொல்வது நல்லது. மிலானி சொல்கிறார்: “தினமும் என்னென்ன நடந்ததுனு ஒன்னுவிடாம எங்கிட்ட ஒப்பிப்பாரு. எதையுமே மறைக்கக் கூடாதுங்கறதுக்காக சாதாரண விஷயத்தைகூட சொல்வாரு.”

இப்படிச் செய்து பாருங்கள்: உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்த என்னென்ன செய்யலாம் என்று துணையிடம் கேளுங்கள். அவற்றை பட்டியலிட்டு கடைப்பிடியுங்கள். இருவரும் சேர்ந்து ஜாலியாக செய்வதற்கு ஏதாவது வேலைகளைத் திட்டமிடுங்கள்.

4 அவசரப்படாதீர்கள்.

எல்லாம் சரியாகிவிட்டது என்று சட்டென முடிவுகட்டிவிடாதீர்கள். ‘எதையும் அவசரகதியாகச் செய்துகொண்டிருந்தால் அவன் ஏழையாவான்’ என்று நீதிமொழிகள் 21:5 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது: இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற காலமெடுக்கும், ஒருவேளை வருடங்கள் ஆகலாம்.

பாதிக்கப்பட்டவர் நீங்கள் என்றால், முழுமையாக மன்னிக்க போதிய காலம் எடுத்துக்கொள்ளுங்கள். மிலானி சொல்கிறார்: “நம்பிக்கை துரோகம் செஞ்சவங்கள மனைவிகள் ஏன் மன்னிக்கறதில்ல, ஏன் ரொம்ப நாள் கோவமாவே இருக்காங்கனு யோசிப்பேன். என் கணவர் துரோகம் செஞ்சப்பதான் மன்னிக்கறது எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சுது.” மன்னிப்பதும் நம்பிக்கையை வளர்ப்பதும் ஒரே இரவில் நடந்துவிடாது.

பிரசங்கி 3:​1-3 சொல்கிறது: “கட்ட ஒரு காலமுண்டு.” ஆரம்பத்தில், துணையிடம் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படிச் செய்வது இழந்த நம்பிக்கையைத் திரும்ப “கட்ட” எந்த விதத்திலும் உதவாது. மனதிலிருப்பதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் துணையை மன்னித்துவிட்டதைக் காட்டலாம். அதோடு அவரையும் தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள உற்சாகப்படுத்தலாம்.

கசப்பான விஷயங்களையே மனதில் அசைபோடாதீர்கள். அதை மறக்க முயற்சி செய்யுங்கள். (எபேசியர் 4:32) இதற்கு யெகோவா தேவனே சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். அதைத் தியானித்துப் பார்ப்பது உங்களுக்கு உதவும். பூர்வ இஸ்ரவேல் மக்களை தம் மனைவியாக யெகோவா விவரிக்கிறார். அவர்கள் அவரைவிட்டு விலகிப்போனது, அவருக்குத் துரோகம் செய்ததைப் போல இருந்தது. அவரது மனம் துடிதுடித்தது. (எரேமியா 3:​8, 9; 9:⁠2) அதற்காக, ‘என்றைக்குமே கோபமாக’ இருக்கவில்லை. (எரேமியா 3:12) உண்மையிலேயே அவர்கள் மனந்திரும்பி வந்தபோது மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

 இருவருக்கும் திருப்தியாகுமளவுக்கு, தேவையான மாற்றங்களைச் செய்தபின் ஒரளவு நிம்மதியாக இருப்பீர்கள். அதற்குப்பின் இருவரும் சேர்ந்து வேறு இலக்குகளை வையுங்கள். அதேசமயம், எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது பாருங்கள். மெத்தனமாக இருந்துவிடாதீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகளைச் சமாளித்து, நீங்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாயிருங்கள்.​—⁠கலாத்தியர் 6:⁠9.

இப்படிச் செய்து பாருங்கள்: தவறு செய்வதற்கு முன்பு இருந்ததைப் போல வாழ்க்கை மாறும் என நினைக்காதீர்கள். புதிதாக வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

வெற்றி நிச்சயம்

இதெல்லாம் செய்தும் வெற்றி கிடைக்குமா என்று சந்தேகம் வந்தால், திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் யெகோவா தேவன்தான் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 19:​4-6) அவருடைய உதவியால் வெற்றிக்கோட்டைத் தாண்ட முடியும். இதுவரைப் பார்த்த எல்லா தம்பதிகளும் பைபிள் அறிவுரையைக் கடைப்பிடித்து வெற்றி அடைந்தவர்கள்.

ஸ்டீஃபன்-ஜோதி வாழ்க்கையில் பிரச்சினை நடந்து 20 வருடங்கள் உருண்டோடிவிட்டன. மனைவியின் நம்பிக்கையைச் சம்பாதித்ததைப் பற்றி ஸ்டீஃபன் சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளோட பைபிளைப் படிச்சதுனாலதான் இவ்ளோ மாற்றங்களைச் செய்ய முடிஞ்சது. பைபிளிலிருந்து நிறைய நல்ல ஆலோசனைகள் கிடைச்சது. மேடுபள்ளங்கள தாண்டி வர முடிஞ்சது.” ஜோதி சொல்கிறார்: “அந்த பெரிய பிரச்சினையிலிருந்து வெளில வந்தது கடவுளோட தயவுன்னுதான் சொல்லணும். நாங்க சேர்ந்து பைபிள் படிச்சோம், நிறைய மாற்றங்களைச் செஞ்சோம். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.” (w12-E 05/01)

^ பாரா. 3 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 5 சரியான தீர்மானம் எடுக்க, விழித்தெழு! ஏப்ரல் 22, 1999 பக்கம் 6 மற்றும் ஆகஸ்ட் 8, 1995 பக்கங்கள் 10, 11 உங்களுக்கு உதவும்.

^ பாரா. 17 வேலை போன்ற சில விஷயங்களில் பேசித்தான் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு எல்லை வையுங்கள். அதுவும் மற்றவர் முன்னிலையில்தான் பேச வேண்டும். உங்கள் துணைக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்

  • தவறு செய்திருந்தாலும் சேர்ந்து வாழ நான் முடிவெடுத்ததற்கு காரணம் என்ன?

  • இப்போது என் துணையிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்கின்றன?

  • காதலித்த காலத்தில் என் அன்பை அவரிடம்/அவளிடம் எப்படியெல்லாம் காட்டினேன்? அதேபோல் எப்படித் திரும்பவும் காட்டலாம்?