“மக்கள்மீது அவருக்கு அதிக அன்பு இருந்தது.”—நீதி. 8:31, NW.

1, 2. மனிதர்கள்மீது இயேசுவுக்கு ஆழமான அன்பு இருக்கிறது என்பதை எது காட்டுகிறது?

யெகோவாவுடைய ஞானத்திற்கு எல்லையே இல்லை! அவருடைய ஒரே மகன் இயேசுவே அதற்கு மிகச் சிறந்த அத்தாட்சி. அவர் கடவுளுடைய ‘கைதேர்ந்த வேலையாளாகவும்’ இருந்தார். யெகோவா ‘வானங்களைப் படைத்தபோதும்’ ‘பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தினபோதும்’ இயேசு ரொம்பவே சந்தோஷப்பட்டார், திருப்தியடைந்தார்! ஆனால், யெகோவா மனிதர்களைப் படைத்தபோதுதான் இயேசு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 8:22-31) அப்படியென்றால், இயேசுவுக்கு மனிதர்கள்மீது ஆரம்பத்திலிருந்தே அன்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்.

2 இயேசு “தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு” இந்தப் பூமிக்கு சந்தோஷமாக வந்தார், ஒரு சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்தார். ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரையே மீட்புவிலையாய்க் கொடுத்தார்.’ (பிலி. 2:5-8; மத். 20:28) இதன் மூலம் தம் அப்பாவுக்கு அவர் எவ்வளவு உண்மையாக இருந்தார் என்பதை நிரூபித்துக் காட்டினார். அதோடு, தம் அப்பாமீதும் மனிதர்கள்மீதும் அவருக்கு இருந்த ஆழமான அன்பையும் நிரூபித்துக் காட்டினார். பூமியில் இருந்தபோது அற்புதங்களை செய்வதற்கான சக்தியை யெகோவா இயேசுவுக்குக் கொடுத்தார். மனிதர்களை இயேசு எந்தளவு நேசிக்கிறார்... அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்... என்பதை எல்லாம் அவர் செய்த அற்புதங்கள் காட்டுகின்றன.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

 3 இயேசு பூமியில் இருந்தபோது “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை” எல்லாருக்கும் சொன்னார். (லூக். 4:43) இந்த அரசாங்கம்தான் அவருடைய தகப்பனின் பெயரைப் பரிசுத்தப்படுத்தும், மனிதர்களுடைய பிரச்சினைகளை எல்லாம் நிரந்தரமாகத் தீர்க்கும் என்று இயேசுவுக்குத் தெரியும். இயேசு நற்செய்தியைப் பிரசங்கித்ததோடு நிறைய அற்புதங்களையும் செய்தார். மக்கள்மீது அவருக்கு எந்தளவு அக்கறை இருந்தது என்பதை அந்த அற்புதங்கள் காட்டின. எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்க இயேசுவின் அற்புதங்கள் நமக்கு உதவும். அதனால் அவர் செய்த 4 அற்புதங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

“எனக்கு மனமிருக்கிறது; நீ சுத்தமாகு”

4. தொழுநோயால் அவதிப்பட்ட மனிதனை இயேசு பார்த்தபோது என்ன நடந்தது என்று விவரியுங்கள்.

4 கலிலேயாவில் இருந்த ஒரு நகரத்தில் இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்தார். அப்போது கொடிய வியாதியால், அதாவது தொழுநோயால், அவதிப்பட்டுக்கொண்டு இருந்த ஒருவனைப் பார்த்தார். (மாற். 1:39, 40) அந்த மனிதனுக்கு தொழுநோய் முற்றிப்போயிருந்தது. அதனால்தான் மருத்துவரான லூக்கா அந்த மனிதனை, “தொழுநோய் நிறைந்த ஒருவன்” என்று சொன்னார். (லூக். 5:12) அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும், “முகங்குப்புற விழுந்து, ‘எஜமானே, உங்களுக்கு மனமிருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்’ என்று கெஞ்சினான்.” தன்னை குணப்படுத்தும் சக்தி இயேசுவுக்கு இருக்கிறது என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், அதை செய்ய இயேசுவுக்கு மனமிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அவன் அப்படிக் கேட்டான். ஏனென்றால், அன்று பரிசேயர்கள் தொழுநோயாளிகளை தீண்டத்தகாதவர்களாகப் பார்த்தார்கள். தன்னைக் குணப்படுத்தும்படி அந்த மனிதன் கேட்டபோது இயேசு என்ன யோசித்திருப்பார்? உருக்குலைந்து போயிருந்த அந்த மனிதனை எப்படி நடத்தியிருப்பார்? அவருடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

5. இயேசு ஏன் தொழுநோயாளியைக் குணப்படுத்தினார்?

5 திருச்சட்டத்தின்படி, தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் “தீட்டு, தீட்டு” என்று சத்தமிட வேண்டும். ஆனால், அந்த மனிதன் அப்படி செய்யவில்லை. (லேவி. 13:43-46) அதற்காக இயேசு அவன்மீது கோபப்பட்டாரா? இல்லை, அவனுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்; அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று விரும்பினார். அந்த சமயத்தில், இயேசு என்ன யோசித்துக்கொண்டிருந்தார் என்று நமக்குத் தெரியாது, ஆனால் அந்த மனிதன்மீது அவர் பரிதாபப்பட்டார் என்பது மட்டும் நிச்சயம். பொதுவாக தொழுநோய் இருக்கிறவர்களை யாரும் தொடவே மாட்டார்கள். ஆனால் இயேசு, “தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, ‘எனக்கு மனமிருக்கிறது; நீ சுத்தமாகு’” என்று கனிவாகவும் உறுதியாகவும் சொன்னார். “உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.” (லூக். 5:13) இந்த அற்புதத்தை செய்ய யெகோவாதான் இயேசுவுக்கு சக்தி கொடுத்தார். மக்கள்மீது யெகோவாவுக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா?—லூக். 5:17.

6. இயேசு செய்த அற்புதங்கள் ஏன் விசேஷமானவை? அந்த அற்புதங்கள் எதைக் காட்டுகின்றன?

6 யெகோவாவின் உதவியால் இயேசு மலைக்க வைக்கும் பல அற்புதங்களை செய்தார். தொழுநோயை மட்டுமல்ல, எல்லா விதமான நோய்களையும் அவர் குணப்படுத்தினார். அதனால்தான், ‘பேச முடியாதவர்கள் பேசுவதையும், நடக்க முடியாதவர்கள் நடப்பதையும், பார்க்க முடியாதவர்கள் பார்ப்பதையும் கூட்டத்தார் கண்டு வியந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (மத். 15:31) இன்று, நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு டாக்டர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplantation) செய்கிறார்கள். ஆனால், இயேசு அதையெல்லாம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளையே சரிசெய்து அவர்களைக் குணப்படுத்தினார். அதுவும் உடனடியாகக் குணப்படுத்தினார். சிலசமயம், இயேசு ஒரு ஊரில் இருந்துகொண்டே வேறு ஊரில் இருக்கிறவர்களையும் குணப்படுத்தினார். (யோவா. 4:46-54) நம்முடைய ராஜா இயேசுவைப் பற்றி இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? அவருக்கு எல்லா விதமான வியாதிகளையும் நிரந்தரமாகக் குணமாக்கும் சக்தி இருக்கிறது; அதோடு, அதை செய்வதற்கான விருப்பமும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம். மக்களிடம் இயேசு கனிவாகவும் அன்பாகவும் நடந்துகொண்டதைப் பார்க்கும்போது புதிய உலகத்திலும் ‘பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்குவார்’ என்ற நம்பிக்கை கிடைக்கிறது. (சங். 72:13) வியாதியால் அவதிப்படுகிற எல்லாரையும் இயேசு குணமாக்குவார். ஏனென்றால், அப்படி செய்ய அவர் ஆர்வமாக இருக்கிறார்.

 “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட”

7, 8. பெத்சாயிதாவில் வியாதிப்பட்டிருந்த மனிதனை இயேசு பார்ப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.

7 இந்த அற்புதத்தை செய்த சில மாதங்களுக்குப் பிறகு இயேசு கலிலேயாவிலிருந்து யூதேயாவுக்குப் போனார். அங்கேயும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இயேசு சொன்ன செய்தியைக் கேட்டிருப்பார்கள். அவர் நடந்துகொண்ட விதமும் அவர்களுடைய மனதை நிச்சயம் தொட்டிருக்கும். ஏனென்றால், ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கவும் துவண்டு போயிருக்கிறவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவுமே இயேசு விரும்பினார்.—ஏசா. 61:1, 2; லூக். 4:18-21.

8 நிசான் மாதத்தில், பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இயேசு எருசலேமிற்குப் போனார். அந்த விசேஷ பண்டிகைக்காக நிறையப் பேர் வந்திருந்ததால் அந்த நகரமே கோலாகலமாக இருந்தது. ஆலயத்தின் வடக்கே பெத்சாயிதா என்றழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒருவனை இயேசு அங்கே பார்த்தார்.

9, 10. (அ) இயேசு ஏன் பெத்சாயிதா என்றழைக்கப்பட்ட குளத்திற்குப் போனார்? (ஆ) அங்கே அவர் என்ன செய்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

9 பொதுவாக, இந்தக் குளத்திற்கு நோயாளிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஏனென்றால், குளத்தில் நீர் கலங்கும்போது அதில் யார் இறங்குகிறாரோ அவருடைய வியாதி உடனடியாகக் குணமாகும் என்று மக்கள் நம்பினார்கள். இதனால் அங்கு எந்தளவு கூச்சலும் குழப்பமும் இருந்திருக்கும்... குளத்தில் இறங்க முடியுமா முடியாதா என்று நினைத்து மக்கள் எவ்வளவு கவலையாக இருந்திருப்பார்கள்... என்பதை எல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆனால், இயேசுவுக்கு எந்த வியாதியோ குறைபாடோ இல்லை. அப்படி இருக்கும்போது, அவர் ஏன் அங்கே போனார்? மக்கள்மீது இருந்த அன்பினால்தான் அங்கே போனார். இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த மனிதனை அவர் அங்குதான் பார்த்தார்.யோவான் 5:5-9-ஐ வாசியுங்கள்.

10 அந்த மனிதனிடம், “குணமாக விரும்புகிறாயா?” என்று இயேசு கேட்டார். குணமாக விருப்பம் இருந்தாலும், தன்னை அந்தக் குளத்தில் இறக்கிவிட யாரும் இல்லையே என்று அந்த மனிதன் ஏக்கமாக சொன்னான். அப்போது, அந்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்யும்படி இயேசு சொன்னார். அதாவது, “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்! இயேசு செய்த இந்த அற்புதம் எதைக் காட்டுகிறது? புதிய உலகத்திலும் இதுபோன்ற அற்புதங்களை அவர் செய்வார் என்பதைக் காட்டுகிறது. அதுமட்டும் இல்லாமல், மக்கள்மீது அவருக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. அதனால்தான், கஷ்டப்படுகிறவர்களைத் தேடிப் போய் அவர்களுக்கு உதவி செய்தார். நீங்கள் எப்படி இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம்? இந்த உலகத்தில் நடக்கும் மோசமான காரியங்களால் மனமுடைந்து இருப்பவர்களை ஊழியத்தில் தேடி கண்டுப்பிடியுங்கள், அவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள். இப்படி செய்வதன்மூலம் இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்.

“என் மேலங்கியைத் தொட்டது யார்?”

11. வியாதியால் கஷ்டப்பட்டவர்கள்மீது இயேசுவுக்கு அன்பிருந்தது என்பதை மாற்கு 5:25-34-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

11 மாற்கு 5:25-34-ஐ வாசியுங்கள். ஒரு பெண் 12 வருடங்களாக மோசமான ஒரு வியாதியால் கஷ்டப்பட்டாள். அது அவளுடைய வாழ்க்கையையே பாதித்திருந்தது; கடவுளை வழிபடுவதற்கும் அது ஒரு தடையாக இருந்தது. அவள் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்திருந்தாள். தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்திருந்தாள்; ஆனால், ஒரு பிரயோஜனமும் இருக்கவில்லை; நிலைமை இன்னும் மோசமாகவே ஆகியிருந்தது. அந்த வியாதி குணமாக அவள் வேறொன்றை செய்தாள்; கூட்டத்திற்குள் நுழைந்து இயேசுவின் மேலங்கியைத் தொட்டாள். (லேவி. 15:19, 25) உடனே, தம்மிடம் இருந்து சக்தி வெளியேறுவதை இயேசு உணர்ந்தார். அதனால், “என் மேலங்கியைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அப்போது அந்தப் பெண், “பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர்முன் வந்து மண்டியிட்டு, எல்லா உண்மையையும் சொன்னாள்.” அவருடைய அப்பா யெகோவாதான் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினார் என்று இயேசு புரிந்துகொண்டார். அதனால் அந்தப் பெண்ணிடம்,  “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. சமாதானமாகப் போ. உன்னைப் பாடுபடுத்திய நோயிலிருந்து விடுபட்டு நலமாயிரு” என்று சொன்னார்.

இயேசுவுக்கு நம்மீது அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை அவருடைய அற்புதங்கள் காட்டுகின்றன (பாராக்கள் 11, 12)

12. (அ) இதுவரை பார்த்த அற்புதங்களிலிருந்து இயேசு எப்படிப்பட்டவர் என்று விவரிப்பீர்கள்? (ஆ) நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

12 வியாதிப்பட்டவர்களிடம் இயேசு எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்! அதைப் பார்க்கும்போது நமக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது. ஆனால் சாத்தான், இயேசுவுக்கு நேர்மாறாக இருக்கிறான். நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்கள், நம்மை யாரும் நேசிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நம்மை நினைக்க வைக்கிறான். ஆனால், இயேசுவுக்கு நம்மீது உண்மையிலேயே அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை அவர் செய்த அற்புதங்கள் காட்டுகின்றன. இயேசு நம் ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் இருப்பது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்! (எபி. 4:15) சிலசமயம், வியாதியால் அவதிப்படுகிறவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது நமக்கு கஷ்டமாக இருக்கும்; அதுவும் நமக்கு அந்த மாதிரியான ஒரு வியாதி வந்ததில்லை என்றால் அது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஆனால் இயேசுவைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் எந்த வியாதியினாலும் கஷ்டப்படவில்லை. இருந்தாலும் வியாதிப்பட்டவர்களிடம் கரிசனையாக நடந்துகொண்டார். அப்படியென்றால் இந்த விஷயத்தில் இயேசுவைப் போல் நடக்க நாமும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.—1 பே. 3:8.

“இயேசு கண்ணீர்விட்டார்”

13. லாசருவை உயிர்த்தெழுப்பியதிலிருந்து இயேசுவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

13 மற்றவர்கள் கஷ்டப்பட்டதைப் பார்த்தபோது இயேசு ரொம்பவே வேதனைப்பட்டார். உதாரணத்திற்கு, அவருடைய நண்பன் லாசரு இறந்தபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். லாசருவின் நண்பர்களும் குடும்பத்தாரும் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய வேதனையை பார்த்தபோது, இயேசுவுடைய ‘உள்ளம் குமுறியது, மனம் கலங்கியது.’ (யோவான் 11:33-36-ஐ வாசியுங்கள்.) லாசருவை உயிர்த்தெழுப்பப் போவதைப் பற்றி இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும், அவர் கண்ணீர்விட்டு அழுதார். மற்றவர்கள்முன் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர் தயங்கவில்லை. லாசருமீதும் அவருடைய  குடும்பத்தார்மீதும் இயேசுவுக்கு அன்பு இருந்ததால்தான் கடவுள் கொடுத்த சக்தியைப் பயன்படுத்தி லாசருவை உயிரோடு எழுப்பினார்!—யோவா. 11:43, 44.

14, 15. (அ) நாம் அனுபவிக்கும் பிரச்சினைகளை எல்லாம் யெகோவா முடிவுக்குக்கொண்டு வர போகிறார் என்று எப்படி சொல்லலாம்? (ஆ) “ஞாபகார்த்தக் கல்லறை” என்ற வார்த்தையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

14 இயேசு தம் அப்பாவின் குணங்களை அப்படியே வெளிக்காட்டுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (எபி. 1:3) அப்படியென்றால், இயேசு செய்த அற்புதங்களிலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? வியாதியை... வேதனையை... மரணத்தை... எல்லாம் ஒழிக்க வேண்டுமென யெகோவாவும் விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். சீக்கிரத்தில், யெகோவாவும் இயேசுவும் இறந்துபோன நிறையப் பேரை உயிரோடு எழுப்பப்போகிறார்கள். அதனால்தான், “வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் (அதாவது, ஞாபகார்த்தக் கல்லறைகளில்) உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 5:28, 29, அடிக்குறிப்பு.

15 “ஞாபகார்த்தக் கல்லறை” என்று இயேசு சொன்னபோது, இறந்தவர்கள் எல்லாரும் கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர் அர்த்தப்படுத்தினார். இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவர் சர்வ சக்தியுள்ள யெகோவாதான். (ஏசா. 40:26) எல்லாவற்றையும் படைத்த யெகோவா தேவனால் இறந்தவர்களைப் பற்றிய நுணுக்கமான விவரங்களையும் ஞாபகத்தில் வைக்க முடியும். அதுமட்டுமல்ல, அப்படி ஞாபகத்தில் வைக்கவும் அவர் ஆசைப்படுகிறார். பைபிளிலுள்ள உயிர்த்தெழுதல் பதிவுகளைப் பற்றி படிக்கும்போது புதிய உலகத்தில் பெரியளவில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது!

இயேசுவின் அற்புதங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

16. இன்று இருக்கும் கடவுளுடைய மக்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

16 யெகோவாவுக்கு நாம் கடைசிவரை உண்மையாக இருந்தால் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதுவரை நடக்காத மிகப் பெரிய அற்புதம் இதுவாகத்தான் இருக்கும்! அர்மகெதோன் முடிந்த உடனே, நாம் இன்னும் நிறைய அற்புதங்களைப் பார்ப்போம். அந்த சமயத்தில், மனிதர்கள் எல்லாரும் எந்தக் குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். (ஏசா. 33:24; 35:5, 6; வெளி. 21:4) யாரும் கைத்தடிகளையோ ‘வீல்-சேர்களையோ’ பயன்படுத்த மாட்டார்கள். மூக்குக் கண்ணாடிகளுக்கும் காது கேட்கும் கருவிகளுக்கும் அவசியம் இருக்காது. அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கிற எல்லாருக்கும் யெகோவா நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பார். ஏனென்றால், அவர்களுக்கு நிறைய வேலை இருக்கும். அவர்கள்தான் இந்த முழு பூமியையும் ஒரு அழகான தோட்டமாக மாற்றுவார்கள்.—சங். 115:16.

17, 18. (அ) இயேசு ஏன் அற்புதங்கள் செய்தார்? (ஆ) கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ உங்களால் முடிந்த எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும்?

17 வியாதிப்பட்டவர்களை இயேசு குணப்படுத்தியதைப் பற்றி வாசிக்கும்போது ‘திரள் கூட்டத்தாருக்கு’ எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (வெளி. 7:9) வியாதிப்பட்ட எல்லாரையும் எதிர்காலத்தில் கடவுள் முழுமையாக குணப்படுத்துவார் என்ற நம் நம்பிக்கையை அது பலப்படுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் கடவுளுடைய ஒரே மகனான இயேசு, மனிதர்களை எந்தளவு நேசிக்கிறார் என்பதையும் இது காட்டுகிறது. (யோவா. 10:11; 15:12, 13) மக்கள் பட்ட கஷ்டங்களைப் பார்த்தபோது இயேசு மனதுருகினார், அதனால் நிறைய அற்புதங்களை செய்தார். இந்த அற்புதங்களைப் பற்றி படிக்கும்போது, நம் ஒவ்வொருவர்மீதும் யெகோவாவுக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது!—யோவா. 5:19.

18 இன்று உலகில் எங்கு பார்த்தாலும் கஷ்டம், வேதனை, மரணம்தான் இருக்கின்றன. (ரோ. 8:22) அதனால்தான் நாம் எல்லாரும் புதிய உலகத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். கடவுள் வாக்குக் கொடுத்த விதமாகவே, அங்கே மனிதர்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். மல்கியா 4:2 (NW) சொல்வதுபோல், நாம் சந்தோஷத்தில் ‘கொழுத்த கன்றுகளைப் போல் துள்ளிக் குதிப்போம்.’ யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கும்போது... அவருடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வைக்கும்போது... புதிய உலகத்தில் வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். இயேசுவின் ஆட்சியில் நம்முடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதற்கு அவர் செய்த அற்புதங்களே அத்தாட்சி. இதையெல்லாம் படிக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!