Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)  |  மே 2015  

யெகோவாவைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம்?

யெகோவாவைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம்?

“அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபே. 5:1.

1. யெகோவா நமக்கு என்ன திறனை கொடுத்திருக்கிறார், அவரைப் பின்பற்ற இந்தத் திறன் நமக்கு எப்படி உதவும்?

யெகோவா நம் எல்லாருக்கும் ஒரு அருமையான திறனைக் கொடுத்திருக்கிறார். அதாவது, மற்றவர்களுடைய இடத்தில் நம்மை வைத்து பார்க்கும் திறனைக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுடைய சூழ்நிலையில் நாம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய உணர்ச்சிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். (எபேசியர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், யெகோவாவைப் பின்பற்ற இந்தத் திறன் நமக்கு எப்படி உதவும்? இந்தத் திறனை நாம் எப்படி பயன்படுத்தக் கூடாது? இதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

2. நாம் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கிறது?

2 கஷ்டமே இல்லாத ஒரு எதிர்காலத்தைக் கொடுக்கப் போவதாக யெகோவா நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அப்போது பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ‘வேறே ஆடுகளுக்கும்’ முடிவில்லா வாழ்க்கையை தரப்போவதாக அவர் சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (யோவா. 10:16; 17:3; 1 கொ. 15:53) இருந்தாலும், இன்று நாம் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அதை எல்லாம் யெகோவா நன்கு புரிந்து வைத்திருக்கிறார். எப்படி சொல்கிறோம்? எகிப்தில் தம்முடைய மக்கள் பட்ட கஷ்டங்களைப் பார்த்தபோது யெகோவா “நெருக்கப்பட்டார்,” அதாவது ரொம்பவே வருத்தப்பட்டார். (ஏசா. 63:9) பல வருடங்களுக்குப் பிறகு, அவருடைய மக்கள் ஆலயத்தை திரும்பவும் கட்டிய சமயத்தில் எதிரிகள் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகளைக் கொடுத்தார்கள், அந்த எதிரிகளைப் பார்த்து அவர்கள் பயந்தார்கள். யெகோவா அவர்களுடைய கஷ்டத்தை நன்கு  புரிந்துகொண்டார். அதனால்தான், ‘உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான்’ என்று சொன்னார். (சக. 2:8) தன் குழந்தைமீது அன்பும் பாசமும் வைத்திருக்கிற ஒரு அம்மாவைப் போல் யெகோவாவும் தம்முடைய மக்கள்மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். அதனால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். (ஏசா. 49:15) நாமும் மற்றவர்கள் படும் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளும்போது... அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்து பார்க்கும்போது... யெகோவாவைப் போல் அன்பு காட்டுகிறோம் என்று சொல்ல முடியும்.—சங். 103:13, 14.

இயேசு எப்படி யெகோவாவைப் போல் அன்பு காட்டினார்

3. மக்கள் கஷ்டப்பட்டதைப் பார்த்தபோது இயேசுவுக்கு எப்படி இருந்தது?

3 மற்றவர்கள் அனுபவித்த கஷ்டங்களை இயேசு அனுபவிக்கவில்லை. இருந்தாலும் அவர்களுடைய வேதனையை இயேசு நன்கு புரிந்துகொண்டார். எப்படி சொல்கிறோம்? மதத் தலைவர்கள் பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்; கெடுபிடியான சட்டங்களையும் அவர்கள்மீது சுமத்தினார்கள். அதை எல்லாம் கடைப்பிடிப்பது மக்களுக்கு ரொம்ப பாரமாக இருந்தது. அதனால் அந்த மதத் தலைவர்களைப் பார்த்து மக்கள் பயந்தார்கள். (மத். 23:4; மாற். 7:1-5; யோவா. 7:13) ஆனால் இயேசு அந்த மதத் தலைவர்களுக்குப் பயப்படவும் இல்லை, அவர்கள் சொன்ன பொய்களை நம்பி ஏமாந்துவிடவும் இல்லை. இருந்தாலும், அந்த மக்களுடைய வேதனையை இயேசு நன்கு புரிந்துகொண்டார். அவர்கள் மோசமாக நடத்தப்பட்டதைப் பார்த்தபோது ரொம்பவே வேதனைப்பட்டார். “திரளான மக்களை அவர் பார்த்தபோது அவர்களுக்காக மனதுருகினார்; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத். 9:36) மக்களை நேசிக்கவும் அவர்கள்மீது இரக்கம் காட்டவும் இயேசு தம் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.—சங். 103:8.

4. மக்கள் கஷ்டப்பட்டதை பார்த்தபோது இயேசு என்ன செய்தார்?

4 யெகோவாவைப் போலவே இயேசுவும் மக்களை அதிகமாக நேசித்தார். அதனால்தான், அவர்கள் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு உடனே உதவி செய்தார். ஒருசமயம், இயேசுவின் சீடர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ரொம்ப தூரம் பயணம் செய்துவிட்டு வந்திருந்தார்கள். சீடர்கள் ரொம்ப களைப்பாக இருந்ததால் அவர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால், ஒரு தனிமையான இடத்துக்குப் போய் ஓய்வெடுக்கலாம் என்று இயேசு அவர்களிடம் சொன்னார். ஆனால், தமக்காக நிறைய பேர் காத்துக்கொண்டு இருந்ததை இயேசு பார்த்தபோது அவர்கள்மீது மனதுருகினார். அவர்களுடைய சூழ்நிலைமையை புரிந்துகொண்டதால், “அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்பிக்க ஆரம்பித்தார்.”—மாற். 6:30, 31, 34.

யெகோவாவைப் போல் அன்பு காட்டுங்கள்

5, 6. யெகோவாவைப் போல் அன்பு காட்ட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள். (ஆரம்பப் படம்)

5 யெகோவாவைப் போல் அன்பு காட்ட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? பதிலை தெரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஜான் என்ற ஒரு இளம் சகோதரர் அவருடைய சபையில் இருக்கும் ஒரு வயதான சகோதரரைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார். அவரால் சரியாக நடக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது. இந்த சமயத்தில், “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அவ்விதமாகவே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்ற வசனம் ஜானுடைய ஞாபகத்திற்கு வந்தது. (லூக். 6:31) அதனால், ‘மத்தவங்க எனக்கு என்ன செய்யணும்னு நான் ஆசைப்படுவேன்?’ என்று ஜான் யோசிக்கிறார். அப்போது, ‘மத்தவங்க என்னோட சேர்ந்து விளையாடணும்னு எதிர்பார்ப்பேன்’ என்று நினைக்கிறார். ஆனால், அந்த வயதான சகோதரரால் விளையாட முடியாதே! அப்படியென்றால் ஜான் எப்படி யோசித்திருக்க வேண்டும்? ‘நான் அந்த வயதான சகோதரரோட சூழ்நிலையில இருந்தேன்னா, மத்தவங்க எனக்கு என்ன செய்யணும்னு எதிர்பார்ப்பேன்?’ என்றுதான் யோசித்திருக்க வேண்டும்.

6 ஜான் ஒரு இளைஞனாக இருந்தாலும் தனக்கு வயதானால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கிறார். வயதான சகோதரரோடு அவர் நேரம் செலவிடுகிறார், அவர் பேசுவதைக் கவனமாக கேட்கிறார். இப்போது அவருடைய கஷ்டத்தை ஜான் புரிந்துகொள்கிறார். அதாவது, அந்த வயதான சகோதரருக்கு வாசிப்பதும் ஊழியத்திற்கு போவதும் கஷ்டம் என்பதை புரிந்துகொள்கிறார். அவருக்கு எப்படியெல்லாம் உதவி செய்யலாம் என்று யோசிக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஜானைப் போலவே நாமும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும்போது... அவர்கள்மீது அன்பு காட்டும்போது... யெகோவாவைப் போலவே நடந்துகொள்கிறோம்.—1 கொ. 12:26.

யெகோவாவைப் போல் அன்பாக நடந்துகொள்ளுங்கள் (பாரா 7)

7. நம் சகோதர சகோதரிகளுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்யலாம்?

7 சிலசமயம், மற்றவர்களுடைய சூழ்நிலையைப்  புரிந்துகொள்வது நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அதுவும், அவர்களுடைய சூழ்நிலையில் நாம் இல்லையென்றால் அது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். உதாரணத்திற்கு, சிலர் வியாதியாலோ, விபத்தாலோ, வயதாவதாலோ கஷ்டப்படலாம். சிலர் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து அதிகமாக கவலைப்படலாம். அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்படிருக்கலாம். இன்னும் சிலர் மோசமாக நடத்தப்பட்டிருப்பதால், அதை நினைத்து நினைத்து வருத்தப்படலாம். வேறு சிலர், தனிமரமாக இருந்து குழந்தைகளை வளர்க்கலாம். அல்லது, குடும்பத்தில் சிலர் யெகோவாவை வணங்காதவர்களாக இருக்கலாம். இப்படி நாம் எல்லாருமே ஏதாவது ஒரு விதமான பிரச்சினையை அனுபவித்துக்கொண்டு இருக்கலாம். இருந்தாலும், மற்றவர்கள்மீது அன்பு காட்டவும் அவர்களுக்கு உதவி செய்யவும் நாம் ஆசைப்படுவோம். ஆனால், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பேசும்போது நன்றாக கவனித்து கேட்க வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். அதுமட்டுமில்லாமல், அவர்கள் படும் வேதனையைப் பார்க்கும்போது யெகோவா எப்படி உணர்கிறார் என்று சொல்லலாம். அல்லது, அவர்களுக்கு ஏதாவது உதவிகளை செய்யலாம். இப்படி செய்யும்போது, நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்ள முடியும்.ரோமர் 12:15-ஐயும் 1 பேதுரு 3:8-ஐயும் வாசியுங்கள்.

யெகோவாவைப் போல் கனிவாக நடந்துகொள்ளுங்கள்

8. கனிவாக நடந்துகொள்ள இயேசுவுக்கு எது உதவியது?

8 யெகோவா எல்லாரிடமும் கனிவாக நடந்துகொள்கிறார். (லூக். 6:35) இயேசுவும் அவருடைய அப்பாவைப் போலவே நடந்துகொள்கிறார். பூமியில் இருந்தபோது அவர் எல்லாரிடமும் கனிவாக நடந்துகொண்டார். இப்படி நடந்துகொள்ள அவருக்கு எது உதவியது? அவர் சொல்லும் விஷயங்களும் அவர் நடந்துகொள்ளும் விதமும் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப் பார்த்ததால்தான் அவர் கனிவாக நடந்துகொண்டார். உதாரணத்திற்கு, நிறைய பாவங்களைச் செய்த ஒரு பெண் இயேசுவிடம் வந்தாள். செய்த பாவங்களை நினைத்து அவள் கண்ணீர்விட்டு அழுதாள். இயேசுவின் பாதங்களை அவளுடைய கண்ணீரால் நனைத்தாள். அவள் எந்தளவு மனம் வருந்தினாள் என்பதை இயேசு அப்போது புரிந்துகொண்டார். அந்த சமயத்தில், அவர் கனிவாக நடந்துகொள்ளவில்லை என்றால் அவள் மனம் இன்னும் எந்தளவு வேதனைப்படும் என்பதை இயேசு புரிந்துகொண்டார். அதனால், அவள் செய்த நல்ல காரியத்திற்காக அவளைப் புகழ்ந்ததோடு அவளுடைய பாவங்களையும் மன்னித்தார். தான் அப்படி நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளாத பரிசேயரிடமும் அவர் கனிவாகப் பேசினார்.—லூக். 7:36-48.

9. யெகோவாவைப் போல் கனிவாக நடந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்.

9 யெகோவாவைப் போல் நாம் எப்படிக் கனிவாக நடந்துகொள்ளலாம்? நாம் பேசும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்துகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான், கிறிஸ்தவராக இருக்கிற ஒருவர் “சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய்” நடந்துகொள்ள வேண்டும் என்று பவுல் சொன்னார். (2 தீ. 2:24) அப்படியென்றால், பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் எப்படிக் கனிவாக நடந்துகொள்ளலாம் என்று யோசித்துப் பாருங்கள்: ‘என்னோட முதலாளி ஒழுங்கா வேலை செய்யலன்னா நான் அவர்கிட்ட எப்படி நடந்துக்குவேன்? பல மாசமா கூட்டத்துக்கு வராத ஒரு சகோதரர் கூட்டத்துக்கு வரும்போது அவரோட மனசை புண்படுத்துற மாதிரி பேசுவேனா? ஊழியத்துல நான் பார்க்குற ஒருத்தர், ரொம்ப பிஸியா இருக்கிறதா சொன்னா நான் எப்படி அவர்கிட்ட கனிவா நடந்துக்கலாம்? என் மனைவிகிட்ட சொல்லாம முடிவு பண்ணுன ஒரு விஷயத்தை பத்தி அவள் என்கிட்ட கேட்கும்போது நான் கனிவா பதில் சொல்வேனா?’ நாம் பேசும் விஷயங்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும், அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் யெகோவாவைப் போல் கனிவாகப் பேசுவோம், கனிவாக நடந்துகொள்வோம்.நீதிமொழிகள் 15:28-ஐ வாசியுங்கள்.

யெகோவாவைப் போல் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்

10, 11. யெகோவாவைப் போல் ஞானமாக நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்.

10 யெகோவாவுடைய ஞானத்திற்கு எல்லையே இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவரால் மட்டுமே துல்லியமாகப் பார்க்க முடியும். நமக்கு அந்தத் திறன் இல்லை என்றாலும் நம்மால் ஓரளவுக்கு ஞானமாக நடந்துகொள்ள முடியும். எப்படி? ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன் அது நம்மையும் மற்றவர்களையும் எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப் பார்ப்பதன் மூலம் ஞானமாக நடந்துகொள்ள முடியும். இந்த விஷயத்தில், நாம் ஒருபோதும் இஸ்ரவேலர்களைப்  போல் இருக்கக் கூடாது. ஏனென்றால், யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனால் என்ன நடக்கும்... யெகோவாவோடு அவர்களுக்கு இருந்த பந்தம் என்ன ஆகும்... யெகோவா அவர்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்... என்பதை பற்றி எல்லாம் அவர்கள் கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்கவில்லை. இஸ்ரவேலர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காததால் அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக நடப்பார்கள் என்பதை மோசே புரிந்துகொண்டார். அதனால்தான் மோசே, “அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும்” என்று சொன்னார்.—உபா. 31:29, 30; 32:28, 29.

11 உதாரணத்திற்கு நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது உங்கள் உணர்ச்சிகளையும் பாலியல் ஆசைகளையும் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைக் கெடுத்துப்போடும் எதையும் செய்துவிடாதீர்கள், ஞானமாக நடந்துகொள்ளுங்கள். தவறு செய்ய தூண்டும் சூழ்நிலையைத் தவிர்த்திடுங்கள். யெகோவா கொடுக்கும் இந்த ஆலோசனைக்கு கீழ்ப்படியுங்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதி. 22:3.

கற்பனைத் திறனை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்

12. நாம் எதைப் பற்றி யோசிக்கிறோம் என்பதில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

12 நாம் ஞானமுள்ளவர்களாக இருந்தால் எதைப் பற்றி யோசிக்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். யோசிக்கும் திறனை நாம் நெருப்பிற்கு ஒப்பிடலாம். நெருப்பை நல்ல விஷயத்திற்கும் பயன்படுத்தலாம், கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, சமைப்பதற்கு நெருப்பு தேவைதான். ஆனால் நாம் கவனமாக இல்லையென்றால் அந்த நெருப்பு நம் வீட்டையே எரித்துவிடலாம், ஒருவேளை நம் உயிரைக்கூட பறித்துவிடலாம். அதேபோல் நாம் யோசிக்கும் விஷயங்கள் நமக்கு நல்லதும் செய்யலாம், கெட்டதும் செய்யலாம். யெகோவா நமக்காக செய்த விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நமக்கு நன்மை அளிக்கும்! ஆனால், ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்கும்போது... தவறான விஷயங்களை செய்வது போல் கற்பனை செய்யும்போது... கெட்ட ஆசைகள் நம் மனதில் ஆழமாக வேர்விட ஆரம்பிக்கும். கடைசியில் அந்தத் தவறை நாம் உண்மையிலேயே செய்துவிடுவோம். அதனால், யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பையே இழந்துவிடுவோம்.யாக்கோபு 1:14, 15-ஐ வாசியுங்கள்.

13. ஏவாள் எதைப் பற்றி கற்பனை செய்தாள்?

13 இந்த விஷயத்தில் நாம் ஏவாளிடமிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” சாப்பிட வேண்டாம் என்று ஆதாம்-ஏவாளிடம் யெகோவா கட்டளையிட்டிருந்தார். (ஆதி. 2:16, 17) ஆனால் சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றான். எது நல்லது எது கெட்டது என்று சுயமாக தீர்மானித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏவாள் கற்பனை செய்தாள். அதைப் பற்றியே அவள் யோசித்துக்கொண்டு இருந்தாள். ‘அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமுமாய்’ இருப்பது போல் அவளுக்கு தெரிந்தது. அதனால், அவள் அந்த “கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.” (ஆதி. 3:1-6) இதனால் என்ன நடந்தது?  “பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.” (ரோ. 5:12) இதற்கு காரணம், ஏவாள் தன்னுடைய கற்பனைத் திறனை தவறாகப் பயன்படுத்தியதுதான்!

14. பைபிள் நமக்கு என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது?

14 ஏவாள் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்கவில்லைதான். ஆனால், நாம் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று பைபிள் தெளிவாக எச்சரிக்கிறது. “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். (மத். 5:28) அதோடு, “பாவ இச்சைகளின்படி நடக்க நீங்கள் திட்டமிடாதீர்கள்” என்று பவுலும் எச்சரித்தார்.—ரோ. 13:14.

15. நாம் எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க கூடாது, ஏன்?

15 பணக்காரராக ஆவதை பற்றி யோசிப்பதற்குப் பதிலாக யெகோவாவுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. ஏனென்றால், நமக்கு எவ்வளவுதான் பணம் இருந்தாலும் அது நமக்குப் பாதுகாப்பைத் தராது. (நீதி. 18:11) யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்காமல் பணத்திற்கு முதலிடம் கொடுப்பவர்களை முட்டாள்கள் என்று இயேசு சொன்னார். அவர்கள், ‘கடவுளுடைய பார்வையில் செல்வந்தர்களாக இருக்க மாட்டார்கள்.’ (லூக். 12:16-21) ஆனால் யெகோவாவுக்கு பிடித்த விஷயங்களை செய்வதன் மூலம், ‘பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்போது’ நமக்கும் சந்தோஷமாக இருக்கும், யெகோவாவும் சந்தோஷப்படுவார்! (மத். 6:20; நீதி. 27:11) யெகோவாவோடு இருக்கும் பந்தம்தான் நமக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து. அதற்கு ஈடிணை வேறு எதுவுமே இல்லை.

கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்

16. நாம் எதைப் பற்றியாவது கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் என்ன செய்யலாம்?

16 சாத்தானுடைய உலகத்தில் பணக்காரராக ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தால் நமக்கு கவலைதான் மிஞ்சும். (மத். 6:19) பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருந்தால் கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுப்பது கஷ்டமாக இருக்கும் என்று இயேசுவும் சொன்னார். (மத். 13:18, 19, 22) சிலர் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அப்படி கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் ஏதாவது வியாதி வந்துவிடலாம். அதோடு, யெகோவாமீது இருக்கும் விசுவாசமும் குறைந்துவிடலாம். கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, நாம் எப்போதும் யெகோவாவையே நம்பி இருக்க வேண்டும். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:25) எனவே உங்களுக்கு கவலையாக இருக்கும்போது, யெகோவாவை சேவிக்கும் ஒருவரிடம்... அதுவும் உங்களைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரிடம்... மனம்விட்டு பேசுங்கள். ஒருவேளை உங்கள் பெற்றோரிடம், மணத்துணையிடம், நல்ல நண்பரிடம் நீங்கள் மனம்விட்டு பேசலாம். அப்போது, யெகோவாமீது விசுவாசம் வைக்கவும் அதிகம் கவலைப்படாமல் இருக்கவும் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

17. கவலையாக இருக்கும்போது யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார்?

17 யெகோவாவை தவிர வேறு யாராலும் நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான், “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று பவுல் சொன்னார். (பிலி. 4:6, 7) யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த அவர் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். சகோதர சகோதரிகள், மூப்பர்கள், உண்மையுள்ள அடிமை, தேவதூதர்கள், இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா உங்களுக்கு உதவி செய்வதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இப்படி செய்யும்போது, நீங்கள் கவலையிலேயே மூழ்கிவிட மாட்டீர்கள்.

18. யெகோவாவுடைய குணங்களை வெளிக்காட்ட யோசிக்கும் திறன் நமக்கு எப்படி உதவி செய்கிறது?

18 யெகோவாவுடைய குணங்களை வெளிகாட்ட, யோசிக்கும் திறன் நமக்கு எப்படி உதவி செய்கிறது? மற்றவர்களுடைய கஷ்டத்தைப் புரிந்துகொள்ளவும்... அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்து பார்க்கவும்... இந்தத் திறன் நமக்கு உதவி செய்கிறது. (1 தீ. 1:11; 1 யோ. 4:8) அதோடு, மற்றவர்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ளும்போது... நம்முடைய செயல்களால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது... கவலைப்படாமல் இருக்கும்போது... நாம் சந்தோஷமாக இருப்போம். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தில் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே நீங்கள் யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் குணங்களை வெளிக்காட்ட கடினமாக முயற்சி செய்யுங்கள்!—ரோ. 12:12.