யெகோவா கற்றுக்கொடுக்கும் விஷயங்களை ருசித்து மகிழ நாம் எல்லாரும் மாநாட்டுக்கு ஒன்றுகூடி வருவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! அதேசமயம், நம் சகோதர சகோதரிகளோடு உணவை பகிர்ந்துகொள்வது இன்னும் எந்தளவு சந்தோஷத்தைத் தருகிறது!

செப்டம்பர் 1919-ல் அமெரிக்காவிலுள்ள, ஒஹாயோ, சீடர் பாயிண்ட்டில் 8 நாட்களுக்கு ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், எதிர்பார்த்ததைவிட ஆயிரக்கணக்கானோர் வந்தார்கள். அங்கு வந்த கூட்டத்தைப் பார்த்து, ஓட்டலில் வேலை பார்த்தவர்கள் எல்லாரும் வேலையைவிட்டு போய்விட்டார்கள். ஓட்டல் மேனேஜருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால், உணவு பரிமாற உதவி செய்ய முடியுமா என்று அங்கே வந்திருந்த இளம் சகோதர சகோதரிகளிடம் அந்த மேனேஜர் கேட்டார். அதற்கு நிறைய பேர் முன்வந்தார்கள். அவர்களில், சாடி க்ரீன் என்ற சகோதரியும் ஒருவர். அவர் சொன்னார், “நான் இந்த மாதிரி உணவு பரிமாறுனதே இல்ல. ஆனா, எல்லாரோடயும் சேர்ந்து வேலை செஞ்சது ரொம்ப நல்லா இருந்தது.”

சியர்ரா லியோன், 1982

அதற்கு பிறகு, மாநாடு நடக்கும் இடத்திலேயே உணவு தயாரிக்கும் ஏற்பாடு ஆரம்பமானது. நிறைய வாலண்டியர்கள் அதற்கு உதவி செய்தார்கள். சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ததை தங்களுக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்தார்கள். யெகோவாவின் சேவையில் நல்ல இலக்குகளை வைக்க நிறைய இளைஞர்களுக்கு இது உதவியாக இருந்தது. அவர்களில் ஒருவர்தான், க்ளாடீஸ் போல்டன். 1937-ல் நடந்த ஒரு மாநாட்டில் அங்கிருந்த ‘கேன்டீனில்’ (canteen) அந்த சகோதரி சேவை செய்தார். அதைப் பற்றி இப்படி சொல்கிறார்: “மத்த இடத்துல இருந்து வந்த நிறைய சகோதர சகோதரிகளை சந்திச்சேன். அவங்களோட பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான், என்னாலயும் ஒரு பயனியர் ஆக முடியுங்கிற நம்பிக்கை எனக்கு வந்தது.”

மாநாட்டுக்கு வந்திருந்த ப்யூலா கோவீ என்ற சகோதரி சொன்னாங்க: “இந்த மாநாடு எந்த பிரச்சினையும் இல்லாம நல்லபடியா நடக்குதுனா, அதுக்கு காரணம் அங்க கடினமா வேலை செய்ற சகோதர சகோதரிகள்தான்.” ஆனால், மாநாட்டில் சேவை செய்வதில் நிறைய சவால்கள் இருந்தன. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டாஜர் ஸ்டேடியத்தில் 1969-ல் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு வந்த பிறகுதான், தன்னை மாநாட்டு கேன்டீன் ஊழியனாக நியமித்திருக்கிறார்கள் என்பது ஆன்ஜலோ மனேரா என்ற சகோதரருக்குத் தெரியவந்தது. “அதை கேட்டப்போ, எனக்கு அதிர்ச்சியா இருந்தது” என்று அவர் சொன்னார். ஏனென்றால், சமையல் அறைக்கு ‘கேஸ் பைப்பை’ (gas line) பொருத்துவதற்காக 400 மீட்டருக்கு (0.25 மைல்) ஒரு பள்ளம் தோண்ட வேண்டியிருந்தது!

ப்ராங்ஃபர்ட், ஜெர்மனி, 1951

1982-ல், சியர்ரா லியோனில் ஒரு மாநாடு நடந்தது. கடினமாக உழைத்த வாலண்டியர்கள், புல்லும் புதருமாக இருந்த இடத்தை முதலில் சுத்தம் செய்தார்கள். அதன் பிறகு, தங்களிடம் இருந்த பொருட்களை வைத்து கேன்டீனை கட்டினார்கள். 1951-ல், ஜெர்மனியில் இருக்கும் ப்ராங்ஃபர்டில் நடந்த மாநாட்டில் ஒரு ‘இன்ஜினை’ வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அது, 40 பாய்லர்களை (boilers) வைத்து உணவு சமைப்பதற்கு வசதியாக இருந்தது. அதனால், ஒரு மணிநேரத்தில் 30,000 பேருக்கு சாப்பாடு தயாரிக்க முடிந்தது. சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்த  576 வாலண்டியர்களுடைய வேலையை சுலபமாக்குவதற்காக மாநாட்டுக்கு வந்தவர்களே கையோடு ‘ஃபோர்க்கையும் ஸ்பூனையும்’ (fork and spoon) கொண்டுவந்தார்கள். மயன்மாரில் இருக்கும் யாங்கூனில் ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. அங்கு வந்த வெளிநாட்டு சகோதர சகோதரிகளை மனதில் வைத்து, காரம் குறைவாக போட்டு சமைத்தார்கள்.

“நின்னுட்டே சாப்பிடுறாங்க”

1950-ல் அமெரிக்காவில் ஒரு மாநாடு நடந்தது. சுட்டெரிக்கிற வெயிலில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டு இருந்த அனுபவத்தைப் பற்றி ஆனி போகன்ஸீ என்ற சகோதரி இப்படி சொன்னார்: “ஐரோப்பாவுல இருந்து கப்பல்ல வந்த 2 சகோதரிகள் அவங்களோட அனுபவத்தை பத்தி சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. அவங்க பேச்சுல நான் அப்படியே மூழ்கி போயிட்டேன்.” அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, யெகோவா அவர்களுக்கு எப்படி எல்லாம் உதவி செய்தார் என்பதைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “அந்த மாநாட்டுக்கு வந்தவங்கள்லயே அவங்க ரெண்டு பேரும்தான் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கணும். நீண்ட வரிசையும் சுட்டெரிக்கும் வெயிலும் அவங்களுக்கு கஷ்டமாவே தெரியல” என்று ஆனி சொன்னார்.

சியோல், கொரியா, 1963

பெரிய மாநாடுகளில், பெரிய பெரிய டென்டுகள் போட்டிருந்தார்கள். சகோதர சகோதரிகள் நின்று சாப்பிடுவதற்காக உயரமான ‘டேபிள்கள்’ இருந்தன. சீக்கிரமாக சாப்பிடவும், அடுத்தடுத்து மற்றவர்கள் சாப்பிடவும் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால்தான், உணவு இடைவேளையின் போதே அத்தனை பேராலும் சாப்பிட்டு முடிக்க முடிந்தது. இதைப் பார்த்த யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவர் இப்படி சொன்னார்: ‘எல்லாரும் நின்னுட்டே சாப்பிடுறாங்க. இவங்களை எல்லாம் பார்க்குறதுக்கு விநோதமா இருக்கே!’

மாநாடுகள் சீராக, ஒழுங்காக நடத்தப்பட்டது. வாலண்டியர்கள் திறமையாக வேலை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்து, ராணுவ அதிகாரிகளுக்கும் படைத்துறை சாராத அதிகாரிகளுக்கும் வியப்பாக இருந்தது. நியு யார்க்கில், யாங்கி ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு கேன்டீனை ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி பார்த்தார். அதுபோன்ற ஒரு மாநாட்டு கேன்டீனை பார்க்க சொல்லி, பிரிட்டன் போர் துறையை சேர்ந்த மேஜர் ஃபால்க்னரிடம் அவர் சொன்னார். அதனால் அவரும் அவருடைய மனைவியும் 1955-ல், இங்கிலாந்தில் (டுவிக்கென்ஹேமில்) நடந்த “வெற்றிசிறக்கும் அரசாங்கம்” என்ற மாநாட்டிற்கு வந்தார்கள். ‘இந்த கேன்டீன் இவ்ளோ சீராவும் ஒழுங்காவும் நடக்குதுனா, அதுக்கு காரணமே அவங்களுக்குள்ள இருக்கிற அன்புதான்’ என்று அவர் சொன்னார்.

பல பத்தாண்டுகளாக, மாநாட்டுக்கு வருபவர்கள் குறைவான விலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக நிறைய வாலண்டியர்கள் அதிக நேரம் வேலை செய்தார்கள். அதனால், நிறைய பேரால் மாநாட்டை சரியாக கவனிக்க முடியாமல் போனது. சிலரால் முழு மாநாட்டையும்கூட கவனிக்க முடியாமல் போனது. 1970-களின் இறுதியில், இந்த மாதிரியான உணவு ஏற்பாடுகள் எளிமையாக்கப்பட்டன. பிறகு 1995-ன் ஆரம்பத்திலிருந்து, மாநாட்டுக்கு வருபவர்களே தங்களுக்காக உணவு கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால், மாநாடுகளில் சாப்பாடு தயாரித்தவர்களால் மாநாட்டு நிகழ்ச்சியை நன்றாக கவனிக்க முடிந்தது. அதுமட்டும் இல்லாமல், சகோதர சகோதரிகளோடு நன்கு பேசி பழகவும் முடிந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

சகோதர சகோதரிகளுக்கு உணவு சமைப்பதற்காக கடினமாக வேலை செய்தவர்களைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்! அந்த வேலையில் ஈடுபட்ட சகோதரர்கள் சிலர் அந்த இனிமையான நாட்களை நினைத்து பார்த்து, அந்த ஏற்பாடு இப்போது இல்லையென்று ஏங்கலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்: நம் மாநாடுகளின் முக்கிய அம்சமாகிய அன்பை இன்றும் நம்மால் ருசிக்க முடிகிறது!—யோவா. 13:34, 35.

^ பாரா. 12 மாநாடுகளில், மற்ற இலாக்காக்களில் சேவை செய்ய வாலண்டியர்களுக்கு இன்றும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.