Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)  |  பிப்ரவரி 2015  

ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம்?

ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம்?

பிரசங்க வேலையைவிட ஒரு முக்கியமான வேலை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை! யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது நமக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். ஆனால் சிலசமயம், பயனியர்களும் பிரஸ்தாபிகளும் ஊழியத்தில் சோர்ந்து போய்விடலாம். முன்பிருந்த அளவுக்கு இப்போது ஆர்வம் இல்லாதது போல் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்?

ஊழியத்தில் நிறைய வீடுகள் பூட்டப்பட்டிருக்கலாம். சிலசமயம் வீட்டில் ஆள் இருந்தாலும் நாம் சொல்கிற செய்தியை கேட்க அவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இன்னும் சிலர் நம்மீது எரிந்துவிழலாம். இன்னொரு பக்கம், நம் செய்தியைக் கேட்பதற்கு நிறையப் பேர் இருந்தாலும் அவர்கள் எல்லாருக்கும் நற்செய்தியை எப்படி சொல்லி முடிப்பது என்று நாம் யோசிக்கலாம். சிலர், பல வருடங்களாக ஊழியம் செய்துகொண்டு இருக்கலாம், ஆனால், முடிவு இன்னும் வரவே இல்லை என்று நினைத்து சோர்ந்து போய்விடலாம்.

இந்த மாதிரி சவால்கள் வருவது சகஜம்தான். ஏனென்றால் இந்த உலகம் சாத்தானுடைய கையில்தான் இருக்கிறது. அவனை ‘பொல்லாதவன்’ என்று பைபிள் சொல்கிறது.—1 யோ. 5:19.

ஊழியத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சரி, கவலைப்படாதீர்கள். யெகோவா எப்போதும் உங்களோடுகூட இருப்பார். ஆனால், ஊழியத்தில் ஆர்வமாக ஈடுபட நீங்களும் சில விஷயங்களை செய்யலாம். அது என்ன?

புதிய பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்யுங்கள்

ஒவ்வொரு வருடமும் நிறையப் பேர் ஞானஸ்நானம் எடுத்து நம் அமைப்பிற்குள் வருகிறார்கள். அனுபவம் உள்ள பிரஸ்தாபிகளிடம் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள். நீங்கள் அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியா? அப்படியென்றால், புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு ஊழியத்தில் எவ்வளவு விஷயங்களை உங்களால் கற்றுக்கொடுக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்! அப்படி செய்யும்போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

சீடர்கள் திறமையாக ஊழியம் செய்வதற்காக இயேசுவும் அவர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்; அதை எப்படி செய்ய வேண்டுமென்று அவரே செய்தும் காட்டினார். (லூக். 8:1) இன்று நாமும்கூட, அனுபவமில்லாத பிரஸ்தாபிகளுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஊழியத்தை திறமையாக செய்ய முடியும்.

 அனுபவமில்லாத பிரஸ்தாபிகள் ஊழியத்திற்கு போனால் தானாகவே திறமைகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது. நல்ல அனுபவமுள்ள ஒருவர் அவர்களுக்கு அன்பாக, கனிவாக சொல்லிக்கொடுத்தால்தான் அவர்களால் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (1) ஊழியத்தில் என்ன பேசலாம் என்று அவர்களோடு சேர்ந்து தயாரியுங்கள், அதை அவர்களோடு பேசியும் பாருங்கள். (2) ஒருவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள். (3) பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஊழியத்தில் கொடுக்க சொல்லிக்கொடுங்கள். (4)  மறுசந்திப்பை எப்படி செய்யலாம், (5) பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள். அனுபவமுள்ள பிரஸ்தாபியுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்போது அவர்களிடமிருந்து புதிய பிரஸ்தாபிகள் நிறைய கற்றுக்கொள்வார்கள். அப்போது அவர்களும் ஊழியத்தை திறமையாக செய்வார்கள். (லூக். 6:40) அனுபவமுள்ள ஒருவரோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது புதிய பிரஸ்தாபிகளுக்கு தைரியமாக இருக்கும். பேசுவதற்கு தயங்கும்போது அவர்கள் உதவி செய்வார்கள் என்ற தெம்பு கிடைக்கும். அடிக்கடி நீங்கள் அவர்களை பாராட்டுவதும், தேவைப்படும்போது ஆலோசனை கொடுப்பதும் அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.—பிர. 4:9, 10.

உங்களோடு ஊழியம் செய்கிறவர்களிடம் உற்சாகமாக பேசுங்கள்

ஊழியத்தில் நாம் எவ்வளவு நன்றாகப் பேசினாலும் சிலசமயம் மக்கள் நம் செய்தியை கேட்க மாட்டார்கள். அதை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுடன் ஊழியம் செய்கிறவர்களோடு சந்தோஷமாக பேசுங்கள், அது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். அதனால்தான், இயேசு அவருடைய சீடர்களை ஊழியத்திற்கு “இரண்டிரண்டு பேராக” அனுப்பினார். (லூக். 10:1) இப்படி ஊழியம் செய்ததால் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த முடிந்தது. நாமும் நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற” முடியும்.—ரோ. 1:12.

நீங்கள் இரண்டு பேரும் எதை பற்றி பேசலாம்? உங்கள் இரண்டு பேருக்கும் ஊழியத்தில் ஏதாவது உற்சாகமான அனுபவம் கிடைத்திருக்கலாம்... தனிப்பட்ட படிப்பிலோ குடும்ப வழிபாட்டிலோ சுவாரஸ்யமான ஒரு குறிப்பை பற்றி படித்திருக்கலாம்... கூட்டத்தில் சொன்ன ஒரு விஷயம் உங்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கலாம்... இதை பற்றி எல்லாம் நீங்கள் இரண்டு பேரும் பேசலாம். ரொம்ப பழக்கம் இல்லாத ஒரு பிரஸ்தாபியோடு நீங்கள் ஊழியம் செய்கிறபோது, அவர்கள் எப்படி யெகோவாவின் சாட்சியாக ஆனார்கள் என்று கேட்கலாம். யெகோவாவின் அமைப்புதான் உண்மையான அமைப்பு என்று அவர்கள் எதனால் நம்பினார்கள் என்று கேட்கலாம். யெகோவாவின் சேவையில் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தை பற்றியோ அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்ல அனுபவம் இருந்தால் அதை பற்றியோ சொல்ல சொல்லலாம். உங்களுடைய அனுபவத்தையும் நீங்கள் சொல்லலாம். ஊழியத்தில் மக்கள் நற்செய்தியை கேட்கவில்லை என்றாலும் நீங்கள் இரண்டு பேரும் இப்படி பேசும்போது, ‘ஒருவரையொருவர் பலப்படுத்த’ முடியும்.—1 தெ. 5:11.

நன்றாக ஆராய்ச்சி செய்து படியுங்கள்

ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்க வேண்டும். “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நாம் படிப்பதற்கு நிறைய விஷயங்களை கொடுக்கிறார்கள். (மத். 24:45)  அதனால், தனிப்பட்ட படிப்பில் படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் உங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ‘பிரசங்க வேலை ஏன் ரொம்ப முக்கியம்?’ என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அது ஏன் முக்கியம் என்பதற்கு சில காரணங்களை, “ஊழியத்தை ஏன் மும்முரமாக செய்ய வேண்டும்?” என்ற பெட்டியில் பாருங்கள்.

இந்த காரணங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். ஊழியத்தை இன்னும் ஆர்வமாக செய்ய இது உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் ஒருவேளை இப்படி செய்துப் பாருங்கள்: பிரசங்க வேலை ஏன் ரொம்ப முக்கியம் என்பதற்கு அந்தப் பெட்டியில் இருக்கிற காரணங்களைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கிறது என்று பாருங்கள். அதற்கு அடிப்படையாக இருக்கிற பைபிள் வசனங்களையும் கண்டுபிடியுங்கள். அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் ஊழியத்தில் இன்னும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள்.

அமைப்பு கொடுக்கிற ஆலோசனைக்குக் கீழ்ப்படியுங்கள்

ஊழியத்தை இன்னும் நன்றாக செய்ய நம் அமைப்பு நிறைய ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதோடு கடிதம் மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் பிரசங்கிக்கலாம் என்று ஆலோசனை கொடுக்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், வியாபார இடங்களில் ஊழியம் செய்யலாம், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். முடிந்தால், அதிகமாக ஊழியம் செய்யாத இடங்களுக்குப் போய் ஊழியம் செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மாதிரி வித்தியாசமான விதங்களில் நீங்கள் ஊழியம் செய்திருக்கிறீர்களா? நிறையப் பேர் அப்படி செய்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. இப்போது மூன்று பேருடைய அனுபவத்தை பார்க்கலாம்.

பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை பற்றி நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த ஆலோசனையை செய்து பார்க்கலாம் என்று ஏப்ரல் என்ற சகோதரி முடிவு செய்தார். அவரோடு வேலை செய்கிற மூன்று பேரிடம் பைபிள் படிப்பை பற்றி சொன்னபோது அவர்கள் மூன்று பேருமே பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார்கள், கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார்கள். சகோதரி ஏப்ரலுக்கு ஒரே சந்தோஷம்!

நம் பத்திரிகையில் வருகிற சில கட்டுரைகள் யாருக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து  அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நம் அமைப்பு சொல்லியிருந்தார்கள். ஒருசமயம் விழித்தெழு! பத்திரிகையில் வண்டி டயர்களை (tyre) பற்றி ஒரு கட்டுரை வந்தது. அந்த பத்திரிகையை அமெரிக்காவில் இருக்கிற ஒரு வட்டாரக் கண்காணி டயர் கம்பனி மேனேஜர்கள் நிறையப் பேருக்கு கொடுத்தார். அதற்குப் பிறகு அவரும் அவருடைய மனைவியும் “டாக்டர்களை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்” (ஆங்கிலம்) என்ற கட்டுரையை 100-க்கும் அதிகமான கிளினிக்குகளில் (clinic) கொடுத்தார்கள். அதைப் பற்றி அந்த வட்டாரக் கண்காணி சொல்கிறார்: ‘அவங்ககிட்ட பத்திரிகைகளை கொடுத்து பேசுறது ரொம்ப சுலபமா இருந்தது. நல்லா பேசி பழகுனதுக்கு அப்புறம் அவங்ககிட்ட மறுசந்திப்பு செய்றதும் ரொம்ப சுலபமா இருந்தது.’

ஃபோன் மூலமாக சாட்சி கொடுக்க சொல்லியும் நம் அமைப்பு அடிக்கடி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு நன்றி சொல்லி ஜூடி என்ற சகோதரி நம் தலைமை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். 86 வயதான அவருடைய அம்மாவுக்கு நிறைய உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவர் ஃபோன் மூலமாக சாட்சி கொடுக்கிறார். இப்போது 92 வயதான ஒரு அம்மாவுக்கு அவர் பைபிள் படிப்பு நடத்துகிறார் என்று ஜூடி அந்த கடிதத்தில் சொல்லி இருந்தார்.

நம் பிரசுரங்களில் வருகிற ஆலோசனைப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நீங்களும் அந்த ஆலோசனைப்படி செய்து பாருங்களேன். அப்படி செய்யும்போது, ஊழியத்தில் உங்களுக்கு இருக்கிற ஆர்வமும் சந்தோஷமும் குறையவே குறையாது!

எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்

நாம் நன்றாக ஊழியம் செய்கிறோம் என்று எதை வைத்து சொல்லலாம்? நிறையப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் கொடுப்பதை வைத்து... நிறைய பைபிள் படிப்புகளை எடுப்பதை வைத்து... அவர்களில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதை வைத்து... நன்றாக ஊழியம் செய்கிறோம் என்று சொல்ல முடியாது. பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எல்லாரிடமும் பிரசங்கித்தார். ஆனால், எத்தனை பேர் அவர் சொன்னதை கேட்டு யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள்? ஒருவர்கூட இல்லை! இருந்தாலும் அவர் வெற்றிகரமாக ஊழியம் செய்தார் என்று சொல்ல முடியும். ஏனென்றால், அவர் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். நாமும் நோவாவைப் போல் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தால் வெற்றிகரமாக ஊழியம் செய்கிறோம் என்று சொல்ல முடியும்.—1 கொ. 4:2.

ஊழியத்தில் நமக்கு இருக்கும் ஆர்வத்தை அதிகமாக்க வேண்டுமென்றால் எட்ட முடிந்த இலக்குகளை வைக்க வேண்டும். எப்படிப்பட்ட இலக்குகளை வைக்கலாம் என்று தெரிந்துகொள்ள “எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஊழியத்தை நன்றாக செய்வதற்கு உதவி செய்ய சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் வைத்த இலக்குகளை அடையும்போது நற்செய்தியை பிரசங்கிக்க உங்களால் முடிந்ததை செய்திருக்கிறீர்கள் என்ற திருப்தியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கும்.

நற்செய்தியை பிரசங்கிப்பது கஷ்டம்தான். இருந்தாலும், ஊழியத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறையாமல் இருக்க, உங்களோடு ஊழியம் செய்கிறவர்களிடம் உற்சாகமாக பேசுங்கள்... நன்றாக ஆராய்ச்சி செய்து படியுங்கள்... நம் அமைப்பு கொடுக்கிற ஆலோசனைக்குக் கீழ்ப்படியுங்கள்... எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள். இது எல்லாவற்றையும்விட யெகோவாவே உங்களுக்கு இந்த வேலையை கொடுத்திருக்கிறார் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். அவருக்கு சாட்சியாக இருப்பது, எவ்வளவு பெரிய பாக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்! (ஏசா. 43:10) ஊழியத்தில் உங்களுக்கு இருக்கிற ஆர்வம் குறையாமல் இருக்க முயற்சி செய்தீர்கள் என்றால் அளவில்லாத ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.