Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

யெகோவா சொல்வதை எப்போதும் கேளுங்கள்

யெகோவா சொல்வதை எப்போதும் கேளுங்கள்

“வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”—ஏசா. 30:21.

1, 2. யெகோவா தம் ஊழியர்களை எப்படி வழிநடத்துகிறார்?

யெகோவா அவருடைய மக்களைப் பல வழிகளில் வழிநடத்தியிருக்கிறார். தேவதூதர்கள், தரிசனங்கள், கனவுகள் மூலமாக வழிநடத்தியிருக்கிறார். (எண். 7:89; எசே. 1:1; தானி. 2:19) சில சமயங்களில், மனிதர்களையும் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

2 இன்று நம்மை வழிநடத்த, பைபிளையும் தம் சக்தியையும் சபையையும் யெகோவா பயன்படுத்துகிறார். (அப். 9:31; 15:28; 2 தீ. 3:16, 17) அவர் எப்போதும் தெளிவான வழிநடத்துதலைக் கொடுக்கிறார். “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சரியான பாதையைக் காட்டுகிறார். (ஏசா. 30:21) நம்மை வழிநடத்த இயேசுவையும் பயன்படுத்துகிறார். “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாக இயேசு சபையை வழிநடத்துகிறார். (மத். 24:45) இந்த வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்போதுதான் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.—எபி. 5:9.

3. நாம் எப்படியெல்லாம் தவறாக வழிநடத்தப்படலாம்? (ஆரம்பப் படம்.)

3 யெகோவா சொல்வதைக் கேட்டால் நாம் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம். இது சாத்தானுக்கும் நன்றாகத் தெரியும். அதனால், அவன் நம்மைத் தவறாக வழிநடத்தப் பார்க்கிறான். யெகோவா சொல்வதைக் கேட்க விடாமல், நம் இருதயமும் நம்மைத் தவறாக வழிநடத்தலாம். (எரே. 17:9) அப்படியென்றால், யெகோவா சொல்வதைக் கேட்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். எந்தச் சூழ்நிலையிலும் யெகோவாவைவிட்டு விலகிப்போகாமல்  இருப்பதற்கு, அவர் சொல்வதைக் கேட்பதும் இடைவிடாமல் ஜெபம் செய்வதும் எப்படி உதவும் என்பதையும் பார்ப்போம்.

சாத்தானின் வலையில் சிக்கிவிடாதீர்கள்!

4. சாத்தான் எப்படி மக்களின் மனதைக் கெடுக்கிறான்?

4 சாத்தான், பொய்யான கருத்துகளைப் பரப்பி மக்களின் மனதைக் கெடுக்கப் பார்க்கிறான். (1 யோவான் 5:19-ஐ வாசியுங்கள்.) செய்தித்தாள், புத்தகம், பத்திரிகை, ரேடியோ, டிவி, இன்டர்நெட் என எல்லாவற்றிலும் இன்று தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் சில தகவல்கள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும் அவை யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யத் தூண்டுகின்றன. (எரே. 2:13) உதாரணமாக, ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்துகொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று மீடியாக்கள் சொல்கின்றன. அதனால், அதைப் பற்றி பைபிள் சொல்வது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.—1 கொ. 6:9, 10.

5. சாத்தானுடைய வலையில் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

5 சாத்தானுடைய வலையில் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லது எது கெட்டது எது என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அதற்கு, யெகோவாவுடைய ‘வழிகாட்டுதலின்படி நடக்க’ வேண்டும். (சங். 119:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) உண்மை எது பொய் எது என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவும். (நீதி. 23:23) ‘யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும்’ நம்மை வழிநடத்தும் என்று இயேசு சொன்னார். (மத். 4:4) பைபிளில் இருக்கும் சட்டங்களின் ஆழமான கருத்துகளைப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். யோசேப்பின் உதாரணத்தைக் கவனியுங்கள். பாலியல் முறைகேட்டைப் பற்றி அவருடைய காலத்தில் யெகோவா எந்தச் சட்டமும் கொடுக்கவில்லை. இருந்தாலும், பாலியல் முறைகேடு கடவுளுக்குப் பிடிக்காது என்பதைப் புரிந்துகொண்டு, போத்திபாரின் மனைவியுடைய ஆசைக்கு அடிபணிய மறுத்தார். கடவுளுக்குப் பிடிக்காத விஷயங்களை அவர் யோசித்துக்கூட பார்க்கவில்லை. (ஆதியாகமம் 39:7-9-ஐ வாசியுங்கள்.) போத்திபாரின் மனைவி அவரைத் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்தபோதிலும் அவர் பாவம் செய்யவில்லை. சாத்தான் எத்தனை தடவை முயற்சி செய்தாலும், அவனுடைய வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது. யெகோவா சொல்வதைக் கேட்க வேண்டும்.

6, 7. யெகோவா சொல்வதைக் கேட்பது ஏன் முக்கியம்?

6 இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மதங்கள் இருக்கின்றன. அவற்றின் போதனைகள் குழப்பமாக இருப்பதால், உண்மை மதம் எதுவென்று கண்டுபிடிப்பது கஷ்டம் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவா சொல்வதைக் கேட்டால் உண்மையான மதத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும். யெகோவா சொல்வதைக் கேட்கப் போகிறோமா? அல்லது சாத்தான் சொல்வதைக் கேட்கப் போகிறோமா? யெகோவா நம்மை வழிநடத்த இயேசுவை மேய்ப்பராக நியமித்திருக்கிறார். ஒரு ஆடு தன் மேய்ப்பனுடைய குரலை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும். அதேபோல், நம் மேய்ப்பரான இயேசுவுடைய வழிநடத்துதலை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.யோவான் 10:3-5-ஐ வாசியுங்கள்.

7 “நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற விஷயங்களுக்குக்  கவனம் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற். 4:24) யெகோவா நமக்கு தெளிவான வழிநடத்துதல்களைக் கொடுக்கிறார். ஆனால், யெகோவா சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நம் பொறுப்பு. இல்லையென்றால், நமக்கே தெரியாமல் யெகோவா சொல்வதை அலட்சியம் செய்துவிட்டு, சாத்தான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்துவிடுவோம். ஆகவே இசை, வீடியோ, டிவி, புத்தகம், நண்பர், ஆசிரியர் என யாருமே, எதுவுமே உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.—கொலோ. 2:8.

8. (அ) இருதயம் நம்மை எப்படித் தவறாக வழிநடத்தலாம்? (ஆ) நாம் எதை அசட்டை செய்யக் கூடாது, ஏன்?

8 நாம் எல்லோருமே தவறு செய்யும் இயல்புள்ளவர்கள் என்பதால், நம்முடைய தவறான ஆசைகளை சாத்தான் தூண்டிவிடுகிறான். அதனால், நாம் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிட வாய்ப்பிருக்கிறது. (யோவா. 8:44-47) உதாரணத்திற்கு, நாம் ஜெபம் செய்வதை நிறுத்தியிருக்கலாம்; அடிக்கடி கூட்டங்களுக்குப் போவதையும் நிறுத்தியிருக்கலாம்; நம்முடைய ஊழிய மணிநேரங்கள் குறைந்திருக்கலாம். இதெல்லாம், இருதயம் நம்மைத் தவறாக வழிநடத்துவதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகளை நாம் அசட்டை செய்யக் கூடாது. அப்படி அசட்டை செய்தால், யெகோவா சொல்வதைக் கேட்காமல் போய்விடுவோம்; நம் மனதில் கெட்ட ஆசைகள் வளர ஆரம்பித்துவிடும்; கடைசியில் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோம். ஆனால், ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் யெகோவாவைவிட்டு விலகிப்போகாமல் இருப்போம். (ரோ. 7:15) விசுவாசதுரோகக் கருத்துகளும் யெகோவாவைவிட்டு நம்மைப் பிரித்துவிடும். யெகோவா சொல்வதைக் கவனமாகக் கேட்டால், விசுவாசதுரோகிகளின் கருத்துகளுக்குக் கவனம் செலுத்த மாட்டோம்.—நீதி. 11:9.

9. நாம் ஏன் தவறான ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்?

9 நமக்கு ஒரு வியாதி இருப்பது தெரியவந்தால் அதை உடனடியாகக் குணப்படுத்த வேண்டும். அதேபோல், நம்மிடம் தவறான ஆசைகள் இருந்தால், உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் ‘பிசாசின் விருப்பத்திற்கேற்ப நடக்க’ ஆரம்பித்துவிடுவோம். (2 தீ. 2:26) ஒருவேளை, யெகோவாவுக்குப் பிடிக்காத ஆசையோ எண்ணமோ நம்மிடம் இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வது? உடனடியாக மனந்திரும்ப வேண்டும்; மனத்தாழ்மையோடு கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். (ஏசா. 44:22) நாம் ஏதாவது தவறு செய்துவிட்டு மனந்திரும்பினாலும், அதன் பின்விளைவுகளைத் தவிர்க்க முடியாது. அதனால், தவறான ஆசைகள் மனதில் வரும்போது, முளையிலேயே அதைக் கிள்ளி எறிய வேண்டும்.

சாத்தானுடைய வலையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? (பாராக்கள் 4-9)

பெருமையும் பேராசையும்

10, 11. (அ) பெருமைபிடித்த ஒருவர் எப்படி நடந்துகொள்வார்? (ஆ) கோராகு, தாத்தான், அபிராமிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

10 யெகோவாவிடமிருந்து விலகிப்போவதற்கு  சில நேரங்களில் நாமே காரணமாகிவிடலாம். உதாரணமாக, நம் இருதயத்தில் பெருமையோ பேராசையோ வந்துவிட்டால் யெகோவாவைவிட்டு விலகிப்போய்விடுவோம். மிகப்பெரிய தவறு செய்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. பெருமையுள்ள ஒருவர், ‘எனக்குதான் எல்லாம் தெரியும்,’ ‘நினைச்சதை செய்ய எனக்கு உரிமை இருக்கு’ என்று நினைக்கலாம். ‘நல்லது எது கெட்டது எதுனு மத்தவங்க எனக்கு சொல்ல வேண்டியதில்லை’ என்றும் நினைக்கலாம். சகோதர சகோதரிகள், மூப்பர்கள், அமைப்பும்கூட அவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை என நினைக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் யெகோவா சொல்வதைக் கேட்க மாட்டார்; யெகோவாவைவிட்டு ரொம்ப தூரம் விலகிப்போய்விடுவார்.

11 எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசேயையும் ஆரோனையும் யெகோவா நியமித்தார். ஆனால், பெருமைப்பிடித்த கோராகும் தாத்தானும் அபிராமும் தங்கள் இஷ்டப்படி கடவுளை வணங்க நினைத்தார்கள்; மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள். அதனால், யெகோவா அவர்களை அழித்துப்போட்டார். (எண். 26:8-10) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவை எதிர்க்கும் ஆட்கள் அழிந்துபோவார்கள். அதனால்தான், “அழிவுக்கு முன்னானது அகந்தை” என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 16:18; ஏசா. 13:11.

12, 13. (அ) பேராசை பெருநஷ்டம் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள். (ஆ) தவறான ஆசையை வளரவிட்டால் என்ன ஆகும்?

12 பேராசை பேராபத்தை ஏற்படுத்தும். பேராசைப்பிடித்த ஒருவர் வரம்புமீறி ஆசைப்படுவார், தனக்கு உரிமையில்லாத பொருள்களை அடைய நினைப்பார். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். நாகமான் என்ற சீரிய நாட்டுப் படைத்தலைவனுக்கு குஷ்டரோகம் இருந்தது. கடவுளுடைய தீர்க்கதரிசியான எலிசா அவரைக் குணப்படுத்தினார். நாகமான் எலிசாவுக்குப் பரிசுகளைக் கொடுத்தார். எலிசா அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அவருடைய வேலைக்காரன் கேயாசி அந்தப் பரிசுகள்மீது ஆசைப்பட்டான்; எலிசாவுக்குத் தெரியாமல், நாகமானிடம் பொய் சொல்லி அதையெல்லாம் வாங்கிக்கொண்டான். பேராசைப்பிடித்த கேயாசிக்கு என்ன ஆனது? நாகமானின் குஷ்டரோகம் அவனுக்கு வந்தது.—2 இரா. 5:20-27.

13 ஆரம்பத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்குப் பேராசைப்பட ஆரம்பிக்கலாம். கடைசியில் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்யும் அளவுக்குப் போய்விடலாம். ஆகானின் உதாரணத்தைக் கவனியுங்கள். “ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன். அவற்றின்மீது ஆசைவைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன்” என்று ஆகான் சொன்னான். இந்தக் கெட்ட ஆசையை ஆகான் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். ஆனால், அவன் அதை வளரவிட்டான். அந்தப் பொருள்களைத் திருடி, தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான். அவன் செய்தத் தவறை யெகோவா வெட்டவெளிச்சமாக்கினார். அவனும் அவனுடைய குடும்பத்தாரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். (யோசு. 7:11, 21, 24, 25, பொது மொழிபெயர்ப்பு) நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால் ஆகானைப்போல ஆகிவிடுவோம். அதனால்தான், “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 12:15) ஒழுக்கக்கேடும் ஒருவிதத்தில் பேராசைதான். சில நேரங்களில் நமக்குத் தவறான ஆசைகள் வர வாய்ப்பிருக்கிறது. அந்த ஆசையை வளரவிட்டால் பெரிய பாவத்தில் விழுந்துவிடுவோம்.யாக்கோபு 1:14, 15-ஐ வாசியுங்கள்.

14. பெருமையோ பேராசையோ நம்மைத் தவறு செய்யத் தூண்டினால் என்ன செய்ய வேண்டும்?

14 பெருமையும் பேராசையும் நம்மைப் படுகுழியில் தள்ளிவிடும். தவறு செய்வதால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்தால், யெகோவா சொல்வதைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்வோம். (உபா. 32:29) சரியானதைச் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் தவறு செய்வதால் வரும் ஆபத்துகளைப் பற்றியும் பைபிளில் யெகோவா தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பெருமையோ பேராசையோ நம்மைத் தவறு செய்யத் தூண்டலாம். ஆனால், நாம் செய்யும் தவறு நம்மையும் நம்மை நேசிக்கிறவர்களையும் எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக, யெகோவாவோடு  இருக்கும் நம் பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்

15. இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

15 நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (சங். 1:1-3) அதற்காக, நமக்குத் தேவையான வழிநடத்துதலை, சரியான நேரத்தில் கொடுக்கிறார். (எபிரெயர் 4:16-ஐ வாசியுங்கள்.) இயேசுவுக்கே யெகோவாவுடைய வழிநடத்துதல் தேவைப்பட்டது. அவர் இடைவிடாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். யெகோவா அவரை அற்புதமான விதங்களில் வழிநடத்தினார். இயேசுவைப் பலப்படுத்த தேவதூதர்களை அனுப்பினார்; தம்முடைய சக்தியை அளித்தார்; 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்க உதவினார். தம்முடைய அன்பையும் ஆதரவையும் காட்ட யெகோவாவே வானத்திலிருந்து பேசினார். (மத். 3:17; 17:5; மாற். 1:12, 13; லூக். 6:12, 13; யோவா. 12:28) இயேசுவைப் போலவே நாமும் இடைவிடாமல் ஜெபம் செய்ய வேண்டும், மனந்திறந்து யெகோவாவிடம் பேச வேண்டும். (சங். 62:7, 8; எபி. 5:7) யெகோவாவோடு நெருங்கி இருக்கவும் அவருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வாழவும் ஜெபம் நமக்கு உதவும்.

16. யெகோவா நம்மை எப்படி வழிநடத்துகிறார்?

16 வாழ்க்கைக்குத் தேவையான நிறைய ஆலோசனைகளை யெகோவா கொடுக்கிறார். ஆனால், அதையெல்லாம் நாம் கேட்க வேண்டும் என்று அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. அவருடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்தால், அதைத் தாராளமாகக் கொடுப்பார். (லூக்கா 11:10-13-ஐ வாசியுங்கள்.) ஜெபம் செய்தால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும். உதாரணமாக, பாலியல் முறைகேட்டைத் தவிர்க்க உதவும்படி ஜெபம் செய்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கிறீர்கள். அப்படிச் செய்தால், யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா? யெகோவாவுடைய உதவி தேவையென்றால், அவருடைய சக்தி செயல்படும் இடத்தில் நாம் இருக்க வேண்டும். யெகோவாவுடைய சக்தி சபைக் கூட்டங்களில் செயல்படுகிறது. கூட்டங்களுக்குத் தொடர்ந்து போனால் அவருடைய உதவியைப் பெற முடியும். அதோடு, “நீங்கள் கேட்கிற விதத்திற்குக் கவனம் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 8:18) எனவே, நாம் கூட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்த நிறைய பேர், பெரிய ஆபத்துகளைத் தவிர்த்திருக்கிறார்கள்; மனதில் தவறான ஆசை துளிர்விடும்போதே அதைச் சரிசெய்திருக்கிறார்கள்.—சங். 73:12-17; 143:10.

தொடர்ந்து யெகோவா சொல்வதைக் கேளுங்கள்

17. நம் இருதயம் சொல்வதைக் கேட்டால் என்ன நடக்கும்?

17 தாவீது ராஜாவிடமிருந்து நாம் ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். யெகோவா சொல்வதைக் கேட்ட வரைக்கும் அவருக்கு யெகோவா உதவினார். உதாரணத்திற்கு, தாவீது தன் இளம் வயதில் ராட்சதனான கோலியாத்தைக் கொன்றார். பிறகு, போர்வீரனாக ஆனார், இஸ்ரவேலுக்கு ராஜாவாகவும் ஆனார். ஒரு நல்ல ராஜாவாக அவர் தேசத்தைப் பாதுகாத்தார், மக்களை வழிநடத்தினார். ஆனால், கொஞ்ச காலத்திற்குப் பிறகு யெகோவா சொல்வதைக் கேட்காமல், தன் இருதயம் சொல்வதைக் கேட்டார். பத்சேபாளோடு தவறான உறவு கொண்டார். அதை மறைக்க, அவளுடைய கணவனைக் கொலை செய்தார். ஆனால், தாவீதுடைய தவறை யெகோவா சுட்டிக்காட்டியபோது, மனத்தாழ்மையோடு யெகோவா சொல்வதைக் கேட்டார்; தன் தவறை ஒத்துக்கொண்டார்; மீண்டும் யெகோவாவுடைய நண்பரானார்.—சங். 51:4, 6, 10, 11.

18. யெகோவா சொல்வதை எப்போதும் கேட்க எது உதவும்?

18 நாம் தவறே செய்ய மாட்டோம் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. (1 கொ. 10:12) நம்மை நாமே வழிநடத்திக்கொள்ள முடியாது என்று பைபிள் சொல்கிறது; நாம் யெகோவா சொல்வதைக் கேட்கவில்லை என்றால், சாத்தான் சொல்வதைத்தான் கேட்போம். (எரே. 10:23) அதனால், யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபம் செய்து, அவருடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்க வேண்டும். யெகோவா சொல்வதை எப்போதுமே கேட்கபோமாக!