Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)  |  ஜூலை 2014  

“எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

“எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

“அதற்கு [இயேசு] . . . பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்றார்.”—அப். 1:7, 8.

1, 2. (அ) யெகோவாவின் மிகச் சிறந்த சாட்சி யார்? (ஆ) இயேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன, அவர் எப்படி தம் பெயருக்கேற்ப வாழ்ந்தார்?

“சத்தியத்திற்குச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தேன்” என்று தைரியமாக யூதேயாவிலிருந்த ரோம ஆளுநரான பிலாத்துவிடம் இயேசு சொன்னார். (யோவான் 18:33-37-ஐ வாசியுங்கள்.) இப்படித் தைரியமாக சாட்சி கொடுத்ததைப் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு பவுல் குறிப்பிட்டார்: ‘பொந்தியு பிலாத்துவுக்குமுன் [இயேசு] சிறப்பாகச் சாட்சி கொடுத்தார்.’ (1 தீ. 6:13) நாம் சாத்தானுடைய பொல்லாத உலகில் வாழ்கிறோம். அதனால், தொடர்ந்து சாட்சி கொடுக்க நமக்குத் தைரியம் தேவை. “உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியாக” இருந்த இயேசுவை நாம் பின்பற்ற வேண்டும்.—வெளி. 3:14.

2 இயேசு யூத வம்சத்தில் வந்ததால், பிறப்பிலிருந்தே யெகோவாவுக்குச் சாட்சியாக இருந்தார். (ஏசா. 43:10) யெகோவாவுக்கு சாட்சியாக இருந்தவர்களிலேயே இயேசுதான் மிகச் சிறந்த சாட்சி. மரியாள் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தேவதூதர் யோசேப்பிடம் இப்படிச் சொன்னார்: “அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்; ஏனென்றால், அவர் தமது மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பார்.” (மத். 1:20, 21) ஜெஷூவா என்ற எபிரெய பெயரிலிருந்துதான் இயேசு என்ற பெயர் வந்ததாக நிறைய பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அதன் அர்த்தம் “யெகோவாவே மீட்பர்.” இந்தப் பெயருக்கு ஏற்ப இயேசு நடந்துகொண்டார்; ‘இஸ்ரவேல் வீட்டாரில் வழிதவறிப்போன ஆடுகள்’ யெகோவாவிடம் திரும்பி வர இயேசு  உதவினார். (மத். 10:6; 15:24; லூக். 19:10) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மும்முரமாகச் சாட்சி கொடுத்தார். மாற்கு இப்படி எழுதினார்: “இயேசு கலிலேயாவுக்குச் சென்று கடவுளைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, ‘குறித்த காலம் வந்துவிட்டது, கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது; மக்களே, மனந்திரும்பி நற்செய்தியில் விசுவாசம் வையுங்கள்’ என்றார்.” (மாற். 1:14, 15) இயேசு தைரியமாகப் பிரசங்கித்தார், யூத மதத் தலைவர்களின் முகத்திரையைக் கிழித்தார். அவரை அவர்கள் கழுமரத்தில் அறைந்து கொன்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.—மாற். 11:17, 18; 15:1-15.

‘கடவுளுடைய மகத்தான செயல்கள்’

3. இயேசு இறந்த மூன்றாம் நாள் என்ன நடந்தது?

3 இயேசு இறந்த மூன்றாம் நாளில் யெகோவா அவரைப் பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழுப்பினார். (1 பே. 3:18) இயேசு உயிர்த்தெழுந்ததற்குச் சாட்சியாகத் தம்முடைய சீடர்களுக்குக் காட்சி அளித்தார்; உயிர்த்தெழுந்த அதே நாளில் ஐந்து முறை காட்சி அளித்தார்.—மத். 28:8-10; லூக். 24:13-16, 30-36; யோவா. 20:11-18.

4. ஐந்தாவது முறை இயேசு காட்சி அளித்தபோது என்ன நடந்தது, சீடர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்?

4 ஐந்தாவது முறை இயேசு காட்சி அளித்தபோது அங்கு அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் இருந்தார்கள். அப்போது, “வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தார்.” இதன்மூலம், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அந்த விசேஷ நாளின் முடிவில் அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையைப் பற்றி இயேசு சொன்னார்: “பாவ மன்னிப்புப் பெற [இயேசுவுடைய] பெயரில் மனந்திரும்பும்படி எல்லாத் தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படும் எனவும் எழுதப்பட்டிருக்கிறது; எருசலேம் தொடங்கி எல்லா இடங்களிலும் இவற்றுக்கு நீங்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும்.”லூக். 24:44-48.

5, 6. (அ) இயேசுவின் சீடர்கள் யாருக்குச் சாட்சி கொடுத்தார்கள்? (ஆ) அவர்கள் எதைப்பற்றி சாட்சி கொடுக்க வேண்டியிருந்தது?

5 இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்குப் பிறகு கடைசி முறையாக அப்போஸ்தலர்களுக்குக் காட்சி அளித்தபோது, “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (அப். 1:8) அவர் கொடுத்த கட்டளை எவ்வளவு முக்கியம் என்று அவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் இயேசு ஏன், ‘யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்’ என்று சொல்லாமல், “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார்?

இயேசுவின் சீடர்களான நாம் எதிர்காலத்தில் யெகோவா செய்யப்போகும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து சாட்சி கொடுக்கிறோம் (பாராக்கள் 5, 6)

6 அந்தச் சீடர்கள் இஸ்ரவேலர்களாக இருந்ததால், பிறப்பிலிருந்தே யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருந்தார்கள். எகிப்திலிருந்தும் பாபிலோனிலிருந்தும் விடுதலை பெற்றதைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள், மற்றவர்களிடமும் சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்போது மீட்பு பெறுவதற்கு இயேசுவின் மூலம் யெகோவா செய்திருக்கும் புதிய ஏற்பாட்டைப் பற்றி அவர்கள் சாட்சி கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் கிடைக்கும் மாபெரும் விடுதலையைப் பற்றிச் சாட்சி கொடுக்க வேண்டியிருந்தது. இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததால்தான் இந்த விடுதலை சாத்தியமானது. அதனால்தான் இயேசு “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார். கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்று “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். அதைக்கேட்ட நிறைய பேர் மனந்திரும்பி இயேசுமீது விசுவாசம் வைத்தார்கள். யெகோவா செய்த புதிய ஏற்பாட்டின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்பின் பாதையில் அடியெடுத்து வைத்தார்கள். அப்போதிலிருந்து இயேசு யெகோவாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். யெகோவா அவருக்குப் புதிய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.—அப். 2:5, 11, 37-41.

 ‘அநேகருக்காக மீட்புவிலையைக் கொடுத்தார்’

7. கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று நடந்த சம்பவங்கள் எதைக் காட்டியது?

7 இயேசுவின் பலியை மக்களின் பாவத்தைப் போக்கும் பாவ நிவாரண பலியாக யெகோவா ஏற்றுக்கொண்டார் என்பதை கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று நடந்த சம்பவங்கள் காட்டின. (எபி. 9:11, 12, 24) “மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்கும்” வந்ததாக இயேசு சொன்னார். (மத். 20:28) இங்கு ‘அநேகர்’ என்பது மனந்திரும்பிய யூதர்களை மட்டுமல்ல மற்றவர்களையும் குறிக்கிறது. ஏனென்றால் ‘பலதரப்பட்ட ஆட்கள் மீட்புப் பெற வேண்டும்’ என்பது கடவுளுடைய நோக்கம். அதனால்தான் இயேசுவின் பலி “உலகத்தின் பாவத்தை” போக்கும் என்று பைபிள் சொல்கிறது.—1 தீ. 2:4-6; யோவா. 1:29.

8. இயேசுவின் சீடர்கள் தைரியமாகச் சாட்சி கொடுக்க எது உதவியது, அவர்கள் என்ன சாதித்தார்கள்?

8 இயேசுவின் சீடர்கள் தைரியமாக அவரைப் பற்றி சாட்சி கொடுத்தார்கள். ஆனால், தங்களுடைய சொந்த பலத்தில் அதைச் செய்யவில்லை. யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு, புதுத்தெம்போடு சாட்சி கொடுத்தார்கள். (அப்போஸ்தலர் 5:30-32-ஐ வாசியுங்கள்) 27 வருடங்களிலேயே “சத்தியத்தின் செய்தியாகிய நற்செய்தி,” யூதர்களுக்கும் புறதேசத்தாருக்கும் “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.”—கொலோ. 1:5, 23.

9. இயேசு முன்னறிவித்தப்படி கிறிஸ்தவ சபைக்கு என்ன நடந்தது?

9 காலப்போக்கில் போலிக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் பொய் போதனைகளைப் பரப்பி வந்தார்கள். (அப். 20:29, 30; 2 பே. 2:2, 3; யூ. 3, 4) போகப்போக விசுவாசதுரோக செயல்கள் முழு சபையையும் பாதித்துவிட்டது. ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்வரை’ விசுவாசதுரோகம் நீடிக்கும் என்று இயேசு முன்னறிவித்தார். (மத். 13:37-43) அக்டோபர் 1914-ல் இயேசுவை யெகோவா ராஜாவாக்கினார். அப்போது சாத்தானுடைய பொல்லாத உலகத்திற்கு ‘கடைசி நாட்கள்’ ஆரம்பித்துவிட்டது.—2 தீ. 3:1.

10. (அ) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எதைப்பற்றி பிரசங்கித்தார்கள்? (ஆ) அக்டோபர் 1914-ல் என்ன நடந்தது, அது எப்படித் தெளிவாகத் தெரிகிறது?

10 அக்டோபர் 1914-ல் இயேசு ராஜாவாக ஆவார் என்று 30 வருடங்களுக்கு முன்பிருந்தே பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பிரசங்கித்தார்கள். அதை அவர்கள் தானியேல் புத்தகத்திலிருந்து தெரிந்துகொண்டார்கள். ஒரு  பெரிய மரம் வெட்டப்பட்டு “ஏழு காலங்கள்” கடந்தபிறகு மீண்டும் வளரும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. (தானி. 4:16) தம்முடைய பிரசன்னத்தைப் பற்றியும் ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றியும்’ சொன்ன தீர்க்கதரிசனத்தில் இதே காலத்தைதான் ‘புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலம்’ என்று இயேசு சொன்னார். 1914-ல் அவர் ராஜாவானது முதற்கொண்டு ‘[கிறிஸ்துவின்] பிரசன்னத்திற்கான அடையாளம்’ தெளிவாகத் தெரிகிறது. (மத். 24:3, 7, 14; லூக். 21:24) “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” இன்று நாமும் பிரசங்கிக்கிறோம். முக்கியமாக, இயேசுவை யெகோவா ராஜாவாக்கின விஷயத்தைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறோம்.

11, 12. (அ) ராஜாவான இயேசு 1919-ல் என்ன செய்தார்? (ஆ) 1935-லிருந்து யார் கூட்டி சேர்க்கப்படுகிறார்கள்? (ஆரம்பப் படத்தைப் பாருங்கள்.)

11 ராஜாவானவுடன், இயேசு தம் சீடர்களை ‘மகா பாபிலோனிலிருந்து,’ அதாவது பொய் மதத்திலிருந்து விடுவிக்க ஆரம்பித்தார். (வெளி. 18:2, 4) முதல் உலகப் போருக்குப் பிறகு, 1919-ல் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அதிக சுதந்திரத்துடன் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். மீட்பு பெறுவதற்கு யெகோவா செய்த ஏற்பாட்டைப் பற்றியும் இயேசு ராஜாவானதைப் பற்றியும் மும்முரமாகச் சாட்சி கொடுத்தார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கிறிஸ்துவின் உடன் ஆட்சியாளர்களாகச் சேர்க்கப்பட்டார்கள்.

12 லட்சக்கணக்கான “வேறே ஆடுகளும்” அதாவது எல்லா தேசங்களையும் சேர்ந்த “திரள் கூட்டமான” மக்களும் 1935-லிருந்து கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து திரள் கூட்டத்தினரும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி தைரியமாகச் சாட்சி கொடுக்கிறார்கள். மீட்பு பெறுவதற்கு இவர்களும் இயேசுவின் பலி மீது விசுவாசம் வைக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து சாட்சி கொடுத்து, யெகோவாவுக்குப் பிரியமாக வாழ்ந்தால் “மிகுந்த உபத்திரவத்தில்” தப்பிப்பிழைத்து பூஞ்சோலை பூமியில் வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.—யோவா. 10:16; வெளி. 7:9, 10, 14.

‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள்’

13. நாம் என்ன செய்யத் தீர்மானமாக இருக்க வேண்டும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

13 யெகோவா செய்திருக்கிற, செய்யப்போகிற “மகத்தான செயல்களைப் பற்றி” சாட்சி கொடுக்க நமக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்தைப் பொன்னெனப் போற்றுவோமாக! தொடர்ந்து சாட்சி கொடுப்பது சுலபமல்ல. எதிர்ப்பு, துன்புறுத்துதல், அலட்சிய மனப்பான்மை என்று எத்தனையோ தடைகள் மத்தியிலும் நாம் சாட்சி கொடுக்கிறோம். ‘கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்’ என்று சொன்ன பவுலையும் அவருடைய நண்பர்களையும் நாம் பின்பற்றலாம். (1 தெ. 2:2) சாத்தானுடைய உலகம் அழியும்வரை நாம் தொடர்ந்து சாட்சி கொடுக்கத் திடத்தீர்மானமாய் இருப்போமாக! (ஏசா. 6:11)  ஆனால், நம்முடைய சொந்த பலத்தில் இதைச் செய்ய முடியாது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல் யெகோவாவிடம் “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” தரும்படி ஜெபம் செய்வோமாக!—2 கொரிந்தியர் 4:1, 7-ஐ வாசியுங்கள்; லூ. 11:13.

14, 15. (அ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள், அப்போஸ்தலன் பேதுரு அதைப்பற்றி என்ன சொன்னார்? (ஆ) எதிர்ப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

14 இன்று நிறைய பேர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், “தங்கள் செயல்களால் [கடவுளை] நிராகரித்துவிடுகிறார்கள்; ஏனென்றால், அவர்கள் அருவருப்பானவர்கள், கீழ்ப்படியாதவர்கள், எந்தவொரு நற்செயலைச் செய்வதற்கும் அருகதையில்லாதவர்கள்.” (தீத். 1:16) முதல் நூற்றாண்டில், உண்மைக் கிறிஸ்தவர்களைப் பலர் வெறுத்தார்கள். அதனால்தான் அப்போஸ்தலன் பேதுரு இப்படி எழுதினார்: “கிறிஸ்துவின் பெயரை முன்னிட்டு அவதூறாகப் பேசப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால், கடவுளுடைய . . . சக்தி உங்கள்மீது தங்கியிருக்கிறது என்று அர்த்தம்.”—1 பே. 4:14.

15 இன்றும் யெகோவாவின் சாட்சிகள் ‘அவதூறாகப் பேசப்படுகிறார்கள்.’ ஏனென்றால், அவர்கள் இயேசு ராஜாவானதைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறார்கள். யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதால் அவதூறாகப் பேசப்படுவதும், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதால் அவதூறாகப் பேசப்படுவதும் ஒன்றுதான். யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுத்த இயேசுவையே மக்கள் எதிர்த்தார்கள். “நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று இயேசு சொன்னார். (யோவா. 5:43) சாட்சி கொடுப்பதற்காக உங்களை யாராவது எதிர்த்தால் தைரியமாக இருங்கள். ஏனென்றால், ‘கடவுளுடைய சக்தியும்’ அவருடைய ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது.

16, 17. (அ) சாட்சி கொடுப்பதைப் பற்றி யெகோவாவின் மக்கள் எப்படி உணர்கிறார்கள்? (ஆ) என்ன செய்யத் தீர்மானமாயிருக்கிறோம்?

16 பூமியெங்கும் யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட இடங்களில்கூட நற்செய்தியை ஆர்வமாகக் கேட்பவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்களைச் சந்தித்து, பைபிள் படிப்பு நடத்தி, அவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் எடுக்க உதவுவதற்கு கடும் முயற்சி எடுப்போமாக! 60 வருடங்களாக தென் ஆப்பிரிக்காவில் சாட்சி கொடுத்துவரும் ஸாரீ என்ற சகோதரியைப் போல் நீங்களும் உணரலாம்: “இயேசு எனக்காக உயிரையே கொடுத்தார். அதுக்கு நான் ரொம்ப நன்றியோட இருக்கேன், அந்த பலியில விசுவாசம் வச்சதுனாலதான் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க முடியுது. யெகோவாவ பத்தி சாட்சி கொடுக்கிற பாக்கியத்துக்காக நான் சந்தோஷப்படுறேன்.” இவரும் இவருடைய கணவர் மார்ட்டினசும் நிறைய பேர் யெகோவாவின் சாட்சியாவதற்கு உதவியிருக்கிறார்கள். தங்களுடைய 3 பிள்ளைகளுக்கும் உதவியிருக்கிறார்கள். “இந்த உயிர் காக்கும் வேலையில கிடைக்கிற திருப்தியும் சந்தோஷமும் வேற எதுலயும் கிடைக்காது. யெகோவா அவரோட சக்திய கொடுக்கிறதுனாலதான் சாட்சி கொடுக்கிற இந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியுது” என்று அந்தச் சகோதரி சொல்கிறார்.

17 நாம் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி எடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அமைப்பின் பாகமாக இருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம். எனவே, தொடர்ந்து சாட்சி கொடுங்கள், சாத்தானின் பொல்லாத உலகத்திலிருந்து விலகியிருக்கக் கடும் முயற்சி எடுங்கள். அப்படிச் செய்தால், யெகோவாவின் சாட்சிகளாக அவருடைய மகத்தான பெயருக்குப் புகழ் சேர்ப்போம்.