Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)  |  மே 2014  

 நம் வரலாற்றுச் சுவடுகள்

‘அறுவடை வேலை அதிகம் இருக்கிறது’

‘அறுவடை வேலை அதிகம் இருக்கிறது’

ஜார்ஜ் யங், மார்ச் 1923-ல் ரியோ டி ஜெனிரோவுக்கு வந்தார்

வருடம் 1923. சாவோ போலோ நகரிலுள்ள நாடக இசை பள்ளியின் அரங்கம் நிரம்பி வழிகிறது! சகோதரர் ஜார்ஜ் யங் பேசுவது உங்கள் காதில் கேட்கிறதா? அவருடைய பேச்சு போர்ச்சுகீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது. கூடிவந்திருக்கும் 585 பேரும் மெய்மறந்து, பேச்சில் லயித்துப்போயிருக்கிறார்கள். போர்ச்சுகீஸ் மொழியில் பைபிள் வசனங்கள் புரொஜக்டர் மூலம் திரையில் காட்டப்படுகின்றன. முடிவில், இன்று வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்! என்ற சிறு புத்தகம் நூற்றுக்கணக்கில் வினியோகிக்கப்படுகிறது; சில பிரதிகள் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியன் மொழிகளிலும் கொடுக்கப்படுகின்றன. அந்தப் பேச்சு அநேகருடைய மனதைக் கவர்கிறது. அதனால், கடவுளுடைய வார்த்தை எங்கும் பரவுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குமுன் என்ன நடந்ததென்று பார்க்கலாம்.

1867-ல், சாரா பெலோனா ஃபர்கஸன் என்ற பெண் தன் குடும்பத்தாரோடு அமெரிக்காவிலிருந்து பிரேசிலுக்குக் குடிமாறினார். 1899-ல் அவருடைய தம்பி அமெரிக்காவிலிருந்து பிரேசிலுக்கு வந்தபோது சில பைபிள் பிரசுரங்களைக் கொண்டுவந்தார். அவற்றை வாசித்து அந்தப் பெண் சத்தியத்தைப் புரிந்துகொண்டார். வாசிப்பதில் ஆர்வமுள்ளவரான சாரா ஆங்கில காவற்கோபுரத்திற்கு சந்தா செய்தார். பைபிள் விஷயங்களை வாசித்துப் பூரித்துப்போன அவர், “சத்தியம் எட்டாதளவுக்கு யாருமே தூரமாக இல்லை என்பதற்கு நானே ஓர் அத்தாட்சி” என்று சகோதரர் சி. டி. ரஸலுக்கு கடிதம் எழுதினார்.

இறந்தவர்களிடம் பேச முடியுமா? (போர்ச்சுகீஸ் மொழியில்)

சாரா தன்னால் முடிந்தளவு மற்றவர்களுக்கு பைபிள் சத்தியத்தைச் சொன்னார். ஆனால், தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் பிரேசிலிலுள்ள மக்களுக்கும் கூடுதலாக யார் உதவி செய்வார் என்று அவர் அடிக்கடி யோசித்தார். மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ற துண்டுப்பிரதியின் ஆயிரக்கணக்கான பிரதிகளை (போர்ச்சுகீஸ் மொழியில்) எடுத்துக்கொண்டு ஒருவர் சாவோ போலோவுக்கு வரப்போவதாக 1912-ல் புருக்லின் பெத்தேலிலிருந்து அவருக்குக் கடிதம் வந்தது. பைபிள் மாணாக்கர்கள் பலர், சீக்கிரத்தில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை 1915-ல் பிரசுரங்களில் வாசித்தது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “பிரேசிலையும் தென் அமெரிக்காவையும் பற்றி யோசித்துப் பாருங்கள். . . . தென் அமெரிக்கா உலகில் ஒரு மிகப் பெரிய பகுதி என்பதை நினைத்துப் பார்த்தால், அங்கே  அறுவடை வேலை அதிகம் இருப்பதைப் புரிந்துகொள்வீர்கள்” என்று தன்னுடைய கருத்தை எழுதினார். ஆம், அறுவடை வேலை அங்கு அதிகமிருந்தது!

சுமார் 1920-ல், பிரேசிலைச் சேர்ந்த இளம் மாலுமிகள் எட்டுப் பேர், தங்களுடைய போர்க் கப்பலில் பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்ததால், நியு யார்க் சிட்டியில் நடந்த சபைக் கூட்டங்கள் சிலவற்றில் கலந்துகொண்டார்கள். அவர்கள் ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பிய பிறகு, கற்றுக்கொண்ட பைபிள் சத்தியத்தை மற்றவர்களிடம் சொன்னார்கள். அதன் பிறகு, மார்ச் 1923-ல் பில்கிரிமாக, அதாவது பயணக் கண்காணியாகச் சேவை செய்த சகோதரர் ஜார்ஜ் யங், ரியோ டி ஜெனிரோவுக்கு வந்தபோது ஆர்வமுள்ள நிறைய பேரை சந்தித்தார். பல பிரசுரங்களை போர்ச்சுகீஸ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். பிறகு, சாவோ போலோவுக்குச் சென்றார். அப்போது அந்நகரில் சுமார் 6,00,000 மக்கள் வசித்து வந்தார்கள். ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தபடி, அவர் அங்கே ஒரு பேச்சைக் கொடுத்ததோடு இன்று வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள் என்ற சிறு புத்தகத்தையும் வினியோகித்தார். தன்னந்தனியாக எதுவும் செய்ய முடியாததால், அவர் கொடுக்கவிருந்த சொற்பொழிவுகளைப் பற்றி செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. பிரேசிலில் கொடுக்கப்பட்ட அந்தப் பேச்சுகள், ‘I.B.S.A. என்ற பெயரில் முதன்முதலில் விளம்பரம் செய்யப்பட்டன.’ *

சகோதரர் யங் பேச்சுகள் கொடுத்தபோது புரொஜக்டர் மூலம் வசனங்கள் திரையில் காட்டப்பட்டன

டிசம்பர் 15, 1923, காவற்கோபுரத்தில் பிரேசிலைப்பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “ஜூன் 1-ஆம் தேதி அங்கே வேலையை ஆரம்பித்தபோது கையில் ஒரு பிரசுரம்கூட இல்லை. இருந்தாலும் பிரசங்க வேலையைக் கடவுள் ஆசீர்வதித்தது ஆச்சரியமான விஷயம்.” சகோதரர் யங், ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை கொடுத்த 21 சொற்பொழிவுகளில் இரண்டு பேச்சுகள் சாவோ போலோவில் கொடுக்கப்பட்டன. அதைக் கேட்க மொத்தம் 3,600 பேர் வந்திருந்தார்கள். ரியோ டி ஜெனிரோவிலும் நற்செய்தி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. சில மாதங்களிலேயே போர்ச்சுகீஸ் மொழியில் 7,000-க்கும் அதிகமான பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன! அதுமட்டுமா, நவம்பர்–டிசம்பர் 1923 இதழ் முதற்கொண்டு போர்ச்சுகீஸ் மொழியில் காவற்கோபுரம் கிடைக்க ஆரம்பித்தது.

பிரேசிலில் ஆங்கில காவற்கோபுரத்திற்கு முதன்முதலில் சந்தா செய்த சாரா பெலோனா ஃபர்கஸன்

சகோதரர் யங், சாராவைச் சந்தித்தார். “வரவேற்பறைக்கு வந்த சகோதரி கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை. சகோதரர் யங்கின் கையைப் பிடித்தபடி அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, ‘நான் பார்க்குறது உண்மையிலேயே ஒரு பில்கிரிம்தானா?’ என்று அவர் சொன்னார்” என அவர்களுடைய சந்திப்பைப்பற்றி காவற்கோபுரம் குறிப்பிட்டது. சீக்கிரத்தில், அந்தச் சகோதரியும் அவருடைய பிள்ளைகள் சிலரும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். சொல்லப்போனால், அதற்காக அவர் ஓரிரு வருடங்கள் அல்ல, 25 வருடங்கள் காத்திருந்தார்! பிரேசிலில் 50 பேர் ஞானஸ்நானம் எடுத்ததாக ஆகஸ்ட் 1, 1924 தேதியிட்ட காவற்கோபுரம் குறிப்பிட்டது. அவர்களில் பெரும்பாலோர் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்தவர்கள்.

இப்போது, சுமார் 90 வருடங்களுக்குப் பிறகு, பிரேசிலையும் தென் அமெரிக்காவையும் பற்றி யோசித்துப் பாருங்கள்! 7,60,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பிரேசிலில் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். இன்று, தென் அமெரிக்கா முழுவதிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் இன்னும் பல உள்ளூர் மொழிகளிலும் ஒலிக்கிறது. சாரா ஃபர்கஸன் சொன்னபடி, 1915-ல் அங்கே ‘அறுவடை வேலை அதிகம் இருந்தது.—பிரேசிலிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.

^ பாரா. 6 I.B.S.A. என்பது சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கம் என்பதன் சுருக்கம்.