Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)  |  பிப்ரவரி 2014  

யெகோவா—மிகச் சிறந்த நண்பர்

யெகோவா—மிகச் சிறந்த நண்பர்

“[ஆபிரகாம்]‘யெகோவாவின் நண்பர்’ என்று அழைக்கப்பட்டார்.”—யாக். 2:23.

1. கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் நம்மால் என்ன செய்ய முடிகிறது?

“அப்பா மாதிரியே மகன்!” என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆம், நிறைய பிள்ளைகள் பெற்றோரை அப்படியே உரித்து வைத்தாற்போல் இருப்பார்கள். இதற்குக் காரணம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிற குணங்கள் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதுதான். ஆனால் நம் அனைவருக்கும் உயிர் கொடுத்தவர், நம்முடைய பரலோகத் தகப்பனான யெகோவாவே. (சங். 36:9) பூமியிலுள்ள அவருடைய பிள்ளைகளான நாம், ஓரளவுக்கு அவரைப் போலவே இருக்கிறோம். அவருடைய சாயலில் நாம் படைக்கப்பட்டிருப்பதால், சிந்தித்துத் தீர்மானங்கள் எடுக்கவும் மற்றவர்களோடு நீடித்த நட்பை வளர்த்துக்கொள்ளவும் நம்மால் முடிகிறது.—ஆதி. 1:26.

2. எதன் அடிப்படையில் யெகோவா நம் நண்பராக முடியும்?

2 யெகோவாவை நம்முடைய மிகச் சிறந்த நண்பராக்கிக்கொள்ள முடியும். இதற்கு அடிப்படையாக இருப்பது நம்மேல் கடவுளுக்கு இருக்கிற அன்பும், அவர்மீதும் அவருடைய மகன்மீதும் நமக்கு இருக்கிற விசுவாசமுமே. “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று இயேசு குறிப்பிட்டார். (யோவா. 3:16) யெகோவாவோடு நெருங்கிய நட்பு வைத்திருந்த பலருடைய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அவற்றில் இரண்டை இப்போது பார்க்கலாம்.

“என் சிநேகிதனான ஆபிரகாம்”

3, 4. யெகோவாவோடு ஆபிரகாம் வைத்திருந்த நட்புக்கும் அவருடைய சந்ததியார் வைத்திருந்த நட்புக்கும் வித்தியாசம் என்ன?

3 இஸ்ரவேலர்களின் வம்சத் தலைவரும் முற்பிதாவுமான ஆபிரகாமை, ‘என் சிநேகிதன்’ என யெகோவா அழைத்தார். (ஏசா. 41:8) அப்படி அழைத்ததாக  இரண்டு நாளாகமம் 20:7-ம்கூட குறிப்பிடுகிறது. படைப்பாளரோடு அவரால் எப்படி இந்தளவுக்கு நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள முடிந்தது? விசுவாசமே அதற்குக் காரணம்.—ஆதி. 15:6; யாக்கோபு 2:21-23-ஐ வாசியுங்கள்.

4 ஆபிரகாமின் சந்ததியாரான பூர்வ இஸ்ரவேலர், ஆரம்பத்தில் யெகோவாவைத் தங்களுடைய தகப்பனாகவும் நண்பராகவும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், வருத்தகரமாக அந்த நட்பை அவர்கள் இழந்துவிட்டார்கள். ஏன்? ஏனென்றால், யெகோவா கொடுத்த வாக்குறுதிகளில் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.

5, 6. (அ) யெகோவாவை எப்படி உங்கள் நண்பராக்கிக்கொள்ள முடிந்தது? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

5 யெகோவாவைப் பற்றி எந்தளவுக்கு தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவர்மீதுள்ள விசுவாசமும் அன்பும் அதிகரிக்கும். கடவுள் ஒரு நிஜமான நபர், அவரோடு நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வது சாத்தியம் என்பதையெல்லாம் முதன்முதலில் தெரிந்துகொண்டபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? ஆதாம் கீழ்ப்படியாமல் போனதால், நாம் எல்லோருமே பாவத்தில் பிறந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். மனிதர்கள் எல்லோருமே கடவுளைவிட்டு தூரமாக விலகியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டீர்கள். (கொலோ. 1:21) அன்புள்ள நம் பரலோகத் தகப்பன், நம்மீது எந்த ஒட்டுறவும் இல்லாமல் எங்கேயோ இருப்பவர் அல்ல என்பதை அறிந்துகொண்டீர்கள். அவர் நமக்காக இயேசுவை மீட்பு பலியாக அளித்தார் என்பதை அறிந்து அதில் விசுவாசம் வைத்தபோது, கடவுளோடு நட்புகொள்ள ஆரம்பித்தீர்கள்.

6 இவற்றையெல்லாம் நம் மனத்திரைக்குக் கொண்டுவரும்போது நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளோடு நான் வைத்திருக்கும் நட்பு வளர்ந்துகொண்டே இருக்கிறதா? என் நேச நண்பரான யெகோவாவிடம் நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் அன்பும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா?’ யெகோவாவிடம் நெருங்கிய நட்பு வைத்திருந்த இன்னொருவர் கிதியோன். அவருடைய சிறந்த முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாமென இப்போது பார்க்கலாம்.

“யெகோவா சமாதானமுள்ளவர்”

7-9. (அ) கிதியோனின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க என்ன சம்பவம் நடந்தது, அதன் விளைவு என்ன? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.) (ஆ) நாம் எப்படி யெகோவாவின் நண்பராக முடியும்?

7 இஸ்ரவேல் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் காலடி வைத்த பிறகு நிலவிய கொந்தளிப்பான காலகட்டத்தில், யெகோவாவின் ஊழியராக இருந்தவர்தான் கிதியோன். ஒப்ராவிலே, யெகோவாவின் தூதர் கிதியோனைச் சந்தித்த சம்பவத்தை நியாயாதிபதிகள் 6-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. அச்சமயத்தில் அண்டை தேசத்தாராகிய மீதியானியர், இஸ்ரவேலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். அதனால், கோதுமையை அவர்களுடைய கண்களிலிருந்து மறைப்பதற்காக திராட்சை ஆலையில் கிதியோன் போரடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு தேவதூதன் தோன்றி “பராக்கிரமசாலியே” என அவரை அழைத்ததும் கிதியோனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேலர்களை யெகோவா விடுவித்திருந்தாலும், இப்போது மீதியானியரிடமிருந்து தங்களை விடுவிப்பாரா என அவர் சந்தேகித்தார். கடவுள் சார்பில் பேசிய அந்தத் தூதர், யெகோவா நிச்சயம் காப்பாற்றுவார் என உறுதியளித்தார்.

8 ஆனாலும், தன்னால் எப்படி ‘இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்க முடியும்’ என்ற கேள்வி கிதியோனுக்கு இருந்தது. அதற்கு யெகோவா இவ்வாறு பதிலளித்தார்: “நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய்.” (நியா. 6:11-16) கிதியோனுக்கு இன்னும் சந்தேகம் விட்டபாடில்லை. அதனால், ஓர் அடையாளத்தைத் தருமாறு கேட்டார். இவர்களுக்கு இடையிலான இந்த உரையாடலைக் கவனிக்கும்போது, கிதியோனுக்கு யெகோவா நிஜமான ஒரு நபராக இருந்தார் என்பது தெளிவாகப் புரிகிறது.

9 அடுத்ததாக நடந்த சம்பவம் கிதியோனின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது, யெகோவாவோடு அவர் இன்னும் நெருங்கிவர உதவியது. கிதியோன் அந்தத் தூதருக்கு உணவு தயார் செய்து கொடுத்தார். அதைத் தமது கையிலிருந்த கோலினால் தூதர் தொட்டார்; உடனே நெருப்பு அதை எரித்துப்போட்டது. இதன் மூலம், அந்தத் தூதர் யெகோவாவால் அனுப்பப்பட்டவர் என்பதை கிதியோன் உணர்ந்து கொண்டார். பயம் கவ்விக்கொண்டதால், “ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றார்.” (நியா. 6:17-22) இப்படி பயந்ததால், அவருக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த நட்புக்குத் தடை ஏற்பட்டதா? இல்லவே இல்லை! அதற்கு நேர் மாறாகவே நடந்தது. ஆம், கடவுளோடு ஒரு சமாதான உறவுக்குள் இருப்பதை கிதியோன் உணர்ந்தார். அந்தப் பலிபீடத்திற்கு “யெகோவா ஷாலோம்” என்று பெயரிட்டதிலிருந்து இது தெரிகிறது. இதற்கு “யெகோவா சமாதானமுள்ளவர்” என்று அர்த்தம். (நியாயாதிபதிகள் 6:23, 24-ஐ வாசியுங்கள்; NW;  அடிக்குறிப்பு) ஒவ்வொரு நாளும் யெகோவா நமக்காக என்னவெல்லாம் செய்து வருகிறாரென சிந்தித்துப் பார்த்தால், அவர் நம்முடைய உண்மையான நண்பர் என்பதை நம்மால் உணர முடியும். நாம் தவறாமல் ஜெபம் செய்யும்போது மிகுந்த சமாதானம் இருக்கும், அவரோடுள்ள நட்பும் பலமாகும்.

யார் யெகோவாவின் ‘கூடாரத்தில் தங்குவான்’?

10. சங்கீதம் 15:3, 5-ன்படி, யெகோவாவின் நண்பராக இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

10 யெகோவா நம்முடைய நண்பராக இருக்க வேண்டுமானால், நாம் சில தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம். யெகோவாவின் ‘கூடாரத்தில் தங்குவதற்கு’, அதாவது அவருடைய நண்பராவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென 15-ஆம் சங்கீதத்தில் தாவீது சொல்லியிருக்கிறார். (சங். 15:1) அதில் சொல்லப்பட்டுள்ள இரண்டு விஷயங்களை இப்போது நாம் சிந்திக்கலாம். ஒன்று, புறங்கூறுவதைத் தவிர்ப்பது. இன்னொன்று, நேர்மையாக நடந்து கொள்வது. இதைப் பின்பற்றுகிற ஒருவர், “தன் நாவினால் புறங்கூறாமலும் . . . குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும்” இருப்பார்.—சங். 15:3, 5.

11. மற்றவர்களைப் பற்றி புறங்கூறுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

11 ‘உன் நாவைப் பொல்லாப்புக்கு . . . விலக்கிக் காத்துக்கொள்’ என்பதாக தாவீது இன்னொரு சங்கீதத்தில் எச்சரிக்கிறார். (சங். 34:13) இந்த அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தால், நமக்கும் நீதியுள்ள நம் பரலோகத் தகப்பனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுவிடும். சொல்லப்போனால், புறங்கூறுதல் யெகோவாவின் பரம எதிரியான சாத்தானுடைய குணம். “பிசாசு” என்ற சொல், “புறங்கூறுபவர்” என்ற அர்த்தத்தைத் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது நாம் கவனமாக இருந்தால், யெகோவாவின் நெருங்கிய நண்பராகலாம். முக்கியமாக, சபையில் இருக்கும் நியமிக்கப்பட்ட சகோதரர்கள்மீது நாம் வைத்திருக்கும் மனப்பான்மையைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.எபிரெயர் 13:17; யூதா 8-ஐ வாசியுங்கள்.

12, 13. (அ) நாம் ஏன் எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும்? (ஆ) நம்முடைய நடத்தை மற்றவர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

12 யெகோவாவின் ஊழியர்கள், மற்றவர்களைச் சுரண்டி பிழைக்கிறவர்கள் என்றல்ல நேர்மையானவர்கள் என்றே பெயரெடுத்திருக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுல், “எங்களுக்காக ஜெபம் செய்துகொண்டிருங்கள்; ஏனென்றால், எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறதென்று உறுதியாய் நம்புகிறோம்” என்று எழுதினார். (எபி. 13:18) ‘எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாம் விரும்புவதால்’ நம் சகோதரர்களை வைத்து நாம் ஆதாயம் தேடுவதில்லை. உதாரணத்திற்கு, அவர்கள் நம்மிடம் வேலை செய்தால், அவர்களை நேர்மையாக நடத்த வேண்டும், சொன்ன சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். கிறிஸ்தவர்களான நாம், சக வேலையாட்களிடமும் மற்றவர்களிடமும் நேர்மையாக நடந்துகொள்கிறோம். சக கிறிஸ்தவர் ஒருவரிடம் வேலை செய்தால், விசேஷ சலுகைகள் வேண்டுமென நாம் அவரிடம் எதிர்பார்க்கக் கூடாது.

13 யெகோவாவின் சாட்சிகளின் நேர்மையைப் பற்றி மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சிகள் சொன்ன சொல்லின்படி செய்பவர்கள் என்பதைக் கவனித்த ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர், “நீங்க எப்பவுமே கொடுத்த வாக்கைக் காப்பாத்துறீங்க” என்று சொன்னார். (சங். 15:4) இதுபோன்ற நடத்தை, அன்பான பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் நமக்கிருக்கும் நட்பைக் காத்துக்கொள்ள உதவுகிறது, அவருக்குப் புகழையும் சேர்க்கிறது.

மற்றவர்கள் யெகோவாவின் நண்பர்களாவதற்கு உதவுங்கள்

மற்றவர்கள் யெகோவாவின் நண்பர்களாவதற்கு உதவுகிறோம் (பாராக்கள் 14, 15)

14, 15. மற்றவர்கள் யெகோவாவின் நண்பர்களாக ஆவதற்கு நாம் எப்படி உதவலாம்?

14 நாம் ஊழியத்தில் சந்திக்கும் அநேகர் கடவுள் இருக்கிறார் என நம்பினாலும், அவரைத் தங்களுடைய மிகச் சிறந்த நண்பராகக் கருதுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? பிரசங்க வேலைக்காக 70 பேரை இரண்டிரண்டு பேராக அனுப்பியபோது, இயேசு அவர்களுக்கு இவ்வாறாக அறிவுரை கொடுத்தார்: “நீங்கள் ஒரு வீட்டிற்குள் போகும்போது, ‘இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் வாழ்த்துக் கூறுங்கள்; சமாதானத்தை விரும்பாத ஒருவர் அங்கிருந்தால், நீங்கள் கூறிய சமாதான வாழ்த்து உங்களிடம் திரும்பிவிடும். ஆனால், சமாதானத்தை விரும்புகிற ஒருவர் அங்கிருந்தால், நீங்கள் கூறிய சமாதான வாழ்த்து அவர்மேல் தங்கட்டும்.” (லூக். 10:5, 6) ஆம், நாம் சிநேக மனப்பான்மையோடு ஜனங்களை அணுகினால், அவர்கள் சத்தியத்திடம் ஆர்வம் காட்டுவார்கள். கடுங்கோபத்தோடு நம்மை எதிர்ப்பவர்களையும்கூட இக்குணத்தால் அமைதிப்படுத்த முடியும்.  அதோடு, அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் நம் செய்திக்குச் செவிசாய்க்கவும் இக்குணம் உதவும்.

15 பொய் மதத்தில் ஊறிப்போனவர்களையும் கடவுளுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களையும் ஊழியத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் எப்போதும் சிநேக மனப்பான்மையோடும் சமாதானமாகவும் பேச வேண்டும். இன்றைய உலக நிலைமையைப் பார்த்து குமுறிக்கொண்டிருப்பவர்கள், நாம் வணங்கும் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும்போது அவர்களை நம் கூட்டங்களுக்கு வருமாறு அழைக்கலாம். இதுபோன்ற அநேகருடைய அனுபவங்கள், “பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது” என்ற தலைப்பில் வரும் தொடர் கட்டுரைகளில் இடம்பெறுகின்றன.

நம்முடைய மிகச்சிறந்த நண்பரோடு சேர்ந்து வேலை செய்யுங்கள்

16. எந்த அர்த்தத்தில் நாம் யெகோவாவின் நண்பர்களாகவும் ‘சக வேலையாட்களாகவும்’ இருக்கிறோம்?

16 சேர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். யெகோவாவுக்கு அர்ப்பணித்துள்ள நாம் அனைவரும், அவருடைய நண்பர்களாக மட்டுமல்ல, ‘சக வேலையாட்களாகவும்’ இருக்கிறோம். (1 கொரிந்தியர் 3:9-ஐ வாசியுங்கள்.) எப்படி? பிரசங்க வேலையிலும் சீடராக்கும் வேலையிலும் ஈடுபடும்போது, நம்முடைய பரலோகத் தகப்பனின் பொன்னான குணங்களை ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த வேலையைச் செய்ய அவருடைய சக்தி நமக்கு எப்படி உதவுகிறது என்பதையும் உணர்ந்துகொள்கிறோம்.

17. யெகோவா நம் மிகச் சிறந்த நண்பர் என்பதற்கு மாநாடுகளில் அளிக்கப்படும் ஆன்மீக உணவு எப்படி அத்தாட்சி அளிக்கிறது?

17 நாம் எந்தளவுக்கு சீடராக்கும் வேலையில் ஈடுபடுகிறோமோ அந்தளவுக்கு யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதை உணருகிறோம். எதிரிகளின் திட்டங்களை அவர் எப்படித் தவிடுபொடியாக்குகிறார் என்பதை நாம் கண்ணாரக் காண்கிறோம். இப்போது நம் சிந்தனையை கொஞ்சம் பின்நோக்கி ஓடவிடுவோம். அப்போது, கடவுள் நம்மை எப்படியெல்லாம் வழிநடத்தி வந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடியும். நமக்கு ஏராளமாகக் கிடைத்து வரும் ஆன்மீக உணவை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, அல்லவா? அதுமட்டுமல்ல, மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நம்முடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் நம்முடைய தகப்பன் எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். ஒரு மாநாட்டுக்கு நன்றி தெரிவித்து ஒரு குடும்பத்தார் இப்படி எழுதியிருந்தார்கள்: “மாநாட்டு நிகழ்ச்சிகள் எங்களுடைய இருதயத்தைத் தொட்டன. எங்கள் ஒவ்வொருவர்மீதும் யெகோவா அளவுகடந்த அன்பு வைத்திருப்பதையும் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவதையும் புரிந்துகொண்டோம்.” அயர்லாந்தில் நடந்த ஒரு விசேஷித்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு ஜெர்மன் தம்பதியை அங்கிருந்த சகோதர சகோதரிகள் அன்போடு வரவேற்று கவனித்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்ததோடு இப்படியும் சொன்னார்கள்: “யெகோவாவுக்கும் ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்கும் நாங்கள் மிகுந்த நன்றியோடு இருக்கிறோம். இந்த ஒன்றுபட்ட தேசத்தாரோடு இணைந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுத்தது இவர்களே. பல தேசத்தாரோடு ஒவ்வொரு நாளும் ஒற்றுமையை அனுபவிக்கிறோம். டப்ளின் மாநாட்டில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், உங்கள் அனைவரோடும் சேர்ந்து நம் உன்னத கடவுளை வழிபடும் ஒப்பற்ற பாக்கியத்தை எங்களுக்கு  எப்போதும் நினைப்பூட்டிக்கொண்டே இருக்கும்.”

நண்பர்கள் பேச்சுத்தொடர்பு கொள்வார்கள்

18. யெகோவாவிடம் பேச்சுத்தொடர்பு கொள்வது சம்பந்தமாக நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்ன?

18 நண்பர்களுக்கிடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும்போது அந்த நட்பு ஆழமாகும். தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய உலகில், மக்கள் எப்போது பார்த்தாலும் இன்டர்நெட்டிலும், மெஸேஜ் செய்வதிலுமே தங்கள் நேரத்தைக் கரைக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? நம் ‘ஜெபத்தைக் கேட்பவரும்’ நம்முடைய மிகச் சிறந்த நண்பருமான யெகோவாவிடம் பேச நாம் நேரம் செலவிடுகிறோமா?—சங். 65:2.

19. பரலோகத் தகப்பனிடம் நம் மனதைத் திறக்க எது உதவும்?

19 மனதைத் திறந்து உணர்ச்சிகளைக் கொட்டி யெகோவாவிடம் பேசுவது அவருடைய ஊழியர்கள் சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். என்றாலும், நாம் ஜெபத்தில் அப்படிப் பேச வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (சங். 119:145; புல. 3:41) இருதயத்தில் உள்ளதை வார்த்தைகளில் வடிப்பது கஷ்டமாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், பவுல் இவ்வாறு எழுதினார்: “ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளில் சொல்லப்படாத நம் உள்ளக் குமுறல்களைக் குறித்து அந்தச் [கடவுளுடைய] சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது. இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கடவுள், அந்தச் சக்தியின் நோக்கம் என்னவென்று அறிந்திருக்கிறார்; ஏனென்றால், அது அவருடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து பேசுகிறது.” (ரோ. 8:26, 27) யோபு, சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வார்த்தைகளைத் தியானிப்பது, நம்முடைய ஆழ்மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நமக்கு பேருதவியாக இருக்கும்.

20, 21. பிலிப்பியர் 4:6, 7-லுள்ள பவுலின் வார்த்தைகள் நமக்கு என்ன ஆறுதலைத் தருகின்றன?

20 துன்ப அலைகள் நம்மைத் தாக்கும்போது, பிலிப்பியர்களுக்கு கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் கொடுத்த அறிவுரைக்கு நாம் செவிசாய்ப்போமாக. அவர் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” இப்படி மனந்திறந்து நம்முடைய மிகச் சிறந்த நண்பரிடம் பேசுவது, நமக்கு நிச்சயம் ஆறுதலைத் தரும். எப்படியென்றால், “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று பவுல் சொன்னார். (பிலி. 4:6, 7) உண்மையிலேயே நம்முடைய இருதயத்தையும் மனதையும் காக்கும் ஒப்பற்ற இந்த ‘தேவசமாதானத்தை’ நாம் பொக்கிஷமாய்ப் போற்றுவோமாக.

கடவுளோடு நமக்கிருக்கும் நட்பைப் பலப்படுத்த ஜெபம் எப்படி உதவும்? (பாரா 21)

21 யெகோவாவிடம் நட்பை வளர்த்துக்கொள்ள ஜெபம் நமக்கு உதவும். ஆகவே, “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்.” (1 தெ. 5:17) இந்தக் கட்டுரை, கடவுளோடு நமக்கிருக்கும் உன்னதமான உறவையும் அவருடைய நீதியான நெறிகளுக்கேற்ப நடப்பதற்கான நம் தீர்மானத்தையும் பலப்படுத்துவதாக! அதோடு, யெகோவா நம் தகப்பனாக, நம் தேவனாக, நம் தோழராக இருப்பதால் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றித் தியானிக்க நேரம் செலவிடுவோமாக!