இது ஏன் கஷ்டம்?

“இன்பத்திலும் துன்பத்திலும் சேர்ந்தே இருப்போம்” என்று நீங்கள் இருவரும் உங்களுடைய திருமண நாளில் வாக்கு கொடுத்திருப்பீர்கள். பிரச்சினைகள் வந்தாலும் இந்த வாக்குறுதியை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள்.

ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல உங்களுடைய மணவாழ்க்கையில் உரசல்கள் வரலாம். இப்போது என்ன செய்வீர்கள்? திருமண நாளன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பீர்களா?

சில உண்மைகள்

சேர்ந்தே வாழவேண்டும் என்ற எண்ணம் நங்கூரம் போல உங்கள் திருமணத்தை பாதுகாக்கும்

சேர்ந்தே வாழவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு நன்மையைத்தான் கொடுக்கும். திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதியை காலமெல்லாம் காப்பாற்றுவது சாத்தியமே இல்லை என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். சிலர் அதை ‘கால் கட்டு’ போல பாரமாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நம் திருமணத்தை நங்கூரம் போல உறுதியாக பாதுகாப்பது அந்த வாக்குறுதிதான். மேகன் என்ற திருமணமான பெண் இப்படி சொல்கிறார்: “பிரிஞ்சே போகமாட்டோம்னு ரெண்டு பேரும் வாக்கு கொடுத்திருப்பதால, எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்க முடியும்.” * பிரச்சினைகள் சூறாவளியைப் போல தாக்கினாலும், திருமண பந்தம் முறியவே முறியாது என்ற எண்ணம், உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும். இந்த உணர்வு இருப்பதால் பிரச்சினைகளை சமாளிப்பது சுலபமாகிவிடும்.—“ மணத்துணைக்கு உண்மையாயிருப்பது...” என்ற பெட்டியை பாருங்கள்.

முக்கிய விஷயம்: உங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது ‘நான் ஏன்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ’ என்று யோசிக்காதீர்கள், பிரச்சினைகளை சமாளிக்க வழிதேடுங்கள். இதை செய்யும்போது உங்கள் இருவருக்கிடையே உள்ள பந்தம் பலப்படும். அப்படியென்றால், உங்கள் திருமண பந்தத்தை எப்படி பலப்படுத்தலாம்?

 இப்படி செய்து பாருங்கள்:

நிலையான பந்தமாக கருதுங்கள். “திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்.” இந்த பழமொழியைக் கேட்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ‘வாழ்க்கையே முடிந்துவிட்டது’ என்று தோன்றுகிறதா? அல்லது உங்கள் திருமண பந்தம் என்றும் நிலைத்திருக்கும் என்ற பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறதா? பிரச்சினைகள் வரும்போது, பிரிந்து போய்விடலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் அலைமோதுகிறதா? திருமண பந்தத்தை ஆயிரங்காலத்து பயிராக நினையுங்கள். அப்படி நினைத்தால் உங்கள் திருமண பந்தம் உறுதியாக இருக்கும்.—பைபிள் ஆலோசனை: மத்தேயு 19:6.

மோசமான முன்மாதிரியை பின்பற்றாதீர்கள். உங்கள் பெற்றோருடைய மணவாழ்க்கை உங்களை பாதிக்கலாம். லியா என்ற திருமணமான பெண் இப்படி சொல்கிறார்: “நான் சின்ன வயசா இருக்கும்போதே என் அப்பா-அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க. அதனால என்னோட கல்யாண வாழ்க்கையிலயும் பிரச்சினைகள் வரும்போது, பிரிஞ்சு போயிடலாம் என்ற எண்ணம் வந்திடுமோனு பயமா இருக்கு.” பெற்றோர் செய்த தவறையே நீங்களும் செய்ய வேண்டியதில்லை. உங்களுடைய திருமண வாழ்க்கையை உங்களால் கண்டிப்பாக பாதுகாக்க முடியும்.—பைபிள் ஆலோசனை: கலாத்தியர் 6:4, 5.

புண்படுத்தும் வார்த்தைகளை தவிருங்கள். உங்களுக்கிடையே வாக்குவாதம் வெடித்தால், ‘உன்கூட இனிமேலும் என்னால வாழமுடியாது,’ ‘என்னை புரிஞ்சிக்கிற ஒருத்தர் கிடைக்காமலா போயிடுவார்’ என்றெல்லாம் பேசாதீர்கள். இப்படி பேசுவது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இருக்கும். அது உங்கள் திருமண உறவை பலப்படுத்தாது; பிரச்சினைகளைத்தான் பெரிதாக்கும். அதுமட்டுமல்ல, மனதை ரணமாக்கும் வார்த்தைகளை பேசியதற்காக பின்பு நீங்கள் வருத்தப்படுவீர்கள். அதற்குப் பதிலாக, “நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம்” என்று உங்கள் துணையிடம் கேளுங்கள்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 12:18.

திருமண உறவு பலமாக இருப்பதைக் காட்டுங்கள். உங்களுடைய கணவரின்/மனைவியின் ஃபோட்டோவை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அடிக்கடி பார்க்கும்படி வையுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை பற்றியே மற்றவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் வெளியூருக்கு போனால் தினமும் உங்கள் துணைக்கு ஃபோன் செய்து பேசுங்கள். மற்றவர்களிடம் பேசும்போது, “நான்” என்று சொல்வதற்கு பதிலாக, “நாங்கள்” என்று சொல்லுங்கள். “நானும் என் மனைவியும்,” “நானும் என் கணவரும்” போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது உங்கள் திருமண பந்தம் பலமாக இருக்கிறது என்று உணருவீர்கள், மற்றவர்களும் அதைப் புரிந்துகொள்வார்கள்.

நல்ல தம்பதிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். பல வருடங்களாக சந்தோஷமான திருமண வாழ்க்கையை அனுபவிக்கும் தம்பதிகளிடம் ஆலோசனை கேளுங்கள். பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள் என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். “நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா சேர்ந்தே இருப்பது எவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்க?” “அப்படி செஞ்சது உங்க ரெண்டு பேரையும் எப்படி பலப்படுத்தியிருக்கு?” என்று கேளுங்கள். “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல், ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 27:17, பொது மொழிபெயர்ப்பு) இவர்களுடைய ஆலோசனை உங்களுடைய திருமண பந்தத்தை கட்டிக்காப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும். ▪ (g15-E 06)

^ பாரா. 7 மணத்துணை பாலியல் முறைகேட்டில் ஈடுபடும்போது தவறு செய்யாத துணை திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள பைபிள் அனுமதிக்கிறது. கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில், பக்கங்கள் 251-253-ஐ பாருங்கள்.