சவால்

உங்கள் பணம் பஞ்சாகப் பறக்கிறது. பேங்க் அக்கவுண்ட் கரைந்துகொண்டே போகிறது. சமீபத்தில்தான் உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது. நீங்கள் இஷ்டத்துக்குப் பணத்தைச் செலவு செய்கிறீர்கள். இதற்குக் காரணம் உங்கள் அல்லது மணத்துணையா? சட்டென்று அப்படி முடிவுகட்டி விடாதீர்கள். பிரச்சினைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு நீங்கள் இருவரும் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து பாருங்கள். *

பிரச்சினைக்கான காரணம்

மாற்றம் செய்யாதது. திருணத்திற்கு முன் உங்கள் அப்பா அம்மா வீட்டு செலவுகளைக் கவனித்து வந்திருப்பார்கள். ஆனால் இப்போது, செலவு செய்வது, பில் கட்டுவது எல்லாம் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். அதேசமயம், பணம் செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் இருவரும் வித்தியாசப்படலாம். ஒருவர் சிக்கனமாக இருக்க நினைக்கலாம், மற்றொருவர் தாராளமாகச் செலவு செய்யலாம். இந்த விஷயத்தில் இருவரும் ஒத்துப்போகவும் பணத்தைச் சரியாகச் செலவு செய்யவும் காலம் எடுக்கும்.

கடனை ஒழுங்காகக் கட்டவில்லை என்றால் அது களைகளைப் போல வளர்ந்துகொண்டே போகும்

வேலைகளைத் தள்ளிப்போடுவது. இப்போது திறமையாகத் தொழில் செய்துவரும் ஜிம், திருமணமான புதிதில் எதையும் திட்டமிட்டுச் செய்யாததால் பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். அவர் சொல்கிறார்: “நான் எல்லா ‘பில்’-லையும் நேரத்துக்கு கட்டாததுனால நானும் என் மனைவியும் லட்ச கணக்குல ‘ஃபைன்’ கட்டுனோம். இதனால எங்ககிட்ட சுத்தமா பணமே இல்லாம போயிடுச்சு!”

கண்மூடித்தனமாகச் செலவு செய்வது. பணம் எப்படிச் செலவாகிறது என்பதை நீங்கள் கவனிக்காவிட்டால் வீண் செலவு செய்துவிடலாம். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமாகச் செலவு செய்வது, இன்டர்நெட் வழியாக பொருள்களை வாங்குவது, எலக்ட்ரானிக் பாங்கிங் எல்லாம் இதற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். சுலபமாகக் கடன் வாங்கும் திட்டங்கள் இருப்பதாலும் இஷ்டத்துக்குச் செலவு செய்யலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி, பணத்தால் உங்கள் இருவருக்கும் இடையில் பெரிய பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். “ஏழைகளாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி, பணத்தினால்தான் தங்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருவதாக அநேக தம்பதிகள் சொல்கிறார்கள்” என்று ஃபைட்டிங் ஃபார் யுவர் மாரேஜ் என்ற புத்தகம் சொல்கிறது.

 நீங்கள் என்ன செய்யலாம்?

ஒற்றுமையாகச் செயல்படுங்கள். ஒருவரையொருவர் குறை சொல்லாதீர்கள். வீண் செலவுகளைக் குறைக்க இருவரும் முயற்சி செய்யுங்கள். பண விவகாரத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்பே இது வாக்குவாதத்தில் போய் முடிய கூடாது என்று இருவரும் முடிவு செய்யுங்கள்.—பைபிள் அறிவுரை: எபேசியர் 4:32.

பட்ஜெட் போடுங்கள்: ஒரு மாதத்திற்கு ஆகும் செலவுகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்ச பணமாக இருந்தாலும் அதை எழுதி வையுங்கள். அப்போது நீங்கள் எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்பதையும் பணத்தை எங்கே வீணடிக்கிறீர்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். ‘இஷ்டத்துக்குச் செலவு செய்வதை நிறுத்த வேண்டும்’ என்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட ஜிம்.

உணவு, உடை, வாடகை, லோன், காப்பீடு போன்ற அடிப்படை தேவைகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் இவற்றிற்கு எவ்வளவு செலவாகும் என்றும் எழுதுங்கள்.—பைபிள் அறிவுரை: லூக்கா 14:28.

“கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.”—நீதிமொழிகள் 22:7.

அடிப்படை தேவைகளுக்கான செலவைத் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளுங்கள். சில தம்பதிகள் ஒவ்வொரு செலவிற்கு தேவைப்படும் தொகையை தனித்தனி கவரில் வைத்துக்கொள்கிறார்கள். * ஒரு கவரிலுள்ள பணம் தீர்ந்துவிட்டால் அதற்காகச் செலவு செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள் அல்லது மற்ற கவரிலிருந்து கொஞ்சம் எடுத்துச் செலவு செய்கிறார்கள்.

பொருளாசையைத் தவிர்த்திடுங்கள். புதுப்புது பொருள்கள் வாங்கினால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள். “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (லூக்கா 12:15) இந்த வார்த்தைகளை நம்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் செலவு செய்யும் விதத்தை வைத்து சொல்லிவிடலாம்.—பைபிள் அறிவுரை: 1 தீமோத்தேயு 6:8.

மாற்றங்களைச் செய்யுங்கள். திருமணமாகி இரண்டு வருடங்களான ஆரென் சொல்கிறார், “கேபிள் டிவிக்கு, ஹோட்டலுக்கு எல்லாம் செலவு செய்றதுனால பட்ஜெட் ஒன்னும் இடிக்காதுனு ஆரம்பத்துல நினைக்கலாம். ஆனா அதனால எவ்வளவு பணம் வீணாகுதுன்னு போகப் போகத்தான் தெரியும். வரவுக்கு ஏத்த செலவு செய்யணும்னா சில விஷயத்த வேண்டான்னு சொல்ல பழகிக்கணும்.” ▪ (g14-E 06)

^ பாரா. 4 இந்தக் கட்டுரை முக்கியமாக புதிதாகக் கல்யாணம் ஆனவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், இதிலுள்ள ஆலோசனைகள் எல்லா தம்பதிகளுக்கும் பொருந்தும்.

^ பாரா. 14 கிரெடிட் கார்ட் மூலமாகவோ வங்கி மூலமாகவோ செலவு செய்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு கவரிலும் அதற்காகும் செலவை எழுதி வைத்துவிடுங்கள்.