Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

விழித்தெழு!  |  ஜனவரி 2014  

 பைபிளின் கருத்து

மனச்சோர்வு

மனச்சோர்வு

மனச்சோர்வு என்றால் என்ன?

“நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.” —சங்கீதம் 38:6.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்:

நாம் எல்லோருமே சிலசமயம் சோகமாக உணரலாம்; ஆனால், க்ளினிக்கல் டிப்ரஷன் எனப்படும் தீரா மனச்சோர்வு எப்போதாவது எட்டிப்பார்க்கும் சோகம் அல்ல, தினசரி வேலைகளைக்கூட செய்ய முடியாதளவுக்கு ஒருவரை அலைக்கழிக்கும் உணர்வு. எது சாதாரணமான சோகம் எது தீரா மனச்சோர்வு என்பதைப் பற்றி வல்லுநர்கள் கொடுக்கும் விளக்கங்கள் வித்தியாசப்படுகின்றன. என்றாலும், மனச்சோர்வால் வாடுபவர்களைச் சோக உணர்ச்சிகள் ஆட்டிப்படைக்கும்; ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்ற உணர்வும் மிதமிஞ்சிய குற்றவுணர்வும் அவர்களை வாட்டிவதைக்கும்.

பைபிள் என்ன சொல்கிறது:

இதுபோன்ற சோக உணர்ச்சிகளோடு போராடிய பலரைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்திற்கு, அன்னாள் என்ற பெண் “மனங்கசந்து” போனதாக பைபிள் குறிப்பிடுகிறது. “மனங்கசந்து” என்ற வார்த்தை ‘மனமுடைந்து,’ ‘துயரம் நிறைந்து’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (1 சாமுவேல் 1:10) எலியா தீர்க்கதரிசி ஒரு சமயம் தாங்க முடியாத துக்கத்தில் இருந்ததால் தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கடவுளிடம் வேண்டினார்.—1 இராஜாக்கள் 19:4.

“சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்” என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. (1 தெசலோனிக்கேயர் 5:14, கத்தோலிக்க பைபிள்) ‘சோர்வுற்றவர்கள்’ என்ற வார்த்தை “வாழ்க்கையின் கவலைகளில் தற்காலிகமாக மூழ்கிப்போயிருப்போரை” குறிக்கலாம் என்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது. பைபிள் காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும்கூட மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 மனச்சோர்வுக்கு யார் காரணம்?

“படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.” —ரோமர் 8:22.

பைபிள் என்ன சொல்கிறது:

இன்று நாம் எதிர்ப்படும் எல்லா விதமான உடல்நல பிரச்சினைகளுக்குக் காரணம் முதல் மனித ஜோடியான ஆதாம்-ஏவாள் செய்த பாவம்தான். “ஒரே மனிதனால் [ஆதாமினால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று ரோமர் 5:12 சொல்கிறது. “குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள்” என்று சங்கீதங்கள் 51:5 (கத்.பை.) சொல்கிறது. ஆதாமிடமிருந்து வந்த அபூரணத்தினால் நாம் எல்லோரும் உடல்ரீதியிலும் உணர்ச்சிரீதியிலும் பாதிக்கப்படுகிறோம். இதனால்தான் “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 8:22) என்றாலும், எந்த மருத்துவராலும் கொடுக்க முடியாத நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது. அதாவது கடவுள் வாக்களித்தபடியே சமாதானமான புதிய உலகத்தில் மனச்சோர்வு உட்பட எல்லா வியாதிகளும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.

மனச்சோர்வை எப்படிச் சமாளிக்கலாம்?

“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” —சங்கீதம் 34:18.

பதிலை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது. சில சமயங்களில் அசம்பாவிதங்கள் நடக்கலாம். (பிரசங்கி 9:11, 12) ஆனாலும், சோகமான உணர்ச்சிகள் உங்களை ஆட்டிப்படைக்காதிருக்க நடைமுறையான காரியங்களைச் செய்யுங்கள்.

பைபிள் என்ன சொல்கிறது:

நோயாளிகளுக்கு மருத்துவர் தேவை என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 5:31) ஆகவே, நீங்கள் தீரா மனச்சோர்வினால் அவதிப்பட்டால் மருத்துவரின் உதவியை நாடுங்கள். அதோடு ஜெபம் செய்வதும் உங்களுக்குத் தெம்பளிக்கும். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என்று சங்கீதம் 55:22 சொல்கிறது. ஜெபம் வெறுமனே மன திருப்திக்காகச் செய்யும் ஒன்றல்ல. உண்மையில் ஜெபம் என்பது யெகோவா தேவனிடம் நம் மனதில் இருப்பதைக் கொட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஜெபத்தை கடவுள் கேட்கிறார். ஏனென்றால் அவர் ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கிறார்.’—சங்கீதம் 34:18.

நெருங்கிய நண்பரிடம் மனம்விட்டு பேசுவதும் உங்களுக்கு ஆறுதலளிக்கும். (நீதிமொழிகள் 17:17) “எனக்கிருந்த மனச்சோர்வ பத்தி பல வருஷமா யார்கிட்டையும் பேசாம இருந்தேன். ஆனா சக கிறிஸ்தவர் ஒருதர் அன்பா பேசி என் மனகஷ்டத்த சொல்லும்படி கேட்டார். மனம்விட்டு பேசுனதுக்கு அப்பறம் என மனசு ரொம்ப லெசா ஆயிடுச்சு. இத நான் எப்போவோ செஞ்சிருக்கணும்” என்கிறார் யெகோவாவின் சாட்சியான டானியேலா.