மெக்ஸிகோ வளைகுடா

ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு, கடலிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது; சுமார் மூன்று மாதங்களுக்கு பெருமளவு எண்ணெயும் வாயுவும் வெளியேறி கடலுக்குள் கலந்தன. கடலில் கலந்த சில நச்சுப் பொருள்கள் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு எங்கே போனதென்றே தெரியவில்லை எனச் சில ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்; மீத்தேனைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அவற்றைச் சாப்பிட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. பெருமளவு எண்ணெய், கடல் படுகைக்குச் சென்றிருக்குமென அவர்கள் நம்புகிறார்கள்.

பெரு

மிகமிகப் பழமையான சோளத்தண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (அவற்றில் ஒன்றை படத்தில் காணலாம்). வடக்கு பெருவில் வசித்த மக்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே சோளப்பொறி, சோளமாவு ஆகியவற்றைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ரஷ்யா

18-35 வயதுக்குட்பட்ட ரஷ்யர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 59 சதவீதத்தினர், “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில சமயம் ஒழுக்க நெறிகளையும் தராதரங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.—ராசிஸ்கயா காஸ்யட்டா செய்தித்தாள்.

இத்தாலி

ஆட்ரியா-ரோவிகோ பகுதியின் பிஷப்பான லூகோ சோராவிட்டோ டே ஃபிராங்கெஸ்கி சொல்கிறபடி, மக்களுடைய வீட்டிற்கே போய் அவர்களை “நேருக்கு நேர் சந்தித்து” ஆன்மீக விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். “கோயில் மணிகளை அடிப்பதை விட்டுவிட்டு வீட்டின் அழைப்பு மணிகளை அடிப்பதுதான் உண்மையான மேய்ப்பு வேலை.”

தென் ஆப்பிரிக்கா

மருத்துவக் குணம் மிக்க காண்டாமிருகத்தின் கொம்பு, கருப்புச் சந்தையில் ஒரு கிலோ சுமார் 36 லட்சமாக (65,000 அமெரிக்க டாலராக) விலை எகிறியிருக்கிறது. 2011-ல், தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே 448 காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடிக் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் கொம்புகளுக்காக ஐரோப்பாவில் உள்ள அருங்காட்சியகங்களும் ஏல நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய மிருகக் காட்சி சாலைகளில் உள்ள காண்டாமிருகங்கள்கூட உயிருக்கு பயந்துதான் வாழ வேண்டியிருக்கிறது! (g13-E 01)

[பக்கம் 3-ன் படம்]

மேலே: Photo by John Kepsimelis, U.S Coast Guard; நடுவே: Courtesy STRI; கீழே: © llukee/Alamy