கிறிஸ்மஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்த அப்போஸ்தலர்களும், சீஷர்களும், அவர்களைப் போன்ற மற்றவர்களும், கிறிஸ்மஸைக் கொண்டாடினார்களா இல்லையா என்று யோசித்திருக்கிறீர்களா? பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது, கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பதைத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

முதலாவது, இயேசுவோ கடவுளுடைய உண்மை வணக்கத்தாரோ பிறந்த நாளைக் கொண்டாடியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. இரண்டு பேருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மட்டுமே பைபிளில் இருக்கின்றன. இவர்கள் இரண்டு பேருமே யெகோவாவை வணங்காதவர்கள். (பைபிளின்படி, யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.) இவர்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மோசமான சம்பவங்கள் நடந்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 40:20; மாற்கு 6:21) “புறமதப் பழக்கமான பிறந்தநாள் கொண்டாட்டங்களை,” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்த்தார்கள் என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

இயேசு எப்போது பிறந்தார்?

இயேசு எப்போது பிறந்தார் என்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. “புதிய ஏற்பாட்டிலிருந்தோ அல்லது வேறு எந்த ஊற்றுமூலத்திலிருந்தோ கிறிஸ்துவின் பிறந்தநாளை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்கள் எழுதிய சைக்ளோப்பீடியா (McClintock and Strong’s Cyclopedia) சொல்கிறது. தன்னைப் பின்பற்றி வந்தவர்கள் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று இயேசு நினைத்திருந்தால், அதைப் பற்றி அவர்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்தியிருப்பார்!

இரண்டாவது, இயேசுவோ அவருடைய சீஷர்களோ கிறிஸ்மஸைக் கொண்டாடியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. “ஃபிலோகேலஸ் என்பவருடைய க்ரோனோகிராஃபில்தான் (Chronograph of Philocalus) கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த க்ரோனோகிராஃப் ஒரு ரோம புத்தகம். இதன் மூலப் பதிவு கி.பி. 336-ஐ சேர்ந்தது” என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆனால், அதற்கு முன்பே பைபிள் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. அதோடு, இயேசுவும் இறந்து சில நூற்றாண்டுகள் கடந்துவிட்டன! அதனால்தான், “கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கடவுள் ஆரம்பித்து வைத்தது கிடையாது என்றும், அதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை என்றும்” மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் சொல்கிறார்கள். *

எந்த நிகழ்ச்சியை அனுசரிக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்னார்?

மிகப் பெரிய போதகரான இயேசு, தன்னைப் பின்பற்றி வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான அறிவுரைகளை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த அறிவுரைகள் பைபிளில் இருக்கின்றன. ஆனால், அவற்றில், கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை. தன்னுடைய மாணவர்கள், கொடுக்கப்பட்ட அறிவுரைகளுக்கு மிஞ்சிப் போவதை ஒரு பள்ளி ஆசிரியர் விரும்ப மாட்டார். அதேபோல், தன்னைப் பின்பற்றுபவர்கள், பரிசுத்த வேதாகமத்தில் ‘எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போவதை’ இயேசுவும் விரும்ப மாட்டார்.—1 கொரிந்தியர் 4:6.

ஆனால், ஆரம்பக் கால கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அதுதான், இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சியை எப்போது அனுசரிக்க வேண்டும் என்று இயேசு தன் சீஷர்களுக்கு அறிவுரை கொடுத்திருக்கிறார். அதை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று செய்தும் காட்டியிருக்கிறார். இந்தத் திட்டவட்டமான அறிவுரைகளும், அவருடைய மரண நாளும் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.—லூக்கா 22:19; 1 கொரிந்தியர் 11:25.

நாம் சிந்தித்தபடி, கிறிஸ்மஸ் என்பது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்கிறது. மற்ற மதங்களிலிருந்து வந்த பழக்கவழக்கங்களை ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதோடு, இயேசுவோ வேறு யாராவதோ கிறிஸ்மஸ் கொண்டாடியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. இந்த விஷயங்களின் அடிப்படையில், கிறிஸ்மஸ் கொண்டாடுவது சரியாக இருக்காது என்பதாக உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ▪

^ பாரா. 6 கிறிஸ்மஸ் பாரம்பரியத்தின் ஆரம்பத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, www.jw.org வெப்சைட்டில் இருக்கிற காவற்கோபுரம் எண் 1, 2016 பொது இதழில் பக்கம் 9-ல் உள்ள “வாசகரின் கேள்வி—கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.