2 நாளாகமம் 25:1-28

25  அமத்சியா ராஜாவானபோது அவருக்கு 25 வயது; அவர் எருசலேமில் 29 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் யோவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+  யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை அமத்சியா செய்துவந்தார், ஆனால், முழு இதயத்தோடு செய்யவில்லை.  ஆட்சி அதிகாரம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், ராஜாவாக இருந்த தன் அப்பாவைக் கொன்றுபோட்ட ஊழியர்களை அமத்சியா கொன்றுபோட்டார்.+  ஆனால், அவர்களுடைய மகன்களைக் கொல்லவில்லை. ஏனென்றால், திருச்சட்டத்தில் எழுதப்பட்ட கட்டளைக்கு, அதாவது மோசேயின் புத்தகத்தில் யெகோவா கொடுத்த கட்டளைக்கு, அவர் கீழ்ப்படிந்தார். “பிள்ளைகள் செய்த பாவத்துக்காக அப்பா சாகக் கூடாது, அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் சாகக் கூடாது. ஒருவன் செய்த பாவத்துக்காக அவன்தான் சாக வேண்டும்”+ என்று கடவுள் அதில் கட்டளையிட்டிருந்தார்.  யூதா வீரர்கள் எல்லாரையும் அமத்சியா ஒன்றுகூட்டினார்; பின்பு, யூதாவிலும் பென்யமீனிலும் இருந்த வீரர்கள் எல்லாரையும் தந்தைவழிக் குடும்பம்வாரியாக நிற்க வைத்தார். ஆயிரம் பேருக்குத் தலைவர்கள், நூறு பேருக்குத் தலைவர்கள் ஆகியோரின் கீழ் அவர்களை நிற்க வைத்தார்.+ இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள ஆண்கள்+ எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து பதிவு செய்தார்; படையில் சேவை செய்ய பயிற்சி பெற்ற வீரர்கள் 3,00,000 பேர் இருந்தார்கள். பெரிய ஈட்டியும் பெரிய கேடயமும் பிடித்துக்கொண்டு போர் செய்வதில் அவர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள்.  அதோடு, 100 தாலந்து* வெள்ளியைக் கூலியாகக் கொடுத்து 1,00,000 மாவீரர்களை இஸ்ரவேலிலிருந்து வரவழைத்தார்.  அப்போது, உண்மைக் கடவுளின் ஊழியர் ஒருவர் வந்து, “ராஜாவே, இஸ்ரவேலுக்கு யெகோவா துணையாக இல்லை,+ எப்பிராயீமைச் சேர்ந்தவர்களுக்கு அவர் துணையாக இல்லை. அதனால், இஸ்ரவேல் படையை உங்களுடன் கூட்டிக்கொண்டு போகாதீர்கள்.  நீங்கள் மட்டும் போய், தைரியமாகப் போர் செய்யுங்கள். இவர்களையும் கூட்டிக்கொண்டு போனால், கடவுள் உங்களைத் தோற்றுப்போக வைப்பார். ஏனென்றால், கடவுளால் உதவி செய்யவும் முடியும்,+ தோற்றுப்போக வைக்கவும் முடியும்” என்று சொன்னார்.  அதற்கு அமத்சியா, “ஆனால், இஸ்ரவேல் வீரர்களுக்கு 100 தாலந்து கொடுத்துவிட்டேனே” என்று உண்மைக் கடவுளின் ஊழியரிடம் சொன்னார். அதற்கு அவர், “யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”+ என்று சொன்னார். 10  அப்போது, எப்பிராயீமிலிருந்து வந்த வீரர்களை அவர்களுடைய ஊருக்கே அமத்சியா திருப்பி அனுப்பிவிட்டார். அதனால், யூதாமீது அவர்கள் பயங்கரமாகக் கோபப்பட்டு, கொதிப்புடன் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போனார்கள். 11  அமத்சியா தைரியமடைந்து, தன்னுடைய படைவீரர்களைக் கூட்டிக்கொண்டு உப்புப் பள்ளத்தாக்குக்குப்+ போனார்; அங்கே சேயீரைச் சேர்ந்த 10,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ 12  10,000 பேரை யூதா வீரர்கள் உயிரோடு பிடித்தார்கள். பின்பு, அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோய் அங்கிருந்து கீழே தள்ளினார்கள். அவர்கள் எல்லாரும் உடல் சிதறி செத்துப்போனார்கள். 13  போருக்கு வர வேண்டாம் என்று சொல்லி அமத்சியா திருப்பி அனுப்பிய வீரர்கள்,+ யூதா நகரங்கள்மீது திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். சமாரியாமுதல்+ பெத்-ஓரோன்வரை+ தாக்குதல் நடத்தி 3,000 பேரைக் கொன்றுபோட்டார்கள்; அதோடு, ஏராளமான பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு போனார்கள். 14  ஏதோமியர்களைக் கொன்றுவிட்டு அமத்சியா திரும்பி வந்தபோது, சேயீர் மக்கள் வழிபட்ட தெய்வங்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்; அவற்றை வழிபட ஆரம்பித்தார்.+ அவற்றுக்கு முன்னால் தலைவணங்கினார், பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார். 15  அதனால், அமத்சியாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியை அமத்சியாவிடம் அனுப்பினார். அந்தத் தீர்க்கதரிசி அவரிடம் வந்து, “நீங்கள் வழிபடுகிற மற்ற தேசத்து தெய்வங்களால் தங்களுடைய சொந்த மக்களைக்கூட உங்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவற்றைப் போய் ஏன் வணங்குகிறீர்கள்?”+ என்று கேட்டார். 16  அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜா அவரிடம், “போதும் நிறுத்து!+ உன்னிடம் நான் ஆலோசனை கேட்டேனா?+ இதற்கு மேல் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று சொன்னார். அப்போது அந்தத் தீர்க்கதரிசி, “நீங்கள் சிலைகளை வணங்குகிறீர்கள்; நான் சொன்ன ஆலோசனையையும் கேட்கவில்லை. அதனால், உங்களை அழிப்பதற்குக் கடவுள் முடிவுசெய்துவிட்டார்”+ என்று சொல்லிவிட்டு பேசுவதை நிறுத்தினார். 17  அமத்சியா தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசிய பின்பு, இஸ்ரவேலின் ராஜாவான யெகூவின் பேரனும் யோவாகாசின் மகனுமான யோவாசிடம் தூதுவர்களை அனுப்பி, “போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதலாம் வா”+ என்று சொன்னார். 18  அதற்கு இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் யூதாவின் ராஜாவான அமத்சியாவுக்கு இப்படிச் செய்தி அனுப்பினார்: “லீபனோனில் இருக்கிற முட்செடி அங்கிருக்கிற தேவதாரு மரத்துக்குச் செய்தி அனுப்பி, ‘உன்னுடைய மகளை என் மகனுக்குக் கல்யாணம் செய்து கொடு’ என்று கேட்டதாம். ஆனால், லீபனோனில் இருக்கிற காட்டு மிருகம் அந்த வழியாகப் போனபோது அந்த முட்செடியை மிதித்துப் போட்டதாம். 19  ‘ஏதோமைத் தோற்கடித்துவிட்டேன், பார்!’+ என்று சொன்னாய். அதனால், தலைக்கனத்தோடு ஆடுகிறாய், பேர்புகழுக்காக அலைகிறாய். இப்போது ஒழுங்காக உன் வீட்டிலேயே* இரு. நீ ஏன் உனக்கு அழிவைத் தேடிக்கொள்கிறாய், உன்னோடு சேர்த்து ஏன் யூதாவையும் அழிக்கப் பார்க்கிறாய்?” 20  ஆனால், அமத்சியா அவர் பேச்சைக் கேட்கவில்லை;+ உண்மைக் கடவுளால்தான் இப்படி நடந்தது. ஏதோமின் தெய்வங்களை வழிபட்டதால்,+ எதிரியிடம் அவர்கள் தோற்றுப்போக வேண்டுமெனக் கடவுள் தீர்மானித்திருந்தார்.+ 21  அதனால், இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் போருக்குப் போனார். அவரும் யூதாவின் ராஜாவான அமத்சியாவும் யூதாவுக்குச் சொந்தமான பெத்-ஷிமேசில்+ நேருக்கு நேர் சண்டை போட்டார்கள். 22  யூதாவைச் சேர்ந்த வீரர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய், அவரவருடைய வீடுகளுக்கு* தப்பித்து ஓடினார்கள். 23  யோவாகாசின்* பேரனும் யோவாசின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய அமத்சியாவை இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் பெத்-ஷிமேசில் பிடித்தார். பின்பு, அவரை எருசலேமுக்குக் கொண்டுவந்தார். எருசலேம் மதில் சுவரை ‘எப்பிராயீம் நுழைவாசல்’+ தொடங்கி ‘மூலை நுழைவாசல்’+ வரை 400 முழ* நீளத்துக்கு யோவாஸ் இடித்துப்போட்டார். 24  உண்மைக் கடவுளின் ஆலயத்தில் ஓபேத்-ஏதோமின் பொறுப்பில் இருந்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும், மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டார். ராஜாவின் அரண்மனை கஜானாக்களில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டார்.+ சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப் போனார். 25  இஸ்ரவேலின் ராஜா யோவாகாசின்+ மகன் யோவாஸ்+ இறந்த பின்பு, யூதாவின் ராஜாவான யோவாசின் மகன் அமத்சியா+ 15 வருஷங்களுக்கு உயிரோடு இருந்தார். 26  ஆரம்பம்முதல் முடிவுவரை அமத்சியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 27  அமத்சியா யெகோவாவை விட்டு விலகிய சமயத்திலிருந்தே, எருசலேமில் அவருக்கு எதிராகச் சிலர் சதித்திட்டம் தீட்டினார்கள்.+ அதனால், அவர் லாகீசுக்குத் தப்பித்துப் போனார். ஆனாலும், அவருக்குப் பின்னாலேயே ஆட்களை அனுப்பி லாகீசில் அவரைக் கொன்றுபோட்டார்கள். 28  குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அவருடைய உடலைக் கொண்டுவந்து, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவின் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “அரண்மனையிலேயே.”
நே.மொ., “கூடாரங்களுக்கு.”
அகசியா என்றும் அழைக்கப்படுகிறார்.
சுமார் 584 அடி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா