1 ராஜாக்கள் 12:1-33

12  ரெகொபெயாம் சீகேமுக்குப்+ போனார். ஏனென்றால், அவரை ராஜாவாக்க இஸ்ரவேலர்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தார்கள்.+  இந்த விஷயத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாம் கேள்விப்பட்டார்; (அந்தச் சமயத்தில், அவர் எகிப்தில் இருந்தார்; முன்பு சாலொமோன் ராஜாவுக்குப் பயந்து அவர் எகிப்துக்கு ஓடிப்போயிருந்தார்.)+  உடனே, இஸ்ரவேலர்கள் ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார்கள். பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேல் சபையார் எல்லாரும் ரெகொபெயாமிடம் வந்து,  “உங்களுடைய அப்பா எங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார்.+ நீங்கள் அந்தச் சுமையைக் குறைத்து எங்களுடைய வேலையைச் சுலபமாக்கினால், நாங்கள் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்று சொன்னார்கள்.  அதற்கு அவர், “சரி, நீங்கள் போய்விட்டு மூன்றாம் நாள் என்னை வந்து பாருங்கள்” என்று சொன்னார்; அவர்களும் அங்கிருந்து போனார்கள்.+  அப்போது ரெகொபெயாம் ராஜா பெரியோர்களிடம்,* அதாவது தன்னுடைய அப்பாவான சாலொமோனின் காலத்தில் ஆலோசகர்களாக இருந்தவர்களிடம், “இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், “மக்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நல்ல பதில் சொல்லுங்கள். இன்றைக்கு நீங்கள் அவர்களுக்குச் சேவை செய்தால் அவர்கள் என்றைக்கும் உங்களுக்குச் சேவை செய்வார்கள்” என்று சொன்னார்கள்.  ஆனால், பெரியோர்கள் கொடுத்த ஆலோசனையை அவர் ஒதுக்கித்தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து இப்போது தனக்குச் சேவை செய்கிற இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டார்.+  அவர்களிடம், “‘எங்கள்மீது உங்களுடைய அப்பா சுமத்திய பாரமான சுமையைக் குறைக்க வேண்டும்’ என்று மக்கள் கேட்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம், உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார். 10  அதற்கு அந்த இளைஞர்கள், “‘உங்களுடைய அப்பா சுமத்திய பாரமான சுமையைக் குறைக்க வேண்டும்’ என்று கேட்டவர்களிடம், ‘என் அப்பாவைவிட நான் ரொம்பக் கண்டிப்பானவன்.* 11  என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன். என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். 12  “மூன்றாம் நாள் என்னை வந்து பாருங்கள்”+ என்று ரெகொபெயாம் ராஜா சொன்னபடியே யெரொபெயாமும் மற்ற எல்லாரும் அவரிடம் வந்தார்கள். 13  அப்போது ராஜா அவர்களிடம் கடுமையாகப் பேசினார், பெரியோர்கள் கொடுத்த ஆலோசனையை ஒதுக்கித்தள்ளிவிட்டார். 14  இளைஞர்கள் கொடுத்த ஆலோசனைப்படியே, “என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன். என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்” என்று அந்த மக்களிடம் சொன்னார். 15  மக்களின் வேண்டுகோளை ராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. இதெல்லாம் யெகோவாவின் செயலாக இருந்தது.+ சீலோனியரான அகியா மூலம் நேபாத்தின் மகனான யெரொபெயாமிடம் தான் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக யெகோவா இப்படிச் செய்தார். 16  தங்களுடைய வேண்டுகோளை ராஜா ஏற்றுக்கொள்ளாததால் இஸ்ரவேலர்கள் எல்லாரும் ராஜாவைப் பார்த்து, “எங்களுக்கும் தாவீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. தன்னுடைய சொத்தை ஈசாயின் மகனே வைத்துக்கொள்ளட்டும். இஸ்ரவேலர்களே, நீங்கள் போய் உங்கள் தெய்வங்களை வழிபடுங்கள். தாவீதே, உன்னுடைய வம்சத்தை மட்டும் பார்த்துக்கொள்” என்று சொன்னார்கள். இப்படிச் சொல்லிவிட்டு இஸ்ரவேலர்கள் தங்களுடைய வீடுகளுக்கு* திரும்பிப் போனார்கள்.+ 17  ஆனால், யூதாவின் நகரங்களில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை ரெகொபெயாம் ஆட்சி செய்துவந்தார்.+ 18  பின்பு, அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதிகாரியான அதோராமை+ இஸ்ரவேலர்களிடம் ரெகொபெயாம் ராஜா அனுப்பினார். அவர்கள் எல்லாரும் அதோராமைக் கல்லெறிந்து கொன்றார்கள். ஆனால், ரெகொபெயாம் ராஜா எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடைய ரதத்தில் ஏறி எருசலேமுக்குப் போய்விட்டார்.+ 19  இன்றுவரை தாவீதின் வம்சத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.+ 20  யெரொபெயாம் திரும்பி வந்த விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரிந்ததும் அவர்கள் ஒன்றுகூடி வந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு அவரை வரவழைத்து இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக்கினார்கள்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரும் தாவீதின் வம்சத்தாருக்கு ஆதரவு கொடுக்கவில்லை.+ 21  சாலொமோனின் மகன் ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தவுடனே, போர்ப் பயிற்சி பெற்ற 1,80,000 வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் கோத்திரத்திலிருந்தும் ஒன்றுதிரட்டினார். இஸ்ரவேல் மக்களுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காக அப்படிச் செய்தார்.+ 22  அப்போது உண்மைக் கடவுள், தீர்க்கதரிசி* செமாயாவிடம்,+ 23  “யூதாவின் ராஜாவான சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும் யூதா வம்சத்தார் எல்லாரிடமும் பென்யமீன் வம்சத்தாரிடமும் மற்றவர்களிடமும் நீ போய், 24  ‘உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. அவரவர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும். ஏனென்றால், நான்தான் இப்படி நடக்க வைத்தேன்’ என்று யெகோவா சொல்வதாகச் சொல்”+ என்றார். அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். யெகோவா சொன்னபடியே தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். 25  பின்பு, யெரொபெயாம் எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த சீகேம் நகரத்தைக்+ கட்டி* அங்கே குடியேறினார். அங்கிருந்து போய் பெனூவேல் நகரத்தைக் கட்டினார்.+ 26  பின்பு யெரொபெயாம், “இஸ்ரவேல் முழுவதும் தாவீதின் வம்சத்தாருடைய கையில் போய்விடாமல் இருக்க நான் ஏதாவது செய்ய வேண்டும்.+ 27  யெகோவாவின் ஆலயத்தில் பலி கொடுக்க இந்த மக்கள் தொடர்ந்து எருசலேமுக்குப் போய்வந்தால்,+ காலப்போக்கில் இவர்களுடைய இதயம் தங்கள் எஜமானாகிய ரெகொபெயாம் பக்கம் சாய்ந்துவிடும். பின்பு, அவர்கள் என்னைக் கொன்றுவிட்டு யூதாவின் ராஜாவான ரெகொபெயாமுடன் சேர்ந்துவிடுவார்கள்” என்று நினைத்தார். 28  அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29  அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார். 30  மக்கள் பாவக்குழியில் விழுவதற்கு இது காரணமானது.+ தாணில் இருந்த கன்றுக்குட்டியை வழிபட மக்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்தார்கள். 31  ஆராதனை மேடுகளில் கோயில்களைக் கட்டி, லேவியராக இல்லாதவர்களைக் குருமார்களாக யெரொபெயாம் நியமித்தார்.+ 32  யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப் போலவே ஒரு பண்டிகையை எட்டாம் மாதம் 15-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார்.+ பெத்தேலில்+ தான் கட்டிய பலிபீடத்தில் அந்தக் கன்றுக்குட்டிகளுக்குப் பலி கொடுத்தார். பெத்தேலில் தான் கட்டிய ஆராதனை மேடுகளில் சேவை செய்ய குருமார்களை நியமித்தார். 33  இஸ்ரவேல் மக்கள் பண்டிகை கொண்டாடுவதற்கு எட்டாம் மாதத்தை அவராகவே தேர்ந்தெடுத்தார். அந்த மாதம் 15-ஆம் தேதியில் அங்கே பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். பலிபீடத்தின் மேல் ஏறி பலிகளைக் கொடுத்து, அவற்றின் புகையை எழும்பிவரச் செய்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களிடம்.”
நே.மொ., “என் அப்பாவின் இடுப்பைவிட என்னுடைய சுண்டுவிரல் பருமனாக இருக்கும்.”
நே.மொ., “கூடாரங்களுக்கு.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் மனிதரான.”
வே.வா., “வலுப்படுத்தி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா