1 நாளாகமம் 17:1-27

17  தாவீது தன்னுடைய அரண்மனைக்குக் குடிவந்தவுடன் நாத்தான்+ தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில் நான் குடியிருக்கிறேன்,+ ஆனால் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது”+ என்று சொன்னார்.  அதற்கு நாத்தான், “உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், உண்மைக் கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்” என்று சொன்னார்.  அன்று ராத்திரியே நாத்தானிடம் கடவுள் பேசினார்.  “என் ஊழியன் தாவீதிடம் நீ போய், ‘யெகோவா சொல்வது என்னவென்றால்: “நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை நீ கட்டப்போவதில்லை.+  இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்தில் குடியிருக்கவில்லையே; ஒரு கூடாரத்திலிருந்து இன்னொரு கூடாரத்துக்கும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும் மாறிக்கொண்டேதான் இருந்தேன்.+  இவ்வளவு காலமாக இஸ்ரவேலர்களோடு இருந்தும், அவர்களை வழிநடத்துவதற்கு நான் நியமித்த நியாயாதிபதிகள் யாரிடமாவது, ‘ஏன் எனக்காக தேவதாரு மரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டவில்லை?’ என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா? என்று சொல்.”’  அதோடு நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக் கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+  அதனால், நீ எங்கே போனாலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன்.+ உன் எதிரிகள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுவேன்.+ இந்தப் பூமியில் வாழ்ந்த மாமனிதர்களைப் போல நீ பேரும் புகழும் பெறுவாய்.+  என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களை ஒரே இடத்தில் குடியிருக்க வைப்பேன். அங்கே அவர்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வார்கள். முன்பு கெட்டவர்கள் அவர்களை அடக்கி ஒடுக்கியதுபோல் இனிமேல் ஒடுக்க மாட்டார்கள்.+ 10  இஸ்ரவேலர்களுக்கு நான் நியாயாதிபதிகளை ஏற்படுத்திய காலத்தில்+ அடக்கி ஒடுக்கியதுபோல் அவர்களை ஒடுக்க மாட்டார்கள். உன் எதிரிகள் எல்லாரையும் தோற்கடிப்பேன்.+ அதோடு, ‘யெகோவா உன் வம்சத்தை ராஜ வம்சமாக்குவார்.’* 11  நீ இறந்து உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு, உன் சந்ததியை, உன் மகன்களில் ஒருவனை,+ ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ 12  அவன்தான் எனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+ 13  நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ உனக்கு முன்பு இருந்தவனுக்கு+ மாறாத அன்பு காட்டுவதை நிறுத்திக்கொண்டது போல அவனுக்குச் செய்ய மாட்டேன்.+ 14  அவனை என் சிம்மாசனத்தில் உட்கார வைத்து என்றென்றும் ஆட்சி செய்ய வைப்பேன்.+ அவனுடைய ஆட்சியையும் ராஜ வம்சத்தையும் என்றென்றும் நிலைக்கச் செய்வேன்”+ என்று சொல்’” என்றார். 15  தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார். 16  அதைக் கேட்டதும் தாவீது ராஜா உள்ளே போய் யெகோவாவுக்கு முன்னால் உட்கார்ந்து, “யெகோவா தேவனே, எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்னை இந்தளவு உயர்த்தியிருக்கிறீர்களே!+ 17  தேவனே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள்.+ யெகோவா தேவனே, ஒரு பெரிய மனிதனைப் பார்ப்பதுபோல்* என்னைப் பார்க்கிறீர்களே. 18  உங்கள் ஊழியனாகிய என்னைப் பற்றித்தான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே,+ அப்படியிருக்கும்போது நீங்கள் எனக்குக் கொடுத்த கௌரவத்தைப் பற்றி நான் வேறென்ன சொல்ல முடியும்? 19  யெகோவாவே, உங்களுடைய ஊழியனாகிய எனக்காக நீங்கள் இதையெல்லாம் செய்திருக்கிறீர்கள். அதோடு, உங்கள் இதயத்தின் விருப்பப்படியே* இந்த மாபெரும் செயல்களைச் செய்து உங்களுடைய மகத்துவத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.+ 20  யெகோவாவே, உங்களுக்குச் சமமானவர் யாருமில்லை.+ உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ நாங்கள் எங்களுடைய காதால் கேட்ட எல்லாவற்றையும் வைத்து இதை ஆணித்தரமாக நம்புகிறோம். 21  உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்களைப் போல் இந்த உலகத்தில் வேறெந்த மக்கள் இருக்கிறார்கள்?*+ உண்மைக் கடவுளே, இஸ்ரவேலர்களை உங்களுடைய சொந்த மக்களாக ஆக்குவதற்கென்று நீங்களே போய் அவர்களை விடுவித்து வந்தீர்களே,+ அற்புதங்களையும் பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்து உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்தீர்களே.+ நீங்கள் எகிப்திலிருந்து விடுவித்த உங்கள் மக்களின் கண் முன்னால் மற்ற தேசத்து மக்களை விரட்டியடித்தீர்களே.+ 22  இஸ்ரவேலர்களை என்றென்றும் உங்களுடைய சொந்த மக்களாக ஆக்கினீர்கள்.+ யெகோவாவே, நீங்கள் அவர்களுடைய கடவுளானீர்கள்.+ 23  யெகோவாவே, உங்களுடைய ஊழியனையும் அவனுடைய வம்சத்தையும் பற்றி நீங்கள் கொடுத்த வாக்கை என்றென்றும் நிறைவேற்றுங்கள்; நீங்கள் சொன்னபடியே செய்யுங்கள்.+ 24  உங்களுடைய பெயர் எப்போதும் நிலைத்திருக்கட்டும், என்றென்றும் உயர்ந்தோங்கட்டும்;+ ‘இஸ்ரவேலின் கடவுள்தான், பரலோகப் படைகளின் யெகோவாதான், இஸ்ரவேல் மக்களின் கடவுள்’ என்று எல்லாரும் சொல்லட்டும். உங்களுடைய ஊழியனான தாவீதின் ராஜ வம்சம் உங்கள் முன்னால் எப்போதும் நிலைக்கட்டும்.+ 25  என் தேவனே, உங்கள் ஊழியனின் வம்சத்தை ராஜ வம்சமாக்க வேண்டுமென்ற உங்கள் நோக்கத்தைத் தெரியப்படுத்தினீர்களே. அந்த நம்பிக்கையில்தான் உங்களுடைய ஊழியனாகிய நான் இப்படி வேண்டிக்கொள்கிறேன். 26  யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய ஊழியனைப் பற்றிய இந்த நல்ல விஷயங்களை வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான். 27  உங்கள் ஊழியனுடைய வம்சத்தைத் தயவுசெய்து ஆசீர்வதியுங்கள். அது உங்களுக்கு முன்னால் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். யெகோவாவே, உங்கள் ஊழியனுடைய வம்சத்தை ஆசீர்வதித்திருக்கிறீர்கள், அது என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கட்டும்!” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உனக்கு ஒரு வீட்டை உண்டாக்குவார்.”
வே.வா., “உயர் பதவியிலுள்ள ஒருவனைப் போல்.”
வே.வா., “உங்கள் சித்தத்தின்படியே.”
நே.மொ., “தேசம் இருக்கிறது?”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா