1 சாமுவேல் 1:1-28

1  எப்பிராயீம்+ மலைப்பகுதியைச் சேர்ந்த ராமாத்தாயீம்-சோப்பீமில்*+ எல்க்கானா+ என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் ஓர் எப்பிராயீமியர்.* அவர் சூப் என்பவருக்குப் பிறந்த தோகுவின் கொள்ளுப்பேரன், எலிகூவின் பேரன், எரோகாமின் மகன்.  அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தி பெயர் அன்னாள், இன்னொருத்தி பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள், ஆனால் அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை.  பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்கி அவருக்குப் பலி செலுத்த எல்க்கானா வருஷா வருஷம் சீலோவுக்குப் போனார்.+ ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ சீலோவில் யெகோவாவின் சன்னிதியில் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.+  ஒருநாள், எல்க்கானா பலி செலுத்திவிட்டு, அந்தப் பலியின் பங்குகளைத் தன்னுடைய மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் கொடுத்தார்.+  அதேசமயத்தில், அன்னாளுக்கு ஒரு விசேஷ பங்கு கொடுத்தார். ஏனென்றால், அவளைத்தான் அவர் ரொம்பவே நேசித்தார். ஆனால், யெகோவா அவளுக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை.  அதுமட்டுமல்ல, யெகோவா அவளுக்குக் குழந்தை பாக்கியம் தராததைக் குத்திக்காட்டி பெனின்னாள் அவளை நோகடித்தாள், அவளைப் பழித்துப் பேசிக்கொண்டே இருந்தாள்.  வருஷா வருஷம் யெகோவாவின் சன்னிதிக்கு அன்னாள் போனபோதெல்லாம்+ இப்படித்தான் அவள் செய்தாள். அன்னாளுக்குக் குழந்தை இல்லாததை ரொம்பவே குத்திக்காட்டினாள். அதனால் வேதனை தாங்காமல் அன்னாள் அழுதுகொண்டே இருந்தாள், சாப்பிடவே இல்லை.  அவளுடைய கணவர் எல்க்கானா அவளிடம், “அன்னாள், ஏன் சாப்பிடாமல் அழுதுகொண்டிருக்கிறாய்? ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய்? 10 மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் இல்லையா?” என்று கேட்டார்.  அவர்கள் சீலோவில் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். பின்பு அங்கிருந்து அன்னாள் எழுந்து போனாள். அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய ஆலயத்தின்*+ கதவுக்குப் பக்கத்தில் குருவாகிய ஏலி ஓர் இருக்கையில் உட்கார்ந்திருந்தார். 10  அன்னாள் ரொம்பவே மனமுடைந்துபோயிருந்தாள். அதனால், தேம்பித் தேம்பி அழுதுகொண்டே யெகோவாவிடம் ஜெபம் செய்தாள்.+ 11  அப்போது அவள், “பரலோகப் படைகளின் யெகோவாவே, உங்களுடைய அடிமைப்பெண் படுகிற வேதனையைப் பாருங்கள். இந்த அடிமைப்பெண்ணை மறக்காமல் நினைத்துப் பார்த்து ஒரு ஆண்குழந்தையைக் கொடுங்கள்.+ யெகோவாவே, அவனை வாழ்நாள் முழுக்க உங்களுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். அவனுடைய தலைமுடியை நாங்கள் வெட்டவே மாட்டோம்”+ என்று நேர்ந்துகொண்டாள். 12  அவள் ரொம்ப நேரம் யெகோவாவிடம் ஜெபம் செய்துகொண்டிருந்தாள். அப்போது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டே இருந்தார். 13  அன்னாள் தன்னுடைய உள்ளத்தில் வேண்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் மட்டும்தான் துடித்தன, வெளியே சத்தம் கேட்கவில்லை. அதனால், அவள் குடிபோதையில் இருப்பதாக ஏலி நினைத்துக்கொண்டார். 14  உடனே ஏலி அவளிடம், “ஏன் இப்படிக் குடித்துவிட்டு வந்திருக்கிறாய்? போதை தெளிந்த பிறகு வா” என்று சொன்னார். 15  அதற்கு அன்னாள், “அப்படியில்லை, என் எஜமானே! நான் ரொம்ப வேதனையில் இருக்கிறேன். நான் மதுபானம் எதுவும் குடிக்கவில்லை. என் இதயத்தில் இருப்பதைத்தான் யெகோவாவிடம் கொட்டிக்கொண்டிருந்தேன்.+ 16  உங்களுடைய அடிமைப்பெண்ணை மட்டமாக நினைத்துவிடாதீர்கள். நான் இவ்வளவு நேரமாக ரொம்பத் துக்கத்தோடும் வேதனையோடும்தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன்” என்று சொன்னாள். 17  அப்போது ஏலி, “நிம்மதியாகப் போ. நீ வேண்டிக்கொண்டதை+ இஸ்ரவேலின் கடவுள் உனக்குத் தருவார்” என்று சொன்னார். 18  அதற்கு அவள், “இந்த அடிமைப்பெண்ணுக்கு எப்போதும் உங்கள் கருணை கிடைக்க வேண்டும்” என்று சொன்னாள். பின்பு அங்கிருந்து போய், சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பிறகு அவள் முகம் வாடியிருக்கவில்லை. 19  அவர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து யெகோவாவை வணங்கினார்கள். பின்பு, ராமாவிலுள்ள தங்களுடைய வீட்டுக்குத்+ திரும்பிப் போனார்கள். எல்க்கானா தன்னுடைய மனைவி அன்னாளுடன் உறவுகொண்டார். யெகோவா அவளுடைய வேண்டுதலை நினைத்துப் பார்த்தார்.+ 20  ஒரு வருஷத்துக்குள்* அவள் கர்ப்பமடைந்து ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது அவள், “இவனை யெகோவாவிடம் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி, குழந்தைக்கு சாமுவேல்* என்று பெயர் வைத்தாள்.+ 21  பிற்பாடு எல்க்கானா, யெகோவாவுக்கு வருடாந்தர பலியைச் செலுத்தவும்+ நேர்ந்துகொண்ட பலியைச் செலுத்தவும் தன்னுடைய குடும்பத்தாரோடு புறப்பட்டார். 22  ஆனால், அன்னாள் அவருடன் போகவில்லை.+ அவள் அவரிடம், “பிள்ளை தாய்ப்பால் மறந்தவுடனே அவனை யெகோவாவின் சன்னிதிக்குக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அதன் பின்பு அவன் அங்கேயே இருந்து சேவை செய்யட்டும்”+ என்று அவரிடம் சொன்னாள். 23  அதற்கு அவளுடைய கணவர் எல்க்கானா, “உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதையே செய். அவன் தாய்ப்பால் மறக்கும்வரை வீட்டிலேயே இரு. நீ சொன்னது போல எல்லாம் நல்லபடியாக நடப்பதற்கு யெகோவா உதவி செய்யட்டும்” என்றார். அதனால், அவள் தன்னுடைய வீட்டில் தங்கியிருந்து, அவன் தாய்ப்பால் மறக்கும்வரை அவனுக்குப் பாலூட்டினாள். 24  அந்தச் சிறுவன் தாய்ப்பால் மறந்தவுடன் அவனைக் கூட்டிக்கொண்டு சீலோவிலுள்ள யெகோவாவின் சன்னிதிக்குப்+ போனாள். அப்போது, மூன்று வயது காளையையும் ஒரு எப்பா அளவு* மாவையும் ஒரு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும் கொண்டுபோனாள்.+ 25  அவர்கள் அந்தக் காளையைப் பலி கொடுத்த பின்பு சிறுவனை ஏலியிடம் கொண்டுவந்தார்கள். 26  அப்போது அவள், “என் எஜமானே, உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இங்கே உங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு யெகோவாவிடம் ஜெபம் செய்த பெண்+ நான்தான். 27  இந்தப் பிள்ளைக்காகத்தான் நான் ஜெபம் செய்தேன். யெகோவா நான் கேட்டதைக் கொடுத்துவிட்டார்.+ 28  இப்போது நான் இவனை யெகோவாவுக்கே திரும்பக் கொடுக்கிறேன். வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்குச் சேவை செய்ய இவனை அர்ப்பணிக்கிறேன்” என்று சொன்னாள். அங்கே அவர்* யெகோவாவை வணங்கினார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ராமாவில் சோப்பீமியரான.”
எப்பிராயீம் பிரதேசத்தில் குடியிருந்ததால் எப்பிராயீமியர் என்று அழைக்கப்பட்டார், உண்மையில் இவர் ஒரு லேவியர்.
அதாவது, “வழிபாட்டுக் கூடாரத்தின்.”
அல்லது, “குறித்த காலத்தில்.”
அர்த்தம், “கடவுளுடைய பெயர்.”
அதாவது, “சுமார் 10 கிலோ.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
அநேகமாக, “எல்க்கானா.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா