யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 2:1-29

2  “எபேசு+ சபையின் தூதருக்கு+ நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தன்னுடைய வலது கையில் பிடித்திருக்கிறவரும் ஏழு தங்கக் குத்துவிளக்குகளின் நடுவில் நடக்கிறவரும்+ சொல்வது இதுதான்:  ‘உன் செயல்களையும் உழைப்பையும் சகிப்புத்தன்மையையும் நான் அறிந்திருக்கிறேன். கெட்டவர்களை நீ பொறுத்துக்கொள்வதில்லை என்பதும், அப்போஸ்தலர்களாக இல்லாவிட்டாலும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களைச் சோதித்துப் பார்த்து+ அவர்கள் பொய் பேசுகிறவர்கள் என்று கண்டுபிடித்தாய் என்பதையும் அறிந்திருக்கிறேன்.  நீ சகிப்புத்தன்மையையும் காட்டுகிறாய். என்னுடைய பெயருக்காக+ எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, சோர்ந்துபோகாமல் இருக்கிறாய்.+  ஆனாலும், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அன்பை நீ விட்டுவிட்டாய்.  அதனால், நீ எந்த நிலையிலிருந்து விழுந்தாய் என்று நினைத்துப் பார்த்து, மனம் திருந்தி,+ ஆரம்பத்தில் செய்துவந்த செயல்களைச் செய். நீ மனம் திருந்தவில்லை என்றால்,+ நான் உன்னிடம் வந்து, உன் குத்துவிளக்கை+ அதன் இடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.  இருந்தாலும், உன்னிடம் இன்னொரு நல்ல விஷயத்தையும் பார்க்கிறேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதப்பிரிவைச்+ சேர்ந்தவர்களுடைய செயல்களை நீயும் வெறுக்கிறாய்.  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்:+ ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு,+ கடவுளுடைய பூஞ்சோலையில் இருக்கிற வாழ்வுக்கான மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பேன்.’+  சிமிர்னா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ‘முதலானவரும் கடைசியானவரும்,’+ மரணமடைந்து உயிரோடு எழுந்தவரும்+ சொல்வது இதுதான்:  ‘நீ உபத்திரவப்படுகிறாய் என்றும், வறுமையில் வாடுகிறாய் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், நீ பணக்காரனாக இருக்கிறாய்.+ யூதர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கடவுளை நிந்திப்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் உண்மையில் யூதர்கள் அல்ல, சாத்தானுடைய கூட்டத்தை* சேர்ந்தவர்கள்.+ 10  உனக்கு வரப்போகிற கஷ்டங்களை நினைத்து பயப்படாதே.+ இதோ! உங்களை முழுமையாய்ச் சோதிப்பதற்காகப் பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் தள்ளிக்கொண்டே இருப்பான். பத்து நாட்கள் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். நீ சாகும்வரை உண்மையோடு இரு, அப்போது வாழ்வுக்கான கிரீடத்தை நான் உனக்குத் தருவேன்.+ 11  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்:+ ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு+ இரண்டாம் மரணம் வரவே வராது.’+ 12  பெர்கமு சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான நீண்ட வாளை வைத்திருப்பவர்+ சொல்வது இதுதான்: 13  ‘நீ எங்கே குடியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்; அங்கேதான் சாத்தானின் சிம்மாசனம் இருக்கிறது. ஆனாலும், நீ எனக்கு உண்மையோடு* இருக்கிறாய்.+ சாத்தான் குடியிருக்கிற உன் நகரத்தில், உண்மையுள்ள என் சாட்சியான+ அந்திப்பா கொலை செய்யப்பட்ட காலத்திலும்கூட+ என்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை நீ விட்டுவிடவில்லை.+ 14  ஆனாலும், உன்னிடம் சில குறைகள் இருக்கின்றன. பிலேயாமின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள்+ உன் மத்தியில் இருக்கிறார்கள். இந்த பிலேயாம், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்ய வைப்பதற்கு, அதாவது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடவும் பாலியல் முறைகேட்டில்*+ ஈடுபடவும் வைப்பதற்கு, பாலாக்+ என்பவனுக்குக் கற்றுக்கொடுத்தவன். 15  அதேபோல், நிக்கொலாய் மதப்பிரிவைச் சேர்ந்தவர்களின் போதனையைப் பின்பற்றுகிறவர்களும் உன் மத்தியில் இருக்கிறார்கள்.+ 16  அதனால், மனம் திருந்து. இல்லையென்றால், நான் உன்னிடம் சீக்கிரமாக வந்து, என் வாயிலிருந்து புறப்படும் நீண்ட வாளால் அவர்களோடு போர் செய்வேன்.+ 17  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்:+ ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு,+ மறைத்து வைக்கப்பட்ட மன்னாவிலிருந்து கொஞ்சத்தையும்+ வெள்ளைக் கூழாங்கல் ஒன்றையும் கொடுப்பேன். அந்தக் கூழாங்கல்லில் ஒரு புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். அதைப் பெற்றுக்கொள்கிறவனைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பெயர் தெரியாது.’ 18  தியத்தீரா+ சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: தீ ஜுவாலை போன்ற கண்களும்,+ சுத்தமான செம்பு போன்ற பாதங்களும்+ உள்ள கடவுளுடைய மகன் சொல்வது இதுதான்: 19  ‘உன் செயல்களையும் உன் அன்பையும் உன் விசுவாசத்தையும் உன் ஊழியத்தையும் உன் சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது நீ அதிகமான செயல்களைச் செய்கிறாய் என்பதையும் அறிந்திருக்கிறேன். 20  ஆனாலும், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. அந்த யேசபேலை+ நீ பொறுத்துக்கொள்கிறாய்; அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிறாள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடும்படியும்,+ சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும்படியும் என் அடிமைகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைத் தவறாக வழிநடத்துகிறாள். 21  மனம் திருந்த நான் அவளுக்கு அவகாசம் கொடுத்தேன், ஆனால் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுவதைவிட்டு மனம் திருந்த அவளுக்கு விருப்பமில்லை. 22  இதோ! நான் அவளைப் படுத்த படுக்கையாக்கப்போகிறேன். அவளோடு முறைகேடான உறவுகொள்கிறவர்கள் அவள் செய்வது போன்ற செயல்களைவிட்டு மனம் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு மிகுந்த உபத்திரவத்தைக் கொடுப்பேன். 23  அடிமனதின் யோசனைகளையும்* இதயங்களையும் ஆராய்ந்து பார்க்கிறவர் நான்தான் என்பதை எல்லா சபைகளும் தெரிந்துகொள்ளும்படி, அவளுடைய பிள்ளைகளைக் கொடிய கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பேன்.+ 24  தியத்தீராவில் இருக்கிற மற்றவர்களே, யேசபேலின் போதனையைப் பின்பற்றாதவர்களே, “சாத்தானுடைய ஆழங்கள்”+ என்று அவர்கள் சொல்வது என்னவென்று தெரியாதவர்களே, நான் உங்களுக்குச் சொல்வது இதுதான்: உங்கள்மேல் நான் வேறெந்தச் சுமையையும் சுமத்த மாட்டேன். 25  உங்களிடம் இருப்பதை நான் வரும்வரை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.+ 26  என் தகப்பனிடமிருந்து நான் அதிகாரம் பெற்றதுபோல், முடிவுவரை என் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்குத் தேசங்கள்மீது நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.+ 27  அவன் இரும்புக் கோலால் தேசங்களை நொறுக்குவான்.*+ அவற்றை மண்பாத்திரங்களைப் போல் சுக்குநூறாக்குவான். 28  அவனுக்கு நான் விடியற்கால நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.+ 29  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’”

அடிக்குறிப்புகள்

நே.மொ., “ஜெபக்கூடத்தை.”
நே.மொ., “என் பெயரை உறுதியாகப் பிடித்துக்கொண்டு.”
வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.” நே.மொ., “சிறுநீரகங்களையும்.”
நே.மொ., “மேய்ப்பான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா