லேவியராகமம் 8:1-36

8  பின்பு யெகோவா மோசேயிடம்,  “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள்.  ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலுக்கு முன்னால் கூடிவரும்படி செய்” என்றார்.  யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் ஜனங்கள் ஒன்றுகூடினார்கள்.  அப்போது மோசே ஜனங்களிடம், “இப்படிச் செய்யச் சொல்லி யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்” என்றார்.  அதனால், ஆரோனையும் அவருடைய மகன்களையும் கூப்பிட்டு, அவர்களைக் குளிக்க வைத்தார்.*+  அதன்பின் ஆரோனுக்கு உள்ளங்கியைப்+ போட்டு, இடுப்புக்கச்சையைக்+ கட்டினார். அதன்மேல் கையில்லாத அங்கியையும்,+ ஏபோத்தையும்+ போட்டுவிட்டார். ஏபோத்தின் இடுப்புப்பட்டையை+ இறுக்கமாகக் கட்டிவிட்டார்.  அடுத்து, அவருக்கு மார்ப்பதக்கத்தைப்+ போட்டுவிட்டு, அதற்குள் ஊரீமையும் தும்மீமையும்+ வைத்தார்.  பின்பு, அவருக்குத் தலைப்பாகையை+ வைத்து, அதன் முன்பக்கத்தில் பளபளப்பான தங்கத் தகட்டை, அதாவது அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தை,*+ கட்டினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். 10  பின்பு, மோசே அபிஷேகத் தைலத்தை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்+ அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார். 11  அதன்பின், அந்தத் தைலத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் செம்புத் தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார். 12  கடைசியாக, ஆரோனின் தலையில் கொஞ்சம் அபிஷேகத் தைலத்தை ஊற்றி அபிஷேகம் செய்து அவரைப் புனிதப்படுத்தினார்.+ 13  பின்பு, ஆரோனின் மகன்களைப் பக்கத்தில் கூப்பிட்டு, அவர்களுக்கு அங்கியைப் போட்டுவிட்டு, இடுப்புக்கச்சையையும் முண்டாசையும் கட்டிவிட்டார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். 14  அடுத்ததாக, பாவப் பரிகார பலியைச் செலுத்த மோசே காளையைக் கொண்டுவந்தார். அந்தக் காளையின் தலையில் ஆரோனும் அவர் மகன்களும் கை வைத்தார்கள்.+ 15  மோசே அந்தக் காளையை வெட்டி, அதன் இரத்தத்தைத்+ தன் விரலில் தொட்டு, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் உள்ள கொம்புகளில் பூசி, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரித்தார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார். இப்படி, பலிகள் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைப் புனிதப்படுத்தினார். 16  பின்பு, குடல்கள் மேலுள்ள எல்லா கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+ 17  பிற்பாடு, அந்தக் காளையின் தோல், சதை, சாணம் ஆகியவற்றையும் மற்ற பாகங்களையும் முகாமுக்கு வெளியில் எரிக்கச் சொன்னார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். 18  பின்பு, தகன பலி செலுத்த செம்மறியாட்டுக் கடாவை மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 19  மோசே அதை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார். 20  அந்தச் செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தார். 21  அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவிய பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடா முழுவதையும் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்தினார். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். 22  பின்பு, இரண்டாவது செம்மறியாட்டுக் கடாவை, அதாவது குருமார்களை நியமிக்கும்போது+ செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாவை, மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 23  மோசே அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். 24  அதன்பின், ஆரோனின் மகன்களைக் கூப்பிட்டு, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அவர்களுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 25  பின்பு அதன் கொழுப்பையும், அதன் கொழுப்பு நிறைந்த வாலையும், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதன் வலது காலையும் எடுத்தார்.+ 26  அதோடு, யெகோவாவின் முன்னிலையில் புளிப்பில்லாத ரொட்டிகள் வைக்கப்பட்டிருந்த கூடையிலிருந்து ஒரு வட்ட ரொட்டியையும்,+ எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட ஒரு வட்ட ரொட்டியையும்,+ ஒரு மெல்லிய ரொட்டியையும் எடுத்தார். இவற்றை, வெட்டி எடுக்கப்பட்ட அந்தக் கொழுப்புத் துண்டுகளின் மேலும் வலது காலின் மேலும் வைத்தார். 27  அவை எல்லாவற்றையும் ஆரோனின் கையிலும் அவருடைய மகன்களின் கையிலும் வைத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார். 28  பின்பு, அவற்றை அவர்களுடைய கையிலிருந்து எடுத்து, பலிபீடத்திலுள்ள தகன பலியின் மேல் வைத்து எரித்தார். அது குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் தகன பலி, அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. 29  குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* மோசே எடுத்து அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அதை மோசே தன் பங்காக எடுத்துக்கொண்டார்.+ 30  அபிஷேகத் தைலத்திலும்+ பலிபீடத்தின் மேலுள்ள இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவருடைய உடைகள்மேலும் அவருடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் மோசே தெளித்தார். இப்படி, ஆரோனையும் அவருடைய உடைகளையும், அவருடைய மகன்களையும்+ அவர்களுடைய உடைகளையும்+ புனிதப்படுத்தினார். 31  மோசே ஆரோனையும் அவருடைய மகன்களையும் பார்த்து, “சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீங்கள் வேக வைக்க+ வேண்டும். பின்பு, அதையும் கூடையிலுள்ள* ரொட்டியையும் அங்கே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ‘ஆரோனும் அவனுடைய மகன்களும் அதைச் சாப்பிட வேண்டும்’+ என்று கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். 32  மீதியிருக்கும் இறைச்சியையும் ரொட்டியையும் நீங்கள் சுட்டெரிக்க வேண்டும்.+ 33  ஏழு நாட்கள் முடியும்வரை, அதாவது நீங்கள் குருமார்களாக நியமிக்கப்படும் நாட்கள் முடியும்வரை, சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. ஏனென்றால், குருத்துவச் சேவைக்காக உங்களை நியமிப்பதற்கு ஏழு நாட்கள் எடுக்கும்.+ 34  உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக,+ இன்று போலவே மீதமுள்ள ஆறு நாட்களுக்கும் செய்ய வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். 35  நீங்கள் சாகாதபடிக்கு ஏழு நாட்கள் ராத்திரியும் பகலும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தங்கியிருந்து,+ யெகோவா கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுங்கள்.+ நீங்கள் இப்படிச் செய்ய வேண்டுமென்று கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்” என்றார். 36  மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் மகன்களும் செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, “குளிக்கச் சொன்னார்.”
வே.வா., “அதாவது பரிசுத்த மகுடத்தை.”
அதாவது, “நெஞ்சுப் பகுதியை.”
நே.மொ., “குருத்துவ நியமிப்புக்குரிய கூடையிலுள்ள.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா