லூக்கா 16:1-31

16  பின்பு இயேசு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “பணக்காரர் ஒருவருக்கு வீட்டு நிர்வாகி ஒருவன் இருந்தான். அவருடைய பொருள்களையெல்லாம் அவன் வீணாக்குவதாக அவருக்குப் புகார் வந்தது.  அதனால், அவர் அவனைக் கூப்பிட்டு, ‘என்ன இது? உன்னைப் பற்றி இப்படிக் கேள்விப்படுகிறேனே? நிர்வாகக் கணக்கையெல்லாம் ஒப்படைத்துவிடு, இனிமேல் நீ என் வீட்டை நிர்வகிக்க வேண்டாம்’ என்று சொன்னார்.  அப்போது அந்த நிர்வாகி, ‘வீட்டை நிர்வகிக்கும் வேலையிலிருந்து எஜமான் என்னை நீக்கப்போகிறார், இப்போது என்ன செய்வேன்? மண்ணைக் கொத்தி வேலை செய்ய எனக்குச் சக்தி இல்லை, பிச்சையெடுக்கவும் வெட்கமாக இருக்கிறது.  ஆ! எனக்கு ஒரு யோசனை வருகிறது! எஜமான் என்னை வேலையிலிருந்து நீக்கும்போது மற்றவர்கள் என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் ஒன்று செய்யப்போகிறேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.  பின்பு, தன் எஜமானிடம் கடன் வாங்கியிருந்த ஒவ்வொருவரையும் கூப்பிட்டான். முதலில் வந்தவரிடம், ‘என் எஜமானிடம் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்?’ என்று கேட்டான்.  அதற்கு அவர், ‘100 ஜாடி* ஒலிவ எண்ணெய்’ என்று சொன்னார். அப்போது அவன், ‘இதோ, உங்களுடைய கடன் பத்திரம். உட்கார்ந்து 50 என்று சீக்கிரம் எழுதுங்கள்’ என்றான்.  பின்பு அடுத்து வந்தவரிடம், ‘நீங்கள் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘100 கலம்* கோதுமை’ என்று சொன்னார். அப்போது அவன், ‘இதோ, உங்களுடைய கடன் பத்திரம். 80 என்று எழுதுங்கள்’ என்றான்.  அந்த நிர்வாகி அநீதியுள்ளவனாக இருந்தாலும், ஞானமாக* நடந்துகொண்டதால் அவனுடைய எஜமான் அவனைப் பாராட்டினார். இப்படி, ஒளியின் பிள்ளைகளைவிட+ இந்த உலகத்தின்* பிள்ளைகள் அதிக ஞானமாக நடந்துகொள்கிறார்கள்.  அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அநீதியான* செல்வங்களை+ வைத்து உங்களுக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அப்போது, அவை இல்லாமல் போகும்போது அவர்கள் உங்களை என்றென்றும் நிலைத்திருக்கும் வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள்.+ 10  சின்ன விஷயத்தில் உண்மையுள்ளவனாக இருக்கிறவன் பெரிய விஷயத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், சின்ன விஷயத்தில் அநீதியுள்ளவனாக இருக்கிறவன் பெரிய விஷயத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான். 11  அதனால், அநீதியான செல்வங்களைக் கையாளுவதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லையென்றால், யார் உங்களை நம்பி உண்மையான செல்வங்களை ஒப்படைப்பார்கள்? 12  மற்றவர்களுடைய பொருள்களைக் கையாளுவதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லையென்றால், உங்களுக்குரியதை யார் உங்களிடம் கொடுப்பார்கள்?+ 13  எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது. ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான். அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது”+ என்று சொன்னார். 14  பண ஆசைபிடித்த பரிசேயர்கள் இவற்றையெல்லாம் கேட்டபோது அவரை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள்.+ 15  அதனால் அவர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: “மனுஷர்கள் முன்னால் உங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்கிறீர்கள்.+ ஆனால், உங்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்று கடவுளுக்குத் தெரியும்.+ மனுஷர்களுடைய பார்வையில் எது உயர்வாக இருக்கிறதோ அது கடவுளுடைய பார்வையில் அருவருப்பாக இருக்கிறது.+ 16  திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் யோவானுடைய காலம்வரை அறிவிக்கப்பட்டன. அதுமுதல் கடவுளுடைய அரசாங்கமே நல்ல செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. எல்லா விதமான ஆட்களும் அதற்குள் நுழைய தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.+ 17  உண்மையில், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்திலுள்ள ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது, அதிலுள்ள எல்லாமே நிறைவேறும்.+ 18  தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறவன் அவளோடு முறைகேடான உறவுகொள்கிறான்; கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்கிறவனும் முறைகேடான உறவுகொள்கிறான்.+ 19  பணக்காரன் ஒருவன் ஊதா நிற உடைகளையும் விலை உயர்ந்த* அங்கிகளையும் போட்டுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் சுகபோகமாக வாழ்ந்து வந்தான். 20  லாசரு என்ற பிச்சைக்காரன் ஒருவனும் இருந்தான். அந்தப் பணக்காரனுடைய வீட்டு வாசலில் சிலர் அவனை வழக்கமாக உட்கார வைத்தார்கள். அவனுடைய உடல் முழுவதும் சீழ்பிடித்த புண்கள் இருந்தன. 21  அந்தப் பணக்காரனுடைய மேஜையிலிருந்து விழுகிறதைச் சாப்பிட்டு அவன் தன்னுடைய வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். நாய்கள்கூட வந்து அவனுடைய புண்களை நக்கின. 22  ஒருநாள் அந்தப் பிச்சைக்காரன் இறந்துபோனான். அப்போது, தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய் ஆபிரகாமின் பக்கத்தில்* உட்கார வைத்தார்கள். பின்பு, அந்தப் பணக்காரனும் இறந்துபோய் அடக்கம் செய்யப்பட்டான். 23  கல்லறையில் அவன் வேதனைப்படுகிறபோது, தூரத்தில் ஆபிரகாமும் அவருக்குப் பக்கத்தில்* லாசருவும் இருப்பதை அண்ணாந்து பார்த்தான். 24  அப்போது அவன், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்; லாசரு தன் விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து என் நாவைக் குளிர வைப்பதற்காக அவனை அனுப்புங்கள். ஏனென்றால், கொழுந்துவிட்டு எரிகிற இந்த நெருப்பில் நான் மிகவும் அவதிப்படுகிறேன்’ என்று சொன்னான். 25  அதற்கு ஆபிரகாம், ‘மகனே, உன்னுடைய வாழ்நாளில் எல்லா நல்ல காரியங்களையும் நீ அனுபவித்தாய், லாசருவோ கஷ்டங்களையே அனுபவித்தான் என்பது உனக்கு ஞாபகம் இல்லையா? இப்போது அவனுக்கு இங்கே ஆறுதல் கிடைக்கிறது, நீயோ மிகவும் அவதிப்படுகிறாய். 26  இவை எல்லாவற்றையும் தவிர, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே மாபெரும் பிளவு ஒன்று நிரந்தரமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து உங்களிடம் வர விரும்புகிறவர்கள் அதைக் கடந்துவர முடியாது, அதேபோல் அங்கிருந்து யாருமே எங்களிடம் வர முடியாது’ என்று சொன்னார். 27  அதற்கு அவன், ‘அப்படியானால் தந்தையே, லாசருவை என்னுடைய அப்பாவின் வீட்டுக்கு அனுப்பும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 28  ஏனென்றால், எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள்; வேதனையான இந்த இடத்துக்கு அவர்களும் வராதபடி அவன் எச்சரிக்கட்டும்’ என்று சொன்னான். 29  அதற்கு ஆபிரகாம், ‘அவர்களிடம் மோசேயின் புத்தகங்களும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றிலுள்ள வார்த்தைகளை அவர்கள் காதுகொடுத்துக் கேட்கட்டும்’+ என்று சொன்னார். 30  அதற்கு அவன், ‘அப்படியில்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்கள் யாராவது அவர்களிடம் போனால் மனம் திருந்துவார்கள்’ என்று சொன்னான். 31  அதற்கு அவர், ‘மோசேயின் புத்தகங்களும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றால்,+ இறந்த ஒருவர் உயிரோடு எழுந்து போனாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொன்னார்.”

அடிக்குறிப்புகள்

மூலமொழியில், “100 பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “100 கோர்.” ஒரு கோர் என்பது சுமார் 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “நடைமுறையில் ஞானமாக; சாமர்த்தியமாக; விவேகமாக.”
வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “இந்த உலகத்தின்.”
நே.மொ., “நாரிழை.” அதாவது, “லினன்.”
நே.மொ., “நெஞ்சருகே.”
நே.மொ., “அவருடைய நெஞ்சருகே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா