யோபு 30:1-31

30  பின்பு அவர், “இப்போது பார்த்தால்,வயதில் சிறியவர்கள்கூட என்னைக் கேலி செய்கிறார்கள்.*+அவர்களுடைய அப்பாக்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள்.என் ஆடுகளைக் காவல்காத்த நாய்களின் பக்கத்தில்கூட அவர்களை நான் விட்டிருக்க மாட்டேன்.   அவர்களுடைய கைகளால் எனக்கு என்ன பிரயோஜனம் இருந்தது? அவர்களுடைய பலமெல்லாம் போய்விட்டதே.   சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இளைத்துப்போயிருக்கிறார்கள்.பாழாய்க் கிடக்கிற வறண்ட நிலத்தில் அலைந்து திரிகிறார்கள்.அங்குள்ள மண்ணை மென்று தின்கிறார்கள்.   உப்புக் கரிக்கும் இலைகளைப் புதர்களிலிருந்து பறிக்கிறார்கள்.காட்டுச்செடியின் கசப்பான வேரைப் பிடுங்கிச் சாப்பிடுகிறார்கள்.   அவர்கள் ஊரைவிட்டு விரட்டப்படுகிறார்கள்.+திருடர்களைப் பார்த்துக் கூச்சல் போடுவதுபோல் ஜனங்கள் அவர்களைப் பார்த்துக் கூச்சல் போடுகிறார்கள்.   அதனால் அவர்கள் பள்ளத்தாக்குகளில்* போய்க் குடியிருக்கிறார்கள்.நிலத்திலுள்ள பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் தங்குகிறார்கள்.   புதர்களுக்குள் இருந்து கதறுகிறார்கள்.முட்செடிகளுக்கு இடையில் கும்பல் கும்பலாகக் கூடியிருக்கிறார்கள்.   அவர்கள் அறிவில்லாதவர்களின் பிள்ளைகள், ஒன்றுக்கும் உதவாதவர்களுக்குப் பிறந்தவர்கள்.ஊரைவிட்டே துரத்தப்பட்டவர்கள்.   அப்படிப்பட்ட ஆட்கள் இப்போது என்னைக் கேலி செய்து பாட்டுப் பாடுகிறார்கள்.+என்னைப் பார்த்தாலே அவர்களுக்குக் கிண்டலாகத் தெரிகிறது.+ 10  என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.+முகத்தில் காறித் துப்புவதற்குக்கூட தயங்குவதில்லை.+ 11  என்னால் எதுவும் பண்ண முடியாதபடி கடவுள் செய்துவிட்டார்; என்னைத் துவண்டுபோக வைத்துவிட்டார்.அதனால், அவர்கள் இன்னும் அதிகமாக என்னை ஆட்டிப்படைக்கிறார்கள்.* 12  என்னைத் தாக்குவதற்காக என்னுடைய வலது பக்கத்தில் கும்பலாக வருகிறார்கள்.என்னை ஓட ஓட விரட்டுகிறார்கள்.என்னை வளைத்துப் பிடித்து சாகடிப்பதற்காக வழியெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போடுகிறார்கள். 13  நான் ஓடுகிற பாதைகளை நாசமாக்குகிறார்கள்.நான் தப்பிக்கவே முடியாதபடி செய்கிறார்கள்.+அவர்களைத் தடுக்க* யாருமே இல்லை. 14  பெரிதாகப் பிளந்து நிற்கும் மதில் வழியாக வருவதுபோல் பாய்ந்து வருகிறார்கள்.சீரழிவுக்குமேல் சீரழிவை உண்டாக்குகிறார்கள். 15  எனக்குக் கதிகலங்குகிறது.என் கௌரவம் காற்றில் பறந்துவிட்டது.பிழைப்பேன் என்ற நம்பிக்கைகூட மேகம்போல் மறைந்துவிட்டது. 16  என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறது.+கஷ்ட காலம் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.+ 17  ராத்திரியில் வேதனை வாட்டியெடுக்கிறது.*+தீராத வலியில் துடிதுடிக்கிறேன்.+ 18  நான் உடுத்தியிருக்கிற துணி ரொம்பப் பலமாக இழுக்கப்படுகிறது.*இறுக்கமான கழுத்துப்பட்டையைப் போல அது என் குரல்வளையை நெரிக்கிறது. 19  கடவுள் என்னைச் சேற்றில் தள்ளிவிட்டார்.நான் தூசி போலவும் சாம்பல் போலவும் ஆகிவிட்டேன். 20  கடவுளே, உங்களிடம் கதறுகிறேன்; நீங்களோ கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.+உங்கள் முன்னால் எழுந்து நிற்கிறேன்; நீங்களோ பார்த்தும் பார்க்காததுபோல் இருக்கிறீர்கள். 21  ஈவிரக்கமே இல்லாமல் என்னைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+பலமான உங்கள் கைகளால் ஓங்கி அடிக்கிறீர்கள். 22  என்னைத் தூக்கிக் காற்றில் வீசுகிறீர்கள்.புயல்காற்றில் சுழற்றி அடிக்கிறீர்கள்.* 23  நீங்கள் என்னைச் சாகடிக்கப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.எல்லாரும் கடைசியில் போய்ச் சேரும் இடத்துக்கு என்னை அனுப்பப்போகிறீர்கள். 24  ஆதரவற்ற ஒருவன் ஆபத்துக் காலத்தில் உதவிக்காகக் கதறும்போதுயாரும் அவன்மேல் கை ஓங்க மாட்டார்கள்.+ 25  அவதிப்பட்ட ஜனங்களுக்காக நான் அழவில்லையா? ஏழைகளுக்காக மனம் உருகவில்லையா?+ 26  எனக்கு நல்லது நடக்கும் என்று நம்பினேன்; ஆனால் கெட்டதுதான் நடந்தது.என் வாழ்க்கை பிரகாசமாகும் என்று நினைத்தேன்; ஆனால் இருண்டுதான் போனது. 27  என் மனம் தவியாய்த் தவித்தது.கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தது. 28  நான் சோகத்தோடு நடமாடுகிறேன்;+ என் வாழ்க்கையில் சூரியன் உதிப்பதே இல்லை. எல்லாருக்கும் முன்னால் எழுந்து நின்று உதவிக்காகக் கதறுகிறேன். 29  நரிகளுக்குச் சகோதரன் ஆனேன்.நெருப்புக்கோழிகளுக்கு நண்பன் ஆனேன்.+ 30  என் தோலெல்லாம் கறுத்துப்போய் உரிந்து விழுந்தது.+என் உடம்பெல்லாம்* நெருப்பாய்க் கொதிக்கிறது. 31  துக்கம் கொண்டாடுவதற்கு மட்டும்தான் யாழை எடுக்கிறேன்.சோக கீதம் வாசிப்பதற்கு மட்டும்தான் குழலை எடுக்கிறேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளில்.”
வே.வா., “தங்கள் கடிவாளத்தைக் கழற்றி வீசுகிறார்கள்.”
அல்லது, “அவர்களுக்கு உதவ.”
வே.வா., “ராத்திரியில் வலி என் எலும்புகளைத் துளைக்கிறது.”
அல்லது, “வேதனையின் கொடுமையால் அடையாளம் தெரியாதபடி ஆகிவிட்டேன்.”
அல்லது, “நொறுக்கிப் போடுகிறீர்கள்.”
நே.மொ., “எலும்பெல்லாம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா