யாத்திராகமம் 7:1-25

7  அதனால் யெகோவா மோசேயிடம், “நான் உன்னை பார்வோனுக்குக் கடவுளாக்கினேன்.* உன்னுடைய அண்ணன் ஆரோன் உன்னுடைய சார்பில் தீர்க்கதரிசனம் சொல்வான்.+  நான் உனக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் உன் அண்ணன் ஆரோனிடம் நீ சொல்ல வேண்டும். அவன் பார்வோனிடம் பேசுவான். அப்போது, பார்வோன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடுவான்.  பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ எகிப்து தேசத்தில் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வேன்.+  ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+  எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.  மோசேயும் ஆரோனும் யெகோவாவின் பேச்சைத் தட்டாமல் அப்படியே செய்தார்கள்.  பார்வோனிடம் பேசிய சமயத்தில் மோசேக்கு 80 வயது, ஆரோனுக்கு 83 வயது.+  யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும்,  “ஒரு அற்புதம் செய்து காட்டும்படி பார்வோன் உங்களிடம் கேட்டால், நீ ஆரோனைப் பார்த்து, ‘உன் கோலை எடுத்து பார்வோனின் முன்னால் போடு’ என்று சொல்ல வேண்டும். அப்போது அது ஒரு பெரிய பாம்பாக மாறும்”+ என்றார். 10  உடனே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் தன்னுடைய கோலை பார்வோன் முன்னாலும் அவனுடைய ஊழியர்கள் முன்னாலும் போட்டார். அது ஒரு பெரிய பாம்பாக மாறியது. 11  அப்போது, பார்வோன் எகிப்திலிருந்த ஞானிகளையும் சூனியக்காரர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான்.+ அந்த மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திர சக்தியால் அதேபோல் செய்தார்கள்.+ 12  அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோல்களைக் கீழே போட்டபோது அவை பெரிய பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கியது. 13  இருந்தாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே பார்வோனின் இதயம் இறுகிப்போனது.+ அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை. 14  பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான்.+ என் ஜனங்களை அனுப்பாமல் வைத்திருக்கிறான். 15  காலையில் நீ அவனிடம் போ. அவன் நைல் நதிக்கு வருவான். அவனைப் பார்த்துப் பேசுவதற்காக நீ நதியோரத்தில் நின்றுகொள். முன்பு பாம்பாக மாறிய அந்தக் கோலையும் உன் கையில் எடுத்துக்கொள்.+ 16  நீ அவனிடம், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.+ வனாந்தரத்தில் அவரை வணங்குவதற்காக அவருடைய ஜனங்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், நீங்கள் இதுவரை அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படியவில்லை. 17  அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் யெகோவா என்று உனக்குக் காட்டுவேன்.+ என் கையிலுள்ள இந்தக் கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், அது இரத்தமாக மாறும். 18  நதியிலுள்ள மீன்கள் எல்லாம் செத்துவிடும், அதில் துர்நாற்றம் வீசும். எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது”’ என்று சொல்” என்றார். 19  பின்பு யெகோவா மோசேயிடம், “எகிப்தின் நீர்நிலைகளாகிய ஆறுகள், கால்வாய்கள்,* குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் மேல் கோலை நீட்டும்படி நீ ஆரோனிடம் சொல்.+ அப்போது எகிப்து தேசமெங்கும் உள்ள தண்ணீர் இரத்தமாக மாறும். மரப் பாத்திரங்களிலும் கல் தொட்டிகளிலும் உள்ள தண்ணீர்கூட இரத்தமாக மாறும்” என்றார். 20  யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+ 21  நதியிலிருந்த மீன்கள் செத்துப்போயின.+ அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.+ எகிப்து தேசத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்தமாக இருந்தது. 22  ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மாயமந்திரத்தால் அதேபோல் செய்தார்கள்.+ அதனால் யெகோவா சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் கேட்கவே இல்லை.+ 23  பின்பு, பார்வோன் தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பிப் போனான். இந்தத் தடவை நடந்த அற்புதத்தையும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 24  எகிப்தியர்கள் எல்லாரும் நைல் நதியைச் சுற்றியிருந்த பகுதிகளில் மண்ணைத் தோண்டி, குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார்கள். ஏனென்றால், நைல் நதியின் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியவில்லை. 25  யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் ஆகியிருந்தன.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பார்வோன்மேல் அதிகாரம் உள்ளவனாக்கினேன்.”
அதாவது, “நைல் நதியின் கால்வாய்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா