யாத்திராகமம் 38:1-31
38 தகன பலிக்கான பலிபீடத்தை அவர் வேல மரத்தால் செய்தார். அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருந்தது.+
2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் வைத்தார். அந்தக் கொம்புகள் அதனுடன் இணைந்தபடி இருந்தன. பின்பு, அவர் அதற்குச் செம்பினால் தகடு அடித்தார்.+
3 அதோடு, பலிபீடத்துக்கான எல்லா சாமான்களையும் அவர் செய்தார். வாளிகளையும், சாம்பல் அள்ளும் கரண்டிகளையும், கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்தார். இவை எல்லாவற்றையும் செம்பினால் செய்தார்.
4 பலிபீடத்துக்காகச் செம்பினால் ஒரு கம்பிவலையைச் செய்தார். அந்தக் கம்பிவலையைப் பலிபீடத்தின் விளிம்புக்குக் கீழே பாதி உயரத்தில் செருகி வைத்தார்.
5 கம்புகளைச் செருகுவதற்காக நான்கு வளையங்களை வார்த்து, செம்புக் கம்பிவலைக்குப் பக்கத்தில் நான்கு மூலைகளிலும் பொருத்தினார்.
6 பின்பு, வேல மரத்தால் கம்புகள் செய்து, அவற்றுக்குச் செம்பினால் தகடு அடித்தார்.
7 பலிபீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இந்தக் கம்புகளை வளையங்களில் செருகி வைத்தார். கீழேயும் மேலேயும் திறந்திருக்கிற ஒரு பெட்டியைப் போல் அந்தப் பலிபீடத்தைச் செய்தார்.
8 பின்பு, ஒரு தொட்டியையும்+ அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செம்பினால் செய்தார். சந்திப்புக் கூடார வாசலில் முறைப்படி சேவை செய்துவந்த பெண்கள் பயன்படுத்திய கண்ணாடிகளால்* அவற்றைச் செய்தார்.
9 அதன்பின், பிரகாரத்தை அமைத்தார்.+ பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* 100 முழத்துக்கு மறைப்புகளைச் செய்தார்.+
10 செம்பினால் செய்யப்பட்ட 20 பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்தினார். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்தார்.
11 வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்தார். அவற்றுக்கான 20 கம்பங்களையும் 20 பாதங்களையும் செம்பினால் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார்.
12 பிரகாரத்தின் மேற்குப் பக்கத்துக்காக, 50 முழத்துக்கு மறைப்புகள் செய்தார். அவற்றுக்கு 10 கம்பங்களையும் 10 பாதங்களையும் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார்.
13 பிரகாரத்தினுடைய கிழக்குப் பக்கத்தின் அகலம் 50 முழமாக இருந்தது.
14 அதன் ஒரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன.
15 அதன் இன்னொரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன.
16 பிரகாரத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்ட மறைப்புகள் எல்லாமே உயர்தரமான திரித்த நாரிழையால் செய்யப்பட்டன.
17 கம்பங்களுக்கான பாதங்கள் செம்பினால் செய்யப்பட்டன. கம்பங்களின் கொக்கிகளும் இணைப்புகளும் வெள்ளியால் செய்யப்பட்டன. அவற்றின் மேலே உள்ள குமிழ்களுக்கு வெள்ளித் தகடு அடிக்கப்பட்டது. பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா கம்பங்களுக்கும் வெள்ளி இணைப்புகள் செய்யப்பட்டன.+
18 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் பிரகார நுழைவாசலின் திரை நெய்யப்பட்டது. அது 20 முழ நீளத்திலும், பிரகாரத்தின் மறைப்புகளைப் போலவே 5 முழ உயரத்திலும் இருந்தது.+
19 அவற்றின் நான்கு கம்பங்களும் நான்கு பாதங்களும் செம்பினால் செய்யப்பட்டன. அவற்றின் கொக்கிகளும் இணைப்புகளும் வெள்ளியால் செய்யப்பட்டன. மேலே உள்ள குமிழ்களுக்கு வெள்ளித் தகடு அடிக்கப்பட்டது.
20 கூடார ஆணிகளும் பிரகாரத்துக்கான மற்ற எல்லா ஆணிகளும் செம்பினால் செய்யப்பட்டன.+
21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள்.
22 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்தார்.
23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாப்+ அவருக்கு உதவியாக இருந்தார். கைவேலை செய்வதிலும், தையல்* வேலைப்பாடு செய்வதிலும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றை நெய்வதிலும் இவர் திறமைசாலியாக இருந்தார்.
24 பரிசுத்த இடத்தின் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கம் முழுவதும், அசைவாட்டும் காணிக்கையாகக் கிடைத்த தங்கமாகும்.+ அதன் எடை 29 தாலந்தும்,* 730 சேக்கலுமாக* இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது.
25 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஜனங்கள் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளி 100 தாலந்தும், 1,775 சேக்கலுமாக இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது.
26 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் 20 வயதிலும் அதற்கு அதிகமான வயதிலும் இருந்தவர்களும், பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி தலைக்கு அரை சேக்கல் கொண்டுவந்தார்கள்.+ அவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+
27 பரிசுத்த இடத்தின் பாதங்களையும் திரைச்சீலை தொங்கவிடப்பட்ட தூண்களின் பாதங்களையும் வார்க்க 100 தாலந்து ஆனது. ஒவ்வொரு பாதத்துக்கும்+ ஒரு தாலந்து என 100 பாதங்களுக்கு 100 தாலந்து ஆனது.
28 தூண்களுக்கான கொக்கிகள் 1,775 சேக்கலில் செய்யப்பட்டன. அவற்றின் மேல்பகுதிகள் தகடு அடிக்கப்பட்டு இணைக்கப்பட்டன.
29 காணிக்கையாக* கிடைத்த செம்பு 70 தாலந்தும் 2,400 சேக்கலுமாக இருந்தது.
30 அதை வைத்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கான பாதங்களையும், செம்புப் பலிபீடத்தையும், அதற்கான செம்புக் கம்பிவலையையும், அதற்கான எல்லா பாத்திரங்களையும்,
31 பிரகாரத்தைச் சுற்றியுள்ள பாதங்களையும், பிரகாரத்தின் நுழைவாசலுக்கான பாதங்களையும், வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா ஆணிகளையும், பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா ஆணிகளையும்+ செய்தார்கள்.
அடிக்குறிப்புகள்
^ இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ அதாவது, “நன்கு பளபளப்பாக்கப்பட்ட உலோகக் கண்ணாடிகளால்.” அவை முகம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.
^ அதாவது, “லினனில்.”
^ வே.வா., “வளையங்களையும்.”
^ வே.வா., “எம்பிராய்டரி.”
^ ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ வே.வா., “அசைவாட்டும் காணிக்கையாக.”