யாத்திராகமம் 30:1-38
30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+
2 அது சதுரமாக இருக்க வேண்டும். அதன் நீளம் ஒரு முழமாகவும்,* அகலம் ஒரு முழமாகவும், உயரம் இரண்டு முழமாகவும் இருக்க வேண்டும். அதன் கொம்புகள் அதனோடு இணைந்திருக்க வேண்டும்.+
3 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடி. அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்.
4 பீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்து.
5 வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.
6 நான் உன் முன்னால் தோன்றும் இடத்துக்கு+ எதிரே, அதாவது சாட்சிப் பெட்டிக்கும் அதன் மூடிக்கும் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு எதிரே, அந்தப் பீடத்தை வைக்க வேண்டும்.+
7 ஆரோன்+ தினமும் காலையில் விளக்குகளைத் தயார்படுத்த+ வரும்போது அந்தப் பீடத்தில் தூபப்பொருளை+ எரிக்க வேண்டும்.+
8 சாயங்காலத்தில் ஆரோன் விளக்கேற்றி வைக்கும்போதும் தூபப்பொருளை எரிக்க வேண்டும். இப்படி, தலைமுறை தலைமுறையாக யெகோவாவின் முன்னிலையில் தவறாமல் தூபப்பொருளை எரிக்க வேண்டும்.
9 அந்தப் பீடத்தின் மேல் தூபப்பொருளை அத்துமீறி* எரிக்கக் கூடாது.+ அதன்மேல் தகன பலியையோ உணவுக் காணிக்கையையோ திராட்சமது காணிக்கையையோ செலுத்தக் கூடாது.
10 வருஷத்துக்கு ஒருமுறை ஆரோன் அந்தப் பீடத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.+ அதாவது, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அந்தப் பீடத்தின் கொம்புகள்மேல் பூசி அதைச் சுத்திகரிக்க வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட வேண்டும். இது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
11 பின்பு யெகோவா மோசேயிடம்,
12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது.
13 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும் அரை சேக்கல்* கொடுக்க வேண்டும். பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி அதைக் கொடுக்க வேண்டும்.+ ஒரு சேக்கல் என்பது இருபது கேரா.* யெகோவாவுக்காகக் கொடுக்கப்படும் காணிக்கை அரை சேக்கல்.+
14 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும், அதாவது 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லாரும், யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும்.+
15 உங்களுடைய உயிரை மீட்பதற்காக* யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, பணக்காரன் அரை சேக்கலுக்கு* அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, ஏழை அதற்குக் குறைவாகவும் கொடுக்கக் கூடாது.
16 பாவப் பரிகாரத்துக்காக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற வெள்ளிக் காசை நீ வசூலித்து சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்குக் கொடுத்துவிடு. அப்போது யெகோவா அவர்களை நினைத்துப் பார்ப்பார், அவர்களுடைய உயிரும் மீட்கப்படும்” என்றார்.
17 பின்பு யெகோவா மோசேயிடம்,
18 “ஒரு செம்புத் தொட்டியையும் அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செய்.+ சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் அந்தத் தொட்டியை வைத்து அதில் தண்ணீர் ஊற்று.+
19 ஆரோனும் அவனுடைய மகன்களும் அங்கே தங்கள் கைகால்களைக் கழுவ வேண்டும்.+
20 அவர்கள் சந்திப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போதோ, யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்தவும்* சேவை செய்யவும் பலிபீடத்துக்குப் போகும்போதோ தண்ணீரால் கைகால்களைக் கழுவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் சாக மாட்டார்கள்.
21 அவர்கள் சாகாமல் இருப்பதற்காகத் தங்களுடைய கைகால்களைக் கழுவ வேண்டும். இது அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் நிரந்தரக் கட்டளையாக இருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.+
22 பின்பு யெகோவா மோசேயிடம்,
23 “தரமான வாசனைப் பொருள்களை எடுத்துக்கொள். கெட்டியான வெள்ளைப்போளம்* 500 சேக்கல், வாசனையான லவங்கப்பட்டை 250 சேக்கல், வாசனையான வசம்பு 250 சேக்கல்,
24 கருவாய்ப்பட்டை 500 சேக்கல் ஆகியவற்றைப் பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி+ எடுத்துக்கொள். அதோடு மூன்றரை லிட்டர்* ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்.
25 இதையெல்லாம் பக்குவமாக* கலக்கி, அபிஷேகத் தைலத்தைத் தயாரி.+ அதுதான் பரிசுத்த அபிஷேகத் தைலம்.
26 சந்திப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்.+
27 அதோடு, மேஜையையும் அதனுடன் சேர்ந்த பாத்திரங்களையும், குத்துவிளக்கையும் அதனுடன் சேர்ந்த பொருள்களையும், தூபபீடத்தையும்,
28 தகன பலிக்கான பலிபீடத்தையும் அதனுடன் சேர்ந்த பாத்திரங்களையும், தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய்.
29 அவை மகா பரிசுத்தமாக ஆகும்படி நீ அவற்றைப் புனிதப்படுத்து.+ பரிசுத்தமாக இருக்கிறவர்கள் மட்டும்தான் அவற்றைத் தொட வேண்டும்.+
30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+
31 நீ இஸ்ரவேலர்களிடம், ‘இது தலைமுறை தலைமுறைக்கும் எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்க வேண்டும்.+
32 யாரும் இதை உடலில் பூசிக்கொள்ளக் கூடாது. இந்தத் தைலத்தின் கலவையைப் போல நீங்கள் வேறு எதையும் தயாரிக்கக் கூடாது, இது பரிசுத்தமானது. இது எப்போதும் உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
33 இதேபோன்ற தைலத்தைத் தயாரிக்கிறவனும், தகுதி இல்லாதவன்மேல்* இதை ஊற்றுகிறவனும் கொல்லப்பட வேண்டும்’ என்று சொல்” என்றார்.+
34 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நறுமணப் பிசின், ஒனிக்கா, கல்பான், சுத்தமான சாம்பிராணி ஆகிய வாசனைப் பொருள்களைச்+ சரிசமமாக எடுத்துக்கொள்.
35 அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து+ தூபப்பொருளாகத்+ தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும்.
36 நீ அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நன்றாகப் பொடியாக்கி, நான் உனக்குமுன் தோன்றும் சந்திப்புக் கூடாரத்திலுள்ள சாட்சிப் பெட்டியின் எதிரே வை. அது உங்களுக்கு மகா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.
37 அதே போன்ற தூபப்பொருள் கலவையைச் சொந்த உபயோகத்துக்காக யாரும் தயாரிக்கக் கூடாது.+ யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அதைக் கருத வேண்டும்.
38 அதன் வாசனையை அனுபவித்து மகிழ்வதற்காக அதே போன்ற தூபப்பொருள் கலவையைத் தயாரிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்” என்றார்.
அடிக்குறிப்புகள்
^ இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “தகாத விதத்தில்.”
^ ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ ஒரு கேரா என்பது 0.57 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “உயிருக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக.”
^ ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “தூபம் காட்டவும்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “பரிசுத்த இடத்து.”
^ நே.மொ., “ஒரு ஹின்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “தைலம் தயாரிப்பவர் செய்வதைப் போல.”
^ அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவன்மேல்.”