யாத்திராகமம் 27:1-21

27  பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+  அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள்+ வைக்க வேண்டும். அந்தக் கொம்புகள் பலிபீடத்துடன் இணைந்தபடி இருக்க வேண்டும். பலிபீடத்துக்கு செம்பினால் தகடு அடிக்க வேண்டும்.+  பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+  பலிபீடத்துக்காக செம்பினால் ஒரு கம்பிவலையைச் செய்ய வேண்டும். அந்தக் கம்பிவலைக்கு மேலாக நான்கு மூலைகளிலும் நான்கு செம்பு வளையங்களைப் பொருத்த வேண்டும்.  அந்தக் கம்பிவலையைப் பலிபீடத்தின் விளிம்புக்குக் கீழே பாதி உயரத்தில் செருகி வைக்க வேண்டும்.  பலிபீடத்துக்காக வேல மரத்தால் கம்புகள் செய்து, அவற்றுக்குச் செம்பினால் தகடு அடிக்க வேண்டும்.  பலிபீடத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்காக அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கிற வளையங்களில் இந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும்.+  நான்கு பக்கங்களிலும் பலகைகள் அடித்து, கீழேயும் மேலேயும் திறந்திருக்கிறபடி இந்தப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* அதைச் செய்ய வேண்டும்.+  வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பிரகாரத்தையும்+ அமைக்க வேண்டும். பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* மறைப்புகளைச் செய்ய வேண்டும். இவற்றின் நீளம் 100 முழமாக இருக்க வேண்டும்.+ 10  பின்பு, 20 செம்புப் பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்த வேண்டும். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்ய வேண்டும். 11  வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்ய வேண்டும். அதோடு, 20 செம்புப் பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்த வேண்டும். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும் செய்ய வேண்டும். 12  பிரகாரத்தின் மேற்குப் பக்கத்துக்காக, 50 முழ அகலத்துக்கு மறைப்புகளைச் செய்ய வேண்டும். அவற்றுக்கு 10 கம்பங்களையும் 10 பாதங்களையும் செய்ய வேண்டும். 13  சூரியன் உதிக்கிற கிழக்குப் பக்கத்தில் பிரகாரத்தின் அகலம் 50 முழமாக இருக்க வேண்டும். 14  அதன் ஒரு பக்கத்தில் 15 முழத்துக்கு மறைப்புகள் இருக்க வேண்டும். அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் இருக்க வேண்டும்.+ 15  அதன் இன்னொரு பக்கத்தில் 15 முழத்துக்கு மறைப்புகள் இருக்க வேண்டும். அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் இருக்க வேண்டும். 16  பிரகார நுழைவாசலில் ஒரு திரையைத் தொங்கவிட வேண்டும். நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை+ ஆகியவற்றால் 20 முழ நீளத்துக்கு அதைச் செய்ய வேண்டும். அதற்கு நான்கு கம்பங்களையும் நான்கு பாதங்களையும் செய்ய வேண்டும்.+ 17  பிரகாரத்தைச் சுற்றியுள்ள எல்லா கம்பங்களுக்கும் வெள்ளி இணைப்புகளையும் வெள்ளிக் கொக்கிகளையும் செய்ய வேண்டும். ஆனால், அவற்றின் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும்.+ 18  உயர்தரமான திரித்த நாரிழையில் 100 முழ நீளத்திலும்,+ 50 முழ அகலத்திலும், 5 முழ உயரத்திலும் பிரகாரத்துக்குத் தடுப்பு அமைக்க வேண்டும். அதன் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும். 19  வழிபாட்டுக் கூடாரத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பாத்திரங்களையும், பொருள்களையும், கூடார ஆணிகளையும், பிரகாரத்துக்கான மற்ற எல்லா ஆணிகளையும் செம்பினால் செய்ய வேண்டும்.+ 20  விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி நீ இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும்.+ 21  சந்திப்புக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் உள்ள திரைச்சீலைக்கு+ வெளியே அந்த விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அவை சாயங்காலத்திலிருந்து காலைவரை யெகோவாவின் முன்னிலையில் எரியும்படி ஆரோனும் அவருடைய மகன்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.+ இஸ்ரவேலர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் இது”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “வடிவத்திலேயே.”
அதாவது, “லினனில்.”
வே.வா., “வளையங்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா