யாத்திராகமம் 22:1-31

22  பின்பு அவர், “ஒருவன் ஒரு மாட்டையோ ஆட்டையோ திருடி அதை வெட்டினால் அல்லது விற்றால், அந்த மாட்டுக்குப் பதிலாக 5 மாடுகளையும் அந்த ஆட்டுக்குப் பதிலாக 4 ஆடுகளையும்+ நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.  (ராத்திரியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடுகிறவனை+ ஒருவன் பிடித்து அடிக்கும்போது அவன் செத்துவிட்டால், அடித்தவன்மேல் எந்தக் கொலைப்பழியும்* இருக்காது.  ஆனால் சூரியன் உதித்த பின்பு அது நடந்தால், அடித்தவன்மேல் கொலைப்பழி வரும்.) திருடுகிறவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நஷ்ட ஈடு கொடுக்க அவன் கையில் ஒன்றும் இல்லையென்றால், திருட்டுப் பொருளுக்கு ஈடுகட்ட அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும்.  அவன் திருடிய ஆடோ மாடோ கழுதையோ அவனிடம் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.  ஒருவன் தன் மிருகங்களை அடுத்தவருடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ மேய விட்டுவிட்டால், தன்னுடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ விளைந்த சிறந்த விளைச்சலைக் கொடுத்து அதற்கு ஈடுகட்ட வேண்டும்.  ஒருவன் தீ மூட்டும்போது அது முட்புதர்களில் பரவி, கதிர்க்கட்டுகளையோ விளைந்த பயிர்களையோ எரித்து நாசமாக்கிவிட்டால், தீ மூட்டியவன் அதற்கு ஈடுகட்ட வேண்டும்.  ஒருவன் மற்றொருவனிடம் பணத்தையோ பொருளையோ கொடுத்து வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடுபோனால், அதைத் திருடியவன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+  அந்தத் திருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அந்தப் பொருளை வீட்டில் வைத்திருந்தவனே அதை எடுத்துக்கொண்டானா என்பதைத் தெரிந்துகொள்ள அவனை உண்மைக் கடவுள்முன் கொண்டுவர வேண்டும்.+  காணாமல்போன ஒரு ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ துணிமணியையோ வேறெதாவது பொருளையோ இரண்டு பேர் சொந்தம்கொண்டாடி, ‘இது எனக்குத்தான் சொந்தம்!’ என்று சண்டைபோட்டால், அந்த இரண்டு பேருமே தங்கள் வழக்கை உண்மைக் கடவுள்முன் கொண்டுவர வேண்டும்.+ எவனைக் குற்றவாளி என்று கடவுள் சொல்கிறாரோ அவன் மற்றவனுக்கு இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+ 10  ஒருவன் தன்னுடைய ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ வேறெதாவது மிருகத்தையோ மற்றொரு ஆளிடம் கொடுத்து வைத்திருக்கும்போது அது செத்துப்போனால், அல்லது ஊனமானால், அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் ஓட்டிக்கொண்டு போகப்பட்டால், 11  அதை வைத்திருந்த ஆள் தான் நிரபராதி என்று யெகோவாவுக்கு முன்னால் சத்தியம் செய்ய வேண்டும். மிருகத்தின் சொந்தக்காரன் அதை நம்ப வேண்டும். அதை வைத்திருந்த ஆள் அதற்காக ஈடுகட்ட வேண்டியதில்லை.+ 12  ஆனால் அதை வைத்திருந்த அந்த ஆளிடமிருந்து அது திருடப்பட்டிருந்தால், அதன் சொந்தக்காரனுக்கு அவன் ஈடுகட்ட வேண்டும். 13  அதை ஒரு காட்டு மிருகம் கடித்துக் குதறியிருந்தால், அத்தாட்சிக்காக அதை அவன் கொண்டுவர வேண்டும். காட்டு மிருகத்தால் கடித்துக் குதறப்பட்ட மிருகத்துக்காக அவன் ஈடுகட்ட வேண்டியதில்லை. 14  ஆனால், ஒருவன் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கும்போது, அதன் சொந்தக்காரன் அதன் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அது ஊனமானாலோ செத்துப்போனாலோ, இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுகட்ட வேண்டும். 15  அதன் சொந்தக்காரன் அதன் பக்கத்தில் இருந்திருந்தால், அதற்கு அவன் ஈடுகட்ட வேண்டியதில்லை. அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால் வாடகைத் தொகையே நஷ்ட ஈடாக இருக்கும். 16  நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் ஏமாற்றி அவளோடு உறவுகொண்டால், மணமகள் விலையை* கொடுத்து அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும்.+ 17  ஆனால், அவளுடைய அப்பா அவளைத் தர பிடிவாதமாக மறுத்துவிட்டால், மணமகள் விலைக்குச் சமமான தொகையை அவன் கொடுக்க வேண்டும். 18  சூனியக்காரியை நீங்கள் உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+ 19  மிருகத்தோடு உறவுகொள்கிற எவனும் நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ 20  யெகோவாவைத் தவிர வேறு தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+ 21  உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தவோ கொடுமைப்படுத்தவோ கூடாது.+ நீங்களும் மற்ற தேசத்தில், அதாவது எகிப்தில், தங்கியிருந்தீர்களே.+ 22  விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+ 23  அப்படிக் கொடுமைப்படுத்தும்போது அவன் என்னிடம் முறையிட்டால், அதை நான் நிச்சயம் கேட்பேன்.+ 24  என் கோபம் பற்றியெரியும், நான் உங்களை வாளால் கொன்றுபோடுவேன். அப்போது, உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிப்பார்கள். 25  என் ஜனங்களில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், வட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளக் கூடாது. அவர்களிடம் வட்டி வாங்கக் கூடாது.+ 26  நீங்கள் கொடுக்கும் கடனுக்காக ஒருவனுடைய சால்வையை அடமானமாக வாங்கினால்,+ சூரியன் மறைவதற்குள் அதை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 27  ஏனென்றால், அதைத்தான் அவன் போர்த்திக்கொள்ள வேண்டும். அது இல்லாவிட்டால் வேறு எதைப் போர்த்திக்கொண்டு தூங்குவான்?+ அவன் என்னிடம் முறையிட்டால் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால், நான் கரிசனை* காட்டுகிறவர்.+ 28  கடவுளையோ மக்களின் தலைவரையோ நீங்கள் சபித்து* பேசக் கூடாது.+ 29  உங்களுடைய நிலங்களில் அமோகமாக விளைகிறவற்றையும் உங்களுடைய ஆலைகளில்* பெருக்கெடுத்து ஓடுகிறவற்றையும் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கத் தயங்கக் கூடாது.+ உங்களுடைய மூத்த மகனை எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்.+ 30  உங்கள் ஆடுமாடுகளுடைய குட்டிகளும் கன்றுகளும்+ ஏழு நாட்கள் அவற்றின் தாயுடன் இருக்க வேண்டும். எட்டாம் நாளில் அவற்றை நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும்.+ 31  நீங்கள் எனக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருக்க வேண்டும்.+ வெளியிலே காட்டு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட மிருகத்தை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ அதை நாய்களுக்குப் போட்டுவிட வேண்டும்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரத்தப்பழியும்.”
கல்யாணம் செய்துகொள்ளப்போகிற பெண்ணுக்காக மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் பணம் இது.
வே.வா., “அநாதையையோ.”
வே.வா., “கனிவு.”
வே.வா., “கேவலமாக.”
அதாவது, “எண்ணெய் மற்றும் திராட்சரச ஆலைகளில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா