யாத்திராகமம் 12:1-51

12  பின்பு யெகோவா எகிப்து தேசத்திலிருந்த மோசேயிடமும் ஆரோனிடமும்,  “இந்த மாதம் உங்களுக்கு வருஷத்தின் முதல் மாதமாக இருக்கும்.+  இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் இதைச் சொல்லுங்கள்: ‘இந்த மாதம் 10-ஆம் நாளில் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்காகவும் அவரவர் வீட்டுக்காகவும் ஒரு ஆட்டைத்+ தேர்ந்தெடுக்க வேண்டும்.  முழு ஆட்டையும் சாப்பிட முடியாதளவுக்கு அந்தக் குடும்பம் சின்னதாக இருந்தால், பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து அதைச் சாப்பிட வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்து அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.  அந்த ஆடு எந்தக் குறையும் இல்லாத+ ஒருவயது கடாக் குட்டியாக இருக்க வேண்டும். அது செம்மறியாட்டுக் கடாக் குட்டியாகவோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியாகவோ இருக்கலாம்.  இந்த மாதம் 14-ஆம் நாள்வரை அதை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.+ அன்றைக்குச் சாயங்காலம், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் தங்கள் ஆட்டை வெட்ட வேண்டும்.+  அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, எந்த வீட்டில் சாப்பிடுகிறார்களோ அந்த வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களிலும் அவற்றின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.+  அதன் இறைச்சியை அன்றைக்கு ராத்திரி சாப்பிட வேண்டும்.+ அதை நெருப்பில் வாட்டி, புளிப்பில்லாத ரொட்டியோடும்+ கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+  இறைச்சியைப் பச்சையாகவோ தண்ணீரில் வேக வைத்தோ சாப்பிடக் கூடாது. அதன் தலை, கால்கள், உள்ளுறுப்புகள் எல்லாவற்றையும் நெருப்பில் வாட்டித்தான் சாப்பிட வேண்டும். 10  இறைச்சி முழுவதையும் அந்த ராத்திரிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதில் ஏதாவது காலைவரை மீதியாக இருந்தால், தீயில் சுட்டெரிக்க வேண்டும்.+ 11  இடுப்பில் வார் கட்டிக்கொண்டும், கால்களில் செருப்பு போட்டுக்கொண்டும், கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டும். அது யெகோவாவின் பஸ்கா.* 12  ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா. 13  நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் நீங்கள் இருக்கிற வீடுகளுக்கு அடையாளமாக இருக்கும். நான் எகிப்து தேசத்தைத் தாக்கும்போது அந்த இரத்தத்தைப் பார்த்து உங்களைக் கடந்துபோய்விடுவேன்; நான் கொடுக்கும் தண்டனையால் நீங்கள் அழிந்துபோக மாட்டீர்கள்.+ 14  அந்த நாளை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். அதைத் தலைமுறை தலைமுறையாய் யெகோவாவுக்கு ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். என்றென்றும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 15  ஏழு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ முதல் நாளிலிருந்து ஏழாவது நாள்வரை, புளிப்பு சேர்க்கப்பட்டதை யாராவது சாப்பிட்டால் அவன் கொல்லப்படுவான். அதனால் முதல் நாளில், உங்கள் வீடுகளில் இருக்கிற புளித்த மாவைத் தூக்கியெறிந்துவிட வேண்டும். 16  முதல் நாளிலும் ஏழாவது நாளிலும் பரிசுத்த மாநாட்டுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். அந்த நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதை மட்டும் நீங்கள் செய்துகொள்ளலாம். 17  புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், பெரிய படைபோல் இருக்கிற உங்களை அந்த நாளில்தான் எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வருவேன். தலைமுறை தலைமுறையாக நீங்கள் அந்த நாளைக் கொண்டாட வேண்டும். என்றென்றுமே இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 18  முதலாம் மாதத்தின் 14-ஆம் நாள் சாயங்காலத்திலிருந்து 21-ஆம் நாள் சாயங்காலம்வரை நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ 19  ஏழு நாட்களுக்கு உங்கள் வீடுகளில் புளித்த மாவு இருக்கக் கூடாது. யாராவது புளிப்பு சேர்க்கப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, உள்ளூர்க்காரனாக இருந்தாலும் சரி,+ கொல்லப்பட வேண்டும்.+ 20  புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. உங்களுடைய வீடுகளில் புளிப்பில்லாத ரொட்டிகளைத்தான் சாப்பிட வேண்டும்’” என்றார். 21  உடனடியாக, மோசே இஸ்ரவேலின் பெரியோர்கள்*+ எல்லாரையும் கூப்பிட்டு, “உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை* தேர்ந்தெடுத்து, அதை வெட்டி, பஸ்கா பலி செலுத்துங்கள். 22  பின்பு, பாத்திரத்திலுள்ள இரத்தத்தில் ஒரு மருவுக்கொத்தை முக்கியெடுத்து, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் அதைத் தெளியுங்கள். காலைவரை யாருமே வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது. 23  எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக யெகோவா வரும்போது, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் இரத்தத்தைப் பார்த்தால், அந்த வீட்டைவிட்டுக் கடந்துபோய்விடுவார். உங்களுடைய வீடுகளில் சாவு விழுவதற்கு யெகோவா விடமாட்டார்.+ 24  நீங்களும் உங்களுடைய மகன்களும் இந்த நிரந்தரக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.+ 25  யெகோவா சொன்னபடியே, அவர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போய்ச் சேரும்போது இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ 26  ‘இந்தப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?’ என்று உங்கள் மகன்கள் கேட்டால்,+ 27  ‘யெகோவாவுக்கு பஸ்கா பலி செலுத்துவதற்காகக் கொண்டாடுகிறோம். ஏனென்றால், அவர் எகிப்தியர்களைத் தண்டித்தபோது எங்களை மட்டும் ஒன்றும் செய்யாமல் எங்கள் வீடுகளைக் கடந்துபோய்விட்டார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார். அப்போது, ஜனங்கள்* சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். 28  மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.+ அவர்கள் அப்படியே செய்தார்கள். 29  நடுராத்திரியில், எகிப்து தேசத்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் யெகோவா கொன்றுபோட்டார்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த பார்வோனுடைய மூத்த மகன்முதல் சிறைச்சாலையில் இருந்த கைதியின் மூத்த மகன்வரை எல்லாரையும் கொன்றுபோட்டார். மிருகங்களுடைய முதல் குட்டிகளையும் கொன்றுபோட்டார்.+ 30  அன்றைக்கு ராத்திரி பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் எகிப்தியர்கள் எல்லாரும் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டார்கள். எகிப்தில் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்டது. ஏனென்றால், சாவு விழாத வீடு ஒன்றுகூட இருக்கவில்லை.+ 31  அந்த ராத்திரியே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டு,+ “புறப்பட்டுப் போங்கள். நீங்களும் மற்ற இஸ்ரவேலர்களும் என்னுடைய ஜனங்களின் நடுவிலிருந்து போய்விடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, போய் யெகோவாவை வணங்குங்கள்.+ 32  நீங்கள் சொன்னபடியே, உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள்.+ ஆனால், என்னை ஆசீர்வதிக்கும்படி உங்கள் கடவுளிடம் கேளுங்கள்” என்றான். 33  தேசத்தைவிட்டு உடனடியாகப் போகும்படி இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் அவசரப்படுத்தினார்கள்.+ “நீங்கள் இங்கேயே இருந்தால் நாங்கள் எல்லாரும் செத்துவிடுவோம்!” என்று சொன்னார்கள்.+ 34  அதனால் இஸ்ரவேல் ஜனங்கள், பிசைந்த மாவைப் புளிக்க வைப்பதற்கு முன்பே அதைப் பாத்திரத்தோடு எடுத்து, தங்களுடைய சால்வையில் கட்டி, தோள்மேல் வைத்துக்கொண்டு போனார்கள். 35  மோசே சொன்னபடியே, எகிப்தியர்களிடமிருந்து தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.+ 36  அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி யெகோவா செய்தார். இப்படி அவர்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டார்கள்.*+ 37  பின்பு, இஸ்ரவேலர்கள் ராமசேசிலிருந்து+ சுக்கோத்துக்குப்+ புறப்பட்டுப் போனார்கள். அவர்களில், பிள்ளைகள் தவிர ஆண்கள்* சுமார் ஆறு லட்சம் பேர் இருந்தார்கள்.+ 38  பலதரப்பட்ட ஜனங்களில்*+ ஏராளமானோரும் அவர்களோடு போனார்கள். எல்லாரும் ஏகப்பட்ட ஆடுமாடுகளையும் மற்ற கால்நடைகளையும் கொண்டுபோனார்கள். 39  அவர்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்திருந்த மாவை எடுத்து புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளைச் சுட்டார்கள். அவர்கள் அங்கிருந்து திடீரென்று துரத்தப்பட்டதால், மாவைப் புளிக்க வைக்கவோ மற்ற உணவுகளை எடுத்து வரவோ அவர்களால் முடியவில்லை.+ 40  எகிப்திலிருந்து+ வந்த இஸ்ரவேலர்கள் மொத்தம் 430 வருஷங்கள் அன்னியர்களாக வாழ்ந்திருந்தார்கள்.+ 41  அந்த 430 வருஷங்கள் முடிந்த நாளில்தான், யெகோவாவின் ஜனங்கள் எல்லாரும் எகிப்து தேசத்தைவிட்டுப் படைபோல் திரண்டு போனார்கள். 42  யெகோவா அவர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்ததற்காக அவர்கள் அந்த ராத்திரியைக் கொண்டாட வேண்டியிருந்தது. யெகோவாவுக்காக இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் தலைமுறை தலைமுறையாய் அதைக் கொண்டாட வேண்டியிருந்தது.+ 43  பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “பஸ்கா பண்டிகைக்கான சட்டதிட்டம் இதுதான்: வேறு தேசத்து ஜனங்கள் யாரும் பஸ்கா உணவைச் சாப்பிடக் கூடாது.+ 44  விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரு அடிமை உங்களோடு இருந்தால், நீங்கள் அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ பின்புதான், அவன் அதைச் சாப்பிட வேண்டும். 45  உங்களோடு குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் உங்களிடம் கூலிக்கு வேலை செய்கிறவர்களும் அதைச் சாப்பிடக் கூடாது. 46  பஸ்கா உணவை ஒரே வீட்டில் சாப்பிட வேண்டும். இறைச்சியில் எதையும் வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக் கூடாது. அதன் ஒரு எலும்பைக்கூட முறிக்கக் கூடாது.+ 47  இஸ்ரவேலர்கள் எல்லாரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48  உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்துக்காரன் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவனுடைய வீட்டு ஆண்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். பின்பு, அவன் உங்களோடு சேர்ந்து அதைக் கொண்டாடலாம். அப்போது, அவன் இஸ்ரவேல் குடிமகனைப் போலவே ஆகிவிடுவான். ஆனால், விருத்தசேதனம் செய்யப்படாத யாரும் அதைச் சாப்பிடக் கூடாது.+ 49  இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் ஒரே சட்டம்தான்” என்றார்.+ 50  அதனால், மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா சொன்னபடியே இஸ்ரவேலர்கள் எல்லாரும் செய்தார்கள். அவர்கள் அப்படியே செய்தார்கள். 51  அந்த நாளில், இஸ்ரவேலர்கள் எல்லாரையும்* எகிப்து தேசத்திலிருந்து யெகோவா வெளியே கொண்டுவந்தார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “கடந்துபோகுதல்.”
வே.வா., “மூப்பர்கள்.”
அதாவது, “செம்மறியாட்டுக் குட்டியையோ வெள்ளாட்டுக் குட்டியையோ.”
ஒருவேளை, “பெரியோர்கள்.”
வே.வா., “சூறையாடினார்கள்.”
நே.மொ., “கால்நடையாகப் போன ஆண்கள்.” அநேகமாக, படை சேவைக்குத் தகுதி பெற்ற ஆண்கள்.
அதாவது, “எகிப்தியர்கள் உட்பட மற்ற தேசத்தாரில்.”
நே.மொ., “இஸ்ரவேலர்களையும் அவர்களுடைய எல்லா படைகளையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா