மாற்கு எழுதியது 9:1-50
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

பிலிப்புச் செசரியாவுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த எர்மோன் மலையின் உயரம் 2,814 மீ. (9,232 அடி); இஸ்ரவேலின் சுற்றுவட்டாரத்திலேயே அதுதான் மிக உயரமான மலையாக இருந்தது. பனி போர்த்திய அதன் சிகரங்களில் நீராவி நீர்த்துளிகளாக, அதாவது பனித்துளிகளாக, மாறுகின்றன. இப்படி உருவாகும் ஏராளமான பனித்துளிகளால், வறண்ட காலம் முழுவதும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. (சங் 133:3) எர்மோன் மலையிலிருந்து உருகிவரும் பனிதான் யோர்தான் ஆற்றுக்கு மூலாதாரம். இயேசு தோற்றம் மாறியது ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.—மத் 17:2.

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் வட எல்லைப் பகுதியில் எர்மோன் மலை அமைந்திருக்கிறது. அதற்கு நிறைய சிகரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரிய சிகரம், கடல் மட்டத்திலிருந்து 2,814 மீ. (9,232 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. எர்மோன் மலையின் சிகரங்கள்தான், கிழக்கு லீபனோன் மலைத்தொடரின் தெற்குப் பகுதியாக இருக்கின்றன. இயேசு தோற்றம் மாறிய இடம் ஒருவேளை எர்மோன் மலையாக இருந்திருக்கலாம்.

படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற பெரிய திரிகைக் கற்கள், அதாவது மாவு அரைக்கும் கற்கள், கழுதை போன்ற வீட்டு விலங்குகளை வைத்துச் சுற்றப்பட்டன. தானியங்களை அரைப்பதற்கோ ஒலிவப் பழங்களைப் பிழிவதற்கோ அவை பயன்படுத்தப்பட்டன. திரிகையின் மேற்கல் 1.5 மீ. (5 அடி) விட்டத்தில்கூட இருந்திருக்கலாம். அதைவிடப் பெரிய அடிக்கல்லின் மீது அது வைக்கப்பட்டுச் சுற்றப்பட்டிருக்கலாம்.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கெஹென்னா என்று அழைக்கப்படும் இன்னோம் பள்ளத்தாக்கு (1). ஆலயப் பகுதி (2). முதல் நூற்றாண்டில் யூதர்களுடைய ஆலயம் இங்குதான் இருந்தது. இன்று இங்கு மிகவும் பிரபலமான ஒரு மசூதி இருக்கிறது. அது பாறை மாடக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.—இணைப்பு B12-ல் உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.

இன்று சவக் கடலின் (உப்புக்கடலின்) தண்ணீர், உலகத்தில் உள்ள கடல்களின் தண்ணீரைவிட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டது. (ஆதி 14:3) சவக் கடலின் தண்ணீர் ஆவியாக மாறியபோதெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு நிறைய உப்பு கிடைத்தது. அது மற்ற தாதுப்பொருள்களோடு கலந்திருந்ததால் தரம் குறைந்ததாக இருந்தது; ஆனாலும், அவர்கள் அதைப் பயன்படுத்தினார்கள். பெனிக்கேயர்களிடமிருந்தும் இஸ்ரவேலர்கள் உப்பை வாங்கியிருக்கலாம். அந்த பெனிக்கேயர்கள் மத்தியதரைக் கடலின் தண்ணீரை ஆவியாக்குவதன் மூலம் உப்பைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது. உப்பு உணவுக்குச் சுவை சேர்ப்பதாக பைபிள் சொல்கிறது. (யோபு 6:6) மக்களுடைய தினசரி வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை உவமைகளாகப் பயன்படுத்துவதில் இயேசு திறமைசாலியாக இருந்தார். அதனால், முக்கியமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுத்தருவதற்காக உப்பை உவமையாகப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, மலைப்பிரசங்கத்தில் அவர் தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். ஆன்மீக விதத்திலும் ஒழுக்க விதத்திலும் சீரழியாதபடி அல்லது கெட்டுப்போகாதபடி மற்றவர்களை அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார்.