மாற்கு 5:1-43

5  பின்பு, அவர்கள் கடலுக்கு அக்கரையில் இருக்கிற கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள்.+  இயேசு படகிலிருந்து இறங்கியவுடனே, பேய் பிடித்த ஒருவன் கல்லறைகளின் நடுவிலிருந்து அவருக்கு எதிரில் வந்தான்.  அவன் அந்தக் கல்லறைகளில் நடுவில்தான் தங்கியிருந்தான்; அதுவரை ஒருவராலும் அவனைச் சங்கிலியால்கூட கட்டி வைக்க முடியவில்லை;  ஏனென்றால், விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பல தடவை அவனைக் கட்டிப்போட்டும், அந்தச் சங்கிலிகளை முறித்தெறிந்தான், விலங்குகளையும் உடைத்துப்போட்டான்; ஒருவராலும் அவனை அடக்க முடியவில்லை.  அவன் அந்தக் கல்லறைகளிலும் மலைகளிலும் ராத்திரி பகலாகக் கூச்சல் போட்டுக்கொண்டும், கற்களால் தன்னையே கீறிக்கொண்டும் இருந்தான்.  ஆனால், தூரத்திலிருந்து இயேசுவைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர் முன்னால் மண்டிபோட்டு,+  “இயேசுவே, உன்னதமான கடவுளின் மகனே, உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் என்னைப் பாடுபடுத்த மாட்டீர்கள் என்று கடவுள்மேல் ஆணையிட்டுச் சொல்லுங்கள்!” என்று சத்தமாகக் கத்தினான்.+  ஏனென்றால் இயேசு அவனிடம், “பேயே, இந்த மனுஷனைவிட்டு வெளியே போ!”+ என்று சொல்லியிருந்தார்.  அப்போது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்; அதற்கு அவன், “என் பெயர் லேகியோன்.* ஏனென்றால், நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம்” என்று சொல்லி, 10  அந்தப் பகுதியைவிட்டுத் தங்களைத் துரத்த வேண்டாம் என்று திரும்பத் திரும்ப இயேசுவிடம் கெஞ்சினான்.+ 11  அப்போது பன்றிகள்+ பெருங்கூட்டமாக மலையில் மேய்ந்துகொண்டிருந்தன.+ 12  அதனால், “அந்தப் பன்றிகளுக்குள் எங்களை அனுப்பிவிடுங்கள், அவற்றுக்குள் நாங்கள் புகுந்துகொள்கிறோம்” என்று அந்தப் பேய்கள் கெஞ்சிக் கேட்டன. 13  அவரும் அனுமதி கொடுத்தார். உடனே அந்தப் பேய்கள் அவனைவிட்டு வெளியேறி பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன; கிட்டத்தட்ட 2,000 பன்றிகள் ஓட்டமாக ஓடி செங்குத்தான பாறையிலிருந்து கடலுக்குள் குதித்து மூழ்கின. 14  அவற்றை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் ஓடிப்போய் நகரத்திலும் நாட்டுப்புறத்திலும் இருந்தவர்களிடம் அதைச் சொன்னார்கள்; என்ன நடந்ததென்று பார்க்க மக்கள் புறப்பட்டுப் போனார்கள்.+ 15  அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, லேகியோனாகிய பேய்கள் பிடித்திருந்த அந்த மனிதன் உடை உடுத்தி, புத்தி தெளிந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 16  நடந்ததை நேரில் பார்த்தவர்கள், பேய் பிடித்தவனுக்கும் பன்றிகளுக்கும் என்ன ஆனதென்று அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். 17  அதனால், தங்களுடைய பகுதியைவிட்டுப் போகச் சொல்லி அவர்கள் இயேசுவிடம் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்தார்கள்.+ 18  அவர் படகில் ஏறியபோது, பேய் பிடித்திருந்த அந்த மனிதனும் கூடவே வருவதாகச் சொல்லிக் கெஞ்சினான்.+ 19  ஆனால் அவர் அதற்குச் சம்மதிக்காமல், “நீ உன் வீட்டுக்குப் போய், யெகோவா* உனக்காகச் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவர் உனக்குக் காட்டிய இரக்கத்தைப் பற்றியும் உன் சொந்தக்காரர்களிடம் சொல்” என்றார். 20  அவனும் அங்கிருந்து போய், இயேசு தனக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலியில்* சொல்ல ஆரம்பித்தான்; அதைக் கேட்ட எல்லாரும் பிரமித்துப்போனார்கள். 21  இயேசு படகில் இக்கரைக்குத் திரும்பி வந்த பின்பு, மக்கள் அவரிடம் திரண்டு வந்தார்கள்; அவர் கடலோரத்தில் இருந்தார்.+ 22  அப்போது, ஜெபக்கூடத் தலைவர்களில் ஒருவரான யவீரு அங்கே வந்தார்; இயேசுவைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து,+ 23  “என்னுடைய சிறுபெண்ணின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது;* தயவுசெய்து நீங்கள் வந்து அவள்மேல் கைகளை வையுங்கள்;+ அவள் குணமாகி, பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லிப் பல தடவை கெஞ்சினார். 24  அதனால் யவீருவுடன் இயேசு போனார். ஒரு பெரிய கூட்டம் அவரை நெருக்கிக்கொண்டு அவர் பின்னால் போனது. 25  ஒரு பெண் 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்.+ 26  நிறைய மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சைகளால் அவள் பயங்கர வேதனையை அனுபவித்திருந்தாள், தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்திருந்தாள்; ஆனால், அவள் குணமாகவில்லை; நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருந்தது. 27  இயேசுவைப் பற்றி அவள் நிறைய கேள்விப்பட்டிருந்ததால், “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே போதும், நான் குணமாகிவிடுவேன்”+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, 28  பின்பக்கமாகக் கூட்டத்துக்குள் நுழைந்து அவருடைய மேலங்கியைத் தொட்டாள்.+ 29  உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னைப் பாடாய்ப் படுத்திய அந்த நோயிலிருந்து குணமானதை அவளால் உணர முடிந்தது. 30  இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை+ வெளியேறியதை உடனடியாக உணர்ந்தார்; அதனால் கூட்டத்தாரிடம் திரும்பி, “என் மேலங்கியைத் தொட்டது யார்?”+ என்று கேட்டார். 31  அப்போது அவருடைய சீஷர்கள், “கூட்டம் உங்களை நெருக்கித் தள்ளுவதை நீங்களே பார்க்கிறீர்கள்; அப்படியிருக்கும்போது, ‘யார் என்னைத் தொட்டது?’ என்று கேட்கிறீர்களே” என்றார்கள். 32  ஆனாலும், தன்னைத் தொட்டது யார் என்று தெரிந்துகொள்வதற்காக அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். 33  அப்போது அந்தப் பெண் தனக்கு நடந்ததை உணர்ந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, எல்லா உண்மையையும் சொன்னாள். 34  அதற்கு அவர், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. உன்னைப் பாடாய்ப் படுத்திய நோயிலிருந்து சுகமாகி,+ சமாதானமாகப் போ”+ என்று சொன்னார். 35  அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, ஜெபக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து சில ஆட்கள் வந்து, “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! இனி எதற்காகப் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?”+ என்று கேட்டார்கள். 36  அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் ஜெபக்கூடத் தலைவரிடம், “பயப்படாதே, விசுவாசத்தோடு இரு”+ என்று சொன்னார். 37  பின்பு பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரை மட்டும் கூட்டிக்கொண்டு போனார், வேறு யாரையும் வர அனுமதிக்கவில்லை.+ 38  ஜெபக்கூடத் தலைவரின் வீட்டுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள்; அங்கு ஒரே கூச்சலும் குழப்பமும் அழுகையும் புலம்பலுமாக இருந்ததை அவர் பார்த்தார்.+ 39  உள்ளே போன பின்பு அங்கிருந்தவர்களிடம், “ஏன் இப்படி அழுது, கூச்சல்போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்”+ என்று சொன்னார். 40  அப்போது, அவர்கள் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் எல்லாரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அந்தச் சிறுமியின் அப்பாவையும் அம்மாவையும் தன்னோடு வந்தவர்களையும் மட்டும் கூட்டிக்கொண்டு அவளுடைய உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குப் போனார். 41  பின்பு அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, “தலீத்தா கூமி” என்று சொன்னார்; அதற்கு, “சிறுமியே, ‘எழுந்திரு!’ என்று நான் உனக்குச் சொல்கிறேன்”+ என்று அர்த்தம். 42  உடனே, அந்தச் சிறுமி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்; (அவளுக்கு 12 வயது.) அதைப் பார்த்ததும் அவளுடைய பெற்றோர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. 43  ஆனால், இதை யாருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர் திரும்பத் திரும்ப அவர்களுக்குக் கட்டளையிட்டார்;*+ பின்பு, அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார்.

அடிக்குறிப்புகள்

”லேகியோன்” என்பது அந்தக் காலத்தில் ரோமப் படையின் முக்கியப் பிரிவு. இந்த வசனத்தில் இது பெரும் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “பத்து நகரங்களின் பகுதியில்.”
வே.வா., “சிறுபெண் சாகக் கிடக்கிறாள்.”
வே.வா., “கண்டிப்புடன் கட்டளையிட்டார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

கலிலேயா கடலின் கிழக்கில் உள்ள செங்குத்தான பாறைகள்
கலிலேயா கடலின் கிழக்கில் உள்ள செங்குத்தான பாறைகள்

கலிலேயா கடலின் கிழக்குக் கரையோரமாகத்தான், பேய் பிடித்திருந்த இரண்டு பேரை இயேசு குணப்படுத்தினார். அவர்களைப் பிடித்திருந்த பேய்களைப் பன்றிக் கூட்டத்துக்குள் அவர் அனுப்பிவிட்டார்.