மல்கியா 1:1-14

1  ஓர் அறிவிப்பு: மல்கியா* மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா சொன்ன செய்தி இதுதான்:  “நான் உங்களை நேசித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார். ஆனால் நீங்கள், “எந்த விதத்தில் எங்களை நேசித்தீர்கள்?” என்று கேட்கிறீர்கள். அதற்கு யெகோவா, “யாக்கோபின் அண்ணன்தானே ஏசா?+ ஆனால், நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்.+  அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.  “‘நாங்கள் துரத்தியடிக்கப்பட்டாலும் திரும்பி வருவோம், இடிந்து கிடக்கிற எங்கள் நகரங்களைக் கட்டுவோம்’ என்று ஏதோம் ஜனங்கள் சொல்கிறார்கள். ஆனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் கட்டுவார்கள், ஆனால் நான் இடித்துப் போடுவேன். ஏதோம் தேசம் “அக்கிரமக்காரர்களின் தேசம்” என்றும், அதன் ஜனங்கள் “யெகோவாவிடமிருந்து நிரந்தரமான கண்டனத் தீர்ப்பைப் பெற்ற ஜனங்கள்”+ என்றும் அழைக்கப்படுவார்கள்.  நீங்கள் அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். “இஸ்ரவேல் தேசமெங்கும் யெகோவாவின் புகழ் பரவட்டும்” என்று சொல்வீர்கள்.’”  “பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரை அவமதிக்கிற குருமார்களே,+ ‘மகன் தன்னுடைய தகப்பனுக்கு மதிப்புக் கொடுக்கிறான்,+ வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக் கொடுக்கிறான். நான் தகப்பன்+ என்றால், எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு எங்கே?+ நான் எஜமான்* என்றால், எனக்குக் காட்டப்பட வேண்டிய மரியாதை* எங்கே?’ என்று அவர் கேட்கிறார். ‘ஆனால் நீங்கள், “உங்களுடைய பெயரை நாங்கள் எப்படி அவமதிக்கிறோம்?” என்று கேட்கிறீர்கள்.’  ‘என் பலிபீடத்தில் தீட்டான பலியைச் செலுத்தி என்னை அவமதிக்கிறீர்கள்.’ ‘ஆனால் நீங்கள் என்னிடம், “நாங்கள் எப்படித் தீட்டான பலியைச் செலுத்தி உங்களை அவமதிக்கிறோம்?” என்று கேட்கிறீர்கள்.’ ‘“யெகோவாவின் மேஜையெல்லாம்+ ஒரு மேஜையா?” என்று கேவலமாகப் பேசுகிறீர்களே.  அதோடு, பலி செலுத்துவதற்காகக் குருடான மிருகத்தைக் கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை” என்று சொல்கிறீர்கள். அதேபோல், நொண்டியான மிருகத்தையோ நோயுள்ள மிருகத்தையோ கொண்டுவந்து, “இது ஒன்றும் மோசமானது இல்லை”+ என்று சொல்கிறீர்கள்.’” “இதையெல்லாம் தயவுசெய்து உங்கள் ஆளுநரிடம் கொடுத்துப் பாருங்கள். அவர் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுவாரா? உங்களுக்குக் கருணை காட்டுவாரா?” என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.  “இப்போது தயவுசெய்து நமக்குக் கருணை காட்டும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேளுங்கள். இப்படிப்பட்ட காணிக்கைகளைக் கடவுளுக்குச் செலுத்துகிறீர்களே, அவர் உங்களில் யாருக்காவது கருணை காட்டுவாரா?” என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார். 10  “நீங்கள் ஆதாயம் இல்லாமல் கதவுகளை மூடுவீர்களா?*+ என் பலிபீடத்தில் தீ மூட்டுவதற்குக்கூட காசு வாங்குவீர்களே!+ உங்களைக் கண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நீங்கள் கொடுக்கிற காணிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 11  “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும் உள்ள எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்.+ எல்லா இடங்களிலும் எனக்குத் தகன பலிகள் செலுத்தப்படும். என் பெயரில் பரிசுத்தமான காணிக்கைகள் அர்ப்பணிக்கப்படும். ஏனென்றால், எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 12  “ஆனால் நீங்கள், ‘யெகோவாவின் மேஜை அசுத்தமாக இருக்கிறது. அதன்மேல் இருக்கிற காணிக்கையெல்லாம் ஒரு காணிக்கையா?’ என்று கேவலமாகப் பேசி+ அதை* களங்கப்படுத்துகிறீர்கள்.+ 13  அதுமட்டுமல்ல, ‘ச்சே! சலித்துப்போய்விட்டது!’ என்று சொல்லி அதை ஏளனம் செய்கிறீர்கள்” எனப் பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “திருடியதையும், நொண்டியானதையும், நோய் பிடித்ததையும் எனக்குக் காணிக்கையாகக் கொண்டுவருகிறீர்களே! அதை நான் உங்கள் கையிலிருந்து வாங்க வேண்டுமோ?”+ என்று யெகோவா கேட்கிறார். 14  “எந்தக் குறையுமில்லாத மிருகத்தை வைத்துக்கொண்டு, குறையுள்ள மிருகத்தை யெகோவாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துகிற தந்திரக்காரன் சபிக்கப்படுவான். ஏனென்றால், நான் மகா ராஜா.+ எல்லா தேசத்தாரும் என் பெயருக்கு மதிப்பு மரியாதை காட்டுவார்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “என் தூதுவர்.”
வே.வா., “பெரிய எஜமான்.”
வே.வா., “பயம்.”
அநேகமாக, ஆலயத்தின் கதவுகளை மூடும் பொறுப்பை அர்த்தப்படுத்தலாம்.
அல்லது, “என்னை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா