மத்தேயு எழுதியது 14:1-36

14  அந்தச் சமயத்தில், இயேசுவைப் பற்றிய செய்தியை மாகாண அதிபதி ஏரோது கேள்விப்பட்டான்.+  அவன் தன்னுடைய வேலையாட்களிடம், “இவர் யோவான் ஸ்நானகர்தான். இவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார், அதனால்தான் இவரால் அற்புதங்களை* செய்ய முடிகிறது”+ என்று சொன்னான்.  ஏரோது தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைப் பிரியப்படுத்துவதற்காக யோவானைப் பிடித்து சங்கிலியால் கட்டி சிறையில் அடைத்திருந்தான்.+  ஏனென்றால் யோவான் அவனிடம், “நீங்கள் அவளை வைத்திருப்பது சரியல்ல”+ என்று நிறைய தடவை சொல்லியிருந்தார்;  அதனால் ஏரோது அவரைக் கொல்ல நினைத்தான், ஆனால் மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பியதால் அவர்களுக்குப் பயந்தான்.+  ஏரோதுவின் பிறந்தநாள்+ கொண்டாட்டத்தில், ஏரோதியாளின் மகள் அங்கிருந்த விருந்தாளிகள் முன்னால் நடனம் ஆடினாள்; அதைப் பார்த்து ஏரோது மனம் குளிர்ந்துபோனான்.+  அதனால், அவள் என்ன கேட்டாலும் தருவதாக ஆணையிட்டுக் கொடுத்தான்.  அப்போது அவள் தன்னுடைய அம்மா தூண்டிவிட்டபடியே, “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று சொன்னாள்.+  அதைக் கேட்டு ராஜா துக்கமடைந்தான்; ஆனாலும், விருந்தாளிகள்* முன்னால் ஆணையிட்டுக் கொடுத்திருந்ததால் அவள் விருப்பத்தை நிறைவேற்றச் சொல்லி உத்தரவிட்டான். 10  உடனே ஆள் அனுப்பி, சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான். 11  அவருடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டது; அவள் அதைத் தன் அம்மாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். 12  யோவானுடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்; பின்பு, இயேசுவிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள். 13  இயேசு இதைக் கேட்டதும், கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்காகப் படகில் ஏறி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குப் போனார்; ஆனால் மக்கள் இதைக் கேள்விப்பட்டு, தங்கள் நகரங்களிலிருந்து நடந்தே அவரிடம் போனார்கள்.+ 14  அவர் அங்கே போய் இறங்கியபோது ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்ததைப் பார்த்து, மனம் உருகி,+ அங்கிருந்த நோயாளிகளைக் குணமாக்கினார்.+ 15  சாயங்காலம் ஆனபோது சீஷர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான இடம், ரொம்ப நேரமும் ஆகிவிட்டது. அதனால் இந்த மக்களை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் இவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்”+ என்று சொன்னார்கள். 16  அதற்கு இயேசு, “இவர்கள் போக வேண்டியதில்லை; நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்று சொன்னார். 17  அதற்கு அவர்கள், “ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் தவிர எங்களிடம் வேறொன்றும் இல்லை” என்று சொன்னார்கள். 18  அப்போது அவர், “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 19  அதன் பின்பு, புல்தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் சொல்லிவிட்டு அந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து, ஜெபம் செய்தார்.*+ பின்பு, ரொட்டிகளைப் பிட்டு சீஷர்களிடம் கொடுத்தார், அவர்கள் அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள். 20  எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; மீதியிருந்த ரொட்டித் துண்டுகளை 12 கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள்.+ 21  இத்தனைக்கும், பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர, சுமார் 5,000 ஆண்கள் சாப்பிட்டிருந்தார்கள்.+ 22  பின்பு, கூட்டத்தாரை அவர் அனுப்ப ஆரம்பித்தார்; அதோடு, உடனடியாகப் படகில் ஏறி தனக்கு முன்பே அக்கரைக்குப் போகும்படி சீஷர்களை அனுப்பினார்.+ 23  கூட்டத்தாரை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார்.+ பொழுது சாய்ந்தபோது அவர் அங்கே தனியாக இருந்தார். 24  இதற்குள், படகு கரையிலிருந்து ரொம்பத் தூரம் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் அது அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது; 25  நான்காம் ஜாமத்தில், அவர்களை நோக்கி அவர் கடல்மேல் நடந்து வந்தார். 26  அவர் கடல்மேல் நடந்து வருவதை சீஷர்கள் பார்த்தபோது கலக்கமடைந்தார்கள்; “ஏதோ மாய உருவம்!” என்று சொல்லி அலறினார்கள். 27  உடனே இயேசு அவர்களிடம், “தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்” என்று சொன்னார்.+ 28  அப்போது பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்களா? அப்படியானால், நானும் தண்ணீர்மேல் நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று சொன்னார். 29  அதற்கு அவர், “வா!” என்று சொன்னார். பேதுருவும் படகிலிருந்து இறங்கித் தண்ணீர்மேல் நடந்து இயேசுவை நோக்கிப் போனார். 30  ஆனால், புயல்காற்றைப் பார்த்ததும் பயந்துபோய்த் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார்; அப்போது, “எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறினார். 31  உடனே இயேசு தன் கையை நீட்டி அவரைப் பிடித்துக்கொண்டு, “விசுவாசத்தில் குறைவுபட்டவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?”+ என்று கேட்டார். 32  அவர்கள் படகில் ஏறிய பிறகு புயல்காற்று அடங்கியது. 33  படகில் இருந்தவர்கள் அவர் முன்னால் தலைவணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்”+ என்று சொன்னார்கள். 34  பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ 35  அந்தப் பகுதியிலிருந்த ஆட்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா இடங்களுக்கும் செய்தி அனுப்பினார்கள். அதனால், நோயாளிகள் எல்லாரையும் மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 36  அவருடைய மேலங்கியின் ஓரத்தையாவது தொட அனுமதிக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள்.+ அப்படித் தொட்ட அத்தனை பேரும் முழுமையாகக் குணமானார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மாகாண அதிபதி: நே.மொ., “கால்பங்கு தேசத்து அதிபதி” (இதன் அர்த்தம், ஒரு மாகாணத்தின் “கால்பங்கு பகுதியை ஆட்சி செய்கிறவர்.”) இது, ரோம அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்டு ஒரு பகுதியை ஆட்சி செய்த சிற்றரசரைக் குறித்தது. ஏரோது அந்திப்பா கலிலேயாவையும் பெரேயாவையும் ஆட்சி செய்தான்.​—மாற் 6:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஏரோது: அதாவது, “மகா ஏரோதுவின் மகனாகிய ஏரோது அந்திப்பா.”​—சொல் பட்டியலைப் பாருங்கள்.

ஸ்நானகர்: வே.வா., “அமிழ்த்தியெடுப்பவர்; முக்கியெடுப்பவர்.” அநேகமாக, இது ஒரு சிறப்புப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. தண்ணீரில் முக்கியெடுப்பதன் மூலம் ஞானஸ்நானம் கொடுப்பது யோவானின் சிறப்பம்சமாக இருந்ததை இது காட்டுகிறது. “ஸ்நானகர் என்று அழைக்கப்பட்ட யோவான்” என யூத சரித்திராசிரியரான ஃபிளேவியஸ் ஜொசிஃபஸ் எழுதினார்.

யோவான்: எபிரெயுவில், யெகோனான் அல்லது யோகனான். இதன் அர்த்தம், “யெகோவா கருணை காட்டியிருக்கிறார்; யெகோவா கனிவுள்ளவராக இருக்கிறார்.”

யோவான் ஸ்நானகர்தான்: மத் 3:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ஏரோது: அதாவது, “ஏரோது அந்திப்பா.”​—சொல் பட்டியலைப் பாருங்கள்.

தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை: ஏரோது அந்திப்பா தன்னுடைய மாற்றாந்தாயின் மகனாகிய ஏரோது பிலிப்புவின் மனைவியிடம், அதாவது ஏரோதியாளிடம், மயங்கினான். அதனால், அந்திப்பா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தான், ஏரோதியாளும் பிலிப்புவை விவாகரத்து செய்தாள். பிறகு, அவளும் அந்திப்பாவும் கல்யாணம் செய்துகொண்டார்கள். யூதச் சட்டத்துக்கு முரணாக இருந்த இந்த ஒழுக்கங்கெட்ட உறவை யோவான் ஸ்நானகர் கண்டித்தார்; அதனால், கைது செய்யப்பட்டார்.

யோவானைப் பிடித்து . . . சிறையில் அடைத்திருந்தான்: இது எங்கே நடந்ததென்று பைபிள் சொல்வதில்லை. சவக் கடலுக்குக் கிழக்கே இருந்த மாக்கேரஸ் கோட்டையில் அவர் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜொசிஃபஸ் சொல்கிறார். (ஜூயிஷ் ஆண்ட்டிக்விட்டீஸ், புத்தகம் 18, அதி. 5, பாரா 2 [லோயெப் 18.119]) யோவான் கொஞ்சக் காலத்துக்கு அந்தச் சிறையில் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (மத் 4:12) ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட சமயத்தில், கலிலேயா கடலின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருந்த திபேரியா நகரத்தின் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். பின்வரும் காரணங்களால் நாம் இந்த முடிவுக்கு வரலாம்: (1) யோவான் சிறையில் இருந்தபோது, இயேசு செய்ததையெல்லாம் கேள்விப்பட்டார். அதோடு, இயேசுவிடம் பேசுவதற்குத் தன் சீஷர்களை அனுப்பினார். (மத் 11:1-3) அதனால், அவர் இருந்த சிறை, கலிலேயாவில் இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்த பகுதிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். (2) ஏரோதுவின் பிறந்தநாள் விருந்துக்கு ‘கலிலேயாவிலிருந்த முக்கியப் பிரமுகர்கள்’ வந்திருந்ததாக மாற்கு சொல்லியிருக்கிறார். திபேரியாவில் இருந்த ஏரோதுவின் மாளிகையில் அந்த விருந்து நடந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த விருந்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் யோவான் அநேகமாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.—மாற் 6:21-29; மத் 14:6-11.

யோவானைப் பிடித்து . . . சிறையில் அடைத்திருந்தான்: இது எங்கே நடந்ததென்று பைபிள் சொல்வதில்லை. சவக் கடலுக்குக் கிழக்கே இருந்த மாக்கேரஸ் கோட்டையில் அவர் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜொசிஃபஸ் சொல்கிறார். (ஜூயிஷ் ஆண்ட்டிக்விட்டீஸ், புத்தகம் 18, அதி. 5, பாரா 2 [லோயெப் 18.119]) யோவான் கொஞ்சக் காலத்துக்கு அந்தச் சிறையில் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (மத் 4:12) ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட சமயத்தில், கலிலேயா கடலின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருந்த திபேரியா நகரத்தின் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். பின்வரும் காரணங்களால் நாம் இந்த முடிவுக்கு வரலாம்: (1) யோவான் சிறையில் இருந்தபோது, இயேசு செய்ததையெல்லாம் கேள்விப்பட்டார். அதோடு, இயேசுவிடம் பேசுவதற்குத் தன் சீஷர்களை அனுப்பினார். (மத் 11:1-3) அதனால், அவர் இருந்த சிறை, கலிலேயாவில் இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்த பகுதிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். (2) ஏரோதுவின் பிறந்தநாள் விருந்துக்கு ‘கலிலேயாவிலிருந்த முக்கியப் பிரமுகர்கள்’ வந்திருந்ததாக மாற்கு சொல்லியிருக்கிறார். திபேரியாவில் இருந்த ஏரோதுவின் மாளிகையில் அந்த விருந்து நடந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த விருந்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் யோவான் அநேகமாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.—மாற் 6:21-29; மத் 14:6-11.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில்: அநேகமாக, திபேரியாவில் இருந்த ஏரோது அந்திப்பாவின் மாளிகையில் இது நடந்திருக்கும். (மத் 14:3; மாற் 6:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) பைபிள் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றித்தான் சொல்கிறது. ஒன்று, இந்தப் பதிவில் வரும் பிறந்தநாள் கொண்டாட்டம் (அப்போது, யோவானின் தலை வெட்டப்பட்டது); இன்னொன்று, எகிப்திய ராஜாவான பார்வோனின் பிறந்தநாள் கொண்டாட்டம் (அப்போது, ரொட்டி சுடுபவர்களின் தலைவன் கொல்லப்பட்டான்). (ஆதி 40:18-22) இந்த இரண்டு பதிவுகளுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பெரிய விருந்து வைக்கப்பட்டது, அதோடு ஒரு கொலையும் நடந்தது.

ராஜா: ஏரோது அந்திப்பாவின் அதிகாரப்பூர்வ ரோமப் பட்டப்பெயர், “கால்பங்கு தேசத்து அதிபதி.” இதைத்தான் மத் 14:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் பார்த்தோம். ஆனாலும், பெரும்பாலான மக்கள் அவரை “ராஜா” என்றுதான் அழைத்தார்கள்.

ஆணையிட்டுக் கொடுத்திருந்ததால்: ‘ஆணை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை இந்த வசனத்தில் பன்மையில் இருக்கிறது (ஆனால், மத் 14:7-ல் அது ஒருமையில் இருக்கிறது). தான் கொடுத்த வாக்கை வலியுறுத்துவதற்காக அல்லது உறுதிப்படுத்துவதற்காக ஏரோது திரும்பத் திரும்ப ஆணையிட்டுக் கொடுத்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

மாகாண அதிபதி: நே.மொ., “கால்பங்கு தேசத்து அதிபதி” (இதன் அர்த்தம், ஒரு மாகாணத்தின் “கால்பங்கு பகுதியை ஆட்சி செய்கிறவர்.”) இது, ரோம அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்டு ஒரு பகுதியை ஆட்சி செய்த சிற்றரசரைக் குறித்தது. ஏரோது அந்திப்பா கலிலேயாவையும் பெரேயாவையும் ஆட்சி செய்தான்.​—மாற் 6:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனம் உருகி: வே.வா., “பரிதாபப்பட்டு.”​—மத் 9:36-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவருடைய மனம் உருகியது: இதற்கான கிரேக்க வினைச்சொல், ஸ்ப்ளாக்னீசோமே. இது “குடல்கள்” (ஸ்ப்ளாக்னா) என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில், கரிசனையைக் குறிக்கும் வார்த்தைகளிலேயே இதுதான் மிகவும் வலிமையான வார்த்தை.

நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்: இயேசு செய்த வெவ்வேறு அற்புதங்களைப் பற்றி நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுமே பதிவு செய்திருந்தாலும், அந்த நான்கு பேருமே பதிவு செய்திருக்கிற ஒரே அற்புதம் இதுதான்.—மத் 14:15-21; மாற் 6:35-44; லூ 9:10-17; யோவா 6:1-13.

மீன்களையும்: பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள், மீன்களை நெருப்பில் சுட்டோ, உப்பு தடவி காய வைத்தோ சாப்பிட்டார்கள். பொதுவாக, அவற்றை ரொட்டியோடு வைத்து சாப்பிட்டார்கள். இயேசு பயன்படுத்திய மீன்கள், ஒருவேளை உப்பு தடவி காய வைக்கப்பட்டிருந்த மீன்களாக இருந்திருக்கலாம்.

ரொட்டிகளைப் பிட்டு: நே.மொ., “ரொட்டிகளை உடைத்து.” அன்று ரொட்டிகள் பொதுவாக தட்டையாகவும் மொரமொரப்பாகவும் இருந்தன. அதனால், அவற்றை உடைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.—மத் 15:36; 26:26; மாற் 6:41; 8:6; லூ 9:16.

கூடைகள்: இவை, சின்னப் பிரம்புக் கூடைகளாக இருந்திருக்கலாம். தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அவற்றுக்குக் கயிறுகள் இருந்திருக்கலாம். அவற்றின் கொள்ளளவு சுமார் 7.5 லிட்டராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.​—மத் 16:9, 10-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பெரிய கூடைகளில்: வே.வா., “உணவுப் பொருள்களுக்கான கூடைகளில்.”​—மத் 15:37; 16:9-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

கூடைகளில்: இயேசு மக்களுக்கு அற்புதமாக உணவளித்த இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி விவரிக்கிற எல்லா பதிவுகளுமே (மத் 14:20; 15:37; 16:10-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், மாற் 6:43; 8:8, 19, 20 ஆகிய இணைவசனங்களையும் பாருங்கள்), மீதியானதைச் சேகரிப்பதற்கு வித்தியாசமான கூடைகள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றன. 5,000-க்கும் அதிகமானோருக்கு இயேசு உணவளித்ததைப் பற்றிச் சொல்லும்போது, ‘கூடை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கோஃபினோஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; 4,000-க்கும் அதிகமானோருக்கு அவர் உணவளித்ததைப் பற்றிச் சொல்லும்போது, ‘பெரிய கூடை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஸ்ஃபிரிஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எழுதியவர்கள் அந்தச் சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள் அல்லது அதைப் பார்த்திருந்த நம்பகமான நபர்களிடமிருந்து விவரங்களைத் தெரிந்துகொண்டார்கள் என்பதை இது காட்டுகிறது.

பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர: இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயு மட்டும்தான் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயேசு அற்புதமாக உணவளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,000-க்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ரொம்பத் தூரம்: நே.மொ., “பல ஸ்டேடியா.” ஒரு ஸ்டேடியம் (கிரேக்கில், ஸ்டேடியோன்) என்பது 185 மீ. (606.95 அடி). அதாவது, ஒரு ரோம மைலில் எட்டில் ஒரு பகுதி.

நான்காம் ஜாமத்தில்: அதாவது, “அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து சுமார் 6 மணிக்கு இடைப்பட்ட சமயத்தில்.” எபிரெயர்கள், கிரேக்கர்களையும் ரோமர்களையும் போலவே இரவு நேரத்தை நான்கு ஜாமங்களாகப் பிரித்தார்கள். இதற்கு முன்பு எபிரெயர்கள் இரவு நேரத்தை மூன்று ஜாமங்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு ஜாமமும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாக இருந்தது (யாத் 14:24; நியா 7:19). ஆனால், இயேசுவின் காலத்தில் அவர்கள் ரோமர்களுடைய கணக்குப்படி ஜாமங்களைப் பிரித்தார்கள்.

அவருடைய காலில் விழுந்து: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தில், ஒரு அடிமை தன் எஜமானுக்கு மரியாதையோடு அடிபணிவதைக் காட்டுகிறது.​—மத் 2:2; 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நபர்கள்கூட தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) இங்கே சொல்லப்படும் தொழுநோயாளி, மக்களைக் குணப்படுத்தும் சக்திபெற்றிருந்தவரிடம், அதாவது கடவுளுடைய பிரதிநிதியிடம், பேசிக்கொண்டிருந்ததைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. எதிர்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் முன்னால் தலைவணங்குவது பொருத்தமானதாக இருந்தது.—மத் 9:18; இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இயேசு கடவுளுடைய பிரதிநிதி என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை ஒரு தெய்வமாக நினைத்து வணங்காமல், ‘கடவுளுடைய மகனாக’ நினைத்துத் தலைவணங்கினார்கள்.​—மத் 2:2; 8:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

தலைவணங்க: வே.வா., “மண்டிபோட.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?” என்றுதான் அந்த ஜோதிடர்கள் கேட்டார்கள். அதனால், ஒரு தெய்வத்துக்கு முன்னால் அல்ல, ஒரு மனித ராஜாவுக்கு முன்னால் தலைவணங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது. மாற் 15:18, 19-லும் இதே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படைவீரர்கள் இயேசுவை “யூதர்களுடைய ராஜாவே” என்று கேலியாக அழைத்து, அவர் முன்னால் “தலைவணங்கினார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மத் 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கெனேசரேத்துக்கு: இது கலிலேயா கடலின் வடமேற்குக் கரையோரமாக இருந்த ஒரு சிறிய சமவெளி. இதன் நீளம் சுமார் 5 கி.மீ. (3 மைல்), அகலம் சுமார் 2.5 கி.மீ. (1.5 மைல்). கலிலேயா கடலை “கெனேசரேத்து ஏரி” என்று லூ 5:1 சொல்கிறது.

மீடியா

ஏரோது அந்திப்பா தயாரித்த காசு
ஏரோது அந்திப்பா தயாரித்த காசு

இயேசு ஊழியம் செய்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பு வெண்கலக் காசின் இரண்டு பக்கங்களையும்தான் இந்தப் போட்டோக்களில் பார்க்கிறோம். இந்தக் காசைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டது ஏரோது அந்திப்பா. இவர் கால்பங்கு தேசத்தை, அதாவது கலிலேயா மற்றும் பெரேயாவை, ஆட்சி செய்த மாகாண அதிபதியாக இருந்தார். இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் ஏரோதுவின் ஆட்சிப்பகுதியாகிய பெரேயாவைக் கடந்துபோனதாகத் தெரிகிறது; அப்போதுதான், இயேசுவைக் கொலை செய்ய ஏரோது திட்டம் போட்டிருந்ததைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், ஏரோதுவை “அந்தக் குள்ளநரி” என்று இயேசு சொன்னார். (லூ 13:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏரோதுவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருந்தார்கள். அதனால், யூதர்களைக் கோபப்படுத்தாத சின்னங்களாகிய பனை ஓலை (1), கிரீடம் (2) போன்றவை அவர் தயாரித்த காசுகளில் பதிக்கப்பட்டிருந்தன.

கலிலேயா கடலின் வடகிழக்குப் பகுதி
கலிலேயா கடலின் வடகிழக்குப் பகுதி

கலிலேயா கடலும் அதற்குப் பக்கத்திலுள்ள சமவெளியும் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சமவெளியில்தான் இயேசு சுமார் 5,000 ஆண்களுக்கும், பல பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தந்தார் என்று நம்பப்படுகிறது.

மீன்களும் ரொட்டிகளும்
மீன்களும் ரொட்டிகளும்

இஸ்ரவேலில் பொதுவாகக் காணப்படும் சில வகையான மீன்கள்: நகரை, கெண்டை, கிளிச்சான், ஜிலேபி. அங்கிருந்த மக்கள் மீன்களை நெருப்பில் சுட்டு அல்லது உப்பு தடவி காய வைத்து சாப்பிட்டார்கள். புதிதாக அரைக்கப்பட்ட கோதுமை மாவினால் அல்லது பார்லி மாவினால் அவர்கள் தினமும் ரொட்டி சுட்டார்கள். பொதுவாக, புளிப்பில்லாத ரொட்டியைத்தான் (எபிரெயுவில், மாட்ஸ்சாஹ்) சாப்பிட்டார்கள்; இந்த ரொட்டியைச் செய்வதற்காக, புளிப்பு சேர்க்காமல் வெறுமனே தண்ணீரைக் கலந்து மாவைப் பிசைந்தார்கள்.

கூடைகள்
கூடைகள்

பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.