நெகேமியா 9:1-38
9 அந்த மாதம் 24-ஆம் நாளில் இஸ்ரவேலர்கள் கூடிவந்தார்கள். துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தங்கள்மேல் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு, விரதம் இருந்தார்கள்.+
2 இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தாரைவிட்டுப் பிரிந்து நின்று,+ தாங்களும் தங்கள் முன்னோர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டார்கள்.+
3 பின்பு அவர்கள் அங்கேயே நின்று, அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை மூன்று மணிநேரத்துக்கு சத்தமாக வாசித்தார்கள்.+ அடுத்த மூன்று மணிநேரத்துக்குத் தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டும், தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை வணங்கிக்கொண்டும் இருந்தார்கள்.
4 யெசுவா, பானி, கத்மியேல், ஷெபனியா, புன்னி, செரெபியா,+ பானி, கெனானி ஆகியவர்கள் லேவியர்களின் மேடையில் நின்றுகொண்டு,+ சத்தமாக தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டினார்கள்.
5 யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, ஷெபனியா, பெத்தகியா ஆகிய லேவியர்கள் இப்படிச் சொன்னார்கள்: “எழுந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை என்றென்றும் புகழுங்கள்.+ எங்கள் கடவுளே, உங்களுடைய மகிமையான பெயரை இவர்கள் புகழட்டும். உங்கள் பெயரை நாங்கள் எவ்வளவு புகழ்ந்தாலும் போற்றினாலும் போதாது.
6 யெகோவாவே, நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும், ஏன் வானாதி வானத்தையும், அதன் படைகளையும்,* பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்கள். நீங்கள்தான் எல்லா உயிர்களையும் வாழ வைக்கிறீர்கள். வானத்திலுள்ள படைகள்* உங்களுக்கு முன்னால் தலைவணங்குகின்றன.
7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான்.
8 ஆபிரகாம் நெஞ்சார விசுவாசம் வைத்திருந்ததை நீங்கள் பார்த்து,+ கானானியர்களுக்கும் ஏத்தியர்களுக்கும் எமோரியர்களுக்கும் பெரிசியர்களுக்கும் எபூசியர்களுக்கும் கிர்காசியர்களுக்கும் சொந்தமான தேசத்தை அவருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தீர்கள்.+ நீங்கள் நீதியுள்ளவர் என்பதால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினீர்கள்.
9 எகிப்தில் எங்கள் முன்னோர்கள் பட்ட பாடுகளைப் பார்த்தீர்கள்,+ செங்கடலுக்கு முன்னால் அவர்கள் கதறிய கதறலைக் கேட்டீர்கள்.
10 பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் அவனுடைய ஜனங்களும் எங்கள் முன்னோர்களிடம் அகங்காரத்தோடு* நடந்துகொண்டதால்,+ அவர்களுக்கு எதிராக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தீர்கள்.+ இப்படி, உங்கள் பெயருக்கு இன்றுவரை புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+
11 எங்கள் முன்னோர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்தீர்கள், அவர்கள் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.+ ஆனால் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்களை, கொந்தளிக்கும் கடலுக்குள் கல்லைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறிந்தீர்கள்.+
12 பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டினீர்கள், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டினீர்கள்.+
13 பரலோகத்திலிருந்து சீனாய் மலைக்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசினீர்கள்.+ நீதியான தீர்ப்புகளையும் நம்பகமான* சட்டங்களையும் அருமையான விதிமுறைகளையும் கட்டளைகளையும் கொடுத்தீர்கள்.+
14 உங்களுடைய பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தி,+ உங்கள் ஊழியராகிய மோசே மூலம் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்கள்.
15 அவர்களுக்குப் பசியெடுத்தபோது வானத்திலிருந்து உணவைக் கொடுத்தீர்கள்,+ தாகமெடுத்தபோது கற்பாறையிலிருந்து தண்ணீரைத் தந்தீர்கள்.+ நீங்கள் கொடுப்பதாக உறுதிமொழி தந்த தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னீர்கள்.
16 ஆனால், எங்கள் முன்னோர்கள் அகங்காரமாக நடந்தார்கள்,+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்,+ உங்கள் கட்டளைகளை அலட்சியம் செய்தார்கள்.
17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+
18 அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும்,
19 அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+
20 அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+
21 வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை.
22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் தேசங்களையும் பகுதி பகுதியாகப் பங்குபோட்டுக் கொடுத்தீர்கள்.+ அதனால் எஸ்போனின்+ ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும்+ பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
23 அவர்களுடைய வம்சத்தாரை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெருக வைத்தீர்கள்.+ பின்பு, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக உறுதிமொழி கொடுத்திருந்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+
24 அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ அங்கு வாழ்ந்துவந்த கானானியர்களை நீங்கள் அவர்கள்முன் தோற்கடித்தீர்கள்.+ அந்த கானானியர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும் இஷ்டம்போல் நடத்தும்படி அவர்கள் கையில் விட்டுவிட்டீர்கள்.
25 மதில் சூழ்ந்த நகரங்களையும்+ செழிப்பான தேசத்தையும்+ அவர்கள் கைப்பற்றினார்கள். நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும்,+ காய்த்துக் குலுங்கும் மரங்களையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள். திருப்தியாகச் சாப்பிட்டு கொழுகொழுவென்று ஆனார்கள். நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.
26 நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+
27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+
28 ஆனால், பிரச்சினை தீர்ந்தவுடனேயே அவர்கள் மறுபடியும் கெட்ட வழியில் போனார்கள்,+ நீங்கள் மறுபடியும் அவர்களை எதிரிகளின் பிடியில் விட்டுவிட்டீர்கள்.+ அந்த எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தபோது* திரும்ப உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள்.+ நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டு மிகுந்த இரக்கத்தோடு மறுபடியும் மறுபடியும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+
29 திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி நீங்கள் எச்சரித்தபோதும், அவர்கள் அகங்காரத்தோடு உங்கள் கட்டளைகளை மீறினார்கள்;+ வாழ்வளிக்கும் விதிமுறைகளைப்+ பின்பற்றாமல் பாவம் செய்தார்கள். உங்கள் வழிக்குத் திரும்பிவர விடாப்பிடியாக மறுத்தார்கள், உங்கள் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தார்கள்.
30 நீங்கள் எத்தனையோ வருஷங்களாகப் பொறுமையோடு+ தீர்க்கதரிசிகளை அனுப்பி எச்சரித்துக்கொண்டே இருந்தீர்கள். ஆனால், அவர்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கடைசியில், மற்ற தேசத்தாரின் கையில் அவர்களை விட்டுவிட்டீர்கள்.+
31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள்.
32 மகத்துவமுள்ள எங்கள் கடவுளே, மாவல்லவரே, அற்புதமானவரே, ஒப்பந்தத்தைக் காப்பவரே, மாறாத அன்பைக் காட்டுபவரே,+ அசீரிய ராஜாக்களின் நாளிலிருந்து+ இந்த நாள்வரை நாங்களும் எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும்+ குருமார்களும்+ தீர்க்கதரிசிகளும்+ முன்னோர்களும் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அற்பமாக நினைக்காதீர்கள்.
33 எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+
34 எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும் குருமார்களும் முன்னோர்களும் உங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, உங்களுடைய கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* காதுகொடுத்துக் கேட்கவில்லை.
35 அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தில் வாழ்ந்து, நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்த காலத்திலும் சரி, நீங்கள் தந்த வளமான, விசாலமான தேசத்தில் குடியிருந்த காலத்திலும் சரி, உங்களுக்குச் சேவை செய்யவோ+ கெட்ட பழக்கங்களைவிட்டு விலகவோ இல்லை.
36 அதனால், இன்று நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.+ எந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் அனுபவிக்கும்படி எங்கள் முன்னோர்களைக் குடிவைத்தீர்களோ அந்தத் தேசத்தில் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.
37 நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம்.
38 அதனால், நாங்கள் உறுதியான தீர்மானத்தோடு ஓர் ஒப்பந்தத்தை+ எழுதி வைத்திருக்கிறோம். எங்கள் அதிகாரிகளும் லேவியர்களும் குருமார்களும் தங்கள் முத்திரையைப் போட்டு அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.
^ நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ வே.வா., “சத்தியத்தின்.”
^ வே.வா., “கனிவும்.”
^ வே.வா., “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”
^ வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
^ நே.மொ., “தங்களுக்குப் பின்னால் தூக்கியெறிந்தார்கள்.”
^ வே.வா., “நொறுக்கியபோது.”
^ வே.வா., “கனிவும்.”
^ வே.வா., “நினைப்பூட்டுதல்களையும்.”